04.01.21 #மலை_நாட்டு_மங்கை 4#தகியுதீன்_மாளிகையில்_04 - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 4 ஜனவரி, 2021

04.01.21 #மலை_நாட்டு_மங்கை 4#தகியுதீன்_மாளிகையில்_04


04.01.21


#மலை_நாட்டு_மங்கை


#தகியுதீன்_மாளிகையில்_04


மாறவர்ம குலசேகர பாண்டியரின் இறுதிச்சடங்கினை நடத்திய அன்று இரவுப் பொழுதின் முதலாம் ஜாமத்தில் பாண்டிய நாட்டின் துணை முதன் அமைச்சர் தகியுதீன் அப்துல் ரகுமான் அவர்களது மாளிகையில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது. பாண்டிய நாட்டின் நலம் விரும்பிகள் அனைவரும் அங்கே வரவழைக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் குலசேகர பாண்டியரின் வாரிசுகளான சுந்தரபாண்டியனுக்கோ, இளவரசனாய் தேர்வு செய்யப்பட்ட வீரபாண்டியனுக்கோ முறையான அழைப்பு அனுப்பப் படவில்லை. இருவரையும் சில காரணங்களுக்காக துணை அமைச்சர் தவிர்த்து விட்டார். 


மாளிகையெங்கும் ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளியில்  துணையமைச்சரின் செல்வாக்கு தெள்ளனவே புலப்பட்டது. உயர் ரக ஆசனங்களில் ஜடாவர்ம சுந்தரபாண்டியரும், விக்கிரம பாண்டியரும், வரலாற்று ஆசிரியன் அப்துல்லா வாஸப்பும் வீற்றிருந்தார்கள். மற்றும் அங்கு பாண்டிய நாட்டின் முக்கிய மந்திரிகளும், தளபதிகளும் வீற்றிருந்தார்கள்.  அனைவரது முகங்களிலும் தெளிவற்ற ஒரு நிலையோடு குழப்பமே மேலோங்கியிருக்க, அனைவரது முகங்களையும் ஒருமுறை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டதோடு தனது மெல்லிய குரலில் நிதானமாகப் பேசத் துவங்கினார் துணையமைச்சர் தகியுதீன்.


" பாண்டிய நாட்டின் நலத்தையும், சிறப்பையும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து கட்டிக் காப்பாற்றும் பொருட்டு இந்த அவசரக் கூட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஏனெனில் நானிங்கு உரைக்கப் போகும் சில உண்மைகள் உங்களுக்கு பேரதிர்ச்சியைத் தரலாம். ஆனால் அதை நான் மறைப்பதாலோ அல்லது சொல்லாமல் விடுவதாலோ இந்த பாண்டிய நாட்டிற்கு நான் தீமையை செய்தவனாகி விடுவேன். எனவே நன்கு யோசித்து பாண்டிய நாட்டின் எதிர்கால நலன் கருதியே உங்கள் அனைவரையும் இங்கு வரவழைத்துள்ளேன்.." என்றவராய் ஒரு நெடிய  பெருமூச்சினை வெளியிட்டார் முதியவரான தகியுதீன்.


அனைவரும் அமைதியுடன் அவரது முகத்தினையே கவனித்தபடியிருக்க, மேலும் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.


" நான் சொல்லப் போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை.  கடந்த பல மாத காலமாக நோய்வாய்ப்பட்டு மஞ்சத்தில் கைகால்கள் அசைவின்றி கிடந்த நமது மன்னர் மாறவர்ம குலசேகர பாண்டியரது நோயினை குணப் படுத்துவதற்காகவே, பாரசீகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியனும், மருத்துவக்கலையில் நிபுணத்துவம் பெற்றவருமான அப்துல்லா வாசப்பை இங்கு தருவித்தேன். அவர் நமது  மன்னரை குணப்படுத்தியதோடு, மன்னர் நோய்வாய்ப்பட்டதற்கான ரகசியத்தையும் கண்டு பிடித்து விட்டார்.." எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே குறிக்கிட்ட விக்கிரம பாண்டியர்.


" மன்னர் நோய்வாய்ப்பட காரணமென்ன..? என்ன ரகசியம் அது..? " என்றார் கொதிப்புடன்.


" பொறுமை...விக்கிரம பாண்டியரே..கூறுகிறேன்.


" தங்களின் சகோதரர் குலசேகர பாண்டியர் தினந்தோறும் இறைவனை வழிபட  மந்திரங்களும், வழிபாட்டு பாடல்களும் அடங்கிய  ஓலைகளை வாசிப்பது வழக்கம். அதன் பின் இறைவனுக்கு படைக்கப் பட்ட பிரசாதத்தை உண்பது உண்டு். இதை உணர்ந்த ஒருவன் ஓலை நறுக்கினில் கொடிய விஷ மூலிகைச் சாற்றினைத் தடவி, அதை வாசித்தபின் , இறைவனுக்குப்  படைக்கப் பட்ட பிரசாதத்தை உண்ணும் மன்னரது உடலில் விஷமானது சிறுக சிறுக சேர்ந்து அவரது நரம்பு மண்டலத்தையே பாதிக்கும் படி செய்து விட்டான். இதனால் கடுமையான நோயினால் தாக்குண்ட குலசேகரர் செயலிழந்து படுக்கையில் வி்ழுந்து விட்டார். ஆனால் அப்துல்லா வாஸப்பின் அமிர்தசஞ்சீவி நமது மன்னரை குணப்படுத்தி விட்டது. அது மட்டுமின்றி மன்னரை இந்நிலைக்கு ஆளாக்கிய கயவனால் அப்துல்லா வாஸப்பிற்கும் பல ஆபத்துகளும், இன்னல்களும் விளைவிக்கப் பட்டன. ஆனால் அதிலிருந்து அல்லாஹ் ( ஸல் ) கருணையால் அவரும் காப்பற்றப் பட்டார்.."


" யாரந்த கயவன்..? மன்னரையும் நோய்வாய்ப் படுத்தியதோடு, இவருக்கும் ஆபத்தினை உருவாக்கியவன்..? " என்றார் கோபத்தோடு சீற்றம் துலங்க ஜடாவர்ம சுந்தரபாண்டியன்.


" சுந்தரபாண்டியரே..தங்களது தமையனாருக்கு புதல்வனாய் பிறந்திருக்கிறானே..தங்கள் பெயருடையவன்..அவன் தான் இந்த கொடுஞ்செயல்களின் சூத்திரதாரி.." என்றார் நிதானமாய் தகியுதீன்.


" என்ன...! " ஆச்சர்யமாய் எழுந்தது விக்கிரம பாண்டியரது குரலும், ஜடாவர்ம சுந்தரபாண்டியரது குரலும்.


" ஆம்..மாறவர்ம குலசேகரரின் மைந்தன் சுந்தரபாண்டியன் தான் இந்த கொடுஞ் செயல் புரிந்தவன். அது மட்டுமல்ல உங்களது இதயங்களை வலுவாக்கிக் கொள்ளுங்கள்..மன்னரைக் கொன்றதும் அவனே.."


" என்ன..ஒரு துணிச்சல்..! பெற்ற தகப்பனையே ஒருவன் கொன்றானா..! எதற்காக..ஏன்..? " குரலில் ஆவேசம் தொனிக்க கோபத்தில் முகம் சிவக்க , நறுநெய்பூசி வளர்த்த மீசையும் துடிக்க இரைந்தார்  விக்கிரம பாண்டியர்.


" ம்..என்ன செய்வது..! அரியணையின் பேரில் ஏற்பட்ட மோகமும்  நாட்டமும் சுந்தரபாண்டியனை பெற்ற தந்தையையே கொல்லுமளவிற்குத் தூண்டியுள்ளது.  வேறென்ன இருக்கிறது இவ்வளவு கொடுஞ்செயல்களைச் செய்ய..?"


" உண்மையாகவா..துணையமைச்சரே..? "


இதுவரை பேசாமல் அமைதி காத்தபடி கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லா வாஸப்  முதன் முறையாக பேசத் துவங்கினான்.


" ஆம்..பாண்டிய மண்டலாதிபதிகளே..

பாண்டிய நாட்டின் துணையமைச்சர் கூறுவது அனைத்தும் உண்மை. பட்டமகிஷியின் மகனாய் இருந்தும், பாண்டிய நாட்டின் மன்னருக்கு மூத்த மகனாய் இருந்தும் இளவரசுப் பட்டத்தை தனக்கு வழங்காமல் தந்தை வீரபாண்டியனுக்கு வழங்கியது சுந்தரபாண்டியருக்கு பிடித்தமில்லை. அது மட்டுமின்றி அரசாங்க காரியங்கள் பலவற்றில் தன்னை ஒதுக்குவதாகவும் அவர் மனதிற்குள் மன்னர் மீது துவேஷம் கொண்டிருந்தார் . "


" அவனை எங்கு ஒதுக்கினோம்..? திருக்கானப்பேரின் நிர்வாகத்தை பாண்டிய மண்டலத்திற்காக அவன் தானே கவனித்துக் கொண்டிருக்கிறான்." 

என்றார் குரலில் வியப்பினைக் காட்டியவராய் விக்கிரம பாண்டியர்.


" காயலின் வளத்தை விட திருக்கானப்பேரின் வளமென்ன சிறப்பானதா..? வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதும் பிடிக்கவில்லை..கூடவே வீரபாண்டியனை காயலின் பொறுப்பில் அமர்த்தியதும் பிடிக்கவில்லை..

சுந்தரபாண்டியனுக்கு.." என்றார் தகியுதீன்.


" ம்..இது  பாண்டிய நாட்டின் எதிர்கால நலன் குறித்து குலசேகர பாண்டியர் எடுத்த முடிவல்லவா..!சுந்தரபாண்டியனின் வீரத்தின் பேரில் அவர் கொண்ட அபிப்ராயம் அல்லவா இளவரசு பட்டம் வீரபாண்டியனுக்குச் சென்றது." என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.


" ஆம்..அது தான் சுந்தரபாண்டியனிடத்தில் துவேஷத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

அது மட்டுமின்றி பட்டமகிஷியின் மகனான தன்னை ஒதுக்கி விட்டு, காதல் கிழத்தியின் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதும், தனக்குப்பின் பாண்டிய அரசுரிமை வீரபாண்டியனுக்குத் தான் என குலசேகரர் அறிவித்ததும்,  பெற்ற தந்தையையே கொல்லுமளவிற்கு அவருக்குள் வெறுப்பை வளர்த்து விட்டிருக்கிறது.." என்றார் தகியுதீன்.


" அவன் அரசரைக் கொன்றதற்கு ஆதாரம் இருக்கிறதா..? " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியர்.


" நேரடி சாட்சியங்கள் எதுவும் இல்லை. ஆனால் மன்னர் இறந்த இரவு மதுரையின் கோட்டையை விட்டு சுந்தரபாண்டியனின் செந்நிற புரவி வெளியேறியதை கோட்டையின் காவலன் ஒருவன் கவனித்துள்ளான்." என்றார் தகியுதீன்.


" திருக்கானப்பேரில் இருக்க வேண்டியவன் ..இங்கு எதற்கு வந்தான்..?" என்றார் விக்கிரம பாண்டியர்.


" வேறெதற்கு தந்தையை கொலை செய்வதற்குத் தான்.."


" சுந்தரபாண்டியன் குணத்தில் மோசமானவன் தான்..ஆனால் அவன் தனது தந்தையையே கொல்லத் துணிவான் என என்னால் நம்ப முடியவில்லை..! " என்றார் ஜடாவர்ம சுந்தரபாண்டியன்.


" அரியணை ஆசை யாரை விட்டது..! அது மட்டுமின்றி சுந்தரபாண்டியருக்கு அபவாத இராஜயோகத்தால் அரசாளும் வாய்ப்பு அமையும் யோகமுள்ளது.." என்றான் அப்துல்லா வாஸப்.


" அபவாத ராஜயோகமா..? "


" ஆம்..கொலை..கொள்ளை மூலம் ஒருவருக்கு அரியணை கிட்டுமாயின் அது அபவாத இராஜ யோகம் எனப்படும். சுந்தரபாண்டியரது கிரஹநிலை அதையே வலியுறுத்துகிறது. " என்றான் அப்துல்லா வாஸப்.


" ஏதேது..வரலாற்று ஆசிரியர் மருத்துவ நிபுணராய் இருப்பதே ஆச்சர்யமெனில், நிமித்திகராகவும் அல்லவா இருக்கிறார்.." என்றார் பலமான நகைப்புகிடையே விக்கிரம பாண்டியர்.


" ஓரளவு கிரஹநிலைகளைக் கொண்டு எதிர்காலம் குறித்தும்  அறிவேன்.." என்றான் அடக்கத்துடன் அப்துல்லா வாஸப்.


" வீரபாண்டியனது நிலை குறித்து உமது கருத்தென்னவோ..? " என்றார் குதர்க்கமாய் விக்கிரம பாண்டியர்.


" அவருக்கும் அரசாளும் யோகமுள்ளது..ஆனால் அவருக்கு சிக்கல்கள்  ஆட்சியில் தொடர்ந்து காணப்படும்.." என்றான் அப்துல்லா வாஸப்.


" ம்..நாளை எப்படியும் ஆலோசனை கூட்டத்தை கூட்டத்தான் வேண்டும்..

பாண்டிய நாட்டிற்கு மன்னரை தேர்வு செய்வது முக்கியமல்லவா..! இளவரசனாய் இருக்கும் வீரபாண்டியனையே மன்னனாக நியமிக்க வேண்டும். அதுவே மறைந்த மன்னரின் எண்ணமாகவும்  இருந்தது. சுந்தரபாண்டியன் என்ன குளறுபடி செய்வான் என்பது தான் புரியவில்லை. " என்றார் ஜடாவர்ம சுந்தர பாண்டியர்.


அப்போது..ஒரு வீரன் பரபரப்புடன் உள்ளே நுழைந்தவனாய்..


" அனைவருக்கும் பணிவான  வணக்கம்..வருந்ததக்க செய்தி..நம்முடைய மன்னரது மெய்காவல் பொறுப்பேற்றிருந்த **தென்னவன் ஆபத்துதவிகளில் சிலர் மன்னரது சாவிற்கு பொறுப்பேற்று மயான பூமியில்  தற்கொலை செய்து கொண்டனர்." என்றான் சோகம் ததும்பிய குரலில்.


" என்ன..! " என்று அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து விட்டனர்.


_ தொடரும்..


** பாண்டியரின் மெய்காவல் பொறுப்பேற்றிருந்த தென்னவன் ஆபத்துதவிகளில் பலர் மன்னரது சாவிற்கு பொறுப்பேற்று தற்கொலை செய்து கொண்டதை வரலாறு பதிவிட்டிருக்கிறது.


_ அனுராஜ்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages