10.10.20
ரேவா
கீர்த்திவர்மனின்_வஞ்சக_எண்ணம்_57
காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அரண்மனையில் அலங்காரத் தோரணங்களும், அழகிய சித்திரங்களும் வரையப் பட்டிருக்க, மங்கல வாத்தியங்களும் முழங்கிக் கொண்டிருந்தது. அழகான ஒரு வெள்ளைப் புரவி நன்கு அலங்கரிக்கப் பட்டு, அதன் நெற்றியில் ஒரு பட்டயம் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அதில் பல்லவ சாம்ராஜ்யத்தின் பரிவேள்வி பரியிது. இதனை அடிபணிபவர் பல்லவ தேசத்திற்கு கப்பத்தினைச் செலுத்தி விலகலாம்..மறிப்பவர் எங்களதுச் சேனையை எதிர் கொள்ளலாம். இப்படிக்கு , பல்லவ சாம்ராஜ்யாதிபதி எனக் கண்டிருந்தது.
வேதியர்கள் கூடி மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க கொளுந்து விட்டெரிந்த யாகத்தில் பலவகையான ஷமித்துகள் இடப்பட்டதோடு, முக்கியமாக ஆல, அரசு, எருக்கன், வில்வம், புங்கன் ஷமித்துகளே மிகுதியாக இடப்பட்டது. இறுதியாக, அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த கும்பத்தினை எடுத்து அசுவத்தை சுற்றி வந்த வேதியர்கள் மங்கல வாத்தியம் முழங்க, பறை அதிர, ஆகுதியை அக்னிக்கு தாரை வார்க்க, அசுவமானது தன் வெற்றிப் பயணத்தைத் துவக்கியது.
அலங்கரிக்கப் பட்ட புரவி கம்பீரமாக முன் செல்ல, பல்லவரது புரவிப்படைக்கு தலைமையேற்று உதயச் சந்திரன் அதன் பின் சென்றான். அவனுடன் இணைந்து தந்திதுர்க்கன் செல்ல, காலாட்படையை காடவ முத்தரையர் பொறுப்பேற்று நடத்திச் சென்றார். வீரர்களின் கூச்சலும் மகிழ்ச்சியும் காஞ்சி நகரையே கலகலத்து செய்து விட்டிருந்தது. மக்களும் காணுமிடங்கும் வீரவேல்..! வெற்றி வேல்..! என முழக்கமிட்டதோடு, பல்லவ தேசம் வாழ்க..பல்லவ மன்னர் வாழ்க..நந்திவர்மன் புகழ் ஓங்குக..! என்ற கோசங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தன.
புரவிகளின் பாய்ச்சலும், காலாட்படையின் நகர்தலுமே நகரெங்கும் புழுதிப் படலத்தை உருவாக்கியிருந்தது. பல்லவரது சேனைகள் நகரத்தை கடந்து செல்வதற்கே ஐந்து நாழிகைப் பொழுது கழிந்தது.
படைகளின் புறப்பாட்டினை மேன்மாடத்திலிருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நந்திவர்மன். அவனது முகத்தில் மகிழ்ச்சி பூரணமாய் ஜ்வலித்தது. அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மஸ்ரீராஜனும், மூலப்பிரகிருதியாரும் படைகள் செல்லும் அழகை பார்வையால் பருகி கொண்டிருந்தார்கள்.
படைகளின் ஊடே ரதமொன்றும் செல்ல, பிரம்மஸ்ரீ ராஜனோ புருவத்தை உயர்த்தினார்..கூடவே அருகில் நின்றிருந்த பல்லவடி அரையனிடம், " ரதத்தில் செல்வது யார்..? " என்றார்.
தளபதியிடமிருந்து உதிர்ந்தது ஒற்றைச் சொல்.." பியூஷா " என்று.
"அவள் எதற்கு செல்ல வேண்டும்...?" புரியாமல் கேட்டார் முதலமைச்சர்.
" உதயச்சந்திரன் தான் கட்டாயமாக அழைத்துச் செல்கிறான். அவளுக்கும் செல்ல விருப்பமில்லை.."
" விருப்பமில்லாத போது வலுகட்டாயம் ஏன்..? " என்றார் ஆச்சர்யமாய் பிரம்மஸ்ரீ ராஜன்.
" காதல் படுத்தும் பாடு "
" ஓ.." போலியாய் வியந்தார் பிரம்மஸ்ரீராஜன்.
ஊர்வலம் நகரைக் கடந்து, புழுதிப் படலம் மட்டுமே கண்ணில் பட, அனைவரும் மேன்மாடத்திலிருந்து கீழிறங்கத் துவங்கினார்கள்.
நடைபெற்றுக் கொண்டு இருந்த ஒவ்வொரு நிகழ்வையும் கண்டதோடு, படைகள் கிளம்பி நகர எல்கையைக் கடந்ததும், மக்களோடு மக்களாய் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பைரவன், திரையனேரியை நோக்கி தனது புரவியைத் தட்டி விட்டான்.
தன்முன் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாய் நின்றபடி இருந்த பைரவனை ஏறெடுத்த சித்ரமாயன், " என்ன சொல்கிறாய்..? நந்திவர்மன் அசுவமேத யாகம் செய்தானா..! பல்லவ படைகள் வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறதா..! " திகைப்பும் , ஆச்சர்யமும் தொக்கி நின்றது சித்ரமாயனின் குரலில்.
" ஆம்..அரசே.."
இதோ பார்..நான் ஆட்சிக் கட்டிலுக்கு உரியவன் தான்..இப்போது ஆட்சியை தொலைத்து விட்டு நிற்கிறேன்..என்னை அடிக்கடி அரசே..அரசே என அழைத்து இம்சிக்காதே..முன்னரெல்லாம் நீங்கள் அவ்வாறு அழைத்த போது இன்பமாய் இருந்தது அந்த வார்த்தை.."
"இப்போது...?" என இழுத்தான் பைரவன்.
" நாராசமாய் விழுகிறது.. புரிந்ததா..! இனி என்னை அரசே என அழைத்தால் உனக்கு கசையடி தான் கிடைக்கும்.." என்றான் எரிச்சலுடன் சித்ரமாயன்.
" அப்படியென்றால்..தங்களை எவ்வாறு அழைப்பது..அர..." கசையடிக்கு பயந்தவனாய் உதடு வரை வந்த வார்த்தையை முழுங்கியவனை ஏறெடுத்த சித்ரமாயன்.
" அழைப்பதற்கு வேறு வார்த்தைகளா இல்லை, பிரபு என்று அழைத்துத் தொலை.." சீற்றம் தெரிந்தது அவனது குரலில்.
" நல்லது பிரபு..இனி அவ்வாறே அழைக்கிறேன்.
* * *
கடிகையின் வாசலில் மறைந்திருந்து கவனித்த புரவி வீரனை இனி நாம் தொடர்வோம்.
கிருஷ்ணபட்சத்து இரவில்
#ஸஹ்யாத்ரி மலைத்தொடர் கரிய நிற அரக்கனாய் பயங்காட்ட,
காவிரி நதியின் சலசலப்புக் கேட்டுக் கொண்டிருக்க, மையிருட்டு வேளையில் சில பூச்சிகளின் ரீங்காரங்களும், துஷ்ட மிருகங்களின் உறுமல்களும் அப்பிராந்திய அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தது.
நதிக்கரை சமவெளிப் பகுதியில் ஆங்காங்கே தெரிந்து கொண்டிருந்த பந்தங்களின் வெளிச்சம் , அங்கு எவரோ பாசறை அமைத்து கூடாரமிட்டிருப்பதை மங்கலாக தூரத்தில் இருந்து பார்க்கையில் புலப்படுத்தியது. சற்றே நெருங்கியதும் தெரிந்த பந்தத்தின் ஒளியில் கூடாரங்களின் மேல் வராக கொடி படபடத்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்த பயணக் களைப்பால் சோர்வுற்றிருந்தாலும், பாசறையைக் கண்டதும் வேகமெடுத்தது அவனது குதிரை.
தன்முன் நின்றிருந்த வீரனைக் கண்டதும்,
" தனஞ்செயா..காஞ்சியில் இருந்து நீ கொண்டு வந்த செய்தி என்ன..? உன்னுடன் வந்த வீரபத்ரன் எங்கே..? " என்றான் சாளுக்கிய விக்கிரமாதித்தனின் புதல்வன் கீர்த்திவர்மன்.
" இளவரசே..இராஷ்டிரகூடத்தின் தந்திதுர்க்கன் இப்போது பல்லவ நந்திவர்மனின் அரவணைப்பில் இருக்கிறான். தந்திதுர்க்கனது மகளை கடிகையில் சேர்த்திருக்கிறார்கள்.
என்னுடன் வந்த வீரபத்ரனை காஞ்சியில் தங்கி ஏனைய நிலவரங்களை அறிந்து வர பணித்திருக்கிறேன். நமக்கு சாதகமான விபரங்கள் கிடைத்தவுடன் இங்கு வருவான்."
தந்திதுர்க்கனது மகள் என்றதும் கீர்த்திவர்மனது நினைவு தந்திதுர்க்கனை அவனது நகரான #மான்பூரிலிருந்து விரட்டி அடித்த அன்றைய நாள் நினைவிற்கு வந்தது.
சாளுக்கியருக்கும், இராஷ்டிர கூடத்தினருக்கும் தொடர்ந்து எழும் எல்கைப் போர் ஓரளவு முடிவிற்கு வந்திருந்தது. சிற்றரசனாய் இருந்த தந்திதுர்க்கனால் சாம்ராஜ்யாதிபதியாக திகழும் சாளுக்கியனை எதிர்த்து நிற்க இயலவில்லை. போரில் தோல்வியைத் தழுவியதும் , அரண்மனைக்கு ஓடியவன் தனது மகள் ரேவாவை மட்டும் இழுத்துக்கொண்டு தப்பி ஓடும் போது, ரேவாவை கண்டு அவளது எழிலில் திகைத்து நின்று விட்ட கீர்த்திவர்மன், தான் ஏற்கனவே மணமுடித்ததற்காக வருந்தினான். அதனால் என்ன இவளை இரண்டாவதாக மணமுடித்தால் என்ன தவறு..! நம் தந்தையான விக்கிரமாதித்தருக்கும் இரண்டு மனைவியர் தானே..! என்ற எண்ணம் எழுந்தது. அன்றிலிருந்து ரேவாவின் நினைவு கீர்த்திவர்மனை அலைக்கழித்துக் கொண்டு இருந்தது. தூதுவர்கள் வாயிலாக தந்திதுர்க்கனுக்கு தகவலும் அனுப்பினான்." உன் மகளை எனக்கு மணமுடித்து தந்துவிடு...உனது தேசத்தை திருப்பித் தருகிறேன் ". என்ற கீர்த்திவர்மனது கோரிக்கையையும் நிராகரித்து விட்டான் தந்திதுர்க்கன். அன்றிலிருந்து தீயாய் கனன்று கொண்டிருந்தது ரேவாவின் நினைவு கீர்த்திவர்மனுக்கு.
" தங்களது ஆழ்ந்த மௌனத்தின் பொருள்..!" இடையில் கலைத்தது கீர்த்திவர்மனை தனஞ்செயனது குரல்.
" ஒன்றுமில்லை..கடிகையிலிருந்து தந்திதுர்க்கனது மகளைக் கவர்ந்து வர இயலுமா..? " சந்தேகமாய் எழுந்தது கீர்த்திவர்மனது குரல்.
" சாத்தியம் இல்லை..கடிகைக்குள் முன் அனுமதி இன்றி எவரும் நுழைய இயலாது. அதனை பல்லவ தேசத்து வீரர்கள் அரணாக நின்று காவல் புரிகிறார்கள். அரசின் பிரதிநிதிகள் நுழையக் கூட அங்கு அனுமதி இல்லை. அரசின் கட்டுப்பாடின்றி தனித்து இயங்கும் வல்லமை கொண்ட அமைப்பு கடிகை.."
" ஓ..அரசு பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை , அரசின் தலையீடு இல்லை, ஆனால் அதன் தலைமை குருவான கடிகையார் மட்டும் அரசியலில் தலையிடுவார். விசித்திரமாகத் தான் இருக்கிறது பல்லவர்களின் நீதி..!" என்றபடி பயங்கரமாய் நகைத்தான் கீர்த்திவர்மன்.
" வீரபத்ரன் வந்தபின் தான் நமது நிலை குறித்து முடிவெடுக்க வேண்டும். சக்கரவர்த்தி வேறு தலைநகர் திரும்புமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்..ம்..வீரபத்ரன் வரட்டும்..நீ சென்று வரலாம்." என்றான் ஆழ்ந்த யோசனையுடன் கீர்த்திவர்மன்.
அடுத்த இரண்டாவது நாளே வீரபத்ரனும் வந்தான் அவன் கொண்டு வந்த தகவல் இனித்தது என்றால், தனஞ்செயன் சாளுக்கிய தலைநகரான கல்யாணபுரத்திலிருந்து கொண்டு வந்த தகவலோ கசந்தது.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : # ஸஹ்யாத்ரி மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குறிக்கும்.
# மான்பூர் இன்றைய மத்திய பிரதேசத்தில் மால்வா பகுதியில் இருக்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக