06.09.20
#ரேவா
#அதிகரண_சபையின்_தீர்ப்பு_23
காஞ்சியில் ஒரு நள்ளிரவில் திடுமென அரண்மனைக்குள் நுழைந்த உதயச்சந்திரனும் அவனதுப் புரட்சிப் படையினரும் நித்திரையில் இருந்த சித்ரமாயனையும், வீரமல்லனையும் சிறைசெய்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
நிலவறைச் சிறைச்சாலையில் புலிபோல் உறுமிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் உலவிக் கொண்டிருந்த சித்ரமாயனை, சிறைக்குள் அமைதியாக அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த வீரமல்லன், " சித்ரமாயா, ஏனிந்த நடை..சற்றே அமைதியாக அமரலாமே..?!" என்றான்.
" மாமா..எப்படி அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்..? உதயச்சந்திரனும், அவனது கூட்டாளிகளும் நம்மைக் கொண்டு வந்து எங்கு நிறுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்துமா அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்..? " என்றான் சீற்றத்தோடு சித்ரமாயன்.
" சித்ரமாயா..அமைதியாக இருக்க வேண்டிய தருணம் இது தான்..பரபரப்புடன் மனதை வைத்திருந்தால் அதில் யோசனை பிறக்காது..சற்றே அமைதியாக சிந்தித்துப் பார்.."
" சிறைக்குள் தள்ளிய பின் அமைதி எப்படி பிறக்கும்..? " கோபமாய் வெளிவந்தது சித்ரமாயனின் குரல்.
" சித்ரமாயா..சிறையில் அடைப்பவர்களை ஒரு வார காலத்திற்குள், #அதிகரணம் என்றழைக்கப் படும் அறங்கூர் அவையங்களில் ஒப்படைக்க வேண்டுமென்பதையும், அவையம் குற்றத்தை விசாரித்து தீர்ப்புக் கூறாமல் , சிறையில் தொடர்ந்து ஒருவரை வைத்திருக்க இயலாது என்பதையும் மறந்து விட்டாயா..? "
" அட..அது எனது நினைவை விட்டு மறந்து போய் விட்டதே..! நல்லவேளை நினைவு படுத்தினீர்கள்..மாமா.." என்றான் சற்றே தெளிந்தவனாய் சித்ரமாயன்.
" உன்னைப் போல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தால் அனைத்தும் மறந்து தான் போகும்..சித்ரமாயா தருமாசன சபை வாயிலாக நமக்கான குற்றங்களில் இருந்து வெளிவந்து விடலாம்..கவலைப் படாதே.." என்றான் வீரமல்லன்.
" மாமா..உறுதியாக வெளிவந்து விடலாமா..? "
" அதிலென்ன சந்தேகம் உனக்கு..? "
" நம் மீதான குற்றச்சாட்டுக்களை உதயச்சந்திரன் நிரூபித்தால்.." என இழுத்தான் சித்ரமாயன்.
" நிரூபிக்க அவனிடம் ஏது ருசு..? என்னக் குற்றங்களை நம்மீது சுமத்தப் போகிறான்..? பரமேஸ்வரவர்மனின் உண்மையான அரசியல் வாரிசு நீ தான்..கவலை கொள்ளாதே..? "
" ம்..கவலையில்லை இருந்தாலும் அவ்வப்போது பயமும் அச்சமும் வாட்டி வதைக்கிறது..இந்தப் பதவி என்னை விட்டுப் போய்விடுமோ என்று..! " என்றான் திகிலும் , அச்சமும் கலந்த குரலில்.
சித்ரமாயனையும், வீரமல்லனையும் சிறைப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின் அதிகரணம் எனும் அறங்கூர் அவையத்தின் தருமாசன சபை கூட்டப்பட்டது. அதன் தலைவராக அதிகரண போசகர் உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருந்தார். உதயச் சந்திரனது தரப்பினர் ஒரு பக்கமும், சிறைச்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சித்ரமாயனும், வீரமல்லனும் ஒரு பக்கமாய் நின்றிருந்தார்கள். காவலன் ஒருவன் குற்றத்தின் தன்மையை குறித்து அவயத்தாருக்கும் , மக்களுக்கும் பொதுவில் விளக்கம் தந்து அமர, அதிகரண போசகர் சித்ரமாயனை ஏறெடுத்தவராய்.." உங்கள் இருவர் மீதும் பல்லவ அரசினை எதிரியான சாளுக்கியர் வசம் ஒப்படைத்தது, முந்தைய பரமேஸ்வரவர்மரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாய் நடந்து கொண்டது, ஆட்சியில் மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து, அதிக காணவரி விதித்தது, வணிகர்களின் பொருட்களை ஆட்களை வைத்து கொள்ளையடித்தது, மக்களின் உடமைகளுக்கு பாதுகாவலாக விளங்க வேண்டிய நீங்களே அவர்களது உடமைகளை தீக்கிரையாக்கியது என பலவித குற்றச் சாட்டுகள் உங்கள் மீது பதிவாகி சுமத்தப் பட்டிருக்கிறது.. இதற்கு நீங்கள் என்ன மறுமொழி தரவிருக்கிறீர்கள்..? " என்றார் அதிகரண போசகர்.
" அதிகரண போசகருக்கு வணக்கம். இவையனைத்தையும் நான் மறுக்கிறேன். பல்லவருக்கு எதிரியான சாளுக்கியன் எனது தந்தையாரை கொன்றுவிட்டு, நமது காஞ்சியையும் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் அவனால் இங்கு தொடர்ந்து தங்கியிருந்து ஆட்சி செலுத்த முடியாத நிலை, மேலும் எனது தலையீட்டின் பேரில் காஞ்சியில் அவன் எவ்வித அசம்பாவிதத்தையும் நடத்தவில்லை. சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் என் வசமே அரசினைத் தந்து சென்றான். இது அரசுகளில் நடக்கின்ற சாதாரண விசயங்கள் தான்..புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல, நமது படைகள் தோற்று பின் வாங்கி விட்ட நிலையில் , தற்காலிகமாக ஆட்சியை நம் வசப்படுத்திக் கொள்வதும் , பிறகு சமயச் சந்தர்ப்பம் கண்டு எதிரிகளிடம் போர் புரிவதும் அரசியல் ராஜதந்திரங்கள்..
அதையே நானும் செய்தேன்.மற்றபடி
நீங்கள் குறிப்பிட்ட ஏனையக் குற்றங்கள் அனைத்தும் நான் செய்யாதவை..தகுந்த ஆதாரங்கள் இல்லாதவை..ஏனெனில் இந்தக் குற்றங்களுக்கு அரசில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்பட வில்லை. எனவே காரணமின்றி எனது அரசினைக் கலைத்து, என்னையும் எனது மாமாவையும் சுய லாபத்திற்காக இவர்கள் இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதே எனது வாதமாகும்.." சித்ரமாயன் வீரமல்லன் சொல்லச் சொன்னதை அப்படியே கூறி விட்டு நிமிர்ந்தவனாய் , வீரமல்லனது முகத்தைப் பார்த்தான்.
வீரமல்லனின் முகத்தில் பூரணத் திருப்தி நிலவியது.
அதிகரண போசகர் உதயச் சந்திரனைப் பார்வையிட்டபடி, " நீங்கள் இதற்கு என்ன மறுமொழி சொல்ல விரும்புகிறீர்கள்..?
சித்ரமாயனது செயலில் எவ்வித குற்றமும் தென்பட வில்லை. ஏனைய செயல்களுக்கு தகுந்த ஆதாரங்களும் தங்கள் தரப்பிலிருந்து வேண்டும்.." என்றபடியே உதயச்சந்திரனை ஏறெடுத்தார்.
" அதிகரண போசகரே..சித்ரமாயன் பேரில் இதுமட்டுமல்ல , கொலைக் குற்றமும் இருக்கிறது.." என்றான் உதயச்சந்திரன்.
" அப்படியெனில் நாளை
அதிகரண சபையைக் கூட்டி இந்தக் குற்றத்தை அங்கு தெரிவியுங்கள்..தருமாசன சபையில் கொலைக்குற்றம் விவாதிக்க இயலாது.." என்றார் அதிகரண போசகர்.
இத்துடன் சபை கலையலாம். என்றதும் சித்ரமாயனையும், வீரமல்லனையும் நான்கு வீரர்கள் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
" மாமா..நாம் நாகையில் உதயச் சந்திரனையும், காம்புஜ தேசத்து சிறுவனையும் கொலை செய்ய நடந்த முயற்சியை புகாராக பதிவு செய்வானோ..? "
" அதைத் தான் நானும் எண்ணுகிறேன்..பரவாயில்லை அவனுக்கு அதிலும் சாட்சியங்கள் இருக்கப் போவதில்லை..வீணாக கவலைப்படாதே.."
" கவலைப்படாமல் என்ன செய்வது..? நாம் சாட்சியங்கள் இன்றி சிறை செல்ல மட்டோம்..ஆனால் பறிபோன பதவி போனது தானே..! " என்றான் வருத்தத்துடன்.
" என்ன செய்வது, உதயச் சந்திரனை நீ சிறைசெய்து காவலில் வைத்திருந்தால் அவனால் இப்போது இந்த பிரச்சனை வந்திருக்காது. அதிகரண சபை அறத்தை மதிக்கும் அளவிற்கு, வீரத்தையும் மதிக்கும்.. உனது பதவியை நீ வீரத்திற்கு அல்லவா பலியிட்டு விட்டாய்.."
" மாமா..இரவு வேளையில் புகுந்து திடீரெனத் தாக்கியவனை வீரன் என பாராட்டுகின்றீர்களே..! "
என்றான் கோபத்துடன் சித்ரமாயன்.
" என்ன செய்வது..? அவன் துணிச்சல் உன்னிடத்தில் இல்லையே.."
" மாமா..என் முன்னால் அவனைப் புகழாதீர்கள்.."
" அப்படியாவது உனக்கு வீரம் வரட்டுமென்று தான் புகழ்கிறேன்.." என்றான் இகழ்ச்சியுடன் வீரமல்லன்.
மறுநாள் காலை.
அதிகரண சபை கூட்டப் பட்டிருந்தது.
பூர்வாங்க குற்றங்களும், விசாரணைகளும் முடிந்தபின், " சித்ரமாயன் மீது கொலைக் குற்றம் சுமத்துகிறீர்கள்..? எப்போது நடந்தது இது..? " என்றார் உதயசந்திரனைப் பார்த்து அதிகரண போசகர்.
நான் பல்லவ மல்லனை நாகைக்கு மரக்கலத்தில் அழைத்து வந்த போது, எனது மரக்கலத்திற்கு இரண்டு ஒற்றர்களை அனுப்பி என்னையும், நான் அழைத்து வந்த சிறுவனையும் கொலை செய்ய முயற்சி நடந்தது." என்றான் உதயச்சந்திரன்.
" இல்லை..பொய்..நான் கொலை செய்ய ஆட்களை அனுப்பவேயில்லை " என்றான் சித்ரமாயன்.
" கொலை முயற்சிக்கான சாட்சிகள் உண்டா..? "
" உண்டு," என்றான் கம்பீரமாக உதயச்சந்திரன்.
அப்போது, அரங்கினுள் காயம் பட்டு விழுந்த மரக்கல மாலுமியும், அவனைத் தொடர்ந்து சீராளன் இரண்டு நபர்களை கயிறுகளால் பிணைத்துப் பிடித்த படியும் உள் நுழைந்தார்கள்.
சபைக்குள் கயிற்றால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நுழைந்த இருவரை கண்டவுடன் சித்ரமாயனது முகமும், வீரமல்லனது முகமும் இலேசாக வெளிறத் துவங்கியது.
" இந்த இருவரும் , நாகைக் கடற்கரையில் எனது மாலுமியை கொலை செய்ய முயற்சித்ததோடு, என்னையும் , நான் அழைத்து வந்த சிறுவனையும் கொலை செய்ய எனது மரக்கலத்திற்கும் நடு இரவினில் வந்தார்கள்..இதை அவர்களிடமே கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம்." என்றான் உதயச் சந்திரன்.
" சிறை செய்யப்பட்ட இருவரும் , எங்களை கொலை செய்து வரும்படித் தூண்டியது வீரமல்லனும், சித்ரமாயனும் தான் " என்றனர் தலைகுனிந்தபடி.
அதிகரண போசகரின் பார்வை சித்ரமாயன் மற்றும் வீரமல்லன் மீது விழுந்தது. இருவரும் தலைகுனிந்தபடி நின்ற கோலமே உண்மையை உள்ளபடி உணர்த்த, தொண்டையை ஒருமுறை சரிசெய்தபடி பேச்சைத் துவக்கினார் அதிகரண போசகர், " இருவர் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்ட காரணத்தால் இருவரையும் ஐந்தாண்டுகள் நிலவறைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்..இதை ஆட்சேபணை செய்வோர் எவரேனும் இச்சபையில் இருந்தால் ஆட்சேபிக்கலாம்." என்றுரைத்து விட்டு அமைதியாக... சபையே நிசப்தத்தில் மூழ்கியிருக்க..திடீரென ஒரு குரல் எழுந்தது.
" நான் இதை ஆட்சேபிக்கிறேன்.."
குரல் வந்த திசையை நோக்கினார்கள் அனைவரும் .
அங்கே..
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : #அதிகரணம் எனப்படும் அறங்கூர் அவையங்கள் அந்நாளில் குற்றங்களை மதிப்பிட்டு தண்டனைகள் வழங்கின. தருமாசன சபை என்பது சொத்துரிமை , உரிமை குறித்த விசயங்களை விவாதிப்பதற்கும் ( சிவில் ), அதிகரண சபை என்பது கொள்ளை, கொலை, திருட்டு போன்ற குற்றங்களை விவாதிப்பதற்கும் ( கிரிமினல் ) இயங்கியது. இந்த இருசபையின் தலைவராக அதிகரண போசகர் என்பார் இருந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக