03.11.20-ரேவா : 81: கங்கனது_வசந்தமாளிகை - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 3 நவம்பர், 2020

03.11.20-ரேவா : 81: கங்கனது_வசந்தமாளிகை



03.11.20


ரேவா


கங்கனது_வசந்தமாளிகை_81


பல்லவரது சைன்யம் வெம்பை நகருக்கு அருகில் தனதுப் பாசறையை அமைத்து தண்டு இறக்கியிருந்தது. 


தந்திதுர்க்கனது சைன்யமும் வந்து சேரவேண்டியிருந்தது. சாளுக்கியனும், கங்கனும் தங்களதுப் படைகளை அணிவகுத்து தயாராவதாக தகவல் வந்திருந்தது.


பரந்த வெளியாகக் காணப்பட்ட அந்தப் பகுதி போருக்கானச் சிறந்த களமாகப் படவே, பல்லவடி அரையரும், உதயச்சந்திரனும் அங்கேயே தங்களது முகாமினை அமைத்தார்கள்.


எரிகின்ற பந்தங்களைத்  தரைகளில் ஊன்றியும்,  கண்ணில் தென்பட்ட மரங்களிலும் கட்டி வைத்திருந்தார்கள்.

ஆங்காங்கே தென்பட்டக் கூடாரங்களின் மேல் பல்லவரது ரிஷபக் கொடி படபடத்துக் கொண்டிருந்தது. வீரர்கள் ஆங்காங்கே குழுமியபடி அமர்ந்து  பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் பொழுதினைக் கழித்தனர். இரவு முழுவதும் ஒரு சிலருக்கு ஓய்வும் , ஒரு சிலருக்கு காவல் பணியும் வழங்கப் பட்டிருந்தது.


காலைப் பொழுது  துவங்கி ஏழரை நாழிகையில் ஒவ்வொருப் படைப் பிரிவும் அப்பரந்த வெளியில் தங்களது அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தன. படைகளுக்கு படைப்பிரிவின் உபதலைவர்கள் கட்டளையைப்  பிறப்பித்துக் கொண்டிருந்தனர். புரவிகளின் அணிவகுப்பு  ஓட்டத்தினால் அப்பிராந்தியமே ஒரே புழுதிப் படலமாக காட்சியளித்தது.  பல இடங்களில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்த யானைகளோ பெரிதான மரக்கிளைகளை உடைத்து தன் அகன்ற வாய்க்குள் திணித்து அசைப் போட்டபடி நின்றிருந்தன. வீரர்களின் ஓட்டமும், சண்டைப் பயிற்சி ஒத்திகைகளும் அப்பிராந்தியமெங்கும் காணப்பட்டது.


போர்ப்பாசறையின் மையத்தில் போடப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில் பல்லவ சாம்ராஜ்யாதிபதி நந்திவர்ம பல்லவன் ஒரு ஆசனத்தில் வீற்றிருந்தான். அவனது ஆசனத்தைச் சுற்றிலும் போடப் பட்டிருந்த பல ஆசனங்களில் பல்லவ தளபதி பல்லவடி அரையரும், பல்லவ படைத்தலைவன் உதயச்சந்திரனும், பல்லவ தலைமை ஒற்றன்  சீராளனும், அவனது நண்பனான சேந்தனும் , காடவ முத்தரையரும் இன்னும் பிற கோட்டத் தலைவர்களும் வீற்றிருக்க சாளுக்கியரையும், கங்கரையும் வெல்வதற்கான வியூகம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.


" தந்திதுர்க்கரது சேனைகள் எப்போது வந்து சேரும்..? " என்றார் பல்லவடி அரையன்.


" இன்னும் ஒரு வாரத்தில் வந்து சேர்ந்து விடும் என எண்ணுகிறேன்.." என்றான் உதயச்சந்திரன்.


" தந்திதுர்க்கரது  படைகளை நாம் இணைத்துக் கொண்டாலும் , நமது சேனை வீரர்களின் எண்ணிக்கையானது சாளுக்கிய சேனையை விட குறைவு தானே..! " என்றார் காடவ முத்தரையர்.


" காடவ முத்தரையரே..சாளுக்கியனது சேனையோடு ஒப்பிட்டால் நமது சேனை சற்றே குறைவு  தான். ஆனாலும் போர்களில் வீரர்களின் எண்ணிக்கை வெற்றியைத் தீர்மானித்து விடாது. பாண்டியனது பெரும் படையை நந்திபுர முற்றுகையில் நாம் சிதறடிக்க வில்லையா..?

மனவுறுதியும், தெளிந்த திட்டமும் இருந்தால் எப்பேர்பட்ட படையையும் எளிதில் தோற்கடித்து விடலாம்." என்றான் உதயச்சந்திரன்.


" படைத்தலைவரே..அதை நானும் அறிவேன். ஆனாலும்..சாளுக்கியனோடு கங்கன் இணைவதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்..எதையும் எச்சரிக்கையுடன் அணுகுவது நல்லதல்லவா..! " என்றார் காடவ முத்தரையர்.


" முத்தரையர் முன்மொழிந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயந்தான்..எதையும் எளிதாக கருதுவது தவறு..! " என்றான் சீராளன்.


சாளுக்கியரது படையை எவ்வாறு எதிர்கொள்வது, கங்கனதுப் படையை யார் எதிர் கொள்வது , என்பது போன்ற வியூகங்கங்களை வகுத்துக் கொண்டிருந்தனர்.


தந்திதுர்க்கனது படையானது, சாளுக்கியரது படையின் பின் புறத்தைத் தாக்கி நிலைகுலையச் செய்வதெனவும், கங்கனின் யானைப் படையை நந்திவர்மன் பல்லவ தேசத்து யானைகளைக் கொண்டு மறிப்பதெனவும், சாளுக்கியனது புரவிப்படையினை உதயச்சந்திரன் தனது புரவிப்படையால் தேக்குவது எனவும் யுத்தத் திட்டங்களை விவாதித்த அனைவரும் கலையத் துவங்கினர்.


மந்திராலோசனையை முடித்த கையோடு வெளியேறி தனது கூடாரத்தை நாடிய நந்திவர்மன் , சற்று நேரத்தில் சீராளனைத் தேடி வந்தான்.


" சீராளா..சற்றே தனியாக சிறிது தூரம் போய்வரலாம்.." என்றவனாய் , அவனது தோளின் மீது கைகளைப் போட்டுக் கொண்டு நெருங்கி நடந்தவன் , சிறிது தூரம் நடந்தபின் தனது கச்சையில் இருந்து ஒரு ஓலைக் குழலை எடுத்தான்.


" சீராளா..நீ  கங்கனது தலைநகர் செல். ரேவாவை அடைத்து  வைத்திருக்கும் இடத்தினை அறிந்து கொள். அதன்பின் ரேவாவை சந்தித்து இந்த ஓலையினை அவளிடம் சேர்ப்பிக்க வேண்டும்..அவள் தைரியமாக இருப்பதற்கு இது உதவும்.."


" எப்போது செல்வது..? "


" இப்போதே..செல்லவேண்டும்."


" இங்கு எவரும் என்னைத் தேட மாட்டார்களா..? "


" நான் கூறிக் கொள்கிறேன்.. ஓலையைச் சேர்ப்பித்ததும் காலதாமதமின்றி புறப்பட்டு வந்து விடு."


"சரி.. என்றவன், அப்பொழுதே தனது புரவியில் ஏறியதோடு, விரட்டவும் செய்தான்.


ரேவாவின் மனதிற்கு ஆறுதலை அளிக்கும் வார்த்தைகளை ஓலையில் அனுப்பி விட்டோம். சற்றே தெளிவுடன் அவளிருப்பாள் என்னும்

நம்பிக்கை நந்திவர்மனுக்கு ஏற்பட்டது.


நந்திவர்மனுக்கு அன்றைய காலையில் உதயச்சந்திரனிடம் பேசியது நினைவுக்கு வந்தது. 


" படைத்தலைவரே, போருக்கு முன் ரேவா எங்கிருக்கிறாள் என்றறிந்து அவளை மீட்டு வந்து விட்டால் நல்லதல்லவா..! "


" தவறு.. அவளை நாம் இப்போது மீட்பது சரியல்ல. நமது இந்த படையெடுப்பிற்கு  ரேவாவை முன்னிறுத்தி காரணம் காட்டுவது நம்முடைய செயலை நியாயப்படுத்தும். சாளுக்கியனுக்கு மிகப் பெரும்  அபவாதத்தைப் பெற்றுத்தரும். எனவே போருக்குப் பின் எதிரிகளைக் கொண்டே அவளை மீட்கலாம். அதுவே சிறந்தது..! "


" படைத்தலைவரே, அங்கு  அதுவரையில் அச்சத்துடன் அல்லவா இருப்பாள்..

ரேவாவின் அச்சத்தை போக்கிடவாவது  நாம் முயற்சிக்கலாமே..நாம் அவளை மீட்க வந்திருப்பதை தெரியப் படுத்தலாம் அல்லவா..! "


" ம்..அதை வேண்டுமானால் செய்யலாம். சீராளனை அனுப்பி அவள் எங்கே அடைத்து வைக்கப் பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து, அவளை மீட்க நாம் படையுடன் வந்திருக்கிறோம்..கவலை கொள்ளத் தேவையில்லை என வேண்டுமானால் ஓலை அனுப்பலாம். "


" நல்லது படைத்தலைவரே..அப்படியே செய்கிறேன்.


                    *                *                *


கங்கனது தலைநகர் தலக்காடு.


கோட்டைக்குள் நுழைந்த அவனை,

" ஏய்..நில்..யார் நீ..? " என்றான் கோட்டைக் காவலன்.


" ஐயா..நான் தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த புலவன். என் பெயர் சொக்கநாதன். "  என்றான் அவன்.


" கூடல் நகருக்கு நம் இளவரசியை மணம் முடித்து அனுப்பினாலும் அனுப்பினோம் நாள் தோறும் வந்து விடுகிறார்கள் பாண்டிய நாட்டுப் புலவர்கள்." என்று முணுமுணுத்தவனாய் அவனை உள்ளே அனுப்பினான் கோட்டைக் காவலன்.


" நண்பனே, புலவர்கள் பாடு தேவலை..நான்கு வரி பாடி விட்டு நலமாய் ஊர் போய் சேர்ந்து விடுகிறார்கள். பொன்னும் மணியும் அவர்கள் பின்னே போகிறது. நீயோ நானோ இந்த கோட்டையைக் காலமெல்லாம்  காவல் புரிந்தாலும், அவர்களது வரும்படியை எட்ட முடிவதில்லை.."


" கற்றோருக்கு சென்ற இடமெலாம் சிறப்புன்னு சும்மாவா சொன்னாங்க..! உனக்கு பொறாமையா இருந்தா நீயும் நாலெழுத்து படிச்சு , கவிதையா வடிச்சு கொட்டேன்..! யார் வேண்டாங்கறா..?

உன்னோட வாயிலே வசம்ப வச்சு தேய்த்தாலும் வார்த்தையே ஒழுங்கா வராது..ஒழுங்கா வேலையை  பார்..! "


கோட்டைக்குள் புலவன் வேடத்தில் நுழைந்த சீராளன்..ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தவனாய், அந்த இல்லத்தைச் சேர்ந்தவனிடம் பேச்சினை வளர்த்தான். நகரமெங்கும் புரவி வீரர்களின் அணிவகுப்பும், பரபரப்பும் போருக்கு கங்கர் ஆயத்தமாவதை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது.


" என்னமாய் வெயில் கொளுத்துகிறது..உஷ்..அப்பாடா..பாண்டிய நாட்டு வெயிலை விட அதிகமாய் இருக்கும் போலிருக்கிறதே.."


" தாங்கள் பாண்டிய நாட்டவரா..? "


" ஆம்..ஐயா.."


" வெயிலுக்கு இதமாய் மோர் அருந்துகிறீரா..? "


" ஆஹா..மகிழ்ச்சி..தாருங்கள்."


உள்ளே பார்த்து குரல் தந்தவர், உள்ளிருந்து ஒரு பெண்மணி கொண்டு வந்த இரண்டு குவளைகளில் ஒன்றை அவனிடம் நீட்டினார்.


அருந்தி முடித்ததும், " நன்றி ..ஐயா.." 

என்றபடியே  குவளையை தந்தவன்,

" அரசரைப் பாடி பரிசில் பெற எண்ணி வந்தேன் ..நான் வந்த பொல்லாத வேளை, போர் நடைபெறப் போகுதாம்..!" என்றான் கவலையை முகத்தில் காட்டியவனாய்.


" ஆம்..ஐயா.. சாளுக்கியர் ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு வந்து நமது அரசரின் வசந்தமாளிகையில் சிறை வைத்திருப்பதாயும், அதன் பொருட்டே பல்லவர் படையெடுத்து வந்து இருப்பதாகவும் ஊரே பேச்சாய் இருக்கிறது.."


" வசந்த மாளிகையா..? " என்றான் அப்பாவியாய்.


" ஆம் ஐயா, இளவேனிற் காலத்தில் ஓய்வெடுப்பதற்காக மேலைமலைத் தொடரில் கட்டி வைத்திருக்கிறார் அல்லவா..அங்கு தான்."


" ஓ..என்ன தான் இருந்தாலும், சாளுக்கியனுக்கு இவ்வளவு இடம் தந்தது தவறல்லவா..! அவனால் தானே யுத்தம் வந்துவிட்டது..! இதனால் நாம் அல்லவா பாதிக்கப் படுகிறோம்."


" உண்மை தான் ஐயா..ஆனாலும் பெரிய இடத்து விசயம்..நமது கருத்தெல்லாம் 

எடுபடவா போகிறது.." என்றான் வீட்டுக்காரன்.


அவனிடம் மேலும் பேச்சினை வளர்த்து வசந்தமாளிகையினைப் பற்றிய தகவலை முழுவதும் கிரகித்துக் கொண்ட சொக்கநாதன் வேடத்தில் இருந்த சீராளன் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு நடையைக் கட்டினான்.


இயற்கை எழில் கொஞ்சும் ஸஹ்யாத்ரி மலைத்தொடரில் காவிரி நதி உற்பத்தியாகி பல கிளைகளாகவும், அருவியாகவும், சுனைகளாகவும், ஆங்காங்கு வளைந்தோடிக் கொண்டிருக்க , அம்மலை பிராந்தியம் வனப்பில் மிதமிஞ்சிய அழகோடு விளங்கியது. 


வெண்மேகங்களை உரசிச் செல்லும் படியாக வளர்ந்திருந்த காட்டு மரங்களும், மரங்களைத் தழுவிச் செல்லும் அடர்பச்சைநிறக் கொடிகளும், நானாவித மணத்தை பரப்பி கிளர்ந்தெழச் செய்யும் காட்டு மலர்களின் சுகந்தமும் , பறவைகளின் கீச்சொலிகளும், ஆங்காங்கே துள்ளியோடும் முயல்களும் மான்களும் கண்களில் பட இயற்கையை ரசித்தவனாய் அந்த ரம்மியமான கானகப் பெருவெளியில் தனது புரவியை நிதானமாக நடத்திச் சென்று கொண்டிருந்தான். 


திடீரென எதிரே தூரத்தில் பல புரவிகளின் குளம்படியோசை கேட்பது தெளிவாக கேட்க , சட்டெனப் பாதையை விட்டு கீழிறங்கி கானகத்திற்குள் தனது புரவியை நடத்திக் கொண்டுச் சென்றவன், எவர் கண்ணிலும் பட்டுவிடாமல் இருக்க புரவியையும் அடர்ந்த மரங்களின் மறைவினில் நிறுத்தினான். மேட்டுப் பாங்கான பாதையிலிருந்து கீழே இறங்கி ஒளிந்து நின்ற இவனுக்கு , மேட்டின் மேல் செல்பவரைத் தெளிவாக காண முடிந்தது. இவன் மரத்தின் மறைவில் ஒதுங்கிய ஒரு நாழிகைப் பொழுதில் ஐந்து குதிரைகளில் கங்கனது வீரர்கள் கடந்து சென்ற கால் நாழிகைக்குப் பின்னரே பாதையை அடைந்த சீராளன்..தனது புரவியை கங்கனது வசந்தமாளிகை இருக்குமிடம் நோக்கி விரட்டினான். கங்கனது தலைநகரான தலைக்காட்டிலேயே வசந்தமாளிகையின் இருப்பிடம் குறித்த தகவலை அறிந்து வந்திருந்தது இப்போது அவனுக்கு வசதியாக இருந்தது. சற்று தூரத்தில் கானகத்தின் ஊடே  எழுந்து நின்ற கங்கனது வசந்தமாளிகை ஒரு குட்டிக் கோட்டையைப் போல கம்பீரமாக காட்சி தந்து கொண்டிருந்தது.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages