02.10.20-ரேவா : 49 : நந்திவர்மனின்_காஞ்சிப்பயணம் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 2 அக்டோபர், 2020

02.10.20-ரேவா : 49 : நந்திவர்மனின்_காஞ்சிப்பயணம்

 



01.10.20


ரேவா


நந்திவர்மனின்_காஞ்சிப்பயணம்_49


இன்றைய வேலூர் மாவட்டம் ஆற்காட்டிற்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ள விளாப்பாக்கம் எனும் கிராமத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது திருப்பாண்மலை என அழைக்கப்படும்,  #பஞ்சபாண்டவர் மலை . அந்நாளில் கானகமும், சோலையும், 

பொய்கையும் நிறைந்து  காணப்பட்ட ஒரு எழிலார்ந்த பிரதேசம்.


ஆங்காங்கே காணப்பட்ட மலைத் தொகுப்புகளில் பெரிதான மலை ஒன்றில்  வாயில்கள் பல குடையப்பட்டு, கல் தூண்களுடன் சமணப் படுகைகளாக காட்சி தந்து கொண்டிருந்தது. மலைமேல் சுனையும் , தாமரை மலர்கள் நிறைந்த அழகிய பொய்கையும் கூட அங்கு காணப்பட்டது. குடைவரைக் கோவில் ஒன்றும், சமண தீர்த்தங்கரர் ஒருவரது சிலையும் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. நாகநந்திகுரவர் மட்டுமல்லாது வேறு சில சமணத் துறவிகளும் தங்களது இருப்பிடமாக அதையே கொண்டிருந்தனர்.  அங்கு தான் நந்திவர்மனுக்கு சமணக் கல்வியையும் போதித்தனர். மலையடிவாரப் பகுதிகளில் மாலை வேளைகளில் ஆயுதப் பயிற்சியும் நந்திவர்மனுக்குத் தரப்பட்டது.


கல்வி கற்கும் நேரம் போக அருகில் இருக்கும் நகர்புறங்களில் இருந்து வரும் மக்களுக்கு சமணத் துறவிகள் மருத்துவ உதவியும்  செய்தனர். எனவே அக்குடைவரை கோயிலில் பல மூலிகைகளும், பச்சிலைகளும், அவற்றை அரைக்க உதவும் சிறு கலுவமும், குழவியும் மற்றும் மயிற்பீலியும், உணவு சமைப்பதற்காக ஒன்றிரண்டு மட்பாண்டங்களும், குடிநீர் வைத்திருக்கும் ஒரு சிறிய மண்கலயமுமே அங்கு காணப்படும் பொருள்கள். சிறிய கூடை போன்று சில இருந்தன, அதில் அங்கிருந்தோர் தங்களது ஆடைகளை வைத்திருந்தனர். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியான பொருள்கள் எதுவும் அம் மலையில் இல்லை.


நந்திவர்மனது கல்வி முறைகளுடனே ஒன்றி பயணித்தது  சமண வாழ்வியல் நெறிமுறைகள். அன்னதானம், ஔசததானம், அபயதானம், சாத்திரதானம் இவ்வகையான நான்கு தானங்களையும் ஒவ்வொருவரும் வாழ்வில்  கடைப்பிடிக்க வேண்டுமென கல்வியுடனே இணைந்து போதிக்கப் பட்டு வந்தது.நந்திவர்மன் சகல கல்வியிலும் நன்கு தேர்ச்சியைப் பெற்றான். எந்தவொரு செயலையும் நுணுகி ஆராய்வதோடு, அதை தர்க்கித்து முடிவு காண வேண்டுமென்பதை அவனது உபாத்தியாயர் சொல்லக் கேட்டிருந்த  காரணத்தால் , விவாதித்து ஐயம் தெளிவுற செய்வதில் சமர்த்தனாய் இருந்தான்.


ஆயுதங்களை உபயோகப் படுத்துவதிலும் சிறந்து விளங்கினான். யானை மற்றும் குதிரையேற்றமும் அவனுக்கு கற்றுத் தரப்பட்டிருந்தது. சகலக் கலைகளிலும் சிறந்து விளங்கிய நந்திவர்மன் கட்டிளங்காளையாக உருமாற்றம் அடைந்திருந்ததோடு, காஞ்சிக்கு செல்லும் நாளை எண்ணி ஆவலும் கொண்டிருந்தான்.


பதின்மூன்று வயது பாலகனாக வந்து சேர்ந்த நந்திவர்மன் இன்று சுமார் ஐந்தரை ஆண்டுக்  கல்வியோடு , இலக்கியத்திலும் தேர்ச்சிப் பெற்றிருந்தவனை நாம் இப்போது தான் காண்கிறோம். 


சுருள்சுருளாய் முடிக்கற்றைகள் தோள்வரை விரவியிருக்க, கூரான நாசியும், காதில் ஆடிக் கொண்டிருந்த வளையமும், ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் விழையும் ஒளி பொருந்திய கண்களும், முழங்காலை தொடுமளவு நீண்ட கரங்களும், சதா புன்னகை தவழும் அவனது முகமும், அரசகுமாரனைப் போன்று இல்லாது சமணப் பள்ளியில் இதுகாறும் படித்ததன் காரணமாய் மிக எளிமையானவனாய் காணப்பட்டாலும், இடைக் கச்சையில் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட அகலமான வாள் அவனது வீரத்தையும் பறைச்சாட்டிக் கொண்டிருக்க, சிவந்த அவனது மேனியை மறைத்த குடியானவர்களின் எளிய உடை அவனைச் சாதாரணமாகக் காட்டினாலும் அவனது முகமும் இயற்கையிலேயே காணப்படும் கம்பீரமும் அவன் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதை மெய்ப்பிப்பது போலிருந்தது.


தனக்கு முன் கைகளை கட்டியவாறு பவ்யமாய் நின்று கொண்டிருந்த உதயச்சந்திரனைக் கண்ணுற்ற சமணத்துறவி நாகநந்திகுரவர், 


"படைத்தலைவரே, நந்திவர்மனை காஞ்சிக்கு நீங்கள் அழைத்துச் செல்லும் வேளை வந்து விட்டது. சகலக் கல்வியிலும் தேர்ந்தவனாய் நந்திவர்மன் வளர்ந்திருக்கிறான்."


காப்பிய நாடகம் புனைவதில் அவன் சமர்த்தன். குறிப்பாக பிந்துமதி ( புள்ளிகள் விடுதல் , ஒற்றெழுத்து விடுதல் ) , கூடசதுர்த்தபாதம் (  நான்காவது பாதத்தை மறைத்து விடுதல் ), பிரேளிகை ( சிலேடை ), அட்சரச்யுதகம் ( எழுத்தை விட்டு எழுதுதல் ) , மாத்ராச்யுதகம் ( மாத்திரை விடுதல் ) போன்ற செய்யுட் வகைகளில் புலமை மிக்கவன். செய்யுள் வகைகளில் காணப்படும் குறைகளை  எளிதில் உணரும்  ஆற்றலைப் பெற்றிருக்கிறான். 


அது மட்டுமின்றி நாகதேவரும் , இவனது ஆயுத பிரயோகத் திறமையை மெச்சுகிறார். கற்றுத்தருவன வற்றை ஒரே மூச்சில் கற்றுத் தெளிந்து கொள்கிறான்.  எனப் பாராட்டினார் நாகநந்திகுரவர்.


" துறவியாரே, பல்லவரது ஆட்சிக்கு தங்களது பங்கு மகத்தானது. நந்திவர்மனை இதுகாறும் சிறந்த முறையில் கவனித்துக் கொண்டதற்கும், சிறப்பான கல்வியோடு, ஆயுதப் பயிற்சியையும் பயிற்றுவித்தமைக்கு எனது சார்பிலும், பல்லவ நாட்டின் சார்பிலும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று வணங்கினான் உதயச்சந்திரன்.


" நல்லது..படைத்தலைவரே..இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதோடு, பல்லவ நாட்டின் மன்னனை இதுகாறும் இச்சமணப் பள்ளியில் தங்கியிருக்க அனுமதித்த உங்களுக்கும், பல்லவ தேசத்திற்கும் நானும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார் நாகநந்திகுரவர்.


இருவரும், அவரிடமும், நாகதேவரிடமும் மற்றும் அங்கிருந்த சமணர் துறவிகளிடமும் விடைபெற்றவர்களாய், தங்களது புரவிகளில் ஏறியவர்கள் காஞ்சியை நோக்கி புழுதியைக்  கிளப்பியபடி விரைந்தார்கள்.


நாள் பொழுதின் நான்காம் ஜாமம் துவங்கியதும் , சமணப் பள்ளியில் இருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய நந்திவர்மனும், உதயச்சந்திரனும் , வழிநெடுக உள்ள இயற்கையை ரசித்தபடி எங்கும் நிற்காமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


காஞ்சியில் உள்ள பியூஷா, பிரம்மஸ்ரீராஜன், பல்லவடி அரையன், சீராளன் , சித்ரமாயன் என அனைவரையும் நலம் விசாரித்த நந்திவர்மனுக்கு, உதயச்சந்திரன் "அனைவரும் நலம் " என்றுரைத்தவன், சித்ரமாயனைப் பற்றிக் கேட்டபோது, "  அவன் காஞ்சியில் இல்லை, பாண்டியருடன் நெருக்கமாகி திரையனேரியிலும், கூடல் நகரிலும் காலத்தை தள்ளுகிறான். " என்றான் உதயச்சந்திரன்.


அண்டைநாடுகளின் நிலவரங்கள் குறித்த வினாவிற்கு, " பராங்குசனின் கங்கப் போரினையும், அதன் முடிவாய் நிகழ்ந்த நிகழ்வையும் விவரித்தான்."


" ம்.." என தலையசைத்துக் கேட்டுக் கொண்ட நந்திவர்மன். திடுமென ஏதோ எண்ணியவனாய், 


" நமது வைகுண்ட பெருமாள் ஆலயம் எந்தளவில் வளர்ச்சி பெற்றுள்ளது ..? " என்றான் தெரிந்து கொள்ளும் ஆவலில்.


" நல்ல முன்னேற்றம்..நாம் இரண்டு நாளில் சென்று நேரிலும் பார்த்து வரலாம் "  என்றான் உதயச்சந்திரன்.


" படைத்தலைவரே..நமது மகுடாபிஷேக நாளன்று வந்திருந்தாரே, திருமங்கை மன்னர் அவரைப் பற்றி வேறு ஏதேனும் செய்தி உண்டா..? " 


" ஆஹா..அவரைப் பற்றி செவி வழிச் செய்தி ஒன்றினை அறிந்தோம், அவர் ஒரு திருமணக்  கோஷ்டியாரிடம் வழிப்பறிச் செய்ய முயற்சிக்கையில், வைகுண்ட வாசனே நேரில் காட்சி தந்து அருளாசி செய்து மறைந்ததாகவும்,  அன்றிலிருந்து அவர் வைஷ்ணவ அடியாராகி பல புண்ணிய ஷேத்திரங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்வித்து வருவதாகவும் பலச்  செவிவழிச் செய்திகள் அறிந்தோம். அது மட்டுமல்ல இப்போது அவர் திருமங்கையின் மன்னன் அல்ல, திருமங்கை ஆழ்வாரென அழைக்கப் படுவதாகவும் கேள்வியுற்றோம்."


" ஆஹா..அவர் தான் எவ்வளவு பாக்கியசாலி, கனவில் வந்த வரதன், நேரிலும் காட்சி தந்து அவரை ஆட்கொண்டிருக்கிறானே..வாய்ப்பிருந்தால் அவரைச் சந்திக்க வேண்டும்." என்றான் மெய்சிலிர்த்தவனாய், நந்திவர்மன்.


மாலை நேரக் கதிரவன் மேற்கு வானில் மெல்லக் கீழிறங்கிக் கொண்டிருந்தான். வானோ பலவித வர்ணஜாலங்களை காட்டி வசீகரித்தது. கூடு திரும்பும் பட்சிகள் வானில் கூட்டம் கூட்டமாய் கிழக்கிலிருந்து மேற்கே விரைந்து கொண்டிருந்தன. கடந்த ஒரு நாழிகைக்கு மேலாகப்  பயணித்த களைப்பினாலும், வெயிலின் காரணத்தாலும், 


" படைத்தலைவரே, சற்று ஓய்வெடுத்துச் செல்லலாமே, தாகமாய் இருக்கிறது. பக்கத்தில் ஏதாவது நீர்நிலை உள்ளதா..? புரவியும் சற்று களைத்து காணப்படுகிறது " என்றான் நந்திவர்மன்.


" ம்..தாகம் தணித்தபின்னரே கிளம்பலாம்..சிறிது தூரத்தில் நதியொன்று ஓடுகிறது. அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.."


" சரி.."


இருவரது புரவிகளும் சீரான வேகத்தோடு சென்று, சிறிது தூரத்தில் இருந்த நதியினை அடைந்தன. ஆங்காங்கே பாறைகளாய் தென்பட்ட அந்த நதியினை கண்டதும் முகமலர்ந்தவனாய், நந்திவர்மன் தனது புரவியை சட்டென நிறுத்தியதோடு, அதிலிருந்து குதித்து இறங்கினான். உதயச்சந்திரனும் இறங்கியதோடு, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி இருவரும் அந்த நதியினை நெருங்கினார்கள். புரவிகள் இரண்டும் நீரினைக் கண்டதும் இவர்களை அசட்டை செய்து விட்டு நீரருந்தச் சென்று விட, இவர்கள் இருவரும் அந்த நதியில் இறங்கினார்கள்.


சலசலத்து ஓடிய நதி , மேற்கு வானில்  இறங்கிக் கொண்டிருந்த கதிரவனது பொற்கதிர்களை தான் வாங்கி பொன்னிறமாய் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. கால்களை நனைத்து தங்களது உள்ளத்தை குளிர்வித்த இருவரும், குளிர்ந்த நீரில் கைகால்களை கழுவியும்,  முகத்தினை அலம்பியும் கொண்டவர்கள் தங்களது தாகத்தினையும் தீர்த்துக் கொள்ள முற்பட்டனர்.


அப்போது..பிரதான சாலையின்  குறுக்கில் இருந்து கண்மூடித் தனமாய் ஓடி வந்த ஒரு இளம்பெண், நதியில் நீர் அருந்த குனிந்திருந்த

நந்திவர்மனை இடித்துத் தள்ளியவளாய், நதியின் எதிர்கரைக்கு செல்லும் உத்தேசத்தில் ஓடினாள். 


அவளது செயலினால் சற்றே நிலைகுலைந்ததோடு,  அவளது செயலைக் கண்டு சற்று திடுக்கிடவும் செய்தான். ஏனெனில் அவள் ஓடுவதற்காக அப்போது காலை வைத்திருந்த பாறை பாசிப் படர்ந்து போயிருந்தது. அதில் காலை வைத்தால் அவள் வழுக்கி விழுவது உறுதி எனப் புலப்பட்டதும், 


" ஏ..பெண்ணே..அது பாசி...படர்ந்த பாறை.." அவன் வார்த்தையை முழுதும் முடிக்குமுன்னே அவள் அப்பாறையில் கால் வைத்து விட்டதனால், சர்ரென வழுக்கி , அப்படியே பின்னோக்கி சரிந்தாள்..அவள்  விழுந்தாள் எனில்  தலையில் அடிபடுவது உறுதி என புலப்பட்டு விட்ட காரணத்தால் , நந்திவர்மன் சட்டென முன் நகர்ந்தவனாய், விழுந்து கொண்டிருந்தவளை தன்னிரு கைகளால் தாங்க, அவள் மெல்லச் சரிந்து அவனது மார்பில் இதமாய் சாய்ந்தாள்.


பாறை வழுக்கியதும், ஒரு கணம் சூழலின் பயங்கரம் உணர்ந்தவளாய் கண்ணை மூடியவள், தன்னை ஒரு வலிமையான கரம் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்து , சட்டென மூடிய இமைகளைத் திறந்தாள்..அவளது விழியில் அழகிய ஒரு சுந்தர வதனம் விழ..மதியைக் கண்ட அல்லியாய் மலர்ந்தவள், வெட்கம் மேலிட மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.


நடந்து கொண்டிருந்த காட்சிகளை சற்றே தள்ளி நீர் அருந்திக் கொண்டிருந்த உதயச்சந்திரனும் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை, 


சாலையின் குறுக்கிலிருந்து இரண்டு வீரர்கள், ' திடு திடு ' என இவர்களை நோக்கி ஓடி வந்ததோடு, 


" ஏய்..அவளை விடு.." என்றவர்களாய் உருவிய வாளோடு நந்திவர்மனை வேகமாய் நெருங்கினார்கள்.


_ தொடரும்..


#அனுராஜ்..


#குறிப்பு : பஞ்ச பாண்டவர் மலையில் , நந்திபொத்தரசர்க்கு அய்ம்பதாவது யாண்டு நாகநந்திகுரவர் வழிபட பொன் இயக்கி படிமம் கொட்டுவித்தான் புகழலை மங்கலத்து மருத்துவர் மகன் நாரணன் என்ற கல்வெட்டு இன்றும் அங்குள்ளது. அத்தோடு பின்னாளில் ராஜராஐசோழன் காலத்திய கல்வெட்டும் அம்மலையில் காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages