02.09.20-ரேவா : 19 - சித்ரமாயனின்_கைவரிசை - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 2 செப்டம்பர், 2020

02.09.20-ரேவா : 19 - சித்ரமாயனின்_கைவரிசை

 



02.09.20


ரேவா


சித்ரமாயனின்_கைவரிசை_19


நாகையின் கடற்கரையில் தன்னுடன் வந்த மாலுமியை குறுவாளால் தாக்கி விட்டு தப்பி ஓடும் இருவரைக் கண்ணுற்றதும் , மரக்கலத் தலைவனுக்கு அவர்களைத் துரத்திச் செல்வதை விட தனது  ஊழியனின் உயிரைக் காப்பதே சிறந்தது என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் கடற்கரை சுங்கச் சாவடித் தலைவனிடம் கூறி, வைத்திய உதவியை நாடலாம் என்றாலோ,  அப்பிராந்தியத்தில் அச்சமயத்தில் எழக்கூடிய வீணான குழப்பத்தை மனதில் எண்ணியவனாய்,  தனது சக மாலுமியை மரக்கலத்திற்கு கொண்டு செல்வதே நல்லது என முடிவெடுத்தவனாய், தளையிலிருந்து  படகினை விடுவித்ததோடு, கடலில் படகினைத் தள்ளிவிட்டுத் தாவி ஏறிய மரக்கலத் தலைவன் துடுப்பினை விரைவாக வலிக்கத் துவங்கினான். மரக்கலத்தை நெருங்கியதும் எட்டிப்பார்த்த இரண்டு மாலுமிகள் படகில் தங்களுடன் வந்த மாலுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டதும் , நூலேணி வாயிலாக மளமளவென ஒருவன் இறங்கியதோடு மரக்கலத் தலைவனுக்கு , காயம்பட்டவனை மேலே கொண்டு வர உதவினார்கள்.


மரக்கலம் முழுதும் பரபரப்பு உடனே தொற்றிக் கொள்ள, விரைந்து வந்த உதயச்சந்திரன் காயம்பட்டவனை  மரக்கல அறையின் மஞ்சத்தில் கிடத்தியதோடு, அவர்களுடன் வந்திருந்த மருத்துவரை அழைத்து , அவனது காயத்தைக் கவனிக்குமாறு பணித்தான்.


" மருத்துவரே..இவனது நிலை எப்படியிருக்கிறது..? "


" கவலைகொள்ள ஒன்றுமில்லை..இவனை காயப் படுத்தியவர்கள் இவனை கொல்ல வேண்டுமென்ற நோக்கில் செயல்பட வில்லை..இவனிடமிருந்து ஏதோ தகவலைப் பெற விரும்பியவர்களாகவே , இவனை அச்சப்படுத்தக்  காயப்படுத்தியிருக்கிறார்கள்.." என்றார் மருத்துவர்.


" ஆம்..மருத்துவர் கூறுவது உண்மை தான்..அதனால் தான் என்னைக் கண்டதும் அவர்கள் ஓடிவிட்டார்கள்..

இவனை அச்சப்படுத்தி தகவலைப் பெற முனைந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.." என்றான் மரக்கலத் தலைவன்.


வைத்தியர்  குறுவாள் பாய்ந்திருந்த இடத்தில் அவனது மேலங்கியை அகற்றிவிட்டு, பீறிட்டு எழுந்த குருதியை துணியால் துடைத்ததோடு, ஏதோ பச்சிலைகளை கெட்டியாக அரைத்து எடுத்து காயத்தின் மீது அதன் சாற்றைப் பிழிந்ததோடு, தீயினால் ஒரு வகை மெழுகினை வாட்டி காயத்தின் மீது இளஞ்சூட்டில் வைத்து, ஒரு துணியால் இறுக்கிக்  கட்டி முடிச்சினைப் போட்டார்..அத்தோடு சிறிய மரப்பேழையில் வைத்திருந்த சூரணம் ஒன்றை எடுத்து தேனில் குழைத்து அவனது நாவினில் தடவியவர்,  " இவன் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுவான், எழுந்ததும் கொஞ்சம் மதுவை புகட்டுங்கள். சிறிது நேரம் நித்திரையில் இருக்கட்டும், யாரும் அவனை இப்போது தொந்தரவு செய்யாதீர்கள்.." என்றுவிட்டு வெளியேறினார்.


மருத்துவர் கூறியபடியே,  சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவன், உடல் உபாதையினால் முனகினான். சற்று மதுவினைக் கொடுத்து அவனை நித்திரையில் ஆழ்த்தினர்.


இச்செயல்களை முழுதும் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்த பல்லவ மல்லனும், பியூஷாவும் , " படைத்தலைவரே..இவனை இந்நிலைக்கு ஆளாக்கியவர் யார்..? " என்றனர் ஏக காலத்தில்.


" நம்மை ஒழிக்க நினைக்கும் பகைவர்கள்.." என்றான் கோபத்துடன் உதயச்சந்திரன்.


" நம்மை ஒழிக்க நினைக்கும் பகைவர்கள் இருக்கின்ற இடத்திற்கு பல்லவ மல்லனை அழைத்துக் கொண்டு போவது உசிதமான செயலா..? " என்றாள் பியூஷா.


" வேறு வழியில்லை..பல்லவ மல்லன் பகைவர்களுக்கிடையே தான் வாழ்ந்தாக வேண்டும்..பல்லவ மல்லனுக்கு ஆபத்து நாற்புறமும் சூழ்ந்தேயிருக்கிறது..

ஆனால் அதற்கெல்லாம்  அஞ்சி நடுங்குவதால் ஆவதொன்றுமில்லை..

அனைத்து ஆபத்துக்களையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டியது பல்லவ மல்லனின்  முன்னிருக்கும் கடமை..பல்லவ மல்லனை உடனிருந்து காப்பது எங்களின் கடமை..இதைக் கண்டு எல்லாம் நாங்கள் பின் வாங்கப் போவதில்லை.


இரவின் முதலாம் ஜாமம் துவங்கியிருந்தது. மரக்கலத்தின் சில இடங்களில் விளக்குகளை மாட்டிவிட்டுச் சென்றனர் மாலுமிகள்.

பியூஷாவும், பல்லவ மல்லனும் இருந்த அறைக்குள்ளும் விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. உதயச்சந்திரனோ மரக்கலத்தின் மேல் தளத்தில் நின்றவாறு மரக்கலத் தலைவனோடு உரையாடிக் கொண்டிருந்தான்.


" மரக்கலத் தலைவரே, காலையில் நீங்களிருவரும் வந்த போது எதையும் விசாரிக்கும் நிலைமையில் இல்லை..! இப்போது சொல்லுங்கள்..! கரையில் என்ன நடந்தது..? "


" படைத்தலைவரே..படகினைத்  தளையில் கட்டியபின் , இவனை காவலாக நிறுத்தி விட்டு, நான் சுங்கச் சாவடித் தலைவரைச் சந்திக்கச் சென்றேன், தாங்கள் தந்த ஓலைகளைத் தந்தபின்,  தாங்கள் கூறிய தகவலையும் தெரிவித்து விட்டுக் கிளம்பினேன். சித்ரமாயனின் ஆட்கள் நாகையில் அதிகம் தென்படுகிறார்கள் கவனம் என்றார்..சரி என்றபடியே கிளம்பி கரையில் நமது படகினை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தேன்..தூரத்தில் என்னைக் கண்டதும் நமது படகின் அருகில் நின்றிருந்த இருவர் ஓடவும் நமது மாலுமி படகினுள் விழவும் சரியாக இருந்தது..நான் விரைந்து போய் , நிலைமையை உணர்ந்து அவனை இங்கு கொண்டு வந்து விட்டேன்..அவ்வளவு தான் ..மற்றபடி வந்தவர்கள் நமது மாலுமியிடம் என்ன பேசினார்கள் என்பதோ, எதற்காக இவனை குறுவாளால் தாக்கினார்கள் என்பதோ எனக்குத் தெரியாது..நமது மாலுமி கண்விழித்தால் அவனிடம் விசாரிக்கலாம்.வந்தவர் எவர் என்பதையும் நான் அறியேன்..அனைத்தும் அறிந்தவன் அவன் தான். மயக்கம் தெளிந்து விழிக்கட்டும்..அவனிடமே விசாரிக்கலாம்.." என்றான் மரக்கலத் தலைவன்.


" ம்..சரி தான்..நமது மாலுமி விழித்தவுடன் என்னை அழையுங்கள்.." என்ற உதயச் சந்திரன் மேல்தளத்தில் பல்லவ மல்லன் இருந்த அறையை நோக்கி நடக்கத் துவங்கினான்.


இரண்டு நாழிகைக்குப் பின், மரக்கலத் தலைவன் ஓடி வந்தான்.


"படைத்தலைவரே மாலுமிக்கு மயக்கம் தெளிந்து விட்டது வாருங்கள்.."


இருவரும் மாலுமி மயக்கமாய் இருந்த அறைக்குள் நுழைந்தார்கள்..கட்டிலில் படுத்திருந்தவன் உதயச்சந்திரனைக் கண்டதும் எழுந்து அமர முயற்சித்தான்., அவனைப் பார்வையாலேயே வேண்டாமென தடுத்த உதயச் சந்திரன் ,  


"சற்று உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள மது அருந்துகிறாயா..? " என்றான்.


மாலுமியோ வேண்டாம் என மறுத்து விட்டான்.


" காலையில் கடற்கரையில் என்ன நடந்தது..? "


" மரக்கலத் தலைவர் என்னை படகிற்கு காவலாக நிறுத்தி விட்டுச் சென்றதும் இருவர் என்னருகில் வந்தனர். கடலில் தத்தளித்தபடி நின்று கொண்டிருந்த நமது மரக்கலத்தைக் காட்டி, நீ அதில் வந்தவனா என்றனர். ஆம் என்றேன். எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டான் ஒருவன், நானும் காம்புஜ தேசத்தில் இருந்து வருவதாக சொன்னேன். இருவரும் இலேசாய் சிரித்தபடி, இங்கு என்ன விசயமாய் வந்தீர்கள் என்றான். எனக்குத் தெரியாது என்றேன். உன்னுடன் யாரெல்லாம் வந்தது எனக் கேட்டுக் கொண்டிருந்தான்..

அதற்குள்ளாக நம் மரக்கலத் தலைவர் வருவதைக் கண்டதும் , என்னை அவர்கள் வைத்திருந்த குறுவாளால் திடீரெனத் தாக்கி விட்டு ஓடி விட்டார்கள்..நான் மயக்கமுற்று படகினில் விழுந்து விட்டேன்..அவ்வளவு தான் எனது நினைவில் இருக்கிறது " என்று தட்டுத்தடுமாறி கூறி முடித்தான்.


" ம்..சரி..நீ நன்கு ஓய்வெடுத்துக் கொள்..உடல் உபாதை தெரிந்தால் சற்று மது வாங்கி அருந்து..சரியாகி விடும்  கவலைப்படாதே.! "

என்ற உதயச் சந்திரன் சட்டென மரக்கலத் தலைவனிடம் திரும்பியவனாய், 


" மரக்கலத் தலைவரே, அது சித்ரமாயனின் ஆட்கள் தான்..நான் யாரை அழைத்து வந்திருக்கிறேன் என அறிய நடந்த முயற்சி இது..எந்த நேரமும் ஆபத்து நம்மை சூழ்ந்தேயிருக்கிறது எனவே கவனமாக இருக்க வேண்டும். எந்த படகாவது நமது மரக்கலத்தை அணுகுகிறதா என்று விழிப்புடன் இருந்து கவனிக்கவும் .." என்றான் உதயச்சந்திரன்.


" அப்படியே செய்கிறேன் படைத்தலைவரே.." என்றான் பணிவுடன் மரக்கலத் தலைவன்.


உதயச் சந்திரனது எண்ணம் வீணாகவில்லை, இரவின் மூன்றாம் ஜாமம் முடியும் தருவாயில் அடர்ந்த இருளில் ஒரு படகு இவர்களது மரக்கலத்தை மெல்ல அணுகி கொண்டிருந்தது.


_ தொடரும்..


#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages