அண்ணி
“சுதா “
“என்ன அண்ணி”
“நான் கிளம்பறேன் நேரமாயிடுச்சு “
“ ஒண்ணும் சாப்பிடாம கிளம்பாதீங்க! டிபன் பாக்ஸில் போட்டு தரேன்”
“வேண்டாம் இன்னிக்கி நீ மெதுவா பண்ணிக்கோ. நான் வெளில பாத்துக்கறேன் “
“சரி அண்ணி”
ரேவதி கிளப்பிப் போனதும்,
“ ஆச்சு இனி சாயங்காலம் தான் வருவா! எல்லா வேலையும் என்னோட தலையில ..ஏன்தான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தோமோ? நானும் இவளை மாதிரி வேலைக்கு போயிருக்கலாம் வீட்டு வேலை செய்ய வேண்டி வராது”
புலம்பியபடி வந்தவளிடம்,
“ சுதா கொஞ்சம் காபி தா” என்று வந்த ரவியை முறைத்துப் பார்த்தாள்.
“என்ன அப்படி பாக்கறே ?”
“வேற வழி? நீங்க ரொம்ப நல்லா படிச்சிருந்தா வேற வீடு வாங்கி தனிக்குடித்தனம் போய் இருக்கலாம். வாடகை கொடுக்கக் கூட வக்கில்லாம இந்த கூட்டுக் குடித்தனத்தில் வந்து கஷ்டப்பட்டு இருந்திருக்கவேண்டி வந்திருக்காது “
“உனக்கு என்ன கொறைச்சல்?”
“நல்லா கேளுங்க ஒரு குறையும் இல்லை. கார்த்தாலே அண்ணி பால் காச்சி காபி போட்டு கோலம் போட்டு காய் நறுக்கி வச்சிட்டு டிபன் பண்ணி கிளம்பி போயியிடறாங்க. பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லினா சரி... தோசை பூரினா ஒவ்வொருவருக்கா பண்ணி கொடுக்க வேண்டி இருக்கு. சாதம், சாம்பார், பொரியல் நான் பண்ண வேண்டி இருக்கு. வேலைக்காரிகிட்ட நான்தான் மாறடிக்க வேண்டி இருக்கு”
“ஏண்டி இது கூட செய்ய மாட்டயா?”
“உங்க பையனை ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும் உங்க அம்மா அப்பாவை கவனிக்கணும் முடியலை உங்கண்ணா பசங்க காலேஜ் போயாச்சு “
“அதுக்கேண்டி அலுத்துக்கறே?”
“இப்பவே எனக்கு முடியலை . எப்படா அக்கடான்னு உட்காருவோம்னு தோணுது.”
“அதுக்கு காரணம் நீ பயங்கரமா வெயிட் போட்டுட்டே! வாக்கிங் போனா கேக்க மாட்டேங்கறே”
“அது ஒண்ணுதான் குறைச்சல். எப்படா கொஞ்சம் தலை சாய்த்து படுப்போம்னு நான் நினைக்கிறேன்”
“சித்தி இன்னிக்கு என்ன டிபன் ?”
“உங்கம்மா மசால் பண்ணி வைச்சிருக்காங்க . இரு மசால் தோசை பண்ணி தரேன் “
“ஓகே சித்தி”
அவர்கள் இருவரும் காலேஜ் கிளம்பும் போது, பையனை காரில் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் போனதும் பாத்திரங்கள் ஒழித்துப் போட்டு குளிக்கப் போனாள். வந்து இரண்டு சீரியல் பார்த்துவிட்டு மீதி சமையல் முடித்தாள். மாமனார், மாமியாருக்கு சாதம் போட்டு அறைக்கு சென்று நான்கு மணி வரை தூங்கினாள் . மாலை வந்த பையனுக்கு டீ ஸ்னாக்ஸ் கொடுத்து விளையாட அனுப்பி விளக்கு ஏற்றினாள்.
பயங்கர தலைவலியுடன் வந்த ரேவதி,
“சுதா கொஞ்சம் காபி சூடா தா”
“ சரி அண்ணி “
இவளுக்கு நான் என்ன வேலைக்காரியா? கலந்து குடிச்சுக்க வேண்டியது தானே! என்று மனதிற்குள் பொருமிக் கொண்டாள்.
விளையாடி வந்த கோகுலுக்கு அண்ணி ரேவதி பாடம் சொல்லிக் கொடுத்தாள். இரவில் இருவருமாக டிபன் செய்து அனைவருக்கும் கொடுத்தனர். இரவு மெதுவாக வந்த ரவியை முறைத்துப் பார்த்தாள் சுதா.
“என்ன இன்னும் கோவம் கொறயலயா?”
“உங்களுக்கு என்ன? கார்த்தாலே ஒன்பது மணிக்கு போனா ராத்திரி எட்டு மணிக்கு வறீங்க. உங்க அண்ணாவும், அண்ணியும் எப்பவோ வந்தாச்சு! நீங்க இப்பதான் வறீங்க!”
“என்ன பண்ணறது வேலை நிறைய...”
“வேலைதான் நிறைய.. சம்பளம் இருபதாயிரம்... ஆனா அவங்க ரெண்டுபேரும் ஒரு லட்சத்துக்கு மேல வாங்கறாங்க. இன்னொரு விஷயம் தெரியுமா? உங்கண்ணா மூணாவதா ஒரு வீடு கட்டப் போறாங்க. ஏற்கனவே ரெண்டு வீட்டு வாடகையும் வருது.”
“ எங்க இடம் பாத்திருக்காங்க தெரியுமா?”
“எதிர்த்தவீடு தான். அந்த பழைய வீட்டை வாங்கி புதுசா கட்டப் போறாங்க. கீழயும் மேலயும். போதாகுறைக்கு இந்த வீட்டிலும் அவங்களுக்கு பங்கு இருக்கு”
“ஏண்டி பொறாமை படறே”
“இல்லே! அவங்களுக்கு இருக்கற ஒரு வீட்டில போய் இருத்துக்க வேண்டியது தானே! இங்க இருந்தா வேலை செய்து தர நான் இருப்பேன். அது மட்டுமில்லே இந்த வீட்டை விட்டுட்டு போகவும் அவங்க விரும்பலை .சே நீங்களும் சின்ன வயசில உங்கண்ணா மாதிரி படிச்சிருக்கலாம். எனக்கு தெரியாம போச்சு .”
“ஏன் நீயும் அண்ணி மாதிரி வேலைக்கு போய் சம்பாதிச்சு கொண்டு வந்து கொடு. ரெண்டு என்ன? நாலு வீடு கட்டலாம் .”
“உங்களுக்கு கிண்டலா போச்சு இல்லே? நான் பிளஸ் டூனு குத்திக் காட்டறீங்க “
“ஏண்டி நான் எங்கே அப்படி சொன்னேன்?”
“நான் என்ன உங்க அண்ணி மாதிரி காலேஜ் ப்ரோபசராவா வேலைக்கு போய் இருக்க முடியும்?”
“அப்ப பொலம்பாம பேசாம இரு !”
தீபாவளிக்கு சர்ப்ரைசாக சுதா ஆசைப்பட்டுக் கொண்டிருந்த எம் எஸ் ப்ளூ பட்டுப் புடவை ரேவதி கொடுக்க,
“ இதெல்லாம் எதுக்கு அண்ணி”
என்று சொன்னவள் ரவியிடம்,
“ சமையல்காரியா இருக்கறதுக்கு போனஸ்” என்று நொடித்துக் கொண்டாள் .
எதிர்த்த வீடு அபாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. கிரகப்பிரவேசம் செய்ய நாள் குறிக்கப் பட்டது. வீட்டில் இருந்து அனைவரும் போய் வீட்டை சுற்றி பார்த்தனர். கீழே ஒரு பெரிய ஹால், கிச்சன் மூன்று படுக்கை அறை.
சாமி ரூம்,ஸ்டோர் ரூம் என்று அபாரமாக இருந்தது. மேலே ரெண்டு போர்ஷன் வாடகைக்கு விடுவது போல கட்டி இருந்தனர்.
அடுத்த நாள் கிரகபிரவேசம் என்பதால் சுதாவுக்கு பொறுக்கவில்லை. ரவியை கையாலாகாதவன் என்று கரித்துக் கொட்டினாள். மிக கொஞ்சம் பேரையே அழைத்து இருந்தார்கள்.
ஐயர் வந்து விட்டார்.
“ வாங்கோ தம்பதி சகிதமா வந்து உட்காருங்கோ”
ரேவதி ரோஸ் நிறத்தில் நீலகலர் பார்டர் போட்ட பட்டுப் புடவையில் அமர்க்களமாக இருந்தாள். சுதாவுக்கும் புது பட்டுப் புடவை வாங்கி கொடுத்து கட்டிக்க சொல்லி இருந்தாள் . சகோதர்கள் இருவரும் பட்டு வேட்டியில் ஜொலித்தா.ர் ஐயர் மீண்டும் அழைக்க,
“ ஒரு நிமிஷம்”
என்ற ரேவதி
“ சுதா இங்க வா” என்று கூப்பிட்டாள். இவளுக்கு வேலை செய்து கொடுத்தே நான் ஒஞ்சிடுவேன் போல இருக்கே என்று நினைத்துக் கொண்டு,
“ என்ன அண்ணி” என்றாள். அவளை மனையில் உட்க்கார வைத்து ரவியையும் கூப்பிட்டு அருகில் அமர்த்தினாள். அதிரிச்சியில் இருந்து மீளாத சுதாவுக்கு சாப்பாடு இறங்கவே இல்லை.
“ சுதா நானும் அவரும் நம்ம பழைய வீட்டில் இருந்துக்குவோம். உங்களுக்கு இந்த வீட்டை எழுதிக் கொடுக்கப் போறோம். நீங்கள் இந்த வீட்டில் இருந்துக்குங்க. மேல் வீட்டு வாடகையும் உங்களுக்கு உபயோகமா இருக்கும். உங்களை பிரிஞ்சு இருக்க முடியாது என்பதால் எதிர்த்த வீடு கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும் வாங்கினோம்”
சுதாவால் ஒன்றும் பேச முடியவில்லை. ரவியின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருந்த ராகவனை, சந்தோஷமாக பார்த்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர் பெற்றோர்கள் பிரேமவாதியும் வரதராஜனும்.
பேரப் பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர் .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக