23.09.20-ரேவா : 40 : சித்ரமாயனின்_ரகசியத்திட்டம் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 23 செப்டம்பர், 2020

23.09.20-ரேவா : 40 : சித்ரமாயனின்_ரகசியத்திட்டம்



23.09.20


ரேவா


சித்ரமாயனின்_ரகசியத்திட்டம்_40


காஞ்சி அரண்மனையில் தங்களது அறையில் பலத்த யோசனையில் அமர்ந்திருந்தான் வீரமல்லன், அவனது முகத்தை கவனித்தவாறு சோகமாய் காணப்பட்டான் சித்ரமாயன்.


நாழிகைகள் கரைந்து கொண்டிருக்க, மௌனம் வியாபித்திருந்த அறையில், சித்ரமாயன் பொறுமையை இழந்தவனாய், " மாமா..என்ன பலமான யோசனை..?" என்றான் எரிச்சல் ததும்பும் குரலில்.


 "சற்று..சும்மாயிரு..என்னை சிந்திக்கவிடு.." என்றான் சீற்றம் தணியாத குரலில்.


" என்னிடம் தகவலை சொல்லிவிட்டு தாங்கள்  சிந்திக்க வேண்டியது தானே.." 


" என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்..?! உன்னுடைய தந்தை பரமேஸ்வரவர்மன் தொடங்கிய ஆலயத் திருப்பணியை நந்திவர்மன் இப்போது கையில் எடுத்திருக்கிறான்..அது ஏன் என உனக்குப் புரிகிறதா..? " என்றான் இகழ்ச்சியுடன் வீரமல்லன்.


" தந்தையால் நிறைவடையாத ஒரு பணியை தற்போது மன்னனாய் பொறுப்பேற்ற இவன் கையில் எடுத்திருக்கிறான்..இதிலென்ன இருக்கிறது.." என்றான் சலிப்புடன் சித்ரமாயன்.


" ம்..நீ அறிந்தது அவ்வளவு தான்..பழைய மன்னர் துவங்கிய ஒரு திருப்பணியை நந்திவர்மன் துவங்கியதன் வாயிலாக நாட்டு மக்களிடம் நன்மதிப்பு கிட்டும். முந்தைய ஆட்சியின் வழியொற்றி நடப்பதாக ஒரு பிரமையை மக்களிடம் உருவாக்கி விடலாம் என நந்திவர்மன் கனவு காண்கிறான். இதை இப்படியே நீடிக்க விடக் கூடாது. மக்களின் துவேசத்தை நந்திவர்மன் பெற வேண்டும், அது மட்டுமின்றி எவ்வளவு விரைவில் அவனை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்துகிறோமோ அந்தளவிற்கு நமக்கு நல்லது." என்றான் வீரமல்லன்.


நாம் செய்யும் எந்தவொரு காரியமும்  வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஆற்றிக் கொண்டிருக்கும். திருமங்கை மன்னரால் கேட்டுக் கொள்ளப்பட்ட  வேண்டுகோளை ஏற்று, திருப்பணியைத் துவக்கினான் நந்திவர்மன், இல்லையெனில் இது போன்ற ஒரு பணி பரமேஸ்வரவர்மனால் துவக்கப் பட்டது பற்றி அப்பொழுது நந்திவர்மன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாளில் ஒருவேளை அறிந்திருக்க கூடும். ஆனால் அவன் தொடங்கிய நற்பணியினை வீரமல்லன் வேறு வகையில் சிந்தித்துப் பார்க்க முற்பட்டான். மனிதர்கள் தங்களுடைய எதிரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதோடு, அவர்கள் செய்யும் செயலுக்கான  காரணகாரியங்களையும், தங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு மிரள்கிறார்கள், என்பதற்கு வீரமல்லனையும் இங்கு உதாரணமாகச் சொல்லலாம்.


" உண்மை தான் மாமா..நாம் ஏன்  மக்களின் துவேசத்தை நந்திவர்மன் பெறும் வரை காத்திருக்க வேண்டும்..பேசாமல் அவனை இந்த உலகிலிருந்தே அப்புறப் படுத்தி விட்டால்.." என்றான் குரூரமாக கண்கள் மின்ன சித்ரமாயன் உரைத்தான்.


" உஷ்..இரைந்து பேசாதே..எப்போதும் கொல்வதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காதே..ஒரு அரசனைக் கொல்வதென்பது நீ நினைப்பது போல் எளிதான காரியமல்ல.." என்றான் எச்சரிக்கும் தொனியில் வீரமல்லன்.


" எனக்கு உங்களின் வழிமுறைகளை விட, உயிரை மேலே அனுப்புவதே எளிதாய் தெரிகிறது. சதா சிந்தித்துக் கொண்டு இருப்பதைக்  காட்டிலும்,  யோசிக்கும் நேரத்தில் காரியத்தையே முடித்து விடலாம்.." என்றான் சித்ரமாயன்.


" அவசரப் படாதே..சில விசயங்களை நிதானமாகத் தான் கையாள வேண்டும்..இல்லையெனில் வீணில் நாம் மாட்டிக் கொள்வோம்."


" மாமா..நீங்கள் தேவையின்றி பயப்படுகிறீர்கள்.." என்றான் எரிச்சலுடன் சித்ரமாயன்.


அவனது மனதில் மாமனுக்குத் தெரியாமலேயே ஒரு ரகசியத் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தான். தனது திட்டத்தின் வெற்றியைக் கண்டபின் வீரமல்லன் பிரமிக்கட்டும் என்று சித்ரமாயனின் மனதிற்குள் ஒரு எண்ணம் உருவெடுக்கத் துவங்கியது.


" மாமா..நான் எனது அறைக்குச் செல்கிறேன்." என்றவனாய் தனது அறையை நோக்கி நடையைக் கட்டினான்.


இரவின் முதலாம் ஜாமம் முடிந்ததும் உணவருந்திய இருவரும், தங்களது அறையை நோக்கி நடந்ததோடு, சித்ரமாயன் தனது அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டதும், வீரமல்லனும் தனது அறைக்குச் சென்று விட்டான்.


மருமகனின் நல்வாழ்வுக்காக நடுத்தர வயதைக்  கடந்த நிலையிலும், மணமுடித்துக் கொள்ளாமல் தனது வாழ்வினை சித்ரமாயனது நலம் கருதி ஒதுக்கிவிட்ட வீரமல்லன் மனதில் பலவித எண்ண அலைகள் எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன.


இரவின் இரண்டாவது ஜாமம் முடிய ஒரு நாழிகையே இருந்தது. தனது அறையை விட்டு வெளியேறிய சித்ரமாயன் , கதவினை இழுத்து சாத்தியதோடு வீரமல்லனின் அறைப் பக்கம் மெல்ல நோட்டமிட்டான். அங்கிருந்து எவ்வித சலனமும் தென்படாத காரணத்தால், மேல்தளத்தின் படிவழியாக கீழிறங்கி , அரண்மனையின் வெளிவாசலை அடைந்ததோடு, குதிரை லாயத்தில் கட்டப் பட்டிருந்த ஒரு குதிரையை அவிழ்த்து ஏறிக் கொண்டவன், தனது குதிரையை காஞ்சி நகரின் தெற்கு திசையை நோக்கிச் செலுத்தினான்.


அரண்மனையின் வாசலைக் கடந்து, லாயத்தில் இருந்து ஒரு குதிரையை அவிழ்த்து ஏறிக் கொண்டு விரைந்த சித்ரமாயனைக் கண்ணுற்ற சீராளன் , சித்ரமாயனை அவனறியாமல்  தனது புரவியில் பின் தொடர்ந்தான்.


சீராளனுக்குச்  சற்று ஆச்சர்யமாகவும், திகைப்பாகவுமே இருந்தது சித்ரமாயனது செயல்..என்றுமே வீரமல்லனின் துணையன்றி எங்கும் வெளியில்  செல்லாதவன், இன்று வீரமல்லன் இன்றி தனித்துச் செல்கிறான் என்றால் ஏதோ முக்கிய விசயம் இருக்க வேண்டுமென ஊகித்தவனாய், சித்ரமாயனை அவன் அறியாமல் உன்னிப்பாக கவனித்தபடியே பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.  சித்ரமாயனோ ஒரு நாழிகைக்கு மேலாய் புரவியை செலுத்திக் கொண்டு போனவன், நகரின் சந்தடியற்ற பகுதியை அடைந்திருந்தான். நகரை விட்டு ஒதுங்கியிருந்த அப் பகுதியில் தோப்புகள் அதிகமாய் தென்பட்டன. தான் சென்று கொண்டிருந்த புரவியை,  திடீரென  இடது புறம் திருப்பியதோடு, மரங்களற்ற வெட்ட வெளிதனில் பயணிக்கவும் செய்தான் சித்ரமாயன். இதுவரையில் நகர்புறப் பகுதியில் சித்ரமாயனை ஆங்காங்கு மறைந்து பின் தொடர்வது எளிதாய் இருந்தது சீராளனுக்கு, ஆனால் இப்போது  வெட்டவெளியில் பயணிக்கும் அவனைப் பின்  தொடர்வதனால் ஏற்படும் அனர்த்தங்களை எண்ணிக் கவலையுற்றதோடு, தன் வேகத்தையும் மட்டுப்படுத்தியவனாய், அவன் எங்கு செல்கிறான் என்பதை நிலவின் ஒளியில் கூர்ந்து கவனிக்கத் துவங்கினான்.


அந்த வெட்டவெளிப் பாதையானது கொஞ்ச தூரம் சென்ற பின்பு தோப்புக்குள் புகும் என்பதை ஓரளவு உணர்ந்திருந்த சீராளன், சித்ரமாயன் வெட்டவெளியை கடந்து தோப்புக்குள் புகும் வரை காத்திருந்து , தன் பயணத்தைத் துவக்கினான்.


தோப்புக்கு அருகில்  வந்தபின் , அடர்ந்த தோப்புக்குள் நுழைந்த சித்ரமாயனை எங்கு போய் தேடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தவனாய், அப்படியே திகைத்துப் போய்  நின்று விட்டான்.


அதே நேரம், தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என்பதை ஒரு திருப்பத்தில் முன்னதாகவே உணர்ந்து விட்ட சித்ரமாயன், அது சீராளன் என்பதை அறியவில்லை. இருப்பினும் வருபவனை ஏமாற்றி விட்டு தனது காரியத்தை திறம்பட முடிக்க எண்ணிய சித்ரமாயன் , வேண்டுமென்றே வெட்டவெளிக்குள் நுழைந்ததோடு மட்டுமின்றி, அடர்ந்த தோப்பில் நுழைந்தவனாய் , மீண்டும் சாலையை அடைந்ததும் தன் புரவியை விரட்டினான். அவனது பார்வையில் தன்னைத் தொடர்ந்து வந்தவன் தோப்பின் விளிம்பில் நின்றபடி தோப்பினையே கவனித்துக் கொண்டிருப்பது புலப்பட தனக்குள் சிரித்துக் கொண்டான்.


அடுத்த ஒரு நாழிகையில்,  ஒரு குடிசையின் வாயிலில் சென்று குதிரையை நிறுத்தியவன், குதிரையில் இருந்தபடியே.." கார்கோடா..கார்கோடா.." என இருமுறை பலமாய் அழைத்தான். 


குடிசையிலிருந்து, யாரது என்ற கேள்வி எழுந்ததோடு,  ஒரு விளக்குடன் வெளிப்பட்டான் ஒரு முதியவன்.


" அரசே..நீங்களா..சொல்லியனுப்பி இருந்தால்  நானே வந்திருப்பேனே..

என்ன விசயமாக இந்த அடிமையை பார்க்க வந்தீங்க.." என்றான் கைகளை கட்டியவாறு பவ்யமாய் கார்கோடன்.


சித்ரமாயன் அரசனாக இல்லாவிடினும், குடிமக்களிடம்  அரசன் என்றே விளிக்கப் பட்டுக் கொண்டிருந்தான். அது அவனிடத்தில் மக்கள் கொண்டிருந்த பயமாக கூட இருக்கலாம்.


" இதோ பார்..ராஜாங்க விசயம்..வெளியில் யாரிடமும் மூச்சு விடாதே..எனக்கு அவசரமாய் ஆளினைக் கொல்லும் நஞ்சு வேண்டும்..பாலில் கலந்தாலும் பால் நிறம் மாறக்கூடாது ..புரிந்ததா..! " என்றான் கண்களை உருட்டி விழித்த சித்ரமாயன்.


"அரசே..இருக்கிறது ..தருகிறேன்..யாருக்கு தருவதாக எண்ணம்..? "


" இந்தக் கேள்வி உனக்கு தேவையற்றது..எனக்கு இதனை வழங்கியதை நீ மறந்து விட வேண்டும்." 


" ம்.." என்று முனகியவாறு உள்ளே சென்ற கார்கோடன் , சற்று நேரத்தில் ஒரு சிறு குடுவையை எடுத்து வந்து, சித்ரமாயனிடம் தந்ததோடு, மிக கவனம் இது கடுமையான விஷம்..ஒரு துளி போதும் ஆளை பரலோகம் அனுப்புவதற்கு.." என்றான்.


குடுவையைப் பெற்றுக் கொண்ட சித்ரமாயன், ஒரு சிறு பையை அவனிடம் நீட்ட, அதை திறந்து பார்த்த போது, நிலவின் ஒளியில் பளிச்சென மின்னிய பொன்னைக் கண்டதும் கார்கோடனின் வாயெல்லாம்  பல்லாகத் தெரிந்தது.


குதிரையை திருப்பிக் கொண்டு, அரண்மனையை நோக்கி விரைந்தான் சித்ரமாயன்.  இப்போதும் அவனைத் தொடர்ந்து வந்தவன் தோப்பின் விளிம்பில் காத்துக் கொண்டு நின்றிருப்பதைக் கண்டான். நிலவின் ஒளியில் அது சீராளனின் நிழலாக சித்ரமாயனுக்குத் தெரிய , சிரித்தபடியே காஞ்சி அரண்மனையை நோக்கி விரைவாய் விரைந்தான்.


_ தொடரும்..


#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages