03.10.20- 50 : இராஷ்டிரகூடத்தின்_தந்திதுர்க்கன் - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 3 அக்டோபர், 2020

03.10.20- 50 : இராஷ்டிரகூடத்தின்_தந்திதுர்க்கன்



03.10.20


ரேவா


இராஷ்டிரகூடத்தின்_தந்திதுர்க்கன்_50


ஓடுகின்ற நதியில் இறங்கி கைகால்களை அலம்பி விட்டு, நீர் அருந்திக் கொண்டிருந்த நந்திவர்மனை இடித்துத் தள்ளியபடி ஓடிய அந்த இளம்பெண் தவறுதலாக பாசி படர்ந்த பாறையில் தன் பாதங்களைப் பதித்துக் கீழே விழ  முற்பட்டாளாகையால், அவளை தன் கரங்களைக் கொண்டு தாங்கி பிடித்துக் கொண்டான் நந்திவர்மன். அதிர்ச்சியில் தனது கண்களைத் திறந்து பார்த்தவள், நந்திவர்மனை கண்டு மீண்டும் நாணத்தால் கண்களை மூடிக் கொண்டாள்.


அப்போது.. இளம்பெண் ஓடி வந்த திசையில் இருந்து ஓடி வந்த இரு வீரர்கள், " அவளை விடு " என்றபடியே உருவிய வாளுடன் நந்திவர்மனை நெருங்கினார்கள்.


அவர்களின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அச்சத்தின் வயப்பட்ட இளம்பெண், பாறையிலிருந்த காலை நீரில் வைத்ததோடு, அவனது பிடியிலிருந்து விலகியதோடு நந்திவர்மன் அவர்கள் இருவரை நோக்கித் திரும்பியதும், அவனது முதுகின் பின் மெல்லப் பதுங்கினாள்.


இந்த இருவர் துரத்துவதைக் கண்டு தான் , இவள் ஓடி வந்திருக்க வேண்டும் என்ற எண்ணங் கொண்டவனாய் நந்திவர்மன் .


"வீரர்களே ஒரு பெண்ணைத் துரத்திக் கொண்டு இருவர் வந்திருக்கிறீர்களே., இது தானா உங்களது வீரத்தின் அழகு..! " என்றான் இகழ்ச்சித் ததும்பிய குரலில். 


" நீ..மரியாதையாக அவளை விட்டு விலகாவிடில் எங்கள் வீரத்தின் அழகைப் பற்றி பேசினாய் அல்லவா, அதை தெரிந்து கொள்ள நேரிடும்." என்றான் இறுமாப்பாய் அவர்களில் ஒருவன்.


" நான் எனது பாதையில் போவதை, யாருக்காகவும் மாற்றிக் கொள்வதில்லை..நீங்கள் வந்த வழியே திரும்பி விடுவது உங்களுக்கு நல்லது ". என்றான் அவர்களை உன்னிப்பாக கவனித்தபடி சீற்றம் தொனித்த குரலில் நந்திவர்மன்.


இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டு அமைதியாக நின்று வேடிக்கைப் பார்த்தபடி இருந்த உதயச்சந்திரன், விரட்டி வந்த வீரர்களின் உடையை வைத்து வந்திருப்பவர்கள் சாளுக்கியர்கள் எனப் புரிந்து கொண்டதோடு, மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தான்.


" என்ன துணிச்சல் உனக்கு, நாங்கள் வந்த வழியே போகிறோமா..நீ போகிறாயா என்று பார்ப்போம்.." என்றபடியே ஆக்ரோசமாய்  உருவிய வாளுடன் ஒருவன் நந்திவர்மனின் மேல் பாய, அவனை நெருங்கவிடாமல் சற்று தூரத்திலேயே தேக்கி நிறுத்தியதோடு, நெருங்கியவனது தலையினை தனியாக அப்புறப்படுத்தி மண்ணில் உருட்டியது. நந்திவர்மனது வாள்.


கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இச்செயலால் நிலைகுலைந்து போன மற்றொரு வீரன், தன் கோபத்தை முழுதும் வெளிப்படுத்தும் விதத்தில் , ஆக்ரோசத்தோடு முரட்டுத்தனமாய் தனது வாளினை வீசியபடி நந்திவர்மனை நெருங்கிட முற்பட்டான்.


ஒருவனது தலை தனியே துண்டிக்கப்பட்டு விழ, அதிர்ச்சியில் மயக்கமுற்ற அவள் அப்படியே சரிந்து நதியில் விழுகின்ற நிலைமையினை கண்ட உதயச்சந்திரன் அவளைச் சட்டெனத்  தாங்கிப் பிடித்து சற்று தூரத்தில் நதிக்கரையில் கிடத்தினான்.

 

உருவிய வாளுடன் பாய்ந்தவனை தடுக்க முற்பட்ட நந்திவர்மனது வாளானது, தடுத்தபின் தாக்குதலுக்கும் தயாரானது.

இரண்டு வாள்களும் ஒன்றோடொன்று  மோதி மீண்டும் திரும்பி மோதுகையில்  ஏற்பட்ட " கிளிங்..கிளிங் " என்ற ஓசையானது அமைதியான அப்பிராந்தியமெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. நடைபெற்றுக் கொண்டிருந்த போரினை நீண்டநேரம் நீடிக்க விரும்பாதவனாய், நந்திவர்மன் தனது வாளினை சட்டென பின்னுக்கு நகர்த்திய அதே வேளையில் முன் கொண்டு வந்தவனாய் எதிராளியின் மார்பில் பாய்ச்சினான்.


" ஆ " வென்ற அலறலுடன் மண்ணில் சாய்ந்தான் அவன்.


சற்றுத் தூரத்தில், மயக்கமுற்ற அவ்விளம் பெண்ணை தரையில் கிடத்திய உதயச்சந்திரன், நதி நீரினை கைகளால் அள்ளி வந்து அவளது முகத்தில் தெளித்து மயக்கத்தை தெளிவித்துக் கொண்டிருந்தான்.


" படைத்தலைவரே..தலை தனியே உருள்வதைக் கண்டதும் மயக்கமடைந்து விட்டாளா..! " என்றான் சிரித்தபடியே நந்திவர்மன்.


" ம்..இவள் இதுவரை காணாதக் காட்சியாக  அது இருந்திருக்கலாம்." 


என்றபடியே அவளது மயக்கத்தை தெளிவிக்க முயற்சித்து கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.


சற்று நேரத்தில், மயக்கம் தெளிந்தவளாய் எழுந்தவள், இருவரையும் அச்சம் கலந்த விழிகளுடன் கவனித்தவள் .


" அங்கு ...என் தந்தை ரதமருகே மயங்கி கிடக்கிறார்.." என்றாள் நடுங்கியபடியே.


அவள் நிறைய அச்சத்தில் இருப்பது புலப்பட, " பெண்ணே..பயப்படாதே , உன் தந்தையையும் காப்பாற்றி விடலாம்..எங்கிருக்கிறார் வா செல்வோம்." என்றபடியே அவளையும் அழைத்துக் கொண்டு , புரவிகளின்  கடிவாளத்தைப் பற்றி இழுத்தபடி மூவரும் அவள் ஓடி வந்த திசையை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.


உடலெங்கும் நடுக்கத்தில் இருக்க, வெளிப்பட்ட வார்த்தைகளில் தயக்கமும், தடுமாற்றமும் தெரிய அவர்களுடன் அப்பெண் நடந்து போனாள்.


சற்று தூரத்தில் ரதமொன்று பாதையை விட்டு விலகி சாய்ந்திருக்க, அதன் கீழே நடுத்தர வயதுடைய ஒரு மனிதன் தரையில் மயக்கமுற்ற நிலையில் இருக்க,  அவனருகே இருவர் கையில் வாளுடன் நின்றிருந்தனர். தங்களது கூட்டாளிகள் பெண்ணைக் கட்டி இழுத்து வருவார்கள் என எண்ணியவர்களுக்கு, அவள் புதிதாக இருவரைக்  கூட்டிக் கொண்டு வருவது கண்டு கோபமுற்றவர்களாய் , வாளுடன் பாய்ந்தார்கள்.


" சற்று நேரத்திற்கு முன் தான் இருவரை மேலுலகம் அனுப்பி வைத்தேன்..அதற்குள்ளாக நீங்கள் வேறா..!  உயிர் மேல் ஆசையிருந்தால் இங்கிருந்து ஓடிப் போய்  விடுங்கள் ." என்றான்  நந்திவர்மன்.


" நீ எங்கள் நண்பர்களை கொன்று விட்டாயா..உன்னை என்ன செய்கிறேன் பார்..! " என்றபடியே பாய்ந்த ஒருவனது மார்பில் நந்திவர்மனது வாள் பாய்ந்து அவனும் மண்ணில் உருள,  மற்றொருவன் திகிலும், அச்சமும் சூழ திகைத்து நின்று விட்டான்.


" வீரனே..இதோ இவனையும்..நதிக்கரை ஓரத்தில் விழுந்து மாய்ந்திருக்கும் உன் நண்பர்கள்  இருவரையும்  நல்லடக்கம் செய்து விட்டு உனது ஊரை நோக்கிப் போகிறாயா..? இல்லை வீணில் என்னுடன் மோதி உன் உயிரை விடப் போகிறாயா..? " என்றான் நந்திவர்மன்.


அச்சத்தின் வசப்பட்ட அவனோ, தனது வாளை தரையில் எறிந்ததோடு, மண்டியிட்டு அமர்ந்தான்.


" வீரனே..ம்..சீக்கிரம் சென்று அங்கு ஓடும் நதியில் இருந்து நீர் அள்ளிக் கொண்டு வா..இவரது மயக்கத்தை தெளிவிப்போம்.."எனக் 

கட்டளையிடும் தொனியில் மிரட்டினான் உதயச்சந்திரன்.


வீரனும் , வேகமாய் ஓடிச்சென்று ஆற்றோரம் வளர்ந்திருந்த அடும்புச் செடியொன்றின் இலைகளைப் பறித்து அதில் நீரை அள்ளிக் கொணர்ந்தான். முகத்தில் தெளிக்கப் பட்ட குளிர்ந்த நீரினால் மயக்கம் தெளிந்து எழுந்தவர் ,  உதயச்சந்திரனையும், நந்திவர்மனையும் பார்த்து திகைத்ததோடு, மெல்லத் தயங்கியபடியே, " என் மகள்.. " என இழுத்தார்.


அதுவரையில் அவரது முதுகின் பின் நின்று கொண்டிருந்த அவள் , அவருக்கு முன் வர , " ரேவா.." என்றபடியே அவளை இறுக அணைத்துக் கொண்டதோடு , அவளது உச்சந் தலையில் பாசத்துடன் தன் இதழ்களைப் பதித்தபடி கண்ணீரை உகுத்தார்.


" தாங்கள்..யாரென்பதை நாங்கள் அறியலாமா ..? " என்றான் அறிந்து கொள்ளும் ஆவலில் உதயச்சந்திரன்.


"இராஷ்டிரகூடத்தின் மன்னன் தந்திதுர்க்கன்." என்றார் கண்களில் தென்பட்ட சோகத்தை மறைத்தபடி கம்பீரமாய்.


" தங்களை சாளுக்கிய வீரர்கள் துரத்த நேர்ந்ததன் காரணம்..? "


கேள்வி கேட்ட உதயச்சந்திரனை சற்று ஆழமாகப் பார்த்த தந்துதுர்க்கன், " வியப்பு தான் தாங்கள் அவர்களை யாரென அறிந்திருப்பது.." என்றான் அதே வியப்பு குரலிலும் தொனிக்க தந்திதுர்க்கன்.


" அதொன்றும் வியப்பிற்குரிய விசயமல்ல..அவர்களின் உடையே  சாளுக்கியர்கள் என்பதை தெரிவித்து விடுகிறது..ஆனால் அவர்கள் தங்களைத் துரத்த வேண்டியதன் காரணத்தைத் தான் என்னால் ஊகிக்க முடியவில்லை.." என்றான் உதயச்சந்திரன்.


" அவர்களது எதிரியாக நான் இருக்கும் பட்சத்தில் என்னைத் துரத்தாமல் என்ன செய்வார்கள்..! " என்றான் சோகத்தோடு

தந்திதுர்க்கன்.


_ தொடரும்..


#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages