11.09.20
ரேவா_28
பல்லவர்_பாண்டியர்_நட்பு_28
மனித மனம் எப்போதும் சுயநலம் சார்ந்தே சிந்திக்கிறது. சுயநலத்திற்காக தனது கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ளவும் மனம் தயங்குவதில்லை.
அப்போது பகைமை கூட இரண்டாம் பட்சமாகி விடுகிறது. சுயநலத்தினால் கிடைக்கக் கூடிய நன்மையை மட்டுமே பெரிதென நினைத்து , எத்தகைய ஒரு
எல்லைக்கும் செல்ல மனம் விழைகிறது.
அதற்காக கிடைக்கக் கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சுயநலம் சார்ந்தே சிந்திக்கவும் , பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறான் மனிதன்.
சித்ரமாயனும், வீரமல்லனும் பல்லவர்களின் பரம வைரிகளில் ஒருவனான பாண்டியனிடத்தில் சுயநலத்திற்காகத் தான் வந்து அமர்ந்திருந்தனர் எனில் அதே சுயநலத்தை முன்னிட்டு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டான் பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன்.
பாண்டியரது தலைநகரான கூடல் மாநகர் அரண்மனையில், பாண்டிய மாமன்னன் அரிகேசரி பராங்குச மாறவர்ம பாண்டியனைக் காணக் காத்திருந்த சித்ரமாயனும், வீரமல்லனும் , பாண்டியன் அறைக்குள் நுழைந்ததும் சட்டென எழுந்ததோடு, இருகரம் கூப்பி வணங்கவும் செய்தனர்.
இருவரின் வணக்கத்தையும் இளநகையுடன் ஏற்ற பாண்டியன் தன் கரம் கூப்பி வணங்கவும் செய்தான். கூடவே, "பல்லவர்களை பாண்டியநாடு பெருமிதத்துடன் வரவேற்கிறது " என்றுரைக்கவும் செய்தான்.
" நன்றி..பாண்டிய மன்னரே."
" தாங்களிருவரும் என்னைக் காண வந்ததன் நோக்கம்.." புரியாமல் புருவத்தை உயர்த்தினான் பாண்டியன்.
" தங்களின் நட்புறவை வேண்டி வந்திருக்கிறோம்.." என்றான் பவ்யமாக சித்ரமாயன்.
" ஆச்சர்யமாக அல்லவா இருக்கிறது..!
பாண்டியனிடத்தில் பல்லவர் நட்புறவு கொள்வது..! " பாண்டியனின் குரலில் குதர்க்கம் தெறித்தது.
" நட்புறவால் இருவருக்கும் பலன் கிடைக்குமெனில் , ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது..? " என்றான் சாதுர்யமாக வீரமல்லன்.
" பலனா..? "
" ஆம்... தங்களுக்கு உதவினால் எங்களுக்கும் பலன் கிட்டும் என்பதனால்.." என்றான் சூசகமாய் வீரமல்லன்.
" புரியவில்லை.." பார்வையை கூர்மையாக்கிப் பார்த்தான் பாண்டியன்.
" கொங்கு நாட்டின் மீது தங்களுக்கு விருப்பம் உண்டென்பதை அறிவோம்.."
" ம்.."
" கொங்கு நாட்டின் வடபகுதி கங்கரிடமும், தென்பகுதி பல்லவரிடமும் இருக்கிறது.."
"ஆம்..அதனால்.."
" எங்களுக்கு தாங்கள் உதவுவதாக வாக்களித்தால் , கொங்கு நாட்டின் தென்பகுதியை தாங்கள் பெற நாங்கள் உதவுவோம்.."
" என்னிடமிருந்து எந்த விதமான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்..? " என்றான் புரிந்து கொள்ளும் எண்ணத்தில் பாண்டியன்.
" தற்சமயம் பல்லவ நாட்டில்.." சொல்லி முடிக்கவில்லை சித்ரமாயன்.
" பல்லவ நாட்டின் படைத்தளபதி உதயச்சந்திரன், பல்லவ மன்னனாய் அமர்த்துவதற்கு காம்புஜத்திலிருந்து ஒரு சிறுவனைக் கொண்டு வந்திருக்கிறான், என் எதிரே இதோ அமர்ந்திருக்கும் சித்ரமாயனுக்கு பட்டமும் இல்லை பதவியும் இல்லை..! என்ன சரிதானா..? " என்றான் விஷமம் கலந்த குரலில் பராங்குச பாண்டியன்.
பட்டமோ, பதவியோ , இல்லாத ஒருவன் எனக்கு உதவ வேறு வந்துவிட்டான்..! என்பதைப் போலிருந்தது பாண்டியனது பேச்சு. என்ன செய்வது காரியம் ஆக வேண்டுமென்றால் காலை பிடித்துத் தானே ஆக வேண்டும்.
பட்டமும் இல்லை, பதவியும் இல்லை என்ற வார்த்தைகளைக் கேட்டதும் ஆசனத்தில் சற்றே நெளிந்த சித்ரமாயன் , சற்றே கோபம் துளிர்க்க "இன்னும் எத்தனைக்கு நாளைக்கு இந்த பல்லவ மல்லன் பல்லவ அரியாசனையில் அமர்ந்துவிடப் போகிறான் என நானும் பார்க்கிறேன்.." என்றான் பற்களைக் கடித்தபடி கோபமாய்.
அவனது முதுகினைத் தட்டி ஆசுவாசப்படுத்தினான் வீரமல்லன். இரண்டையும் கவனித்த பாண்டியனோ மெல்ல நகைத்தபடி,
" சத்திரியருக்கு உரித்தான கோபம் சட்டென வெளிப்படுகிறது..ஆனால் காரணமின்றி வெளிப்படும் கோபத்தாலும், தவறான இடத்தில் வெளிப்படுத்தும் கோபத்தாலும் எந்த பயனும் விளையப் போவதில்லை..
கோபத்தையும் நாம் சரியாக உபயோகப் படுத்த அறிந்திருக்க வேண்டும் என்பதை அறிவீரா..? " என்றான் குதர்க்கம் கலந்த குரலில்.
" உண்மை தான்..ஆனால் உள்ளத்து உணர்வுகளை மறைக்க வேண்டிய அவசியமில்லையே..! " என்றான் சட்டென
வீரமல்லன்.
இப்போது வீரமல்லன் முந்திக் கொண்டான்..அவனது செய்கை, சித்ரமாயன் வேறு எதையாவது உளறிக் கொட்டிவிடப் போகிறான் என்ற எச்சரிக்கை உணர்வு கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
" பல்லவ தேசத்திலிருந்து ஒற்றர்கள் எனக்கு இப்போது வரை சரியான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.நானும் அங்கு நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..ம்..நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பது..என்ன வென்று அறியலாமா..? " பேச்சின் போக்கினை சட்டென மாற்றினான் பாண்டியன்.
" முதலில் நட்பு..பின் காலம் கனியும் வேளையில் உதவி.."
" எம்மாதிரியான உதவி..? "
" பல்லவ மல்லனை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான, ஏன்..? முடிந்தால் உலகிலிருந்தே அகற்றுவதற்கான உதவி..! " என்றான் சித்ரமாயன்.
" நம்பிக்கையுடன் நீங்கள் நடந்துகொள்ளும் பட்சத்தில் எனது உதவியைத் தங்களுக்கு வழங்குவதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை..! அதேபோல் நான் முடிவெடுத்து விட்டேன் என்றால் பின் அதில் எவ்வித மாற்றமும் செய்து கொள்வதுமில்லை ..!" என்றான் பராங்குச பாண்டியன்.
" தங்களது நம்பிக்கை என்றும் வீண்போகாது பாண்டியரே.." என்றார்கள் இருவரும் ஒருமித்த குரலில்.
" அதையே நானும் விரும்புகிறேன்..நான் எதிரிகளை மன்னிப்பேன்..ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டேன்..!
முன்னர் எதிரிகளாய் இருந்தோம்..இன்று நண்பர்களாய் மாறியிருக்கிறோம்..
நீங்கள் துரோகிகளாக மாறாதிருக்கும் வரை நமது நட்பு என்றும் தொடரும்., புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். " என்றான் பாண்டியன் பராங்குச மாறவர்மன்.
" புரிந்தது பாண்டியரே..நம்மிடையே இனி நட்பொன்றே தொடரும் " என்றான் சித்ரமாயன்.
" நல்லது..வாருங்கள் விருந்துண்டு வரலாம்." என்றவாறு இருவரையும் உணவு கூடத்திற்கு அழைத்துச் சென்றான் பாண்டியன்.
பலவகை பதார்த்தங்களும், பலவகை கனிகளும் படைக்கப் பட்ட விருந்தினை முடித்துக் கொண்டவர்கள், பாண்டியனது அன்பின் பேரில் அவனது மாளிகையில் அன்றிரவு தங்கினர்.
கூடல் நகர் அவர்களது வாழ்வின் இருட்டினை அகற்றி இலேசாய் வெளிச்சமுகம் காட்ட, இருவரும் பாண்டியனது விருந்தினர் மாளிகையில் அன்றைய இரவினை நிம்மதியான நித்திரையில் கழித்தனர்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக