இருளாயி......(சிறுகதை)
இருளாயிக்கு புருசன் ரொம்ப நாளைக்கிமுன்னாடியே திடீருண்ணு காணாமப்போயிட்டான் , ஏதோ வரப்புத்தகறாறுல பக்கத்து வயல் வைச்சிருக்குற மலைச்சாமி தூக்கிட்டதா ஊருக்குள்ள பேச்சு, எம்புட்டுத்தேடியும் தடந்தெரியல...... அது மர்மமாவே போச்சு...ஆளும் காணல உடம்பும் கெடைக்கல....
அவளுக்குத்திக்கில்ல ....நாதியத்துப்போயிட்டா....
அவன் அவளுக்கு போகும்போது சும்மா போகாம மூணு புள்ளைங்களையும் காணிநெலத்தையும் ஒருவீட்டயும் குடுத்துட்டுப்போயிட்டான்
இவ ஒத்த ஆளா ஆளுவைச்சி வெள்ளாமை பண்ணுவா , அவுக எல்லாம்
ஒழவு நடுகையோட சரி மீதியெல்லாம்
அவளே பாத்துக்கிடுவா . கூலியெல்லாம் எண்ணி எண்ணித்தான் குடுப்பா.
அதுனால கூப்புட்டவன்ன வேலைக்கி ஆளுக வரமாட்டாக. அதுக்காகக் கவலப்பட மாட்டா. முடிஞ்சவரைக்கும் தானே பாத்துடுவா. மம்பட்டி எடுத்து வரப்பு ஒதுக்குறதுல இருந்து எல்லா வேலையும் பாத்துப்புடுவா. அடுத்து கருதருக்கத்தான் ஆளுவைப்பா, தெனம்போய்வயலைப்பாத்துட்டு தண்ணி சரிபண்ணிட்டுவருவா. வரும்போதுஅவ புல்லு அறுத்துத்து கட்டுகட்டி தலையில தூக்கிட்டுவாரதேஅம்புட்டு அழகாருக்கும் கண்ணு பட்டுறும்
வீட்டுலஇருக்குறவெள்ளாட்டங் குட்டிகளுக்கு புல்லுக்கட்டுஒருநாளைக்கி... மறுநா கொண்டாருற புல்லுக்கட்டு கொட்டாரத்துல டீக்கடை கடைவைச்சி இருக்குற சாயிபு வீட்டுக்கு போகும் ,அதுக்கு அவரு காசு குடுத்துருவாரு தெனம் சாயிபுடீக்கடையில பிள்ளைகளுக்கு முட்டக்கோசு போண்டா வாங்கிட்டுப் போவா, புள்ளைங்களுக்குப் புடிக்கும்னுசாயிபுகிட்ட மகளாப்பழகுவா ,அவரும் பேரப்புள்ளைகளுக்குக் கொண்டுபோன்னு சேத்துப் போட்டுகுடுத்துவிடுவாரு
அன்னிக்கும் அப்புடித்தான் போனா வயலப்பாத்துப்புட்டு புல்லு அறுத்துட்டு வரலாமுன்னு நீச்சத்தண்ணிய குடிச்சிப்புட்டு விங்கு விங்குன்னு கெளம்புனா.....வயக்காட்டுக்கு....
அங்குணக்குள்ள போயி அவ வயலுல நேத்திக்கிப்பாச்சுன தண்ணி நிக்கிதா வடிஞ்சிடுச்சா யாராவது வெட்டி விட்டுட்டாங்களான்னு பாத்தா. நல்ல வேலை, ஒண்ணுமாகல ஒரு சுத்து சுத்திப்பாத்தா நண்டு மோட்ட கீட்ட போட்டுறுக்கா ஆடு மாடு மேஞ்சி ருக்கான்னு ஒரு பார்வை,
திருப்தியா இருந்துச்சு. கொஞ்சம் வரப்ப ஒதுக்கி விட்டுட்டு மம்பட்டியக் கழுவிட்டுக் கெழம்ம்புனா.
வாரவழிலதான் கெழக்கு ஊரணி இருக்கு அங்குன நல்லாப்புல்லு வளந்துருக்கும். அங்கபோயி நல்ல வளந்த புல்லா அறுத்துக்கட்டி வைச்சிட்டு கைகாலெல்லாம் சேறானதால குளிக்கலாமுன்னு ஊருணில எறங்குனா
சுத்துமுத்தும் பாத்துட்டு நல்லா சேலைய அவுத்துக்குளிச்சா ,
பேசாம ஒரு ஆம்பளையாப் பொறந்துருக்கலாம் இப்புடி பயப்படத் தேவையில்லன்னு சொல்லிக்கிட்டா. கரையேறிசேலைய புழிஞ்சிகட்டிக்கிட்டு புல்லுக்கட்ட ஒத்த ஆளா தலையில தூக்கும் போது தெரிஞ்சது ஆசப்பட்டுகொஞ்சம் கூட அறுத்துப்புட்டது. அறுத்தது அறுத்துட்டோம் கொண்டுட்டுப் போயிறுவோம்ன்னு
புல்லுக்கட்டோட காலாங்கரை கரையோரமா தூக்கிட்டு வாரப்பபொடனில ஏதோகுத்திருக்கு வேலிக்காத்தான் முள்ளாத்தானிருக்கும்னு
சமாதானப்படுத்திக்கிட்டு வந்துக்கிட்டுருந்தா . ஆனா திரும்பத்திரும்ப உறுத்துச்சு வலி என்னான்னு யோசன பண்ணிட்டு நடந்து கொட்டாரத்துக்கிட்ட வந்தவன்ன ஒரு சின்னபய தான் சொன்னான் அக்கா உங்கபுல்லுக்கட்டுல ஏதோநெழியுதுகட்டக்கீழபோடுங்கக்கா ன்னு.
பதறிப்போயி கட்டக்கிழபோட்டா சுருசுருண்ணு கட்டுவிரியன் ஓடுது
பாத்தஒடன கீழமயங்கிவிழுந்துட்டா அவன் ஓடிப்போய் சாயுபுகடைல சொன்னான்கூட்டம் கூடிருச்சு. ஒடனே ஆரோ வைத்தியரப்போயி கூட்டியாந்தாக வைத்தியரு விரியன் எமன்கிட்ட சொல்லிட்டு வருவான்னு ஒதட்டபிதுக்கிட்டாரு, இருளாயிவாயில நுரைதள்ளிடுச்சு
அய்யோபாவமேன்னு தெரிஞ்சவுக ஆரோபோய்அவளோட புள்ளைகளைக்கூட்டியாந்தாக மூணும் ஓடியாந்து நின்னுச்சு என்னான்னு புரியாம
எல்லாரும் அடிப்பாவிமகளே ஒம் விதி இப்புடி முடியனுமா....பாவம் புருசன் போன போக்கு தெரியல. இப்ப இவளும் போயிட்டாளே புள்ள குட்டிக அனாதையாவுல்ல நிக்கிதுன்னு கண்ணு கலங்குனாக.....
மூணு புள்ளைகளும் என்னான்னு தெரியாம அழுதுச்சுக. சின்னப்புள்ள பச்சமண்ணு மட்டும் அம்மாவைப்பாத்து எங்கம்மா முட்டக்கோசு போண்டானுகேட்டப்ப எல்லார்கண்ணும் கலங்கிடுச்சு
டீக்கடை சாயிபு கொழந்தைகளை அணைச்சிக்கிட்டாரு..தாத்தா நானிருக்கேன்னு.... அழுகாதீங்க பிள்ளைகளான்னு சொன்னப்ப அவரு கலங்கிட்டாரு
பாத்த பொம்பளைக கண்ணும் கலங்கிடுச்சு..... மனுசப்பொறப்பு பொறந்தா இவரை மாதிரி இருக்கனும்ன்னு ஒரு அம்மா சொல்லுச்சு..... சாயிபு எல்லாம் அவன் செய்ல்ன்னு கண்ணீர் வடிச்சாரு.........
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக