28.09.20
ரேவா
சமணப்பள்ளியில்_நந்திவர்மன்_45
வேகவதி ஆற்றங்கரை தோப்பின் மாளிகையில் , கலைந்த கேசமும், தூசி படிந்த உடலும், சிவப்பேறிப் போயிருந்த கண்களுமாய் காட்சி தந்தவனைக் கண்டதும் நமக்குச் சற்றே திடுக்கிடவே செய்கிறது. சித்ரமாயனா இது..!
வீரமல்லனது மறைவு அவனை பெருமளவு பாதித்து இருந்தது. கடந்த சில தினங்களாய் தூக்கத்தை முற்றிலும் இழந்தவனாய் புலம்பிக் கொண்டிருந்தான்.
"நான் தான் காரணம்...!"
"நான் தான் காரணம்..! "
என பிதற்றிக் கொண்டிருந்தான்.
தேவையின்றி அனைவரது பெயரிலும் எரிந்து விழுந்தான். யௌவனத் தேறலை எடுத்துக் கொண்டு போய் நீட்டிய பைரவனையும் " என் முன் வராதே..இதையும் எடுத்துப் போய் விடு.." என இரைந்தான்.
பைரவனுக்கு அவனது நிலை புரிய அமைதியாக அவனது அறையை விட்டு வெளியேறி விட்டான்.
இரண்டு தினங்கள் இவ்வாறாக கழிய , கதவினைத் திறந்து வெளிவந்த சித்ரமாயனிடத்தில் சற்றே தெளிவு காணப்பட்டது. நீராடி விட்டு வந்தவன், ஒரு புதிய ஆடையை எடுத்து அணிந்து கொண்டான்.
" பைரவா..நான் இந்த மாளிகையை விட்டு, திரையனேரி செல்கிறேன். நீ இங்கிருந்து காஞ்சியில் நடக்கும் விசயங்களை அவ்வப்போது எனக்குத் தெரியப் படுத்து. காஞ்சி அரண்மனையை எப்போதும் உனது கண்காணிப்பில் வைத்துக் கொள். உதயச்சந்திரனையும், நந்திவர்மனையும் ஒழித்துக் கட்டும்வரையில் எனக்கு நிம்மதி இல்லை.." என்றவனாய் அன்றைய காலை உணவினை முடித்துக் கொண்டு தனது புரவியில் ஏறியவன் திரையனேரியை நோக்கிப் பறந்தான்.
* * *
பஞ்சப் பாண்டவர் மலைக் குன்று. அங்கிருந்த #ஜினகரத்தின் தரையில் அமர்ந்தவராய் தியானத்தில் இருந்த நாகநந்திகுரவர், உள்ளே நுழைந்த உதயச்சந்திரனையும், நந்திவர்மனையும் தன் கருணை பொங்கும் விழியாலே கனிவுடன் வரவேற்றார். காஞ்சியில் அனைவரது நலனையும் விசாரித்தவர் , இருவரும் தன்னைத் தேடி வந்த காரணத்தையும் ஒருவாறு ஊகித்தறிந்தவராய்,
" உதயச்சந்திரா, நந்திவர்மனது கல்விக்காக இங்கு வந்தாயா..? " என்றார்
இருவரும் ஒரு கணம் திகைத்தபடியே,
" சுவாமி நந்திவர்மனது கல்விக்குத் தான் வந்தோமென்பதை எவ்வாறு கண்டுணர்ந்தீர்கள்.." என்றான் திகைப்புடன் உதயச்சந்திரன்.
அதைவிட, அடுத்தபடியாக அவர் கேட்டதைக் கண்டு வியப்பின் எல்லைக்கே போனான் உதயச்சந்திரன்.
" உதயச் சந்திரா, நந்திவர்மனது வாழ்வின் பாதுகாப்பையும் உத்தேசித்து தானே இங்கு வந்தாய்..? "
இப்போது மேலும் ஆச்சர்யமாய் இருந்தது உதயச்சந்திரனுக்கு,
" சுவாமி இது எப்படி தங்களுக்குத் தெரிந்தது..! "
" ஊகம் தான்..காஞ்சியில் ஏற்கனவே மன்னனாய் இருந்தவன் ஒருவன், நீயோ இவனை மன்னனாக்கி விட்டாய். இவன் சிறுவன் வேறு, கல்வியும் வேண்டும், அவனுக்குகந்த பாதுகாப்பும் வேண்டும்.
இல்லையெனில் பதவிச் சுகத்தை கண்ட பரமேஸ்வரவர்மனது புதல்வனால் இவனது உயிருக்கு ஆபத்து நேரவே செய்யும் என்பது யாவரும் அறிந்தது தானே..கல்வி கற்க கடிகைக்கு செல்லலாம் தான், ஆனால் காஞ்சியில் இவனது பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லையென்று கருதியிருப்பாய்..உங்களது எண்ணம் என்னை நோக்கி திரும்பியிருக்கும், இதுவெல்லாம் நான் ஏற்கனவே ஊகித்தறிந்தவை தான் உதயச்சந்திரா, அதனால் தான் அன்று நந்திவர்மனிடம் நாம் சந்திக்கவும், பேசவும் வாய்ப்பிருக்கிறது எனப் பகன்று வந்தேன்.." என்றார் நாகநந்திகுரவர்.
அதைக் கேட்டுவிட்டு தலையசைத்து ஆமோதித்தான் நந்திவர்மன்.
" தங்களது ஊகம் மிகச் சரியானது துறவியாரே, நந்திவர்மனுக்கு இந்த வயதில் போர்ப்பயிற்சியுடன் கூடிய கல்வியும் அவசியம், பாதுகாப்பும் அவசியம். அப்போது சட்டென நினைவுக்கு வந்தவர் தாங்கள் தான்.
கடிகையில் அவ்வளவு பாதுகாப்பு இராது. இங்கு தங்களின் கல்விமுறை நான் அறிவேன். அதுவே நந்திவர்மனுக்கு உகந்ததுமாகும். அதே போல இங்கு அவனது பாதிகாப்பிற்கும் பங்கம் இராது. எனவே தான் இங்கு அழைத்து வந்தேன்.அத்தோடு,
சுவாமி நந்திவர்மனின் கல்வி மட்டுமின்றி, போர்க்கலையையும் நீங்கள் பயிற்றுவிக்க வேண்டுகிறேன்.." என்றான் உதயச்சந்திரன்.
" ஐயனே..நான் போர்த் தொழிலை விட்டு பல ஆண்டுகளாயிற்றே..சமணம் தழுவியது முதல் இந்த ஜினகரமே கதி என்றிருக்கிறேன். இங்கு தான் எனக்கு ஆழ்ந்த நிம்மதி கிடைக்கிறது..மனதிற்கு சாந்தியும், பேரமைதியும் கிடைக்கின்றது.." என்றார் நாகநந்திகுரவர்.
" சுவாமி..தங்களது சகோதரர் நாகதேவரது போர்க்கலைச் சாலை வழியாக பயிற்சியை வழங்க உதவலாமே.."
" அனைத்தையும் ஏற்கனவே தீர்மானித்து விட்டே வந்திருக்கிறாய்..ம்..சரி..
நந்திவர்மனை இங்கு சேர்த்துக் கொள்கிறேன். "
" நல்லது சுவாமி..நான் விடைபெறுகிறேன்.."
" இன்று இங்கிருந்து விட்டு நாளை செல்..ஆனால் இங்கு நீ வெறுந்தரையில் தான் படுத்துறங்க வேண்டும்..இந்த நிகந்தரின் பள்ளியில் நீ வேண்டும் வசதி இருக்காது." என்றார் புன்னகையுடன் நாகநந்திகுரவர்.
" சுவாமி..நானும் வசதியை விரும்புபவன் அல்ல..மஞ்சத்திலும் படுப்பேன், மண்தரையிலும் படுப்பேன். " என்றான் உதயச் சந்திரன்.
" அப்படியெனில் நல்லது. நீங்கள் இருவரும் இக்கற்படுகையில் ஓய்வெடுக்கலாம்..நான் ஊருக்குள் சென்று வருகிறேன்." என்றவராய் வெளியேறினார்.
அவரது சிஷ்யர்கள் இருவர் , இருவருக்கும் சில உதவிகளைச் செய்து விட்டு நகர்ந்தார்கள்.
" நந்திவர்மா, இது சமணப் பாடசாலை , அவர்களின் கல்விமுறை உன்னை மேம்படுத்தும், அதோடு மட்டுமின்றி ஆயுதப் பயிற்சியும் பெறலாம். கவனமாக அனைத்தையும் கற்றுக் கொள். நான் அவ்வப்போது வந்து உன்னைச் சந்திக்கிறேன். " என்றான் உதயச்சந்திரன்.
" ம்..சரி.." என்றான் நந்திவர்மன்.
ஐந்தாண்டுகள் அங்கிருந்தான் நந்திவர்மன் . அவன் கற்றதும், பெற்றதும் பல. அக்காலங்களில் நடந்தேறிய நிகழ்வுகளும் அனேகம்.
_ தொடரும்..
# அனுராஜ்..
குறிப்பு : # ஜினகரம் என்பது சமணரது ஆலயம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக