07.10.20
ரேவா
திருமங்கை_ஆழ்வாரால்_
மங்களாசாசனம_54
காஞ்சி மாநகரே அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. திருமங்கை ஆழ்வாரால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மங்களாசாசனம் செய்விக்கப் பட உள்ளது என்பதே நகரமெங்கும் பேச்சாய் இருந்தது. ஆழ்வார் நமது வரதரை எங்ஙனம் சிறப்பித்துப் பாடப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் அனைவரிடத்திலும் ஏற்பட்டு விட்டது. காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயம் மக்களின் பெருங்கூட்டத்தால் திணறிக் கொண்டிருக்க, கீழ்திசைக் கடலே ஆலயத்திற்குள் புகுந்தது போல் எங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நகருக்குள் காணப்பட்ட பரபரப்பிற்கு இணையாக திருமங்கை ஆழ்வாரை கோட்டை வாயிலிலேயே வரவேற்பதற்காக நந்திவர்மனோடு, அரசாங்க பிரதிநிதிகள் அனைவரும் திரளாகக் காத்திருந்தனர். நந்திவர்மனது கைகளில் தங்கத்தாலான பூரணக் கும்பம் ஒன்று காட்சியளித்தது. உதயச்சந்திரனோ மிகப் பெரிய மலர் மாலையை கைகளில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தான். அனைவரது எதிர்பார்ப்பையும் வீணாக்காமல் , சிவிகை ஒன்று கோட்டை வாசலில் வந்து நிற்க..இறக்கப் பட்ட சிவிகையில் இருந்து, ஒளி பொருந்திய முகத்துடனும், கண்களில் பொங்கிய கருணையுடனும் இறங்கினார் திருமங்கை ஆழ்வார். மங்கல வாத்தியங்கள் முழங்க, மாலை அணிவித்து பூரணக் கும்ப மரியாதையுடன் அவர் அலங்கரிக்கப்பட்ட பட்டத்துயானை மேல் பவனி வர, பல்லவ வேந்தனோடு அனைவரும் காஞ்சி நகருக்குள் நடைப் பயணமாக பிரவேசித்தனர்.
ஆம் அந்நாளில் பார் ஆண்ட வேந்தனை விட, பா புனைந்த வேந்தனுக்கே செல்வாக்கு இருந்தது. காரணம் அவனது சொல்வாக்கு.
ஆலய வாசலை அடைந்தது ஊர்வலம். யானையின் மீதிருந்து இறங்கியதும் திருமங்கை ஆழ்வார்.
" நந்திவர்மா, என்னைக் கோட்டை வாயிலிலேயே வந்து பூரணக் கும்ப மரியாதையுடன் வரவேற்றதற்கு மகிழ்ச்சி. நான் நேராக ஆலய மடத்திலேயே தங்கிக் கொள்கிறேன். நீங்கள் விருந்தினர் மாளிகையில் எனக்கு இடம் ஒதுக்கியிருப்பீர்கள் என எண்ணுகிறேன். நானோ என் வரதனுக்கு அருகிலேயே இருக்க விரும்புகிறேன். எனவே அவனுறையும் இருப்பிடத்தின் அருகிலுள்ள ஆலய மடமே நான் தங்கிக் கொள்ளப் போதுமானது. நேராக ஆலயத்திற்கே சென்று பணிகளைத் துவக்கி விடுவோம். " என்றவாறு திருக்கோயிலின் கருவறையை நோக்கி நடக்கத் துவங்கி விட்டார். அனைவரும் அவரையே தொடர்ந்தார்கள்.
ஆலயத்தில் இறைவனுக்கு பல வகையான அபிசேகங்கள் நடைபெற்றதோடு, யாக வேள்விகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. மங்கல ஒலியின் கீதங்கள் நாலாபுறமும் கேட்டுக் கொண்டிருக்க, காஞ்சி வரதனையே கண்ணில் வழிந்த நீரோடு, மெய்மறந்து தரிசித்தவராய் இருந்த திருமங்கை ஆழ்வார் கணீரென்ற குரலில் பாடத்துவங்கினார்.
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மலோய்.!
நிலாத் திங்கள் துண்டத்தாய்.! நிறைந்த கச்சி
ஊரகத்தாய்.! ஒண்துறை நீர் வெஃகா உள்ளாய்.!
உள்ளுவார் உள்ளத்தாய்.! உலகம் ஏத்தும்
காரகத்தாய்.! கார்வானத் துள்ளாய்.! கள்வா.!
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்.! பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான்.! உன் திருவடியே பேணி னேனே.!
என்னைஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம் சேய்,
ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்
அத்தியூரான் பிள்ளை ஊர்வான்,அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்_முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.
கணீரென்ற குரலால் திருமங்கை ஆழ்வார் பாடிக் கொண்டிருக்க , பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் மெய்மறந்து நின்றிருந்தனர். மங்களாசாசன நிகழ்வு நடந்தேறியது.
காஞ்சி வரதராஜர் ஆலயத்தின் மண்டபத்தில் அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். தந்திதுர்க்கனும் அவரது மகளும் ஆலயத்தைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தார்கள்.
திருமங்கை ஆழ்வாரைப் பார்த்தபடியே, நந்திவர்மன் கூற ஆரம்பித்தான்.
"மகுடாபிஷேக நாளன்று தாங்கள் கூறிய, விண்ணப்பத்தினை நிறைவேற்றுக் கொண்டிருக்கிறேன்...ஐயனே. பரமேஸ்வர விண்ணகரம் இன்னும் சில ஆண்டுகளில் நிறைவினைப் பெற்று விடும்.தாங்கள் வரதருக்கு இப்போது மங்களாசாசனம் செய்தது போல் வைகுண்ட பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்தருள வேண்டுமென பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்." என்றான் நந்திவர்மன்.
" நந்திவர்மா, நீ அழைக்காமலே வருவேன், என் நாதனைப் பாடிட எவரும் என்னை அழைக்கவே தேவையில்லை..
நீயோ அன்பு மிகக் கொண்டு அழைத்திருக்கிறாய்..வராமல் இருப்பேனா...?!"
" மகிழ்கிறேன் ..காஞ்சி தங்களின் வருகையை எப்போதும் முகமலர்ந்து வரவேற்கும்.."
" நல்லது நந்திவர்மா..உனக்கு என்னிடத்தில் மற்றொரு விண்ணப்பமும் இருக்கிறது." என்றார் பீடிகையுடன் திருமங்கை ஆழ்வார்.
உதயச்சந்திரன், பல்லவடி அரையன், பிரம்மஸ்ரீ ராஜன், மூலப்பிரகிருதியார், கடிகையார், காடவர் கோன் முத்தரையர் போன்ற அனைவருமே திருமங்கை ஆழ்வார் என்ன விண்ணப்பத்தை கூறப் போகிறாரோ ..! என்ற ஆவலும், திகிலும் கலந்தவர்களாய் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவரோ நிதானமாகக் கூறினார்.
"நந்திவர்மா நீ விரைவில் அசுவமேத யாகம் நடத்த வேண்டும். அசுவம் வடகிழக்கு பாரத தேசங்களை நோக்கி நகரட்டும்." என்றார். அமைதியாகவும் அதே வேளையில் தீர்க்கமாகவும் திருமங்கை ஆழ்வார்.
அனைவருமே பிரமிப்பில் ஆழ்ந்தார்கள்.
நேற்று தந்திதுர்க்கன் கூறிய அதே வார்த்தைகளை இவரும் கூறுகிறாரே..
என்று வியப்பில் ஆழ்ந்தார்கள்.
" சுவாமி..இதனால் ஏற்படப் போகும் பயன்...? " என இலேசாய் இழுத்தான் உதயச்சந்திரன்.
உதயச்சந்திரனைக் ஆழமாகப் பார்த்தபடியே, " நந்திவர்மனது புகழ் பெருகும்..உங்களது எண்ணங்கள் நிறைவேறும்..அத்தோடு ஒரு சிலரின் உள்ளக்கிடக்கையும் நிறைவேற வாய்ப்புள்ளது.." என்றபடி கூர்மையாக உதயச்சந்திரனையும் , தூரத்தில் வந்து கொண்டிருந்த தந்திதுர்க்கனையும் பார்த்தார் திருமங்கை ஆழ்வார் .
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக