08.09.20
ரேவா
சமணத்_துறவி_நாகநந்திக்குரவர்_25
அதிகரண சபையை விட்டு வெளியேறிய பல்லவ நாட்டின் தளபதி பல்லவடி அரையனும், படைத்தலைவன் உதயச்சந்திரனும் அரண்மனைக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில் பல்லவர்களது ஒற்றன் சீராளனும் இணைந்து கொள்ள, மூவரும் அரண்மனையை நெருங்கும் போது, வீரனொருவன் வந்து , அரண்மனையில் ஒருவர் வெகுநேரமாக தளபதியை காண்பதற்காக அமர்ந்துள்ளார் எனத் தெரிவிக்க, மூவரும் விரைந்து அரண்மனையை அடைந்து, வந்தவர் யாரென அறிய விழைகிறார்கள்.
அரண்மனையின் விசாலமானக் கூடத்தில் அமர்ந்திருந்த அந்த துறவி இவர்களைக் கண்டதும், மெதுவாய் எழுந்து பணிவுடன் வணங்கினார்.
#பஞ்சபாண்டவர் மலையினை சேர்ந்த சமணத் துறவி நாகநந்திக்குரவர் தான் அவர். அங்கு ஜினகரம் ஒன்றினை அமைத்துக் கொண்டு துறவற வாழ்க்கை வாழ்பவர்.
துறவி மெலிந்த தேகத்துடன், ஐம்பது வயதினைக் கடந்தவராய், முழங்காலைத் தொடும் படியான நீண்ட கைகளைக் கொண்டவராகவும், மொட்டைத் தலையுடன், காவி காஷாயமணிந்தவராய், தோளில் காவி தகடி ஒன்றினை போர்த்தியபடி, முகத்தினில் மிளிர்ந்த தேஜஸூடன், ஒளி பொருந்திய கண்களில் அருள் பார்வை நிறைந்தவராயும் காணப்பட்டார். கைகளில் வெள்ளிப் பூண் போடப்பட்ட ஒரு தடி ஒன்று காணப்பட்டதோடு கூடவே மயிற்பீலியும் வைத்திருந்தார். இரண்டையும் ஆசனத்தில் வைத்து விட்டு இவர்களை நோக்கி இருகரம் கூப்பி வணங்கியபோது தான் தெரிந்தது, துறவியின் கரங்களில் காணப்பட்ட பலத் தழும்புகள், முன்னர் அவர் சிறந்த வீரராய் இருந்திருக்க வேண்டுமென்பதை ஊர்ஜிதப்படுத்தியது..
வணங்கிய துறவிக்கு, பதில் வணக்கத்தை மூவரும் தெரிவித்ததோடு,
" ஆசனத்தில் அமருங்கள் துறவியாரே.." என்றான் உதயச்சந்திரன்.
" ஆஹா..தங்களைத் தான் சந்திக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தோம்..நீங்களே வந்து விட்டீர்கள்.." என்றார் பல்லவடி அரையன்.
" அடியவனை எதற்காக காண விரும்பினீர்கள்..?" என்றார் பவ்யமாய் துறவி.
" நாங்கள் தங்களைக் காண விரும்பிய காரணத்தை தெரியப்படுத்துகிறேன். அதற்கு முன் நாகநந்திகுரவரின் திருப்பாதம் காஞ்சி அரண்மனையில் பட்டதன் காரணத்தை நாங்கள் அறிந்து கொள்ள விழைகிறோம்..? " என்றார் பல்லவடி அரையன்.
" முக்கியமான காரணமாய் தான் வந்தேன்..காஞ்சியின் வருங்கால மன்னனை காம்புஜ தேசத்திலிருந்து அழைத்து வந்திருப்பதாக, ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறதே, அம்மன்னனை சந்தித்து ஆசி வழங்கிப் போகலாமென்று வந்தேன்.." என்றார் அமைதியான குரலில் நாகநந்திகுரவர்.
" என்னே ஒற்றுமை..நாங்களும் பல்லவ மன்னனாய் பதவியேற்கப் போகும் பல்லவமல்லனை தாங்கள் ஆசி கூறி வாழ்த்துவதோடு, பதவியேற்பு நாளினையும் தங்களிடம் கேட்டுப் பெறவும், தங்கள் திருக்கரத்தால் மகுடாபிஷேகத்தையும் நடத்தித் தர வேண்டுமென விண்ணப்பிக்கவும் , தங்களைச் சந்திக்க எண்ணியிருந்தோம். இறைவனது கருணை தங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது." என்றான் உதயச்சந்திரன்.
" துறவியாரே, காஞ்சியின் மன்னர் பரமேஸ்வரவர்மனது மகுடாபிஷேகத்தினை தாங்கள் நடத்தி வைக்காத துரதிருஷ்டமே, அவர் பதவியேற்ற மூன்றாண்டுகளிலேயே கங்க மன்னன் சிறீபுருஷனுடன் நடந்த போரில் வீரசுவர்க்கம் அடைந்து விட்டார். அதனால் தான் பல்லவ மல்லனது மகுடாபிஷேகம் தங்களது தலைமையில் நடத்தப்பட வேண்டுமென்பது இங்குள்ளோரின் ஆவல். அது விசயமாய் தான் தங்களைச் சந்திக்க எண்ணினோம்..ஆனால் இறைவனே தங்களை இங்கு அனுப்பி வைத்து விட்டான்." என்றார் மகிழ்வுடன், பல்லவடி அரையன்.
" மிகவும் மகிழ்ச்சி தளபதியாரே.. சுக்லபட்ச வளர்பிறை தான் நடந்து கொண்டிருப்பது..துவாதிசி திதியில் நாம் மகுடாபிஷேகத்தை நடத்தலாம். சிறப்பாகவே அமையும்.. நானும் அதுவரையில் காஞ்சியில் தான் இருக்க வேண்டியுள்ளது. நீங்கள் மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களைப் பாருங்கள்..பல்லவ தேசத்தின் எதிர்கால மன்னன் எங்கே..? நான் அவனைக் காணலாமா..?" என்றார் சமணத் துறவி நாகநந்திக்குரவர்.
" அவசியம் சந்திக்கலாம், முதன்மையமைச்சர் பிரம்மஸ்ரீராஜன் பல்லவ மல்லனை அழைத்துச் சென்றிருக்கிறார்..நான் மாலையில் தங்களைக் காண பல்லவ மல்லனை அழைத்து வருகிறேன்..உங்களுக்கு விருந்தினர் வீதியில் மாளிகை ஒன்றினை ஏற்பாடு செய்கிறேன்..நீங்கள் அங்கு தங்கிக் கொள்ளலாம்.
"நல்லது ..அப்படியே செய்யுங்கள். ஆனால் எனக்கான அறையில் மஞ்சம் தேவையில்லை, சமணத்தை தழுவியதில் இருந்து இரவு உணவினையும் உட்கொள்ளுவதில்லை, பாயோ, படுக்கையோ உபயோகப் படுத்துவதில்லை. ஆசனங்கள் கூட தேவையில்லை தான், ஆனால் தங்களைப் போன்றோர் வந்து சந்திக்கிறார்கள் என்பதனால் ஆசனத்தை தவிர்க்க இயலவில்லை.
நிகந்தராக இருப்பதில் கட்டுப்பாடுகள் அவசியம்.
" அங்ஙனமே ஏற்பாடு செய்து விடுகிறேன்.." என்றவராய்,
காவலன் ஒருவனை அழைத்து சமணத்துறவி நாகநந்திகுரவர் தங்குவதற்கு விருந்தினர் வீதியில் மாளிகை ஒன்றினை ஒதுக்குமாறு கூறியதோடு, துறவியாரையும் அவனுடன் அனுப்பி வைத்தார் பல்லவடி அரையன்.
அரண்மனையின் திருமந்திர ஓலை நாயகத்தை அழைத்த உதயச் சந்திரன் வருகின்ற துவாதசி திதியன்று திருமஞ்சன மகுடாபிஷேகத்திற்கான நாளாக குறிப்பிட்டு, அனைத்து தொண்டை மண்டலச் சிற்றரசர்களுக்கும், கோட்டத் தலைவர்களுக்கும், பல்லவ தேசத்தின் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு கட்டளையிட்டான். மேலும் விழா அன்று நடைபெற வேண்டியவைகளுக்கும் ஏற்பாடுகளை செய்ய கட்டளையிட்டதோடு, காஞ்சி நகரில் பொன்வேலையில் பெருமை வாய்ந்த அரண்மனைப் பொற்கொல்லர் மாதேவி பெருந்தட்டாரை அழைத்து வரவும் உத்தரவிட்டான்.
சில நாழிகைப் பொழுதில் வந்து நின்ற, மாதேவி பெருந்தட்டாரிடம், " ஐயா நமது முதன்மந்திரியின் மாளிகைக்குச் செல்லுங்கள், அங்கு நமது பல்லவ தேசத்தின் வருங்கால மன்னர் பல்லவ மல்லன் இருக்கிறார், அவரைக் கண்டு அவருக்கான மகுடத்தை செய்வதற்காக அளவெடுத்துக் கொள்ளுங்கள். மகுடாபிஷேகத்திற்கு துவாதசி திதியை நாகநந்திகுரவர் தேர்வு செய்துள்ளார், எனவே தாங்கள் மகுடத்தை, முதல் நாளான ஏகாதசி திதியன்றே தந்து விட வேண்டும். பல்லவரது மகுடம் தாங்கள் அறிந்தது தானே..நாகர் வம்சம் என்பதனால் நாகமும், நீல மணியும் நிச்சயம் இடம் பெற வேண்டும், ஏனைய நவரத்தினங்கள் தங்களது விருப்பம் போல் பதித்துக் கொள்ளுங்கள்." என்றான் உதயச்சந்திரன்.
" அப்படியே ஆகட்டும்.."
" ம்..அப்புறம் மற்றொன்று, வெள்ளியிலான #கத்வாங்கமும் செய்யப்பட வேண்டும்.."
" புரிந்தது..படைத்தலைவரே..நான் வருகிறேன்."
"நல்லது..நீங்கள் போய் வரலாம்.."
மாதேவி பெருந்தட்டார் சென்றதும், மகுடாபிஷேகத்திற்கு ஆற்ற வேண்டிய மற்ற பணிகள் குறித்து சிந்திக்கத் தொடங்கினான் உதயச்சந்திரன்.
கதிரவன் தன் பொற்கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு வானில் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தான்.விருந்தினர் மாளிகை வீதியில் இரண்டு புரவிகளில் பிரம்மஸ்ரீ ராஜனும், பல்லவடி அரையனும் பிரவேசித்தார்கள். பல்லவ தளபதி பல்லவடி அரையனது புரவியில் அவருக்கு முன்பாக அமர்ந்தபடி வீதியின் இருமருங்கிலும் வேடிக்கைப் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தான் பல்லவ மல்லன். காஞ்சி நகர் மக்களுக்கு விசயம் எட்டி விட்டது போலும் நாளைய பல்லவ தேசத்து மன்னனை காணும் ஆவலோடு அனைவரும் வீதியில் குழுமி நின்றிருந்ததோடு, பல்லவ மல்லன் வாழ்க..! பல்லவ தேசத்தினை காக்க வந்திருக்கும் பல்லவ மன்னன் வாழ்க..! வாழ்க..! என்ற வாழ்த்தொலிகள் விண்ணதிர ஒலிக்க, இரு புரவிகளும், நாகநந்திகுரவர் தங்கியிருந்த மாளிகை முகப்பில் வந்து நின்றது.
புரவிகளில் இருந்து இருவரும் குதித்து இறங்கியதோடு, பல்லவ மல்லனையும் கைகொடுத்து இறக்கி விடவும் செய்தனர். இரண்டு காவல் வீரர்கள் ஓடி வந்து, குதிரையின் கடிவாளக் கயிற்றைப் பெற்றுக் கொள்ள, அமைச்சரும், தளபதியும் பல்லவ மல்லனோடு அம்மாளிகைக்குள் பிரவேசித்தார்கள்.
கண்களை மூடியபடி ஆழ்ந்த தியானத்தில் இருந்த சமணத் துறவி நாகநந்திகுரவர், அறை வாசலில் இவர்கள் சென்று நிற்கவும், சட்டென கண்விழித்தவராய், கருணை பொழிந்த விழிகளின் அசைவிலேயே உள்ளே வருமாறு பணித்தார்.
மூவரும் இரு கரம் கூப்பி அவரை வணங்கியபடி உள்ளே சென்று அவர் காட்டிய ஆசனத்தில் அமர, துறவி
வியாக்கிராசனத்தை விட்டெழுந்தவராய், தோளில் தகடியை சரியாக போர்த்திக் கொண்டு, மூவருக்கும் தன் கையில் வைத்திருந்த மயிற்பீலியால் தலையில் தொட்டு ஆசி வழங்கினார்.
பின் இலேசாக சிரித்தபடியே, " இந்த பாலகன் தான் பல்லவ மல்லனா..? " என்றார்.
" ஆம் துறவியாரே.."
" வளமாய் வாழ்க..என ஆசி வழங்கியவர் அதன் பின் மகுடாபிஷேகம் குறித்த விசயங்களை பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு , அவர்களை வழியனுப்பி வைத்தார்.
மூவரும் வெளியேறும் வேளையில்..பல்லவ மல்லனை அருகில் அழைத்த துறவியார்,
" உன்னிடம் அதிகம் பேசவில்லை எனக் கவலைப்படாதே..இனி நாம் வருடக் கணக்கில் பேச வாய்ப்பு வரும் " என்றார் சிரித்தபடியே.
தன் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தை வார்த்தையில் வடித்தத் துறவியை ஆச்சர்யமாய் பார்த்தான் சிறுவன் பல்லவ மல்லன்.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : # பஞ்சபாண்டவர் மலை இன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது, அங்குள்ள கல்வெட்டில் நந்திவர்மன் குறித்தும், நாகநந்திகுரவர் குறித்தும் காணப்படுகிறது.
# கத்வாங்கம் சிவனுடைய ஆயுதம். மண்டைஓட்டினை நீள கால் எலும்புகள் பிணைத்திருப்பது போன்ற வடிவம் கொண்டது. கபாலிகர்களும் , காளாமுகர்களும் இந்த ஆயுதத்தை கையாண்டிருக்கிறார்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக