22.09.20- ரேவா : 39 - துவங்கியது_திருப்பணி - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

22.09.20- ரேவா : 39 - துவங்கியது_திருப்பணி

 



22.09.20


ரேவா


துவங்கியது_திருப்பணி_39


காஞ்சி அரண்மனைக்குள் அமைந்திருந்த நந்தவனத்தில் நானாவித மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. இரு புறமும் நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த நிழல் தரும் மரங்களும், கனி தரும் மரங்களும் செறிந்து காணப்பட்ட அவ்விடத்தில் குளுமைக்கு பஞ்சமில்லை. அங்கு செயற்கையாய் ஏற்படுத்தப் பட்டிருந்த பொய்கையில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. அல்லியும் , தாமரையும் போட்டியிட்டு வளர்ந்திருந்தன. ஆங்காங்கே முல்லைக் கொடி செழித்து வளர்ந்திருந்த கொடிகளின் நிழலில் பளிங்கு கற்களாலான அமரும் மேடைகளும்  காணப்பட்டது. மரங்களின் அடர்ந்த இலைகளும், கொடிகளின் பிணைந்த தோற்றமும் அங்கு இயற்கையாகவே ஒரு குடிலைப் போன்ற தோற்றத்தை  ஏற்படுத்தியிருந்தது. அக்குடிலின் பளிங்கு மேடையில் அமர்ந்த படி  பியூஷாவும், பூங்குழலியும் பேசிக் கொண்டிருந்தார்கள். நந்திவர்மனது மகுடாபிஷேக விழாவில் பங்கேற்றது முதல் இருவருக்குள்ளும் நட்பு ஆழமாய் வேரூன்றியிருந்தது. 


பியூஷாவிற்கு அரண்மனையில் சரியான தோழிகள் அமையவில்லை என்றாலும், பூங்குழலியின் பரிச்சயம் கிடைத்ததில் இருந்து தினமும் இருவரும் சந்தித்துக் கொள்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.


பூங்குழலிக்கோ, பியூஷாவை காணும் நோக்கில் அரண்மனைக்குள் சீராளனைக் கண்டு பேச வாய்ப்பு ஏற்படாதா ! எனும் நப்பாசையில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.


பியூஷாவிற்கு என்னதான் நந்திவர்மனோடு பொழுதைக் கழித்தாலும், சிறுவனோடு என்ன பேசுவது..தன் வயதொத்த பெண்களுடன் பேசுவது போலாகுமா..?! என்ற வருத்தம் பூங்குழலியை சந்தித்த பிறகு மாறிப் போயிருந்தது. இருவரும் பொதுவாக பல விசயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு திருமங்கை மன்னன் எடுத்துச் சென்ற புதையல் குறித்து தாவியது. ஏனெனில் காஞ்சி நகரெங்கும் அது தானே இப்போது  பேச்சாய் இருக்கிறது.


" பியூஷா..திருமங்கை மன்னர் நமது வேகவதி ஆற்றங்கரையில் பொற்குடப் புதையல் ஒன்றை எடுத்துச் சென்றாராமே..கேள்விப் பட்டாயா..? என்றாள் ஆச்சர்யமாய் பூங்குழலி.


" யார்..மகுடாபிஷேக நாளன்று புரவியில் வந்து இறங்கிய அந்த கரிய மனிதரா..? "


" ஆம்..அவரது பெயர் தான் திருமங்கை மன்னன்.. அவரது கனவில் நமது காஞ்சி வரதரே போய், இங்குள்ள புதையலைச் சொல்லி வரவழைத்திருக்கிறார் என்றால் அவரது திருமால்  பக்தியை என்னவென்று சொல்வது..! "


" உண்மை தான்..இறைவனே வந்து உதவுவது என்பது அனைவருக்கும் கிட்டக் கூடிய பாக்கியமா..என்ன..?! " என்றாள் பியூஷா.


" உண்மை தான்..அப்புதையலை திருப்பணி காரியத்திற்கு தான் பயன்படுத்த போகிறாராம்..அவரது ராஜாங்கச் சொத்தினை முழுதும் அதற்காகவே இழந்துள்ளார் எனில் அவர் எப்பேர்பட்ட பக்தராய் இருக்க வேண்டும். அடுத்தமுறை அவர் வந்தால் , காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசியைப் பெற வேண்டும்.." என்றாள் பூங்குழலி.


" உனக்கு இந்த தகவல் எல்லாம் எப்படித் தெரிந்தது..? " என்றாள் திகைப்புடன் பியூஷா.


" என் தந்தை மற்றவரிடம் பேசும் போது காதில் விழுகிறதல்லவா.." என்று விட்டு கலகலவென நகைத்தாள்.


" சரி தான்..பெரியவர்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாயா..? " என்றாள் பியூஷா..


" ஒட்டுக் கேட்க வேண்டுமென்பதில்லை, எவராவது வந்தால் அதை கொண்டு வா..இதை கொண்டு வா என என்னைத் தானே அழைக்கிறார்கள்..அப்போது காதை மூடிக் கொண்டா போவது..வருவது.. காதை மூடிக் கொண்டால் கையில் வைத்திருக்கும் பால் குவளைகளின் கதி என்னாவது..! " என்று சொல்லி விட்டு மீண்டும் பூங்குழலி நகைத்தாள்.


" சரியான குறும்புக் காரியாக அல்லவா இருக்கிறாய்..உன்னைக் கட்டிக் கொள்பவன் பாடு திண்டாட்டம் தான்..என்னமாய் வாய் பேசுகிறாய்..! " என்று வியந்தாள் பியூஷா.


" அட..நீ வேறு..நான் விரும்பியவரைக் கண்டு விட்டால் போதும், இந்த வாய் பேசுவதற்கு ஒத்துழைக்கவே மறுக்கிறது..வார்த்தைகளே வர மறுத்து நா மேலண்ணத்துடன் ஒட்டிக் கொள்கிறது..!"


" உண்மையாகவா..! " என்றாள் திகைப்புடன் பியூஷா.


" சரி..உன் நிலை எப்படி..? " என்றாள் குதர்க்கமாய்.


" காம்புஜத்திலாவது நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க வாய்ப்பிருந்தது..இங்கோ..அவரைப் பார்ப்பதே துர்லபமாய் இருக்கிறது..இதில் எங்கே பேச..

நல்லவேளை நீ வந்து சேர்ந்தாய்..

இல்லையென்றால் எனக்கு பேச்சு என்பதே மறந்து போயிருக்கும்.." என நீட்டி முழக்கி பியூஷா சொல்லி முடிக்கவும் , பூங்குழலி பலமாய் நகைக்க, அவளோடு இணைந்து கொண்டாள் பியூஷா.


இரண்டு பெண்மணிகள் இணைந்து விட்டால் , சொல்லவா வேண்டும்..!

அந்த இடத்தில் மகிழ்ச்சியும்  கலகலப்பும் நீரூற்றாய் பெருக்கெடுத்தது.


                     *          *          *


காஞ்சி நகரின் ஒரு பகுதியில் தோண்டப்பட்டிருந்த மிக பிரம்மாண்டமான பெரிய பள்ளத்தினையும், அதிலிருந்து தோண்டியெடுத்துப் போடப் பட்டிருந்த பெரிய மண் குவியலையும், பாளம் பாளமாக குவிந்து கிடந்த கற்பாறைகளையும் , வியப்பும் வேதனையும் கலந்தவர்களாய் கண்ணுற்றுக் கொண்டிருந்தார்கள், பிரம்மஸ்ரீ ராஜன், பல்லவடி அரையன், உதயச்சந்திரன் மற்றும் நந்திவர்மன் ஆகியோர்.


கனத்த மௌனம் நிலவிய அவ்விடத்தில் , சிறிது நேரத்திற்குப் பின்..


" இது தான் மறைந்த மன்னர் பரமேஸ்வரவர்மர் எழுப்ப நினைத்த ஆலய ஸ்தலமா..? " என்றான் நந்திவர்மன்.


" ஆம்..அவரது தந்தையார் ராஜசிம்ம பல்லவன் காஞ்சியில் கைலாசநாதருக்கு ஆலயம் கட்டியது போல், வைகுண்ட வாசருக்கு பரமேஸ்வரவர்மர் ஒரு ஆலயம் கட்டப் பேராசை கொண்டு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து ஏகதள அஸ்திவாரம் தோண்டப்பட்ட சில நாட்களிலேயே போர் மூண்டு விட்ட காரணத்தால் இப்பணி கைவிடப் பட்டது.

திருப்பணி அவரது உயிரை காவு வாங்கி விட்டது.." என்றார் பல்லவடி அரையன்.


" தளபதியாரே..தவறாக பேசாதீர்கள்..மனிதர்களின் மறைவு அவர்களின் விதிப்பயனே அன்றி, இறைவனின் திருப்பணியை தொட்டதனால் அல்ல." என்றான் நந்திவர்மன்.


" இறைவனுக்கான கைங்கர்யத்தை செய்யும் வாய்ப்பு பரமேஸ்வரவர்மருக்கு இல்லாமல் போய்விட்டது.." என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.


" ம்..அதனால் என்ன..!

திருமங்கை மன்னரது இரண்டாவது வேண்டுகோள் இது தானே..

இவ்வாலயத்தை நானே முன் நின்று திருப்பணியைச் செய்கிறேன். அது மட்டுமல்லாது ஆலயத்தின் மதிற் சுவர்களில் எல்லாம் பல்லவரது வரலாற்றை சித்திரமாய் தீட்டவும் ஏற்பாடு செய்கிறேன். காலங்கள் பலவாயினும் காஞ்சியின் பெருமை பேசும் , இங்கு  கட்டப்பட போகும்  ஆலயம்.." என்றான் கனவில் பேசுபவனைப் போல .


"நந்திவர்மா..ஆலயம் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை..நமது பணியில் பெருமளவு இடைஞ்சலையும், இக்கட்டையும்  சந்திக்க வேண்டியிருக்கும். " என்றான் உதயச்சந்திரன்.


"எத்தகைய இக்கட்டு வரினும் எடுத்த பணியினை  முடிப்பேன். என் வைகுண்ட வாசன் எனக்குத் தேவையான உதவிகளை நல்குவான்.. நாளை அரண்மனைக்கு சிற்பிகளையும்,  நிமித்திகர்களையும் வரச் சொல்லுங்கள். பாதியில்  நின்ற பணிக்கு பரிகார பூஜையை செய்து விட்டு , வைகுண்ட வாசனுக்கு ஆலயத் திருப்பணியைத் தொடங்குவோம்." என்றான் பெருமிதக் குரலில் நந்திவர்மன்.


" அப்படியே செய்கிறேன்.." என்றான் உதயச்சந்திரன்.


மறுநாள் காலை..


அரண்மனையின் ஆலோசனைக் கூடத்தில் உதயச்சந்திரன் அழைத்து வந்திருந்த நிமித்திகர்களும், சிற்பிகளும் ஆசனத்தில் அமர்ந்திருக்க, தளபதியாரும், முதன்மை அமைச்சரும் அவரவர் ஆசனத்தில் வீற்றிருக்க, நந்திவர்மன் கணீரென்ற குரலால் நிமித்திகர்களையும், சிற்பிகளையும் பார்த்தவனாய்..


" நமது மன்னர் பரமேஸ்வரவர்மரால் துவக்கப் பட்ட ஆலயத் திருப்பணியை , மீண்டும் தொடர்ந்து நடத்தி முடிக்கும் விதமாய் நாங்கள் எண்ணம் கொண்டிருக்கிறோம் . எனவே அதற்கான  சிறப்பான நல்லநாளினை குறிக்கவும், நின்று போன திருப்பணியை தொடர்ந்து நடத்தி வெற்றிகரமாக முடித்திட உகந்த பரிகார பூஜைகளையும் விளக்கமாய் நிமித்திகர்களாகிய நீங்கள் இங்கு விளக்குங்கள். மேலும், ஆலயத் திருப்பணிக்கான கட்டமைப்பு குறித்தும், அதற்கான தேவை குறித்தும் சிற்பிகளாகிய நீங்கள் விளக்கம் தாருங்கள். இத்திங்களிலேயே திருப்பணியைத் துவங்க வாய்ப்பிருப்பின் துவக்கி விடலாம். நல்ல காரியங்களை தள்ளிப் போடுவதென்பது நல்லதல்ல." என்றான் கம்பீரமாக நந்திவர்மன்.


 சிற்பிகளும், நிமித்திகர்களும் கூறிய செய்திகளைக் கவனமாக  கேட்டறிந்ததோடு, அதனை முறையாக செயல்படுத்தவும், கோவில் கட்டுமானப் பணியினை விரைவில் துவங்குவது குறித்து சிற்பிகளுக்கும் உத்தரவுகளை இட்டும், தனது ஆக்ஞையை பிறப்பித்தான் நந்திவர்மன்.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages