03.09.20
#ரேவா
#கடற்கரையில்_வரவேற்பு_20
மரக்கலத் தலைவனிடம் , மாலுமியை குறுவாளால் தாக்கி விட்டு ஓடியது சித்ரமாயனின் ஆட்களது கைவரிசை தான் என்பதையும், காம்புஜ தேசத்திலிருந்து நாம் யாரை இங்கு அழைத்து வந்திருக்கிறோம் என அறிவதே சித்ரமாயனின் நோக்கமாகும் என்பதையும் வலியுறுத்திய உதயச்சந்திரன், எதற்கும் இரவு வேளையில் எந்த படகும் நமது மரக்கலத்தை அணுகாதிருக்கும் படி கவனமாகக் கண்காணிக்கவும் உத்தரவிட்டான்.
இரவு முகிழ்ந்து, வானில் நிலவின் ஒளியோடு, விண்மீன்களும் போட்டிப் போட்டு பிரகாசித்துக் கொண்டிருக்க, நாகையின் தீபஸ்தம்பத்திலிருந்து எழுந்த பொன்னிற ஒளியும் கடலின் பரப்பில் நீண்ட தொலைவு விழுந்து கொண்டிருக்க, இரண்டொரு மரக்கலங்கள் நடுக்கடலில் தத்தளித்தபடி ஆடி அசைந்து கொண்டிருந்தது. நாகையின் புத்தவிகாரையிலிருந்து எழுந்த மணியோசை இரவின் மூன்றாம் ஜாமத்தை அறிவிக்க..கடற்கரையின் தெற்குப் பகுதியில் காணப்பட்ட அடர்ந்த தோப்பில் இருந்து வெளிப்பட்ட இருவர் , கடற்கரை மணலில் இருளடர்ந்த பகுதியிலேயே நடக்க முற்பட்டதோடு, தங்களது கச்சையையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொண்டும், நடையில் துரித வேகத்தைக் கூட்டி கடலோரம் தத்தளித்தபடி நின்றிருந்த ஒரு சிறு படகினைத் தளையிலிருந்து விடுவித்து கடலில் தள்ளியதோடு, இருவரும் தாவி ஏறி அமர்ந்து கொண்டு துடுப்பினைத் துழாவத் துவங்கினார்கள்.
படகானது இரவின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு, நீரில் துடுப்புத் துழாவும் சப்தம் மட்டும் எதிரொலிக்க மெல்ல மெல்ல உதயச்சந்திரனது மரக்கலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. மரக்கலத்தின் தளத்தில் காணப்பட்ட விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்ட நிலையில் தளமெங்கும் மிரட்டும் இருளே சூழ்ந்திருந்தது.
படகானது மரக்கலத்தை நெருங்கியதும், அம்மரக்கலத்தை இருமுறை சுற்றி வந்து பார்வையிட்ட படகு, சற்று நிதானித்து பின் நூலேணியை நோக்கி நகர்ந்ததோடு, தங்களது படகினை மரக்கலத்தோடு பிணைத்து கட்டி விட்டு, நூலேணியில் விறுவிறுவென இருவரும் மேலே ஏறியதோடு, மரக்கலத்தின் மேல் தளத்தில் மெல்லக் குதித்தார்கள்.
மேல் தளத்தில் எவரையும் காணாது சற்றே திகைத்து நின்றவர்கள்..இருளில் பார்வையைக் கூர்மையாக்கி நாலாபுறமும் கவனித்தார்கள். சுக்கான் அருகில் இருவர் நித்திரையில் ஆழ்ந்திருப்பதையும், மரக்கலத்தின் மற்றொரு பக்கப் பலகையை ஒட்டி இருவர் நித்திரை புரிவதும் மங்கலாக கண்களுக்குப் புலப்பட்டது..மற்றபடி மேல்தளம் முழுதும் நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க, வந்தவர்களின் பார்வை விளக்கு எரிந்து கொண்டிருந்த மேல்தளத்தின் இரு அறைகளின் மேல் பட்டதோடு, தங்களின் முகத்தில் பூரண திருப்தியை நிலவ விட்டுக் கொண்டவர்களாய் மெல்ல அடிமேல் அடிவைத்து பூனையைப் போன்று நடந்தவர்கள், விளக்கு எரிந்து கொண்டிருந்த ஒரு அறைக் கதவின் அருகில் வந்ததோடு மட்டு்மல்லாது கதவினை ஒட்டி அமைக்கப் பட்டிருந்த சாளரத்திற்குள் எட்டிப் பார்க்கவும் முற்பட்ட வேளையில், அறையின் கதவை சடாரெனத் திறந்து கொண்டு கையில் தனது ஆயுதத்துடன் வெளிப் பட்டான் உதயச் சந்திரன். திடீரென வந்து நி்ன்ற அவனை முற்றிலும் எதிர்பாராத அவர்கள் இருவரில் ஒருவன் தனது இடுப்புக் கச்சையில் இருந்து ஒரு குறுவாளை எடுத்து அவனை நோக்கி வீசியதை, உதயச்சந்திரன் தனது ஹேலடி ஆயுதத்தால் மிக எளிதாக தட்டி விட்டான். குறுவாளை வீசியவன் இனியும் இங்கிருந்தால் ஆபத்து என்று உணர்ந்தவனாய், மற்றொருவனையும் அழைத்துக் கொண்டு எதிர்திசையில் ஓடத் துவங்க, பக்கப் பலகை அருகில் படுத்திருந்த மரக்கலத் தலைவனும் மற்றொரு மாலுமியும் சட்டென எழுந்து நிற்க, அந்தப் பகுதியை நோக்கி ஓடியவர்கள் மிரண்டவர்களாய், சட்டென பக்கப்பலகையில் ஏறியதோடு, எவர் கைகளிலும் அகப்படாமல் இருக்க திடீரென இருவரும் கடலில் குதித்தார்கள். நூலேணி அருகில் கட்டப் பட்டிருந்த படகினை கட்டவிழ்த்து செல்ல முற்பட்ட அவர்களை நோக்கி, மேல்தளத்திலிருந்து வேல்கள் வீசப்பட, தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டவர்களாய் கடலில் வேகமாக கரையை நோக்கி நீந்தத் துவங்கினார்கள்.
இருவரும் நீரில் குதித்து நீந்தத் துவங்கியதும், அவர்கள் மீது ஆயுதங்களை வீச முற்பட வேண்டாமென தடுத்து விட்ட உதயச்சந்திரன், இருவரும் லாவகமாகவும், வேகமாகவும் நீந்திச் செல்வதைக் கண்டு, நீச்சலில் தேர்ந்த இருவர்தான் இங்கு வந்திருக்கிறார்கள், கால் காத தூரம் கடந்து கரையை அடைவது அவர்களுக்கு ஒன்றும் கடினமான காரியமில்லை என்பதையும் ஊகித்தறிந்தான். ஆனால் இருவரையும் இதற்கு முன் தான் சந்தித்த நினைவில் இல்லை என்பதும், இருவரும் தனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்களாக இருந்ததையும் உதயச்சந்திரன் உணர்ந்தே யிருந்தான். இருவரும் ஒருவேளை இந்த நாகையைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கலாம் என்ற எண்ணமும் உதயச்சந்திரன் மனதில் எழுந்தது.
" படைத்தலைவரே, அவனை அறைக்குள் நுழைய விட்டு பிடித்திருக்கலாம்..நீங்கள் சட்டென கதவினைத் திறந்து வெளிவந்து விட்டீர்கள்..அவன் மேல்தளத்தில் குதித்தவுடனே விழித்துக் கொண்டோம், என்ன செய்கிறான் எனக் கவனித்துக் கொண்டிருந்தோம்..கையும் களவுமாகப் பிடிக்க கூடிய சந்தர்ப்பம் கைநழுவி விட்டது.." என்றான் ஆதங்கத்துடன் மரக்கலத் தலைவன்..
" அவன் அறைக்குள் நுழையாதவரை நமக்கு நல்லது..அறைக்குள் நுழைந்திருந்தால் பல்லவமல்லனை கவனித்திருப்பான். பல்லவ மல்லனது உயிருக்கு ஆபத்தையும் உண்டு பண்ணியிருப்பான்..பரவாயில்லை..பிறிதொரு சந்தர்ப்பத்தில் சிக்காமலா போய்விடப் போகிறான்..! " என்றான் சீற்றம் சற்றும் தணியாத குரலில் உதயச்சந்திரன்.
" உண்மை தான்..அவர்கள் வந்த காரியம் நிறைவேறாத நிலையில் தான் செல்கிறார்கள்.." என்றான் மரக்கலத் தலைவன்.
" எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள்..அவனது படகு நமது மரக்கலத்தில் தான் பிணைக்கப் பட்டுள்ளது..நாம் நாளை மாலை கரையிறங்கும் வரை கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.." என்றான் பலத்த யோசனையுடன் உதயச்சந்திரன்.
மறுதின மாலை. கதிரவன் மேற்கு வானில் வெகுவேகமாய் கீழிறங்கிக் கொண்டிருந்தான். வானம் முழுதும் செந்நிறமும் , மஞ்சளும் கலந்து புது வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.
நாகையின் கடற்கரையோரத் தோப்புகளின் மரங்களில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த பறவைகள், தங்களது கூட்டினை நோக்கி பறந்து கொண்டிருந்தன. தீபஸ்தம்பத்தில் எரிப்பதற்காக பெரிய பெரிய கட்டைகளும், பெரிய கொப்பரைகளில் எண்ணெய்யும் எருதுகள் பூட்டிய வண்டிகளில் அம்மாலை வேளையில் வந்து இறங்கிக் கொண்டிருந்தது.
காலை வேளையில் கடலுக்குள் சென்றிருந்த பரதவர் தங்களது படகினை கரையை நோக்கி செலுத்தியபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிலரது முகங்களில் மகிழ்ச்சியும், ஒரு சிலரது முகங்களில் கவலையும் தென்பட்டதையும் காண முடிந்தது.
உதயச்சந்திரன் தனது மரக்கலத் தலைவனை அழைத்து, ஏற்கனவே நேற்று இரவு வந்தவர்களால் கீழே கட்டப் பட்டிருந்த படகோடு, மேலும் இரு படகினை கீழே இறக்குமாறு கட்டளையிட்டான். பெரிய படகொன்றில் பல்லவமல்லன், பியூஷாவோடு , உதயச்சந்திரனும், மரக்கலத் தலைவனும் ஏறிக் கொள்ள , மற்ற இரு படகுகளில் ஆறு மாலுமிகள் புடைசூழ கடற்கரையை நோக்கி படகுகள் விரைந்தன.
கரையில் இவர்களது வருகையை எதிர்பார்த்து, முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன், பல்லவ தேசத்தின் தளபதி பல்லவடி அரையன், மூலப்பிரகிருதியார், கடிகையார், செந்தலை பிடுகு சுவறன் மாறன் முத்தரையர், நாகை சுங்கச் சாவடித் தலைவர் என பல அரசாங்க அலுவலர்கள் காத்திருந்தார்கள். பல்லவ மல்லனும், உதயச்சந்திரனும் வந்த படகானது கரையை அடைந்ததும், முரசு அதிர்ந்தது, மங்கள வாத்தியங்கள் முழங்க, பெரிதான மலர் மாலைகளை பல்லவ மல்லனுக்கும், உதயச்சந்திரனுக்கும் அணிவித்தவர்கள், பூரணக்கும்ப மரியாதையுடன் பல்லவ மல்லனை வரவேற்றார்கள். " பல்லவ மல்லன் வாழ்க..! பல்லவ தேசத்தின் மன்னன் வாழ்க..! என்ற கோசங்களோடு, மலர்களைத் தூவி எல்லோரும் ஆசி வழங்க தமிழக மண்ணில் தனது பாதம் பதித்தான் . காம்புஜ தேசத்து பனிரெண்டு வயது பாலகனான பல்லவ மல்லன் என அழைக்கப் பட்டவனும் பின்னாளில் நந்திவர்மன் என அழைக்கப் பட்டவனுமான பல்லவ தேசத்திற்கு கிடைத்த பீமவர்மனின் வாரிசு.
இந்த நிகழ்ச்சிகள் முழுவதையும் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த தோப்பில் பரதவர்களுடன் பரதவர்களாக நின்றபடி கவனித்துக் கொண்டிருந்த இரு சோடி நயவஞ்சக விழிகளுக்கு உரியவர்கள் , அனைவரும் கலைந்ததும் தங்களது புரவிகளில் ஏறி காஞ்சியை நோக்கி விரைந்தார்கள்.
_ தொடரும்..
# அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக