07.09.20
ரேவா_
பல்லவமல்லனின்_பெருங்குணம்_24
சித்ரமாயனும், வீரமல்லனும் கொலை குற்றத்திற்கு ஆளாகியதோடு, அது சந்தேகத்திற்கிடமின்றி உதயச்சந்திரனால் நிரூபிக்கப் பட்டதனால், அதிகரணசபையின்
தீர்ப்பினை அறிவித்த அதிகரண போசகர் இருவருக்கும் ஐந்தாண்டு நிலவறைச் சிறை தண்டனை வழங்கியதோடு, தீர்ப்பு குறித்து அவையில் இருப்போர் ஆட்சேபணை தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம் என்றுரைத்த மறுகணம், கூட்டத்தில் இருந்து ஒரு குரல் " நான் தீர்ப்பை ஆட்சேபிக்கிறேன்." என்றதும், அனைவரது பார்வையும் அங்கே குரல் வந்த திசையை நோக்கிச் சென்றது.
அங்கே, சிரித்தபடி நின்று கொண்டிருந்தான் பல்லவ மல்லன்.
அதிகரண போசகரின் தீர்ப்பினை ஒரு சிறுவன் ஆட்சேபிப்பதா..? ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் எழுந்தது வியப்பு.
" சிறுவனே..நீ யார்..? எனது தீர்ப்பினை ஆட்சேபிப்பதன் காரணமென்ன..? " என்றார் சற்று வியப்பின் வசப்பட்டவராய் அதிகரண போசகர்.
" அதிகரண போசகரே, வணக்கம். நான் பல்லவ மல்லன், இந்த பல்லவ தேசத்தின் நலனைக் கருதி பரமேஸ்வரவர்மரின் அபிமானிகளால் காம்புஜ தேசத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பீமவர்மரது வம்சத்தைச் சேர்ந்தவன்." எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, அதிகரண போசகர் குறிக்கிட்டார்.
" என்ன காரணத்திற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறாய்..? "
" பல்லவ தேசத்தின் எதிர்கால மன்னனாக என்னை தேர்ந்தெடுக்க விரும்பியவர்களால் முறைப்படி எனது தந்தையின் அனுமதியின் பேரில் பல்லவ தேசத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறேன். "
" நல்லது..எதற்காக கொலை செய்ய முயற்சித்தவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறாய்..? அது தவறல்லவா..?! " என்றார் அதிகரண போசகர் திகைப்புடன்.
" ஐயா, நான் பல காத தூரமுள்ள ஒரு தேசத்திலிருந்து இங்கு வந்திருக்கிறேன்..எனது சகோதரர்கள் வரமறுத்துவிட்ட நிலையில், நான் மட்டும் துணிந்து இங்கு வந்திருக்கிறேன்..ஏன்..?
இந்த தேசத்தின் மன்னனாக மட்டும் வீற்றிருக்கவா..?! இல்லை, எனது மூதாதையர் வழியினர் ஆண்டு வந்த தேசத்தினைக் காணவும், எனது உறவுகளை காணவும் தான்.அது மட்டுமின்றி இந்த தமிழகத்தின் புகழ் எங்கள் தேசம் வரை பரவியுள்ளது, அத்தகைய தமிழக தேசங்களை காண வேண்டுமென்ற ஆவலும் தான். மன்னவனாய் ஆட்சி செய்பவன் தெய்வமாய் கருதப் படுவான் எங்களது தேசத்தில், தெய்வம் அனைவரையும் காக்க நினைக்குமே ஒழிய தண்டிக்க முற்படாது. அது மட்டுமின்றி நான் மன்னனாக பதவியேற்கும் பொழுது எனது உறவுகளை வஞ்சித்து விட்டு பதவியேற்க விரும்பவில்லை. குற்றம் சாட்டப் பட்ட இருவரும் எனது நெருங்கிய உறவுகள். அவர்களை இந்த அவையமானது கருணை கொண்டு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். எனது பதவியேற்பில் அவர்களும் பங்கெடுத்து கொள்ள வேண்டுமென்பதே எனது விருப்பம்." என்று அமைதியாக கூறி முடித்தான்.
அதிகரண போசகர் மட்டுமல்லாது, பல்லவ தேசத்தின் பிரதானிகள் அனைவருமே திகைத்துப் போய் வாயடைத்து நின்று விட்டனர்.
"மன்னனுக்குரிய மகத்தான தகுதி உன்னிடமிருக்கிறது , குற்றங்கள் புரிபவர்களுக்கு மன்னிப்பை விட கொடுமையான தண்டனை வேறெதுவும் இருக்க முடியாது, குற்றங்கள் ருசுபடுத்தபட்ட பின்னும், உனது பெருந்தன்மையான குணத்தாலும், பண்பாலும் உறவுகள் தண்டனை பெறுவதை நீ விரும்பாத காரணத்தால் ,பல்லவ நாட்டின் எதிர்கால மன்னனின் ஆக்ஞையாக கருதி குற்றம் சாட்டப்பட்ட சித்ரமாயனையும், வீரமல்லனையும் விடுவிப்பதோடு, கொலைக் குற்றச் செயல்களுக்கு துணையாய் நின்ற இருவரையும் இணைந்தே விடுதலைச் செய்கிறேன்...கூடவே பல்லவ தேசத்திற்கு ஒரு சிறந்த மன்னனை தேர்வு செய்து கொணர்ந்த உதயச்சந்திரனுக்கு வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.." என்றார் அதிகரண போசகர்.
அதிகரண சபையில் எழுந்த பல்லவ மல்லனது கோரிக்கையையும், அதனை ஏற்று அதிகரண போசகர் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரையுமே விடுதலை செய்து விட்டதையும், சிறுவனாய் இருந்தாலும் கடல் கடந்து வந்து உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்திய பல்லவ மல்லனுக்கு உடனே அங்கு வாழ்த்தொலி எழுந்தது. பல்லவ மல்லன் வாழ்க..! எதிர்கால பல்லவ மன்னன் வாழ்க..! என்றெழுந்த கோசம் அடங்க வெகு நேரமாயிற்று.
அதிகரண சபையை விட்டு அனைவரும் வெளியேறிய நிலையில் , பல்லவ நாட்டு தளபதி பல்லவடி அரையரும், உதயச் சந்திரனும் தங்களது புரவிகளில் ஏறியும், அதனை மெல்ல நடத்திய படி உரையாடிக் கொண்டே வந்தனர்.
பல்லவ தளபதி பல்லவடி அரையன், " உதயச் சந்திரா, தருமாசன சபையில் சாட்சிகள் இன்றி சித்ரமாயன் விடுதலையாகி விடுவானோ என்று சற்று கவலையில் ஆழ்ந்து போனேன்..நாம் பட்ட பாடெல்லாம் வீணாகிப் போனதே என்று, ஆனால் நீயோ கொலைக் குற்றத்தை அவன் மீது சாட்டியதோடு, கொலையாளிகளையும் சீராளன் மூலம் கொண்டு வந்து நிறுத்தி விட்டாய்...அதுசரி இந்த கொலையாளிகளை சீராளன் எப்படி அதிகரண சபைக்கு சரியாக கொண்டு வந்து சேர்த்தான்." என்றார் ஆச்சர்யத்துடன்.
" தளபதியாரே, நாம் காஞ்சி அரண்மனையில் புகுந்து சித்ரமாயனையும், வீரமல்லனையும் சிறை செய்த மறுதின மாலையில்.. சீராளன் என்னைக் காண வந்திருந்தான். நாகையில் என்னைக் கொல்ல முயன்றவர்களை சிறைப்படுத்தி வைத்திருப்பதாக கூறினான்.." என்று கூறிக் கொண்டிருக்கும் போது சீராளனே அவர்களுடன் வந்து கலந்து கொள்ள,
"சீராளா..நாகை கொலைகாரர்கள் இருவரையும் எவ்வாறு சிறை படுத்தினாய் என்ற விபரத்தை நமது தளபதி அவர்களுக்கு நீயே தெரியப் படுத்து .." என்றான் உதயச்சந்திரன்.
காஞ்சியில் சித்ரமாயனை சிறைசெய்த மறுநாள், காஞ்சியின் சத்திரமொன்றில், உணவருந்த சென்றிருந்தேன். அப்போது எனக்கு முன்பாக இருவர் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர்.அவர்களது பேச்சில் சித்ரமாயன் மற்றும் வீரமல்லனது பெயர்கள் அடிபடவே சற்று எனது செவியை கூர்மையாக்கினேன்.
" இப்போது என்ன செய்வது..? உதயச்சந்திரனது புரட்சி படை சித்ரமாயனை நடுஇரவில் அரண்மனையில் புகுந்து சிறைசெய்து விட்டார்களாமே.." என்றான் ஒருவன்.
" ஆம்..நானும் கேள்வி பட்டேன், இனி இந்த நகரில் நாம் தொடர்ந்து தங்கியிருப்பது நமக்கு ஆபத்தையே விளைவிக்கும், இன்று மாலையே இந்த நகரை விட்டுச் சென்று விட வேண்டும்." என்றான் மற்றொருவன்.
இந்த தகவலைக் கேட்டவுடன், சித்ரமாயன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விசயம் அவர்களிடத்தில் உள்ளதை அறிந்த நான், உண்ணுவது போல் அவர்களது நடவடிக்கைகளை கவனிக்கத் துவங்கினேன். இருவரும் உணவருந்தி விட்டு, அச்சத்திரத்தின் மேல் தளத்திற்குச் சென்றனர். சத்திரத்து நிர்வாகியிடம் அவர்கள் இருவரும் அந்த சத்திரத்தில் தான் தங்கியிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட நான், உடனே நமது வீரர்களுடன் சென்று சிறை செய்து விட்டேன்.. அவர்களை மிரட்டிக் கேட்கவும், நாகையில் மாலுமியை காயப்படுத்தியதும் இவர்கள் தான் என்பதையும், அது மட்டுமின்றி நமது படைத்தலைவரையும், அவர் அழைத்துக் கொண்டு வந்த சிறுவனையும் காஞ்சிக்குள் நுழைவதற்கு முன்பாக, நாகையிலேயே தீர்த்துக்கட்டி விட சித்ரமாயனும், வீரமல்லனும் தீட்டியத் திட்டத்தையும், கொல்ல நடந்த முயற்சியையும் ஒப்புக் கொண்டு விட்டனர்..அனைத்தும் சித்ரமாயனும், அவனது மாமா வீரமல்லனும் சேர்ந்து செய்த ஏற்பாடு, காஞ்சி ஒற்றர்களாய் இருந்தால் படைத்தலைவர் அறிந்து கொள்வார் என்பதற்காக, நாகையைச் சேர்ந்த பரதவர்கள் இருவரை இத்திட்டத்திற்கு பொன்னாசை காட்டி இழுத்திருக்கிறார்கள் இருவரும்.." என்று முடித்தான் சீராளன்.
"நல்ல காரியம் செய்தாய் சீராளா..இல்லையென்றால் சரியான சாட்சிகள் இன்றி நாம் சித்ரமாயனை சிறை செய்தது பலனளித்திருக்காது.." என்றார் பல்லவடி அரையன்.
" சிறை செய்தும், சாட்சியை கொண்டு வந்து நிறுத்தியும் கூட பலனில்லாமல் போய்விட்டதே..பல்லவ மல்லன் அவர்களுக்கு விடுதலையை வாங்கி தந்து விட்டானே.." என்றான் சீராளன்.
" அது அவனது உயரிய குணத்தைக் காட்டுகிறது.. சரி, சபை நடவடிக்கைகள் முடிந்ததும் பல்லவ மல்லன் யாருடன் சென்றான்." என்றார் தெரிந்து கொள்ளும் ஆவலில் பல்லவடி அரையன்.
" பல்லவ மல்லனை தன் மாளிகைக்கு அழைத்துப் போயிருக்கிறார் பிரம்மஸ்ரீ ராஜன். "
" நல்லதாய் போயிற்று..இனி பல்லவ மல்லனை காஞ்சி அரியணையில் அமர்த்துவதற்கான நாளினைக் குறிக்க வேண்டியது தான்.." என்றார் பல்லவ தளபதி பல்லவடி அரையன்.
" தளபதியாரே..பல்லவ மல்லனை மகுடாபிஷேகம் நடைபெறும் வரை கவனமாக பாதுகாப்பதும் நமது கடமையாகிறது. எதற்கும் சித்ரமாயன் மீதும், அவனது மாமன் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்..பல்லவ மல்லனுக்கு தீங்கினை விளைவிக்க தயங்க மாட்டார்கள்..பிறந்த போதிருந்து தொடரும் குணம் சட்டென மாறி விடாது..நயவஞ்சக நாகங்கள் இருவரும், விஷத்தை எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள்..கவனமாய் இருப்பது நமக்கு தான் நன்மை பயக்கும்." என்றான் உதயச் சந்திரன்.
" உண்மை தான்..விரைவில் பல்லவ மல்லனுக்கு மகுடாபிஷேகத்திற்கான பணியைத் துவக்குவது நல்லது.." என்றார் பல்லவ தேசத்தின் தளபதி.
அவர்களது புரவி, ராஜவீதிக்குள் நுழைய, எதிரே ஒரு புரவியில் வந்த வீரனொருவன்,பல்லவடி அரையனைப் பார்த்து, " ஐயா தங்களைக் காண ஒருவர் அரண்மனைக்கு வந்து வெகுநேரமாய் காத்திருக்கிறார்." என்றான்.
" யாராக இருக்கும்..? " எனக் கேட்டுக் கொண்டவராய்., " உதயச்சந்திரா சற்று வேகமாய் செல்வோம் வா.." என்றபடி மூவரும் புரவியில் விரைய, தொடர்ந்தான் அவர்களைத் தேடி வந்த வீரன்.
அரண்மனை வாசலில் புரவிகளை நிறுத்தி இறங்கிய மூவரும், பின் தொடர்ந்த வீரனைப் பார்த்து உதயச் சந்திரன்.
"புரவிகளை கொட்டடியில் அடைத்து விடு.."என்றதோடு, அரண்மனையின் பலக் கட்டுக்களைக் கடந்து விருந்தினர்களைச் சந்திக்கும் கூடத்திற்கு விரைந்தனர் மூவரும்.
பல்லவடி அரையனைத் தொடர்ந்து உதயச்சந்திரனும், சீராளனும் கூடத்திற்குள் நுழைய,
அதிகரண சபையை விட்டு வெளியேறும் போது, மனதில் யாரை சந்திக்கவேண்டும் என பல்லவடி அரையன் நினைத்திருந்தாரோ, அவர் இங்கு அழைப்பதற்கு முன்னரே வந்து அமைதியாக வீற்றிருப்பதைக் கண்டு வியப்பின் வசப்பட்டவராய்,
" வரவேண்டும்..வரவேண்டும்..தங்களைச் சந்திக்க எண்ணியிருந்தோம்..தாங்களே இங்கு வந்தது எங்கள் பாக்கியம் " என்றபடி அவரை வரவேற்றார் பல்லவடி அரையன்
இவர்களை கண்ணுற்றதும் அமைதியாக தான் அமர்ந்திருந்த ஆசனத்தை விட்டு எழுந்து நின்று வணங்கினார் அவர்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக