17.10.20
ரேவா
தந்திதுர்க்கனின்_மறுபக்கம்_64
உதயணன் அச்சல்பூரில் இருந்தவரை அவனது பொழுதானது இன்பகரமாக கழிந்து கொண்டிருந்தது.
ஒருநாள் இரவுப் பொழுது அச்சல்பூரின் மேன்மாடத்தின் நிலவொளியில் வீற்றிருந்தார்கள் நண்பர்கள் இருவரும். குளுமையான நிலவொளியோடு, அரண்மனை உத்தியான வனத்தில் இருந்து எழுந்த நானாவித மலர்களின் சுகந்தமும் நாசியை வருட, உதயணனிடம் தனது எண்ணத்தை வெளிப் படுத்தத் துவங்கினான் வைரமேகன்.
" நண்பா..எனது சகோதரி நிரஞ்சனா தேவி உன்னை விரும்புகிறாள் என எண்ணுகிறேன். அவளது நடவடிக்கைகள் அதை உறுதிப் படுத்துகின்றன. எனது நண்பன் என்ற முறையில் நீ அவளை மணப்பதை நான் வரவேற்கிறேன். உனது எண்ணத்தை தெரியப் படுத்தினால் நல்லது." என்றான் வைரமேகன்.
"நண்பனே, என் பேரில் மதிப்பு கொண்டு உன் சகோதரியை எனக்கு மணமுடிக்க எண்ணியதற்கு மகிழ்கிறேன். நான் எனது தாய், தந்தையிடம் இது குறித்து கலந்த பின் , எனது முடிவினைத் தெரியப் படுத்துகிறேன்." என்றான் உதயணன்.
மறுநாள் காலை தனது நண்பனான வைரமேகனிடம் விடைபெற்றவனாய் சபரி தேசத்தினை நோக்கி தன் பயணத்தைத் துவக்கினான் உதயணன்.
உதயணனை நர்மதை நதிக்கரை வரைச் சென்று வழியனுப்பிவிட்டு வந்து கொண்டிருந்தான் வைரமேகன்.
நதிக்கரையின் சாலையில் செழித்து வளர்ந்திருந்த தோப்புகளும், மரங்களும் ரம்மியமாக காட்சி தந்து கொண்டிருந்தன. வானத்தில் கதிரவன் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தான். வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக காணப்பட்டாலும், மரங்கள் அடர்ந்த சோலை வெயிலை லேசாக மட்டுப் படுத்தியிருந்தது. திடீரென கானகப் பெருவெளியில் வாட்கள் மோதும் ஓசையும், கூக்குரலும் எழ, இதுவரை தனது புரவியை நிதானமாக நடத்தி வந்த வைரமேகன் , கூக்குரல் எழுந்த திசையை நோக்கி புரவியை விரட்டினான்.
தூரத்தில் ஒருவனுடன் இரண்டு வீரர்கள் வாட் போர் புரிந்து கொண்டிருக்க, இளம்பெண் ஒருவளை மற்றொருவன் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டிருப்பதையும், அவளோ, அவனுடன் செல்ல மறுத்து கூக்குரல் இடுவதும் புலப்பட , அவர்களை நோக்கி தன் புரவியைத் தட்டி விட்டான். சற்றே நெருங்கிய போது தான் இவர்கள் யவன தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கூக்குரல் இட்டவள் செலீன் என்பதும் புலப்பட, வைரமேகனிடத்தில் கோபமும், சீற்றமும் ஒரு சேர எழ, தனது உடைவாளை உருவிக் கொண்டு , யவனனுடன் மோதிக் கொண்டிருந்த ஒரு வீரனைத் தன் வாளால் தேக்கி நிறுத்தினான். அங்கே எழுந்தது பயங்கர மோதல்.
யவனனும் சளைக்காது எதிராளியின் வாள் வீச்சினைச் சமாளித்துக் கொண்டிருந்தான். வைரமேகனது வாளின் வேகத்தை எதிர்கொள்ள முடியாதவனாய், அவனுடன் போரிட்டவன் மண்ணில் விழ, செலீனின் கைகளைப் பற்றி இழுத்தவன் , அவளைக் கைவிட்டுவிட்டு, உருவிய வாளுடன் வைரமேகனை எதிர் கொண்டான். வைரமேகனும் தன் புரவியில் இருந்து இறங்கியவனாய், எதிராளியை எதிர் கொண்டான். வாட்களின் மோதல்களில் நெருப்புப் பொறி பறந்தது. வைரமேகனின் ஆக்ரோசத்தின் முன் எதிராளியால் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அரை நாழிகை நீடித்த அந்தச் சண்டை யவனன் எதிராளியை வீழ்த்தவும், வைரமேகன் எதிராளியை வீழ்த்தவும் முடிவுக்கு வந்தது.
யவனனான போரஸ் நிறைய களைத்துப் போய் இருந்தான்.நடைபெற்ற சண்டையை பிரமிப்புடன் கவனித்துக் கொண்டிருந்த செலீன் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.
" யவன வணிகரே..நிறைய களைத்துப் போய் காணப்படுகிறீர்கள். வாருங்கள் நர்மதை நதியில் தங்களது களைப்பினைப் போக்கி வரலாம் , என்றவனாய் செலீனை அழைத்துக் கொண்டு நதியில் இறங்கினான் வைரமேகன்.
முகங்களை கழுவி, தாகசாந்தி செய்த பிறகே சற்று தெளிவடைந்த யவன வணிகனான போரஸ், " மிக்க நன்றி..தங்களை ஒன்றிரண்டுமுறை சந்தித்து இருக்கிறேன்.ஆனாலும் தாங்கள் யாரென்று அறிய மாட்டேன்..தாங்கள்.."
என மெல்ல இழுத்தான்.
" வணிகரே, நான் அச்சல்பூரின் இளவரசன்.."
" ஆ..மன்னிக்க வேண்டும், நான் ஏதாவது அபசாரம் செய்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..என்றான் அன்று தெருமுனையில் ரதத்தில் ஏற்பட்ட நிகழ்வை மனதில் கொண்டவனாய்.."
" அபசாரம் ஏதுமில்லை வணிகரே..அது குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை..அதுசரி..இவர்கள் யார்..? ஏன் உங்களுடன் சண்டையிட்டார்கள்..? " என்றான் ஓரக்கண்ணால் செலீனைப் பார்த்தபடி.
" இளவரசே..நான் யவன தேசத்து இரத்தின வணிகன். எனது பெயர் போரஸ்.இவள் எனது சகோதரி செலீன். நாங்கள் ரோமை சேர்ந்தவர்கள். #வாரங்கல்லில் இரத்தின வணிகத்தை முடித்துக் கொண்டு, யவன தேசத்துப் பொருட்களை இங்குள்ள தேசங்களுக்கு வணிகம் செய்து விட்டு, இன்னும் சில தினங்களில் எங்களது தேசத்திற்கு செல்லும் மரக்கலத்தில் பயணம் செல்லப் போய்க் கொண்டிருந்தேன். அச்சல்பூர் வணிகர் அளித்த பொன் முடிப்பு என்னிடம் இருப்பதை அறிந்த இக் கொள்ளையர்கள், வழிப்பறிச் செய்யும் பொருட்டு என்னை வழிமறித்தார்கள்.நல்லவேளை தாங்கள் வந்தீர்கள். தங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றான் பணிவுடன்.
" வணிகரே..தங்களைக் காப்பாற்றும் வாய்ப்பினை இறைவன் எனக்கு வழங்கியதற்கு, நீங்கள் இறைவனுக்குத் தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்."
" உண்மை தான் இளவரசே.."
" தாங்கள் மறுபடியும் எப்போது வருவீர்கள்..? " என்றான் போரஸூக்கு பின்னால் நின்று கொண்டிருந்த செலீனைப் பார்த்தபடியே..கண்ணில் காதலுடன் வைரமேகன்.
" வருடந்தோறும் வருவோம். அடுத்தமுறை வரும் போது தங்களை அவசியம் அரண்மனையில் வந்து சந்திக்கிறேன்."
"நல்லது ..வணிகரே. போய்வாருங்கள்." என விடைகொடுத்தனுப்பினான். வைரமேகனையே திரும்பி திரும்பிப் பார்த்தவாறுச் சென்று ரதத்தில் ஏறிய செலீனின் கண்களில் துன்பத்தின் சாயை மெல்ல படர்ந்தது.
ரதம் விரைந்து முன் செல்ல, வைரமேகனது மனமோ அதன் பின்னே சென்றது.
சில மாதங்களிலேயே உதயணனுக்கும் நிரஞ்சனாவிற்கும் மணமானது. சபரி தேசத்தில் அவர்களது வாழ்வு இனிதாகத் தான் சென்று கொண்டிருந்தது. நிரஞ்சனா கருவுற்றாள், குழந்தைப் பேற்றுக்காக அச்சல்பூர் வந்திருந்தாள். ஒரு திங்களில் அழகியப் பெண் மகவையும் ஈன்றெடுத்தாள்.
வைரமேகனின் உள்ளம் குளிர யவன தேசத்திலிருந்து போரஸூம், செலினும் அப்போது வந்திருந்தார்கள்.
ரோம் நகருக்கு சென்றதில் இருந்து வைரமேகனையே நினைந்து உருகிக் கொண்டிருந்தவளது மனதினை உணர்ந்த போரஸ் , தனது தங்கையை வைரமேகனுக்கு மணமுடித்து வைத்திட பாரத தேசத்திற்கு வந்திருந்தான். அவனுடன் வந்திருந்த செலீனோ உள்ளத்தின் கவலையில் உடல் மெலிந்து காணப்பட்டாள். ஆனாலும் அவளது யௌவனத்தில் எவ்வித குறையுமில்லை.
அச்சல்பூரின் இளவரசனாய் இருந்தவன், இப்போது அரசனாகி இருந்தான் வைரமேகன், செலீனை மணக்க யாதொரு தடையுமில்லை, உள்ளத்தைக் கவர்ந்தவள் இன்று உறவாகி நின்றாள்.
மணநாள் வந்தது..
அச்சல்பூரே அமர்க்களப்பட்டது. சபரியின் அரசனாய் உதயணனும் மணவிழா வந்தான்..வந்தவன் கண்களில் குரூரம் துளிர்விட்டது.. யவன சுந்தரியின் அழகு அவனுள் ஒளிந்திருந்த மோகத்தைக் கிளர்ந்தெழச் செய்தது. வைரமேகன் மீது பொறாமை சூழ, பொறாமையே அவனது உள்ளத்தில் கோபக்கனலை உற்பத்திச் செய்தது. தங்கையை தனக்கு மணமுடித்து விட்டு, யவன ஸ்திரீயை வைரமேகன் வஞ்சகமாய் மணமுடித்துக் கொண்டதாய் எண்ணத் தலைப்பட்டான்.எனவே அவனுள் எழுந்த ஆத்திரம் , நிரஞ்சனாவின் மீது திரும்பிப் பாய்ந்தது. அவளை துன்புறுத்தத் துவங்கினான். அவனது கொடுமைகள் கட்டுக்கடங்காமல் மீறிக் கொண்டே போனது..பெண் குழந்தை சம்யுக்தாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் போது, உடல் நலிந்து, கவலையில் தளர்ந்தவளாய், உதயணனது கொடுமை தாளாமல், நிரஞ்சனா தன் குழந்தையுடன் அண்ணனை நாடி அச்சல்பூர் வந்துவிட்டாள்.
வைரமேகனுக்கும் செலீனுக்கும் பிறந்ததும் பெண் தான். அழகில் அவள் தாயைப் பழித்தாள். பொன்னிற கூந்தலும், கூரான நாசியும், செம்பவள நிறமுமாய் காண்போரைக் கவர்ந்த அவளுக்கு நர்மதை நதியின் நினைவாய் #ரேவா " எனப் பெயரிட்டான் வைரமேகன்.
தங்கையின் வாழ்வை சீரழித்தவனை வஞ்சம் தீர்க்க எண்ணம் கொண்டிருந்தான் வைரமேகன்.
அன்றொரு நாள்..வைரமேகன் இல்லாத சமயமாய் அச்சல்பூரின் அரண்மனைக்குள் நுழைந்த உதயணன்,
தூங்கிக் கொண்டிருந்த அவனது குழந்தை சம்யுக்தாவை தூக்கிக் கொண்டுச் செல்ல எத்தனித்தான். குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்த நிரஞ்சனா அவனைத் தடுக்க முற்பட்டாள், பெண்ணால் வலுவுள்ள ஆணை எதிர்க்க இயலுமா..? அவனது எதிர்ப்பில் தரையில் விழுந்த அவளோ கூக்குரல் இட்டபடி நீண்ட மயக்கத்திற்குப் போனாள்.
கூக்குரல் ஒலி கேட்டு விழித்த செலீன், தனது அறையிலிருந்து எழுந்தோடி வந்தவள் , உதயணனைத் தடுக்க முற்பட்டபோது, அவனது வாள் செலீனின் உயிரை ஆவேசத்தோடு பறித்தது. கூக்குரல் ஓலங்களைக் கேட்டு ஓடிவந்த காவலர்கள் , உதயணனை உறவு முறையால் எதிர்க்கத் தயங்கினாலும், அரசின் ராணியர் இருவர் குற்றுயிராய் தரையில் கிடப்பதைக் கண்டதும் , அவனை மூர்க்கமாய் எதிர்த்தனர். ஆனாலும் உதயணன் பலரை வெட்டிச் சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
செலீனின் மரணமும், தங்கையின் நிராதரவும் வெளிதேசத்திலிருந்து வந்த வைரமேகனை பலமாய் வாட்டியது. அவனது பெண் ரேவா ஒருவளே வைரமேகனுக்கும், நிரஞ்சனாவிற்கும் ஆறுதலாய் இருந்தாள்.
சிற்றரசனாய் இருந்த காரணத்தால் சபரி தேசத்துடன் போரிட இயலா நிலை..சபரியின் வசமிருந்த சம்யுக்தாவை எப்படியாவது கொண்டு வந்து தங்கையிடம் சேர்த்துவிட வேண்டுமென பேரவா கொண்டிருந்தான்.
ஆனால்..அதுவும் நிராசையாய் முடிந்தது. அக்குழந்தையை எவனிடமோ கொடுத்து கொலை செய்துவிடும்படி உதயணன் பணித்ததாக கேள்வியுற்றனர் வைரமேகனும், நிரஞ்சனாவும்.
அன்றிலிருந்து நிரஞ்சனா மனநிலை பிறழ்ந்த பிச்சியாய் மாறிப் போனாள். ஒருநாள் எவரும் அறியாமல் அச்சல்பூரின் அரண்மனையை விட்டு எங்கோ ஓடிப் போனாள்.
நிரஞ்சனாவைத் தேடி பல தேசத்திற்கு வீரர்கள் விரைந்தனர்..ஆனால் பலனேதுமில்லை.
தனது மனைவியைக் கொன்று , தனது வாழ்வையும் கெடுத்து, தனது தங்கையின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி , வைரமேகனது வாழ்வையே நாசம் செய்த துரோகி உதயணனை , வைரமேகன் கொல்வதற்கான சரியான சந்தர்ப்பத்தைத் தான் இதுவரை தேடிக் கொண்டிருக்கிறான்.
அவ்வாறு இருக்கையில் , உதயணன் வைரமேகனான எனக்கு எவ்வாறு நண்பனாக இருக்க முடியும்..! அவன் எனது பகைவன்..! அவனது சாவு என் கையினால் தான் நிகழ வேண்டும். " என்றான் ஆக்ரோசமும் வெறியும் கொண்டவனாய் வைரமேகன் என்றழைக்கப்பட்ட தந்திதுர்க்கன்.
அதுவரையில் இல்லாத ஒரு கொலைவெறி வைரமேகன் என தன்னை அழைத்துக் கொண்ட தந்திதுர்க்கனின் கண்களில் புலப்பட உதயச்சந்திரனும், காடவ முத்தரையரும் மிரண்டனர்.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : #வாராங்கல்லில் இரத்தின சுரங்கங்கள் இருந்ததாக மார்க்கோபோலோ வின் பயணக்குறிப்பு தெரிவிக்கிறது.
#ரேவா என்பது நர்மதையாற்றின் மற்றொரு பெயர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக