09.09.20
ரேவா
வீரமல்லனின்_புதியத்திட்டம்_26
பல்லவ மல்லனது கோரிக்கையால், அதிகரண சபையால் வழங்கப்பட்ட தண்டனையிலிருந்துத் தப்பிய சித்ரமாயனும், வீரமல்லனும் அதிகரண சபையை விட்டு வெளியேறும் முன் பல்லவ மல்லனைத் தயக்கத்தோடு நெருங்கியவர்களாய் , " எங்கள் இருவரையும் தண்டனையிலிருந்து தப்புவித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் " என்றனர் குரலில் சற்றே குதர்க்கம் கலந்தவர்களாய்.
" நீங்கள் வேறெங்கும் செல்ல வேண்டாம், அரண்மனையிலேயே தங்கிக் கொள்ளுங்கள், நாமனைவருமே உறவினர்கள் தானே.." என்றான் பல்லவ மல்லன் அன்பு நிறைந்த குரலில்.
" ம்..ஆகட்டும்.." என்றபடி தலையாட்டிவிட்டு வெளியேறிய இருவரும் வேகவதியாற்றை நோக்கி புரவியில் விரைந்தனர்.
வேகவதியாற்றினை ஒட்டி அமைந்திருந்த அடர்ந்த தோப்பு ஒன்றில் நுழைந்த இருவரும், அந்த தோப்பிற்குள் ஊடுருவி சென்றனர். அங்கு சட்டென பார்வைக்குப் புலப்படாத பழைய மாளிகை ஒன்று காணப்பட்டது.
இருவரது புரவிகளும் அம்மாளிகை வாசலை சென்றடைந்ததும், உள்ளிருந்து ஒருவன் ஓடி வந்தான். இருவரும் புரவிகளில் இருந்து குதித்து இறங்கியதோடு, " பைரவா..புரவிகளை ஏதேனும் மரத்தில் கட்டிவை என்றவாறு கடிவாளத்தினை அவனை நோக்கி வீசிவிட்டு, நிலம் அதிர அம்மாளிகைக்குள் நுழைந்து பல கட்டுக்களையும், இடைக்கழி களையும் கடந்து மேல் நோக்கிச் சென்ற படிக்கட்டுகள் வழியாக மேல் தளத்தை அடைந்தவர்களாய், அங்கிருந்த ஒரு பெரிய அறைக்குள் நுழைந்ததோடு, அங்கிருந்த மஞ்சமொன்றில் வீரமல்லனும், ஆசனத்தில் சித்ரமாயனும் அமர்ந்தனர். இருவருடைய முகத்திலும் வேதனையும், விரக்தியும் புலப்பட்டது என்றாலும் , அதையும் மீறிய சீற்றம் சித்ரமாயனிடத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அச்சீற்றம் வார்த்தையிலும் வெளிப்பட்டது.
" என்ன ஒரு ஆணவம் பல்லவ மல்லனுக்கு, நமது அரண்மனையில் தங்குவதற்கு நமக்கே அனுமதி வழங்குகிறான்.." என்றான் சித்ரமாயன் குரூரம் தொனி்த்த வார்த்தைகளில் .
" சித்ரமாயா..நாம் அவனது அழைப்பை ஏற்று அரண்மனையில் தங்குவதே பலவகையில் சிறந்தது.." என்றான் யோசனையுடன் வீரமல்லன்.
" மாமா..உங்களுக்கு ஏன் புத்தி இவ்வாறு போகிறது..?
நாமென்ன அவனிடம் யாசகமா கேட்டோம்..? அரண்மனையில் தங்கிக் கொள்கிறோம் என்று...! " என்றான் கோபம் சற்றும் அடங்காதவனாய்.
" சித்ரமாயா, பகைவனை தூரத்தில் இருந்து அணுகுவதை விட , அருகிலிருந்து அணுகுவது நலம் பயக்கும். அது மட்டுமல்ல பல்லவமல்லன் நமது நேரடி கண்காணிப்பில் இருந்தால் அவனை ஒழித்துக்கட்டப் பல சந்தர்ப்பங்கள் அமைய வாய்ப்புள்ளது. கண்காணா இடத்தில் இருந்தபடி எதிரியை கண்காணிப்பதை விட அது வசதியல்லவா..?! " என்றான் பீடிகையுடன் வீரமல்லன்.
" ம்..உண்மை தான்..இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள்..? " என்றான் சற்றே சலிப்புடன் சித்ரமாயன்.
" இன்று இங்கு ஓய்வெடுப்போம், நாளை அரண்மனைக்கே சென்று விடுவோம், படைத்தலைவனும், முதலமைச்சனும் கண்கொத்தி நாகங்கள், நம்மையும் நமது நடவடிக்கைகளையும் கவனிக்க ஏற்பாடு செய்திருப்பார்கள்..அவர்களின் நடுவே நாம் இருந்து கொண்டே நமது வேலையைத் துவக்க வேண்டியது தான்.
வேறு வழியில்லை.. நமக்கு அந்தரங்கமான இரண்டு வேலையாட்கள் போதும். அரண்மனையில் இருந்தபடி அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் துவக்கலாம். எப்படியும் இப்போது பல்லவமல்லனுக்கு மகுடாபிஷேகத்திற்கு நாளினைக் குறித்திருப்பான் பல்லவடி அரையன். இச்சூழலில் நாம் அங்கிருப்பதே நம் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.." என்றான் ஆழ்ந்த சிந்தனையோடு வீரமல்லன்.
" ம்..சரி.." என்று அரைமனதோடு வீரமல்லனின் செயல் திட்டத்திற்கு இணங்கினான் சித்ரமாயன்.
" சித்ரமாயா, நமக்கு சாளுக்கியனது ஒத்துழைப்பு கிடைப்பதென்பது இனி துர்லபம் தான். அவனது நண்பனான கங்கனையும் நாம் நாடிப் போக வாய்ப்பில்லை. இப்போதையச் சூழலில் கொங்கு மண்டலம் நமது பல்லவ தேசத்தின் கட்டுப் பாட்டில் தான் உள்ளது , அதனை ஆக்கிரமிக்கும் ஆசை பாண்டியனுக்கு உண்டு. எனவே நாம் நகர்த்தும் காய்களை தெளிவுடன் நகர்த்தினால் பாண்டியனையும் பல்லவ மல்லனையும் மோத விடலாம். நமக்கும் பல்லவ மல்லனை எதிர்க்க ஒரு வலுவான எதிரியினைக் கைக்குள் வைத்துக் கொண்டது போலாகும். எனவே பாண்டியரோடு நட்புறவு கொள்ள நாம் முயற்சிப்பது நன்மை பயக்கும்." என்றான் வீரமல்லன்.
" மாமா..இது போன்ற விசயங்களை நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்..என்னை எங்கெல்லாம் அழைக்கிறீர்களோ, அங்கெல்லாம் உங்களுடன் வருகிறேன் போதுமா..?
எனக்கு நித்திரை வருகிறது..ம்..நாளை பேசலாம்.." என்றவன் அங்கு இருந்த மற்றொரு மஞ்சத்தில் ஏறி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.
ஆனால்..விழித்துக் கொண்டு மஞ்சத்தில் அமர்ந்திருந்த வீரமல்லனோ, சித்ரமாயனைப் பார்த்துச் சற்றே கோபமுற்றாலும், ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தவனாய், மேல் விதானத்து கட்டைகளையும், அங்கு வரையப் பட்டிருந்த ஓவியத்தையும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவனது மனதினுள் பளிச்சென ஒரு திட்டம் உதயமாகியது.
நிலவின் குளுமையான ஒளி சாளரத்தின் வழியே விழுந்ததோடு, வாடைக் காற்றில் கலந்து வந்த குளிரும் , மாளிகையை மீறி உயரமாய் வளர்ந்திருந்த பன்னீர் மரங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பூக்களின் நறுமணமும் அறையெங்கும் வியாபிக்க, வீரமல்லனையும் நித்திராதேவி அரவணைக்கத் துவங்கினாள்.
மறுதின காலை..
காஞ்சியிலிருந்து பாண்டியரது தலைநகர் செல்லும் ராஜபாட்டையில் இரண்டு புரவிகள் விரைந்து கொண்டிருந்தன. புரவிகளில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்களை
நீங்கள் ஊகித்திருக்கலாம், ஆம். சித்ரமாயனும், வீரமல்லனும் தான் அவர்கள்.
" மாமா..இதென்ன இந்தக் காலை வேளையிலேயே இவ்வளவு குளிர் வாட்டுகிறது..? " என்றான் சித்ரமாயன்.
" சித்ரமாயா, அரண்மனை யிலேயே சுகபோக வாசியாய் வாழ்ந்து பழக்கப் பட்டவன் நீ..உனது சிறுவயதிலேயே தாயை இழந்தபின் தந்தையின் செல்வ கண்காணிப்பில் வளர்ந்த காரணத்தால் துன்பச் சூழல்கள் என்னவென்றே அறியாமல் வளர்ந்து விட்டாய். உனக்கு இது போன்ற குளிரில் பயணிப்பதும் கூட ஒரு வித்தியாசமான அனுபவம் தான்..அரண்மனையை விட்டு வெளியேறாதவனல்லவா..! " என்றான் இகழ்ச்சியும், வெறுப்பும் கலந்த குரலில் வீரமல்லன்.
" அதுசரி மாமா..காலையில் அரண்மனைக்கு செல்லலாமென நேற்றிரவு கூறினீர்கள்..ஆனால் இன்றோ பாண்டியரது தலைநகரான கூடல் மாநகருக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள்..ஏன்..? "
" எல்லாம் காரணமாகத் தான்..நாம் காஞ்சி அரண்மனைக்குச் சென்றபின், நம் மீதான கண்காணிப்பு பலமாய் இருக்கும், நாம் எங்கு செல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதையெல்லாம் ஒற்றர்களை வைத்துக் கண்காணிக்கத் துவங்கி விடுவார்கள், உதயச்சந்திரனும், அந்தக் கிழவன் பல்லவடி அரையனும். எனவே தான் அரண்மனைக்குச் செல்லுமுன் ஒரு காரியத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டு இந்தப் பயணத்தைத் துவக்கியிருக்கிறோம்..
அத்தோடு பல்லவனை எதிர்க்க நமக்கு ஒரு வலுவான எதிரியின் துணை அவசியமல்லவா...? அதனால் தான் பாண்டியனைச் சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறோம்.." என்றான் பலத்த சிந்தனை வயப்பட்டவனாய் வீரமல்லன்.
" அவசியந்தான்.."எனத் தலையாட்டிக் கொண்ட சித்ரமாயன் , தொடர்ந்து
" யௌவனத் தேறலைப் பல மிடறு விழுங்கியும் போதை இல்லையே மாமா..? " என்றான் குழறியவனாய்.
" எப்போதும் குடி பற்றிய பேச்சு தானா உனக்கு..! மதுவின் போதையில் மதி கெட்டு அலைகிறாய் நீ..! பாண்டியனை சந்திக்கப் போகிறோமே..என்ன பேசுவது..? எப்படி நடந்து கொள்வது ? என்றெல்லாம் சிந்திக்க மாட்டாயா..? " என்றான் எரிச்சலுடன் வீரமல்லன்.
" மாமா..நீங்கள் என்னுடன் இருக்கும் போது எனக்கென்ன கவலை..? "
சித்ரமாயனின் இப்பேச்சைக் கேட்டதும் கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது..இருந்தாலும் கூடவே எரிச்சலும் பிறந்தது.
" எப்போதும் என் துணையையே நம்பிக் கொண்டிருக்காதே.. நானில்லை என்றால் என்ன செய்வாய்..? சுயமாக சிந்திக்கவும், சுயமாக வாழவும் நீ கற்றுக் கொள்ள வேண்டும்.." என்றான் கோபமும், சீற்றமும் தொனித்த குரலில்.
" ம்..ம்..சரி.." என்ற சித்ரமாயன் அதன்பின் அவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டவனாய், பாதைகளின் வழியெங்கும் காணப்பட்ட இயற்கையை ரசிப்பதிலும், வழியில் தென்பட்ட மனிதர்களை காண்பதிலும், மனதினை செலுத்தினான்.
இடையில் அவ்வப்போது சாலையோர மரநிழல்களிலும், தோப்புகளிலும் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டதோடு, இரவு வேளைகளில் ஏதாவது நகரங்களில் காணப்பட்ட சத்திரங்களில் தங்கியும், பகல் வேளைகளில் ஆறுகளிலும், குளங்களிலும் தங்களது தாகத்தை தணித்துக் கொண்டவர்களாய், தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.
இறுதியாக வைகைக் நதியினில் இறங்கி , மீண்டும் தெற்கு நோக்கி தங்களது பயணத்தைத் துவக்கியவர்களின் கண்களில் தென்பட்டது பாண்டியர்களின் எழிலார்ந்த கூடல் மாநகரின் பிரம்மாண்ட கோட்டைச் சுவர்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக