01.10.20
ரேவா
பாண்டியர்_கங்கர்_போர்_48
கடந்த இரண்டு ஆண்டுகளில் தனக்கான படைபலத்தினைப் பெருக்கிக் கொண்ட
பாண்டியரது படைகள் கொங்கு நாட்டின் வடபகுதியை கவர்வதற்காக கங்க நாட்டரசன் சிறீபுருஷனுடன் மோதுவதற்காக, மேற்குத் தொடர்ச்சி மலை ஓரங்களிலேயே பயணித்துக் காவிரி நதியின் கரையில் அமைந்திருந்த வேண்பை எனும் நகரில் தங்களது பாசறைகளை அமைத்திருந்தார்கள்.
பாண்டியரின் முதலமைச்சரும், சிறந்த ராஜதந்திரியுமான மாறன் காரி "பல்லவரது ஆதிக்கத்தில் உள்ள தென் கொங்கு நாட்டினை தொடாதவாறு வடபகுதியை அடைவது நல்லது எனக் கூறிவிட்டார்.
பராங்குச பாண்டியனும், தளபதி சாத்தன் கணபதியும் நந்திவர்மன் காஞ்சியில் இல்லாத வேளையில் , தென் கொங்கு நாட்டினை கைப்பற்றுவது எளிதான விசயமல்லவா என்றதற்கு, பல்லவனது படைதளபதி பல்லவடி அரையனும், உதயச்சந்திரனும் நம்மை எதிர்க்கத் துணியலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நமது கொங்கு தேச கனவு தென்பகுதியிலேயே தகர்ந்து விட வாய்ப்புள்ளது. ஆனால் நாம் பல்லவனது எல்லையைத் தாண்டி வட கொங்கு பிராந்தியத்தில் கங்க மன்னனை எதிர்ப்போமேயானால் , பல்லவனும் நம்மீது சிரத்தை கொள்ள மாட்டான்.ஏனெனில் கங்கன் பல்லவனுக்கும் எதிரி என்பதனால் , நாம் கங்கனுடன் மோதுவதை அவர்கள் விரும்பவே செய்வார்கள். அவர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்பதனால் இப்போரில் அலட்சியம் காட்டுவார்கள்.எனவே நாம் நேரடியாக மேற்குத் தொடர்ச்சி மலைவாயிலாக கங்க நாட்டின் வடபகுதியை அடைவதோடு, கங்கனுடன் மோதுவதே நன்மை பயக்கும் ". என்றதனால் , பாண்டியரது படைகள் காவிரி நதியின் கரை ஓர நகரான கொங்கு நாட்டின் வடபகுதியில் உள்ள வேண்பை எனும் இடத்தில் முகாமிட்டிருந்தது.
கங்கனும் தனது படைகளைத் திரட்டிக் கொண்டு வேண்பையின் எல்லையை நோக்கி வந்தான்.
பாண்டியரது யானை, புரவி, காலாட் படை மற்றும் வில்லாளிகள் அடங்கிய மிகப்பெரிய படையின் முன் , கங்கனது படையானது தோற்றே பின் வாங்க நேரிட்டதோடு, கங்கனையும் சிறைசெய்து பராங்குசன் முன் கொண்டு வந்து நிறுத்தினர் பாண்டியனது படைத் தளபதிகள். #வேண்பை பாண்டியனுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
வெற்றி பெற்ற வேந்தனாய், பராங்குச மாறவர்மன் வீற்றிருக்க, தோல்வியைத் தழுவிய சிறீபுருஷனோ தலைகவிழ்ந்து நின்றான்.
" கங்க மன்னருக்கு ஆசனமொன்றை எடுத்துப் போடுங்கள்.." எனக் கம்பீரமாய் உதிர்த்தான் வார்த்தைகளை உறுதிநிரம்பிய குரலில் பராங்குசன்.
" வென்றது நீங்களாக இருப்பினும், தோல்வியைத் தழுவிய என்னைக் கௌரவிக்க எண்ணிய பாண்டியருக்கு வணக்கத்தை தெரியப் படுத்திக் கொள்கிறேன். என்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்று அறியலாமா..? ஏனெனில் வெற்றி இன்று உங்களுடையது. தோல்வியடைந்தவனிடம் இருந்து நீங்கள் பெற விரும்பும் காணிக்கை யாது..? " என்றான் நேரிடையாகவே சற்றும் குறையாத துணிச்சலோடு சிறீபுருஷன்.
" கங்க மன்னர் நேரிடையாகவே விசயத்திற்கு வந்து விட்ட காரணத்தால் , நானும் எனது எண்ணங்களை நேரடியாக தெரியப் படுத்தி விடுவதே நல்லதென நினைக்கிறேன் " என்றவனாய் பராங்குச மாறவர்மன்.
இலேசாக தன் தொண்டையை சரிசெய்து கொண்டவனாய் , " கங்க மன்னரே உம்மை வீழ்த்த வேண்டுமென்பதோ, உமது நாட்டை ஆக்கிரமிக்க வேண்டுமென்பதோ எனது நோக்கமில்லை. கொங்கு நாடு எனது பாண்டிய நாட்டின் வட எல்லை. கிழக்குப் பகுதியில் தலையெடுக்கும் பல்லவனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், வடபகுதியில் இருந்து எவரும் எங்களது தென்பகுதியில் ஊடுருவாமல் இருக்கவுமே எனது இந்த கொங்கு தேச படையெடுப்பு. அவரவர் சொந்த நாட்டோடு திருப்தி அடைந்தால் போர் எனும் பேச்சிற்கு இடமில்லை.ஆனால் வடநாட்டவருக்கு தென் நாட்டவரை சீண்டிப் பார்ப்பதே வேலையாக இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் எங்களது பாதுகாப்பினை நான் உறுதி செய்து கொள்ள வேண்டாமா..?" என்றுவிட்டு கொஞ்சம் ஆழமாய் கங்க மன்னனது முகத்தைப் பார்த்தான்.
கங்க மன்னனது முகமோ எதையும் பிரதிபலிக்காது, இறுகிப் போய் இருந்தது. எனவே மேலும் பேச்சை தொடர்ந்தான் ..
கங்கநாடு சாளுக்கியரோடு நட்புறவை பேணும் நாடு என்பதை நான் அறிவேன்.கொங்கு நாட்டின் வடபகுதி தங்கள் வசம் இருப்பதனால், சாளுக்கியருக்கு தென்னாட்டின் மீது படையெடுக்கும் ஆசை துளிர்த்து விடக் கூடாதல்லவா..! மேலும்..
சாளுக்கியரால் வருங்காலத்தில் பாண்டிய நாடு எவ்வித இடையூறாலும் பாதிக்கப் படாதிருக்கவே , வடகொங்கு நாட்டினை வசப்படுத்த எண்ணினோம். தங்களது தலைக்காட்டில் இருந்தபடி நீங்கள் உங்கள் பகுதியை ஆள்வதில் எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் எனக்கு தாங்கள் கப்பமும் கட்ட வேண்டும், அத்தோடு தங்கள் மகள் பூசுந்தரியை மணமுடித்தும் தர வேண்டும். இதனால் உங்களுக்கொன்றும் அபவாதம் நேர்ந்து விடாது. என்ன சொல்கிறீர்கள்..? " என்றான் பராங்குசன்.
"உங்களின் இந்த ஏற்பாட்டிற்கு நான் உடன்பட மறுத்தால்..?! " என்றான் கோபத்தோடு சிறீபுருஷன்.
" கங்க மன்னரே, கோபத்தினால் விளையப் போவது ஒன்றுமில்லை. நிதானமாக சிந்தித்தே முடிவெடுக்கலாம்.என்னை மருமகனாக்கிக் கொள்வதன் பலன் உங்களுக்கு தெரியாததல்ல..மேலும் புரியாததும் அல்ல." என்றான் விஷமத்துடன் பாண்டியன்.
பராங்குசனை இது போன்று கேட்கச் சொன்ன மாறன் காரியே அடுத்தபடி பேசத் துவங்கினார், " கங்க மன்னா, மருமகனுக்கு ஸ்ரீதனமாக வடகொங்குப் பகுதியை வழங்கியதாக நினைத்துக் கொள்..மற்றொரு முக்கியமான விசயம் , நமக்கு முக்கிய எதிரி பல்லவன் தான். அவன் உனக்கும் எதிரி என்பதை நாங்கள் அறிவோம், தொண்டை மண்டலத்தை கைப்பற்ற வேண்டுமானால் நாமனைவரும்
ஒன்றிணைவது அவசியமான ஒன்றாகும். பாண்டியனுக்கு தரப்போகும் கப்பத்தை கப்பமென்று எண்ணாதே, மகளுக்கு வழங்கும் சீதனமாக எண்ணிப்பார் , அது ஒன்றும் தவறாகத் தோன்றாது . பாண்டியரும், கங்கரும் இணைந்தால் நமது பொதுப் பகைவனை உருத்தெரியாமல் அழிக்கலாம்.எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை மறவாதே.." புகையும் சுள்ளியில் நெய்வார்த்த பேச்சாக இருந்தது மாறன் காரியின் பேச்சு.
உடன்பாட்டிற்கு உடன்பட்டான் கங்க மன்னன் சிறீபுருஷன். அடுத்து வந்த நல்லதொரு முகூர்த்த நாளில் பூசுந்தரியின் கழுத்தில் மங்கலநாண் சூட்டினான் பராங்குச மாறவர்மன். கங்கரும் பாண்டியரும் கலந்து உறவாடினார்கள்.
போர் முடிந்து திரும்பும் வழியில், கணவனும் மனைவியும் காவிரி பாயும் கொடுமுடி நகரில் வந்து பல நாட்கள் தங்கியிருந்ததோடு, #கொடுமுடி சிவனுக்கு பொன்னும், பொருளும் காணிக்கையாய் தந்து அக மகிழ்ந்தார்கள். பாண்டியன் பராங்குசன்
இரணியகர்ப்ப தானங்களும், துலாபார தானங்களும் செய்து மகிழ்ந்தான். கொடுமுடி அதனால் திருப்பாண்டி கொடுமுடி மண்டலம் என வழங்கப்பட்டது.
காலங்கள் உருண்டோடின..
வருடம் தவறாமல் கங்கனிடமிருந்து கப்பம் வந்தது. பராங்குசனுக்கும், பூசுந்தரிக்கும் பிறந்த வாரிசிற்கு "பராந்தகன்" எனப் பெயரிட்டு மகிழ்ந்தது பாண்டிய நாடு.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : #வேண்பை வெற்றியை பாண்டியரது வேள்விக்குடி செப்பேடு தெரியப் படுத்துகிறது.
# கொடுமுடியில் தனது மனைவி பூசுந்தரியுடன் பாண்டியன் வந்திருந்து சிவனுக்கு காணிக்கை பல செய்ததை வேள்விக் குடி செப்பேடும், கொடுமுடி கல்வெட்டும் உறுதி செய்கின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக