15.10.20 - ரேவா : 62 : காலம்_தரும்_வாய்ப்பு - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 15 அக்டோபர், 2020

15.10.20 - ரேவா : 62 : காலம்_தரும்_வாய்ப்பு

 



15.10.20


ரேவா


காலம்_தரும்_வாய்ப்பு_62


காலம் எப்போதும் ஏதாவது ஒரு வினையை ஆற்றிக்

கொண்டுதானிருக்கிறது.  அது ஒரு 

சிலருக்கு சாதகமாகவும், ஒரு சிலருக்கு பாதகமாகவும்  அமைந்து விடுவதும் உண்டு. சரியான சந்தர்ப்பங்களை எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பினை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறான ஒரு வாய்ப்பு தான் சாளுக்கிய சாம்ராஜ்ய வேந்தன் விக்கிரமாதித்தனுக்கு வந்தது.


சாளுக்கிய தலைநகர் கல்யாணபுரத்தின் அரண்மனையின் நாளோலக்க மண்டபம். சாளுக்கிய சத்யாச்ரயன் விக்கிரமாதித்தன் தன்முன்னே நின்றிருந்த ஒற்றன் தனஞ்செயனை ஏறெடுத்தான்.


" என்ன சொல்கிறாய்.?"


" அரசே.. உதயச்சந்திரனோ வடபாரத தேசம் நோக்கி பரிவேள்வி யாத்திரைக்கு சென்று விட்டான். வழியில் ரேணாடு சோழர்களையும், வேங்கியின் விஷ்ணுராசனையும் பல்லவருக்கு அடங்கி திறைச் செலுத்தும் படியும் செய்து விட்டான். எதிர்பட்டவர்களை

 வென்ற பல்லவரது சேனை இப்போது கோதாவரிக் கரையில்

முகாமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. 

பல்லவருக்கு உறுதுணையாக தந்திதுர்க்கன் இறங்கியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அதே சமயம் பல்லவக் காஞ்சியிலோ, நந்திவர்மனும், பல்லவடி அரையனும்  சொற்ப படையுடன் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே இச்சூழலில் நாம் காஞ்சியின் மீது படையெடுத்துச் சென்றால் வெற்றி நம் பக்கமே.." என்றான் தனஞ்செயன்.


" நல்ல விசயத்தைத் தான் கொண்டு வந்திருக்கிறாய். படைகள் பிளவு பட்டு பிரிந்து போயிருக்கும் நிலையில் , பல்லவ தேசத்தின் மீது நாம் தாக்குதலைத் தொடுத்தால் வெற்றி நிச்சயம் நமக்குத் தான் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை." என்றபடியே யோசனையுடன் தனது தளபதியைப் பார்த்தவனாய் விக்கிரமாதித்தன்.


" தளபதியாரே..தங்களது கருத்தென்ன..? "


" வாய்ப்பு நம்மைத் தேடி வந்திருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்வதே நம் இராஜ தந்திரமாகும்."


" உண்மை தான்.." என்றான் சாளுக்கிய இளவல் கீர்த்திவர்மன்.


" அப்படியெனில் நமது படைகளை ஆயத்தப் படுத்துங்கள்..மூன்று தினங்களில் நமது படைகள் காஞ்சி நோக்கி நகரட்டும்." என்றான் மீசையை முறுக்கிய படி சாளுக்கிய விக்கிரமாதித்தன்.


" அரசே..கங்கனின் உதவியை இப்போது பெறுவது..." என்ற தளபதியின் சொல்லை இடைமறித்து கூறினார் விக்கிரமாதித்தன்.


" தேவையில்லை..தளபதியாரே, நாம் எதிர் கொள்ளப்போவது பல்லவரது பெரும் சேனையை அல்ல, நகரத்தைக் கட்டிக் காக்கும் சிறுபடை. அதனை எதிர்க்க கங்கனின் உதவி எதற்கு..? நாமே நேரிடையாக போரில் இறங்கலாம். படைகளை ஆயத்தப் படுத்துங்கள். நானே போரினைத் தலைமையேற்று நடத்துகிறேன். சாளுக்கிய இளவல் கீர்த்திவர்மன் இங்கு தலைநகராய் பொறுப்பாய் இருந்து கவனிக்கட்டும்."


விக்கிரமாதித்தனின் இந்த முடிவைக் கேட்டு கீர்த்திவர்மன் முகஞ்சுளித்தான். தான் தலைமையேற்று படைகளை நடத்திச் செல்ல விரும்பினான்.ஆனால்  தந்தையின்  முடிவு அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்த,  அதை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினான்.


" சக்கரவர்த்தி அவர்களிடம் ஒரு தாழ்மையான விண்ணப்பம்,  இந்த படையெடுப்பினை நான் தலைமையேற்று நடத்த விரும்புகிறேன்."


" தேவையில்லை.."


" ஏன்..? "


" நடைபெறப் போவது போரல்ல..என் கணிப்பு சரியானால் காஞ்சி நிபந்தனையின்றி என்னிடம் சரணாகதி அடைந்துவிடும். ஆகையால் இம்முறை நானே செல்ல வேண்டிய தேவையுள்ளது. உன் தோள்வலிமையை காட்டும் வாய்ப்பு வரும் போது நீ செல்லலாம். அப்போது நான் தடையேதும் சொல்லப் போவதில்லை." என்று கூறி விட்டு அவனது முகத்தினை கூர்ந்து கவனித்தான் சாளுக்கிய விக்கிரமாதித்தன்.


கீர்த்திவர்மனுக்கு இதில் உடன்பாடில்லை என்றாலும், தந்தையின் முடிவினை எதிர்க்கும் துணிச்சல் இல்லாத காரணத்தால் முனகியவாறே தலைகவிழ்ந்தான்.


உண்மையில் நடந்ததென்னவோ விக்கிரமாதித்தனின் எண்ணப்படிதான் காஞ்சியில் நடந்தது.


கீர்த்திவர்மனை சமாதானப் படுத்தியதோடு

அவை கலையவும் உத்தரவிட்டான் சாளுக்கியச்  சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன்.


                      *              *                *


வெகுநாட்களாக நாம் சந்திக்காத நமது நண்பன் சித்ரமாயனை சந்திப்போம் இப்போது.


மீனாட்சியின் கடைக்கண் பார்வையால்  அருளாட்சி நடக்கும் பராங்குச மாறவர்மனின் கூடல் மாநகரை நோக்கி தனது புரவியில் விரைந்து கொண்டிருந்தான் சித்ரமாயன். 


இப்போதெல்லாம் அவனிடத்தில் பெரும் மாறுதல்கள் தென்பட்டன. மது அருந்துவதை அறவே நிறுத்தியிருந்தான். வீரமல்லனின் ஆத்மா அமைதி கொள்வதற்காவது நந்திவர்மனையும், உதயச்சந்திரனையும் முறியடித்து பல்லவ சாம்ராஜ்யத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென்பதே அவனது இலட்சியமாகவும், பேராவாவாகவும் இருந்தது. அவனது ஆவல் வெறியாக கொளுந்து விட்டு எரிவது  கண்களின் ஜூவாலையில் தெரிந்தது. அவனது ஆக்ரோசமும், வெறியும் பல்லவ சிங்காதனத்தில்  அமரும் வரை ஓயாதென்பது நன்கு புலப்பட்டது.


கூடல் மாநகரின் கோட்டை வாசல்களைக் கடந்து, பல வீதிகளையும் வேகமாய் கடந்த அவனது புரவி, அரண்மனை வாசலில் போய் நின்றது. புரவியிலிருந்து சட்டெனக் குதித்தவனாய், கடிவாளத்தின் கயிற்றை குதிரை மேல் விட்டெறிந்தவனாய், அரண்மனைக் காவலன் செய்த மரியாதைக்கு கூட பதில் வணக்கம் செலுத்த நேரமின்றி விடுவிடுவென அரண்மனையின் பலக் கட்டுக்களைக் கடந்து பராங்குசன் மற்ற தேசத்து மன்னர்களுக்கு பேட்டி தரும் அறையினை நெருங்கினான். இந்த இடைப்பட்டக் காலத்தில் பலமுறை பாண்டியரின் புகழாபரணம் என வழங்கப்படும் இந்த அரண்மனைக்கு வந்து சென்றிருந்த காரணத்தால், சித்ரமாயனை நன்கு அறிந்திருந்த பாண்டிய நாட்டுக் காவல் வீரர்கள் அவனை எங்கும் செல்ல தடை சொல்வதில்லை. மேலும் அவனுக்குரிய மரியாதையைச் செலுத்தவும் தவறுவதில்லை. 


எனவே தான், அறை வாசலில் சித்ரமாயன் வந்து நின்றதும், உள்ளே ஓடிய காவலன் பாண்டிய மன்னன் பராங்குசனின் அனுமதியைப் பெற்றவனாய் வெளியே வந்து பணிவுடன், " நீங்கள் உள்ளே செல்லலாம்.." என்றான்.


 பாண்டியரது செல்வச் செழிப்பு அறையெங்கும் வியாபித்துக் கிடந்தது. பாண்டிய நாட்டு முத்து பல நாட்டு ஆடம்பரப் பொருளாக அங்கே மூலைக்கு மூலை காட்சி தந்து கொண்டிருந்தது.


" வாருங்கள் பல்லவரே..நலந்தானே..?" என்று முகமன் கூறி வரவேற்றான் பராங்குசன்.


"என்  நலத்திற்கு என்ன குறைச்சல்..? பாண்டியரே நாம் இதுகாறும் காத்திருந்தது வீணாகி விட வில்லை. நமக்கு இப்போது தான் காலமும் நேரமும் கனிந்து  சரியான ஒத்துழைப்பை நல்கியிருக்கிறது." என்றான் குதர்க்கமான பார்வையுடன் சித்ரமாயன்.


" என்ன சொல்கிறீர்..? "


" ஆம்.பாண்டியரே. உதயச்சந்திரன் பரிவேள்வி யாத்திரைக்காக பெரும் படையுடன் வடபாரத தேசம் நோக்கி சென்று விட்டான். காஞ்சியிலோ பல்லவடி அரையன் தலைமையில் ஐயாயிரம் வீரர்களைக் கொண்ட படையே தலைநகர் காவலுக்காக நிற்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த பெருமாள் பித்தனோ.." 


கூறிக் கொண்டிருந்தவனை இடைமறித்தான் பராங்குசன்.." பெருமாள் பித்தனா..யாரது..? "


" நந்திவர்மனைத் தான் சொல்கிறேன்."


" ஓ..புரிகிறது..ம்..மேலே சொல்லுங்கள்.."


" நந்திவர்மனோ சிறு படைபரிவாரங்களுடன் பல்லவடி அரையனையும் அழைத்துக் கொண்டு, திருமங்கை ஆழ்வார்  நந்திபுர விண்ணகரத்தில் மங்களாசாசனம் செய்வதைக் காண , தென்புறப் பகைவர் கோட்டைக்குச் சென்றுள்ளான்.நமக்கு இதைவிட எளிதான சந்தர்ப்பம் அமைவது கடினம், நாம் நந்திவர்மனை எதிர் கொள்ள இதை வாய்ப்பாக பயன்படுத்துவது நல்லது." என்றான் ஒரே மூச்சில்.


" பல்லவரே, நல்லதொரு வாய்ப்பு தான். நந்திவர்மனை நந்திபுரக் கோட்டையில் வைத்தே முற்றுகையைத் தொடங்குவோம். கோட்டையைத் தகர்த்து நந்திவர்மனையும் அவனது படையையும் சிறைபடுத்துவோம்..இல்லையெனில் அவன் கோட்டையை விட்டு வெளியேறி நம் படைகளைச் சந்திக்கட்டும். நல்லதொரு வாய்ப்பினை உடனே தெரியப் படுத்தினீர்கள். இதோ அதற்கான பூர்வாங்க வேலையினைத் துவக்குகிறேன்." என்றான் மகிழ்ச்சியுடன் பராங்குசன்.


" யாரது..நம் முதலமைச்சர் மாறன் காரியையும், சேனாதிபதி சாத்தன் கணபதியையும் உடனே நான் அழைத்ததாக வரச் சொல்." என ஒரு காவலனை விளித்துக்கட்டளையிட்டவன், 

சித்ரமாயனைப் பார்த்தபடி, " பல்லவரே, காஞ்சியின் நிலவரம் பலமின்றி இருந்தாலும், நாம் நம்முடைய படைகளுடன் அவ்வளவு தொலைவு செல்ல வேண்டியதில்லை. நந்திபுரத்தில் தலையைத் துண்டித்தால் காஞ்சியில் இருக்கும் வால் செயலிழந்து விடும். காஞ்சியில் பல்லவ முதன் மந்திரி பிரம்மஸ்ரீ ராஜன் தானே இருக்கிறார்." என்றான் பலத்த யோசனையோடு.


" ஆமாம்..பாண்டியரே.ஆனாலும் பிரம்மஸ்ரீ ராஜனை இலேசில் எடைபோட்டு விடாதீர்கள். இராஜதந்திரத்தில் சாணக்கியன் தோற்று விடுவான் அவனிடம்." என்றான் சித்ரமாயன்.


அதே வேளையில் .. இரண்டு நாழிகைப் பொழுதில் #மாறன் காரி தனது தமையன் மாறன் எயினனுடன் பிரவேசிக்க, அவர்களைத் தொடர்ந்து சாத்தன் கணபதியும் வந்து சேர்ந்தார்.


" வாருங்கள்..வாருங்கள்..இன்று நம் பல்லவர் நல்லதொரு சேதியுடன் நம்மை வந்து அணுகியிருக்கிறார்.." என்றபடி சித்ரமாயன் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் கூறிய பாண்டிய பராங்குசன் மாறவர்மன், "நாம் இந்த வாய்ப்பை நழுவ விடுதல் கூடாது " என முடித்தான்.


" உண்மை தான்..நல்லதொரு வாய்ப்பு நம்மை நாடி வந்துள்ளது. நந்திபுர முற்றுகையை செயல்படுத்துவோம்." என்றார் சேனாதிபதி சாத்தன் கணபதி.


" கொஞ்சம் பொறுமை..நல்லதோர் வாய்ப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..ஆனால்..யோசிக்க வேண்டிய விசயமும் இதில் இருக்கின்றன."


" இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது..? ". என்றான் எரிச்சலுடன் சித்ரமாயன்.


" பல்லவரே, சினங் கொள்ளாதீர்கள், நமது முதன் அமைச்சரும் இராஜதந்திரத்தில் பிரம்மஸ்ரீ ராஜனுக்கு சளைத்தவரல்ல. அவர் கூறினால் ஏதாவது விசயமிருக்கும்.." என்றபடியே, மாறன் காரியை ஏறெடுத்த பராங்குசன், " அமைச்சரே தாங்கள் கூற விரும்புவது யாது..?"


" நாம் பல்லவனை நந்திபுரத்தில் முற்றுகையிட்டால் அவனது உதவிக்கு தஞ்சையின் பிடுகு சுவறன் மாற முத்தரையன் வருவது திண்ணம். அவனும் வீரத்தில் சளைத்தவன் அல்ல. காஞ்சியில் இருக்கும் சொற்ப படையும் நந்திபுரம் நோக்கி திரும்பலாம். எனவே எதனையும் ஆராய்ந்து இறங்குவது நல்லது என எண்ணுகிறேன்." என்றார் மாறன் காரி.


" எனது தமையனாரின் கருத்தை நானும் ஏற்கிறேன்."


" நல்ல யோசனை தான்..எதையும் தீர்க்க ஆலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது தான். இருப்பினும் நந்திவர்மன் கோட்டையை விட்டு வெளியேறும் முன் சிறைபடுத்துவதும் நல்லதல்லவா..

எனவே எனது யோசனை இது, மாறன் எயினனும், தீரகரனும் பிடுகு சுவறன் மாறன் முத்தரையரை செந்தலையை விட்டு நகரா வண்ணம் செய்து விடுவது, நமது சேனாதிபதி சாத்தன் கணபதியும், யானைப் படைத் தலைவன் சங்கரன் சீதரனும் நந்திபுர கோட்டை முற்றுகைக்கு முன் நிற்பதுமென நமது வியூகம் அமையட்டும்." என்றான் பராங்குச மாற வர்மன்.


" ஆஹா..அருமையான யோசனை..வரவேற்கிறேன் " என்றார் மாறன் காரி.


நல்லது...நீங்கள் படைகளை ஆயத்தப்படுத்துங்கள் நாளை மறுதின சூரிய உதயத்தில் நமது படைகள் நந்திபுரம் நோக்கி நகரத் துவங்கட்டும். இத்துடன் அவை கலையலாம்." என்றவனாய்  எழுந்து விட்டான் பராங்குசன்.


காஞ்சியை நோக்கியும், நந்திபுரத்தை நோக்கியும் இரு பெரும் எதிரிகள் நகர, நந்திவர்மனது நிலை தான் என்ன..?!


பொறுத்திருந்து கவனிப்போம்.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : 


#மாறன் காரி மதுரை ஆனைமலையை ஒட்டியமைந்த திருமால் கோவிலை கற்றளியாக திருப்பணி செய்தவராவார்.

இதனாலேயே மூவேந்த மங்கலப் பேரரையன் எனப் பட்டம் வழங்கப் பட்டவர்.


#சாத்தன் கணபதியோ மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு திருப்பணி செய்த பெருமைக்குரியவர்.

இதனாலேயே அமிர்தலிங்க வரையன் எனும் பட்டம் பெற்றவர்.   வேள்விக்குடி செப்பேட்டு தகவல்.


#கீழே படத்தில் உள்ளது வடாற்காடு பஞ்சபாண்டவர் மலையின் சமணப்படுகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages