21.09.20
ரேவா
திரையனேரி_மாளிகையில்_38
வேகவதியாற்றின் கரையில் உள்ள தோப்பொன்றில் தோண்டியெடுக்க கிடைத்த பொற்குவியல் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியதெனில், காஞ்சி வரதரின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தவர்களாய் பேச நா எழாமல் மலைத்து நின்றவர்களில், பிரம்மஸ்ரீ ராஜனே முதலில் சுயநிலையை அடைந்தார்.
" திருமங்கை மன்னரே..தங்கள் கூற்று மெய்யென உணர்ந்தோம், காஞ்சி வரதரின் கருணையே..கருணை. தாங்கள் இதனை என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறீர் ..? " என்றார்.
" பல்லவ அமைச்சரே, எனது கனவினை மதித்து, இங்கு என்னை அனுப்பி வைத்த சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய திறையைச் செலுத்த வேண்டும். அத்தோடு எனது திருப்பணி கைங்கர்யத்தையும் தொடர வேண்டும், ஸ்ரீரங்க நாதனுக்கு நான் செய்ய விரும்பிய திருப்பணி ஒன்றும் உளது. அதனையும் தொடர வேண்டும்." என்றார் முகத்தில் சாந்தம் பொங்கிட திருமங்கை மன்னன்.
" ஆஹா..அப்படியே செய்யுங்கள் திருமங்கை மன்னரே, வேறேதேனும் உதவிகள் தேவையென்றாலும் என்னை அணுகத் தயங்க வேண்டாம். தங்களைச் சந்தித்தும், தங்களது இந்த தேடலில் பங்கெடுத்துக் கொண்டதும் நான் செய்த பூர்வ புண்ணியம். இறைவனது ஆசிகளைப் பெற்றவர் நீங்கள். தங்களைப் போன்ற மகான்களின் பாதம் இக்காஞ்சி மண்ணில் படுவதை என்றென்றும் வரவேற்கிறேன். தங்களையும் பணிவுடன் வணங்கி மகிழ்கிறேன்." என நந்திவர்மன் இருகரம் கூப்பி வணங்க, அவனுடன் இணைந்து பல்லவடி அரையரும், பிரம்மஸ்ரீராஜனும் வணங்கி திருமங்கை மன்னருக்கு பிரியா விடைகொடுத்து அனுப்பினார்கள்.
" நான் வருகிறேன்..மீண்டும் சந்திப்போம் பல்லவ வேந்தரே.." என்றவராய், தன் ஆடல்மா புரவியில் ஏறியவராய் , பொற்குடத்துடன் புழுதிப் பறந்திட விரைந்தார் திருமங்கை மன்னர்.
இவ்வளவு நிகழ்வுகளையும் , அந்த தோப்பின் பாழடைந்த மாளிகையின் சாளரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நடுத்தர வயது உடையவன் கண்களில் இருந்து பொறாமைத் தீயோடு, குரூரமும் கொளுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
மாதேவி பெருந்தட்டாரின் இல்லத்தில்..பணியாளனின் தலையை நோக்கி எறிந்த குறுவாளால் உண்டான காயத்தினால் , குருதி இலேசாக வெளிப்பட " ஐயோ ..திருடன் திருடன்" என அலறி விழுந்தவனைத் தொடர்ந்து, மாதேவிப் பெருந்தட்டாரின் இல்லத்தில் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு பரபரப்பாக, நிதானமாக அறைக்கதவினைத் திறந்து வெளிவந்த மாதேவிப் பெருந்தட்டாரோ, காயம் பட்ட பணியாளனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல உத்தரவிட்டவராய், ஏற்கனவே படைத்தலைவன் உதயச்சந்திரன் கூறியிருந்த காரணத்தால் ஒன்றும் நடவாதவரைப் போல, அனைவரையும் " போய், தூங்குங்கள் " என அரட்டி அனுப்பியதோடு, தனது பணிமனையின் பெரிய பேழையைத் திறந்து பார்த்து விட்டு, அங்கு காணாமல் போயிருந்த தாமிர மகுடத்தை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டவராய், ஏற்றப்பட்ட விளக்குகளை மீண்டும் அணைத்து விட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவினை சாத்திக் கொண்டார். படைத்தலைவர் கூறியது போலவே நடந்திருப்பதை எண்ணி ஆச்சர்யத்தில் ஆழ்ந்தவராய், அப்படியே நித்திரையின் வசப்பட்டார்.
மகுடாபிஷேகம் முடிந்ததும், நடைபெற்றுக் கொண்டிருந்த அன்னதான நிகழ்வில் பங்குகொள்ள விரும்பாத இருவரும், அவசரமாக தங்களது புரவிகளை கொட்டடியில் இருந்து கொணர்ந்த, சித்ரமாயனும், வீரமல்லனும் புரவிகளில் ஏறி திரையனேரி செல்லும் சாலையில் வேகமாய் விரைந்தனர். இருவரது முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
"வைரவனும் அவனது கூட்டாளி தடியர்களும் , மாதேவி பெருந்தட்டார் வீட்டிலிருந்து எதை திருடிக் கொண்டுப் போனார்கள் என்று தெரியவில்லை..! " என்று சீறினான் சித்ரமாயன்.
" நமக்கு வாய்த்தவர்கள் அப்படி..! " என்று இடக்காக கூறிய வீரமல்லன் ஓரக் கண்ணால் சித்ரமாயனையும் கவனித்தான்.
வீரமல்லனது கூற்று சித்ரமாயனையும் சற்று நறுக்கென தைக்கவே,
" மாமா..நீங்கள் என்னை ஒன்றும் சொல்லவில்லையே..? " என்றான் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பியவனாய்.
" அடடா..உன்னைப் போய் சொல்வேனா.!" என்றான் வீரமல்லன்.
அதன்பின் இருவரது குதிரைகளும் விரைந்து செல்லத் துவங்க, அவர்களுக்குள்ளான பேச்சுத் தடைப்பட்டது.
திரையனேரிக்கு வந்து சேர்ந்தவர்கள், ஊருக்குள் நுழைவதற்கு முன்னதாகவே காட்டு வழியில் பெண்ணின் நெற்றி வகிடுபோல் ஓடிய ஒற்றையடிப் பாதையில் திரும்பியதோடு, அந்த மண் பாதையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு விரைந்தனர்.
அடர்ந்த கானகத்தின் ஊடே..பாழடைந்த நிலையில் காணப்பட்ட ஒரு மாளிகையின் முன் வந்து நின்ற இருவரும், புரவிகளை விட்டிறங்கியவர்களாய், அங்கிருந்த மரமொன்றில் தங்களது
புரவிகளை கட்டியதோடு, பாழடைந்த மாளிகையின் மரக்கதவினை மெல்ல மூன்று முறைத் தட்டினார்கள்.
இரவுப் பொழுது தொடங்கியிருந்த காரணத்தால், உள்ளிருந்து ஒரு தீப்பந்தம் மெல்ல கதவினை நோக்கி வருவது கதவின் இடுக்குகளின் வழியே தெரிய..சற்று நேரத்தில் கதவுத் திறக்கப் பட,
" வைரவன் எங்கே ..?" எனக் கோபமாய் இரைந்தபடி உள்ளே நுழைந்தான் சித்ரமாயன்.
" உள்ளே அறையில் தான் இருக்கிறார்..வாருங்கள் " என்றபடியே அவன் முன்னே ஓடினான்.
" மலையன் இல்லையா..? " என்றான் வீரமல்லன்.
"அவர் வெளியில் சென்றிருக்கிறார்..இரவின் மூன்றாம் ஜாமத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்."
" ம்..ம்.."
அறைக்குள் நுழைந்த இருவரைக் கண்டதும், திடுக்கிட்டவனாய் எழுந்து நின்ற வைரவன், சட்டென தன் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டவனாய்,
" மகுடாபிஷேகம் தடைப்பட்டு விட்டதா..? எப்படி நமது வேலை..! " என்றான் பெருமிதம் கலந்த குரலில்.
" முட்டாள்..என்ன காரியம் பண்ணியிருக்கிறாய்..! " என்று இரைந்தான் சித்ரமாயன்.
சற்றே கலவரத்திற்கு ஆளான வைரவன், " மாதேவி பெருந்தட்டார் வீட்டில் யாரையும் கொலை செய்யவில்லையே..!
ஒரு பணியாளன் எழுந்து தடை செய்தான் , அவனை காயப் படுத்தினேன்.. அவ்வளவு தான்..
வேறொரு தவறும் நாங்கள் செய்யவில்லையே ..?! " என்றான் அப்பாவியாய்.
" மகுடத்தை திருடினாயா..? இல்லையா..? " என்றான் முதன் முறையாக வீரமல்லன் அவனைப் பார்த்து.
அந்த கேள்விக்கு சற்றே துணுக்குற்ற வைரவன், " மகுடத்தை தான் திருடிக் கொண்டு வந்து விட்டோமே..! " என்றான்.
" பிறகு எப்படி நடந்தது மகுடாபிஷேகம்..! நந்திவர்மனது தலையில் மகுடம் ஏறியதே..! அது எங்கிருந்து வந்தது..? வானத்திலிருந்து குதித்ததா..! என்றான் கோபமாய் சித்ரமாயன்.
எங்கோ தவறு நடந்திருப்பதை உணர்ந்த வைரவன், தான் திருடி எடுத்து வந்த மகுடத்தை அங்கிருந்த மரப்பேழையில் இருந்து எடுத்து, சுற்றப் பட்டிருந்த துணிப்பையில் இருந்து வெளியில் எடுக்க தகதகவென மின்னிக் கொண்டிருந்தது மெருகு ஏற்றப்பட்டிருந்த தாமிரத்தாலான மகுடம்.
அதைக் கண்டதும், மிரண்டு போய் விழித்தான் வைரவன்.
" ஐயா..நாங்கள் அந்த பொற்பணிமனையின் மரப்பேழையில் பார்க்கும் போது இது ஒன்று தான் இருந்தது..அதான்.." என்றான் தயங்கியவாறு.
" முட்டாள்..உன்னை.." என்று ஆவேசத்தோடு வைரவன் மீது பாயப்போன சித்ரமாயனை தடுத்து நிறுத்திய வீரமல்லன்,
"சித்ரமாயா..நில்..வைரவனை தண்டித்து பயனில்லை..உதயச்சந்திரன் நம்மை நன்கு ஏமாற்றி இருக்கிறான். இது அவனது ஏற்பாடாகத் தான் இருக்கும். நாம் அரண்மனையில் இருந்தபடி நந்திவர்மனை கொல்வதற்கு வேறு வழியைத் தேடுவது தான் நல்லது." என்றான் பலத்த சிந்தனையோடு வீரமல்லன்.
தொடர்ந்து பல முயற்சிகளும் தோல்வியில் முடிவதைக் கண்டு எரிச்சலுற்றான் சித்ரமாயன். அவனுள் எப்படியாவது நந்திவர்மனை கொல்வதோடு, உதயச்சந்திரனையும் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் வலுத்துக் கொண்டே போனது., மனதில் தீர்மானமாய் ஒரு எண்ணம் பிறக்க ஒரு முடிவுடன் எழுந்தவனாய்,
"வைரவா..இங்கு யௌவன தேறல் இருக்கிறதா..? " என்றான் அமைதியாக.
" உனக்கு இப்போதும் மது தானா..? என்ற வீரமல்லன் கோபத்துடன் , " எக்கேடும் கெட்டுப் போ.." என்றவனாய் அடுத்த அறைக்குள் நுழைந்து கதவினைத் தாளிட்டுக் கொண்டான்.
அப்போது..
"அதை கொண்டு வரத் தானே நான் சென்றிருந்தேன் "என்றவாறு உள்ளே நுழைந்த மாயவன் ,
தான் கொண்டு வந்த மதுக் குடுவைகளை அவன் முன் வைக்க..
அங்கு அதன் பின் மதுவின் நெடி அறையெங்கும் வியாபிக்கத் துவங்கியது.
காலைக் கதிரவன் உக்கிரத்தோடு மேலெழுந்து கொண்டிருந்தான். திரையனேரியின் பாழடைந்த மாளிகையின் முன் ஒரு புரவி வேகமாக வந்து நிற்க, அதிலிருந்து இறங்கியவன் வேகமாக அந்த மாளிகையின் கதவினை "படபடவென" தட்டினான்.
" யாரது..? " என்ற கேள்வியுடன் வந்து கதவினைத் திறந்த வைரவன் வியப்பின் வசப்பட்டவனாய், " கார்கோடா..என்ன மாளிகையை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறாய்..? " என்றான் கோபத்துடன்.
அப்போது தூங்கி எழுந்தவனாய் அறைக்கதவைத் திறந்து வெளிப்பட்ட சித்ரமாயனைக் கண்டதும், " தாங்களும் இங்கு தான் இருக்கிறீர்களா..? நல்லதாய் போயிற்று..நேற்று மாலையில் ஒரு அதிசயம் நடந்தது.." என்றான் பீடிகையுடன்.
அவனது பீடிகையை விரும்பாத சித்ரமாயனை, " என்ன நடந்தது..சொல்லித்தொலை..? "
என்றான் எரிச்சலுடன்.
"நம் தோட்டத்து மாளிகைக்கு அருகில் ஒரு பொற்குடத்தை, உதயச்சந்திரன் மற்றும் நந்திவர்மனுடன் சிலர் வந்து எடுத்துச் சென்றனர்.." என்றான் ஆச்சர்யம் கலந்த குரலில்.
" என்ன..! புதையலா..! " என்றான் சித்ரமாயன்.
" ஆம்..அரசே..என்றவன் தொடர்ந்து நேற்று மாலையில் நடந்த விசயங்கள் முழுவதையும், தான் மாளிகை சாளரத்தில் இருந்து கவனித்ததைச் சொல்லி முடித்தான்."
" வந்தவர் பெயரென்ன சொன்னாய்..?"
" திருமங்கை மன்னனாம்.."
" ஓ..இந்த புதையலை எடுக்கத் தான் காஞ்சியின் பல்லவனைத் தேடி வந்தாரா..? " என்றபடியே வந்தான் வீரமல்லன்.
" மாமா..என்ன இது..! நமது தோப்பில் இருந்திருக்கிறது..இவ்வளவு நாளும் நமது கண்ணில் படவில்லையே..நமக்கு அதிர்ஷ்டமே இல்லை மாமா..எங்கோ பலகாத தூரத்தில் இருப்பவர்களுக்கு நமது தோப்பில் உள்ள புதையல் தெரிந்திருக்கிறது..அருகில் உள்ள நமக்கு அது புலப்படவில்லையே.." என புலம்பத் துவங்கி விட்டான் சித்ரமாயன்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக