24.09.20- ரேவா : 41: நந்திவர்மனின்_நகர்வலம் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 24 செப்டம்பர், 2020

24.09.20- ரேவா : 41: நந்திவர்மனின்_நகர்வலம்



24.09.20


ரேவா..


நந்திவர்மனின்_நகர்வலம்_41


அதிகாலைப் பொழுது ரம்மியமாக விடியத் துவங்கியிருந்தது. கீழ்வானில் தகதகவென கதிரவன் மேலெழும்பிக் கொண்டிருந்தான். காஞ்சிப் பெருநகர் பரபரப்புடன் காணப்பட்டது, வணிகர்கள் தங்களது வியாபார ஸ்தலங்களை திறந்தவர்களாய், வணிகப் பொருட்களை மக்களின்  பார்வைக்கு அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். இரவு வேலைக் காவலர்கள் தங்களதுப்  பணியை முடித்துக் கொண்டு, பகல் நேரக் காவலர்களுக்கு பணி மாற்றம் செய்து விட்டு அவரவர் தங்களது இல்லங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலிலும், காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும் ஒலித்த வேதப் பாராயணங்களும்,  திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும், தேவாரப் பாடல்களும்  மிக  இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது.


அரண்மனை வாயிற் காவலர்களைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரபரப்பாக உள்ளே நுழைந்த சீராளன், அரண்மனையின் உள்கட்டினை நோக்கி சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவன், மேல்தளத்தின் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த சித்ரமாயனையும், வீரமல்லனையும் பார்த்து திகைப்பில் ஆழ்ந்தவனாய், சட்டென நின்று விட்டான். இரவு முழுவதும் நாம் அந்த தோப்பின் விளிம்பிலேயே காத்துக் கிடந்து இப்போது தான் அரண்மனைக்குள் நுழைகிறோம்..சித்ரமாயனோ தனது அறையிலிருந்தல்லவா இப்போது நீராடுவதற்காக இறங்கிக் கொண்டிருக்கிறான்..இவன் எப்போது அரண்மனையை வந்தடைந்தான்..? எந்த வழியாக வந்திருப்பான்..! என மனதிற்குள் பலக் கேள்விகளைக் கேட்டுக் குழப்பத்தில் ஆழ்ந்த காரணத்தால், அவனது நடைவேகம் தடைப்பட, சட்டென நின்று விட்டான்.


சித்ரமாயனோ, சீராளனை ஓரக் கண்களால் பார்த்தபடி மெல்ல சிரித்தபடியே நகர்ந்து கொண்டிருந்தான்.


சித்ரமாயனது சிரிப்பைக் கவனித்தால் , நம்மை அந்த வெட்டவெளித் தோப்பில் வேண்டுமென்றே அலைக்கழித்தது போலல்லவா தெரிகிறது. ஒருவேளை நேற்று நாம் தொடர்ந்ததை கவனித்து, நம்மை திசை திருப்ப  முயற்சித்திருப்பானோ..! என்று சீராளனின் மனதில் பட்டது.


சித்ரமாயனும், வீரமல்லனும் நீராட்ட அறையை நோக்கி நகர்ந்ததும், சீராளன் உதயச் சந்திரனைத் தேடிக் கொண்டு, அவனிருக்கும் அறையை நோக்கி நகர்ந்தான். நந்திவர்மன் சிறுவன் என்பதாலும், அரண்மனையில் நந்திவர்மனது பாதுகாப்பிற்கு பங்கம் விளைய வாய்ப்பிருந்த காரணத்தாலும், உதயச்சந்திரனும், பியூஷாவும் அரண்மனையிலேயே தங்கி இருந்தார்கள்.  


உதயச்சந்திரனோ வேகவதி ஆற்றங்கரையில் உள்ள வில்வலம் எனும் ஊரின் தலைவனாவான். பூசான் மரபினைச் சேர்ந்த உதயச்சந்திரனுக்கு அவனது ஊரில் ஒரு பெரிய மாளிகை இருக்கிறது. இருப்பினும் நந்திவர்மனுக்காக உதயச்சந்திரனும் அரண்மனையிலேயே தங்க வேண்டியிருக்கிறது. அது பலவகையில் இப்போது பயனுள்ளதாகவும் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக பலரும் சட்டென உதயச்சந்திரனைக் காண இதுவே வசதிப் படுகிறது.


சீராளனைக் கண்டதும், " என்ன அதிகாலையிலேயே வந்து நிற்கிறாய்..நாள் பொழுதின் முதலாம் ஜாமம் இப்போது தானே துவங்கியிருக்கிறது..ஏதேனும் தகவல் இல்லாமல் வரமாட்டாயே.." என்றான் சிரித்தபடி உதயச்சந்திரன்.


" ஆம்..உண்மை தான்..மிக முக்கியத் தகவல்.." என்றவனாய், நேற்று இரவு சித்ரமாயன் தனியாக குதிரையில் போனதில் இருந்து , அவனை சீராளன் தொடர்ந்து போய், தோப்பில் இரவெல்லாம் காத்துக் கிடந்தது , இப்போது அரண்மனைக்குள் நுழையும் போது சித்ரமாயன் மேல் தளத்திலிருந்து இறங்கி வந்ததை கவனித்தது வரை சொல்லி முடித்தவனாய், 


" எனக்கு என்ன சந்தேகமென்றால், வீரமல்லன் இல்லாது சித்ரமாயன் எந்தவொரு காரியத்திலும் இறங்கும் துணிச்சல் இல்லாதவன், நேற்றைய இரவு தனியாக எங்கு சென்று வந்திருப்பான். வீரமல்லனுக்கு தெரிந்து போனானா..? தெரியாமல் போனானா..? என்ன காரியமாய் போய் இருப்பான்..? என்ற பல கேள்விகள் என் மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது." என்றான் அயர்ச்சியுடன் சீராளன்.


" சீராளா...உனது அத்தனைக் கேள்விக்கும் என்னிடத்தில் பதில் இல்லை.ஆனால் ஒன்றை என்னால் உறுதியாய் சொல்ல முடியும்..! "


" எதை..? "


" சித்ரமாயன் நேற்றிரவு வெளியே போய் வந்தது, நிச்சயமாய் வீரமல்லனுக்கு தெரிந்திருக்காது. அவனறியாமல் தான் சித்ரமாயன் போய் வந்திருக்க வேண்டும்" என்றான் உறுதியாக உதயச்சந்திரன்.


" எவ்வாறு அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்..? "


" சித்ரமாயனுக்கு தனியே வெளியே செல்லும் துணிச்சல் இப்போது வந்து விட்டது..ஆனால் வீரமல்லனுக்கோ அவனைத் தனியே அனுப்பும் துணிச்சல் இதுவரை வரவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். வீரமல்லன் இல்லாமல் சித்ரமாயன் வெளியே சென்று வந்திருக்கிறான் என்றால் , அது வீரமல்லன் அறிந்து நடந்திருக்காது என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால் வீரமல்லன் அறியாமல் சித்ரமாயன் ஒரு முடிவெடுக்க முயல்கிறான் எனில் அது ஆபத்தின் அறிகுறி. மூடனின் செயல்பாடு எப்போதும் அனர்த்தத்தையே விளைவிக்கும்." என்றான் வருத்தம் தோய்ந்த குரலில் உதயச்சந்திரன்.


" உண்மை தான்.  சரி..நான் இப்போது என்ன செய்வது..? "


" சீராளா..இரவெல்லாம் விழித்திருந்த உன் கண்கள் செவ்வரி ஓடிப் போய் இருக்கிறது. களைப்பும் உன்னை வாட்டுவதை என்னால் உணர முடிகிறது. எனவே போய் நன்கு ஓய்வெடுத்துக் கொண்டு மாலை வந்து சேர். வைகுண்ட வாசனது கோவில் திருப்பணியை பார்வையிட்டு வரலாம்." என்றான் முகத்தில் புன்னகை தவழ்ந்தவனாய்.


" சரி..வருகிறேன் " என்றவனாய் சீராளன் விடைபெற்றான்.


" சீராளனது கவலை, இப்போது உதயச் சந்திரனைத் தொற்றிக் கொண்டது. " சித்ரமாயன் எதற்காக எங்கு சென்றான்..? இதை எப்படி அறிவது..?!

பலமுறை யோசித்தும் அக்கேள்விகளுக்கான விடையை அவனால் கண்டுணர முடியவில்லை. தொடர்ந்து பல அரண்மனை வேலைகள் வரவும், அவனது கவனம் அதில் சென்றதனால்,.அக்கேள்விகளையே மறந்தும் விட்டான்.


மேற்கு வானில் கதிரவன் விழத் துவங்கியிருக்க, சீராளன் அரண்மனையில் உதயச் சந்திரனது அறைக்குள் நுழைந்தான். அங்கு ஏற்கனவே நந்திவர்மனும் அமர்ந்திருக்க, 


" மன்னருக்கு என் பணிவான வணக்கம்.." என்றான் சீராளன் இரு கைகூப்பியவனாய்.


அவனது செயலுக்கு சிரக்கம்பம் செய்து மரியாதை செலுத்திய நந்திவர்மன்.


" படைத்தலைவரே, சீராளனும் வந்தாகி விட்டது..நமது நகர்வலத்தை துவக்கி விடலாமா..! " என்றான் ஆவலோடு.


" ம்..சரி..கிளம்பலாம்."


மூவரும் அரண்மனையை விட்டு வெளியேறியவர்களாய் நகரைச் சுற்றி பார்வையிட்டபடி வலம் வத்தனர். மகுடாபிஷேகம் முடிந்த நாள் முதலாய் கடந்த ஒரு திங்களுக்கும்  மேலாக நந்திவர்மன் நகர்வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தான். மக்களைச் சந்திப்பதையும் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உதவுவதும், தேவைகளை பூர்த்தி செய்வதுமான பணியினைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.


மூவரும், வைகுண்டப் பெருமாள் ஆலயத் திருப்பணி நடக்கும் இடத்தை அடைந்தார்கள். தோண்டப் பட்டிருந்த பெரும் பள்ளத்தில் இப்போது பாதியளவு கருங்கல் கட்டடம் உயர எழும்பியிருந்தது.

கட்டப் பட்டுக் கொண்டிருந்த கருங்கல் அஸ்திவாரம் முதலில் மிக அகலமான சுவர் அமைப்பிலும், பிறகு வரவர சற்றே குறைந்து கொண்டே வருமாறு அக்கல் கட்டுமானம் காணப்பட்டது.


அந்த பரந்த வெளியில் ஈசானிய மூலையில் , கோவில் திருப்பணிக்கான ஆட்கள் தங்குவதற்கும், மற்றும் முக்கியப் பொருட்களை வைப்பதற்கும் ஒரு மிகப்பெரிய குடிசை வேயப்பட்டிருந்தது.

அது போல அக்னி மூலையில் கோவில் திருப்பணிக்கான உளிகளை தட்டவும், பதமேற்றவும் தேவைப்படும் இரும்பு கொல்லர் கலன் அமைக்கப் பட்டு , தூக்கி வேயப்பட்ட ஒரு குடிசை அமைக்கப் பட்டிருந்தது. அக்குடிசையின் மூலையிலேயே சிற்பிகளுக்கும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் இரவு உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

பெரும்பாளங்களாக இறங்கியிருந்த கற்கள் நூலினால் செங்காவி கோடு இழுக்கப்பட்டு, சதுரசதுரப் பாளங்களாக உடைக்கப் பட்டுக் கொண்டிருந்தது.


அனைத்து வேலைகளையும் கண்டு மனம் திருப்தியுற்ற மூவரும் ,  தங்களது புரவியிலேறி அரண்மனையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள்.


அப்போது..


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages