மலைச்சாமி
17.10.20
வரலாற்றில் இன்று 17.10.2020
October 17, 2020
என்றும்....
அன்புடன்...
என் இனிய காலை வணக்கங்கள்..
அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1091 – லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.
1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
1448 – கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1604 – ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர் வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.
1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.
1800 – டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.
1805 – நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.
1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.
1917 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
1933 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965 – 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1979 – அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.
2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.
2006 – ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.
2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
பிறப்புக்கள்
1906 – கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர், (இ. 1981)
1912 – பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I, (இ. 1978)
1965 – அரவிந்த டி சில்வா, இலங்கை அணியின் துடுப்பாளர்
1970 – அனில் கும்ப்ளே, இந்திய அணியின் சுழற் பந்தாளர்
1972 – எமினெம், அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர்
இறப்புகள்
1981 – கவிஞர் கண்ணதாசன், (பி. 1927)
சிறப்பு நாள்
உலக வறுமை ஒழிப்பு நாள்
தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு! கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்.
கண்ணதாசன் பாடல்களில் இசையையும் தருணங்களையும் அகற்றிவிட்டு வெறும் வரிகளாக வாசிக்கும் விமர்சகர்களுக்குப் பலமுறை அவரது வரிகள் ஏமாற்றம் தரலாம். ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. கண்ணதாசன் கண்களின் கவிஞன் அல்ல; செவியின் கவிஞன். கவிதைகள் காலம்காலமாகச் செவிக்கு உரியவையாகத்தான் இருந்திருக்கின்றன. செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லியது கவிதைகளுக்குத்தான் முற்றிலும் பொருந்தும். நீரில் நீலம் பிரியும் மைத்துளி போல செவியில் விழும் சொற்கள் மனதுக்குள் விரியும். எழுத்து, அச்சு என்பவையெல்லாம் அந்தச் சொற்களின் ஆவணக்காப்பகங்கள் போன்றுதான்.
தற்போது கவிதைகள் தமக்குரிய இசைத் தன்மையை விட்டுப் பார்வையை நோக்கித் திரும்பி விட்டன. கவிதைகள் காட்சிகளையே பெரிதும் தற்போது உருவாக்குகின்றன. கண்ணதாசன் அந்தக் காலத்துப் பாணர்களின் தொடர்ச்சி. அவரது பாடல்களைப் படிப்பதைக் காட்டிலும் இசையோடு கேட்கும்போது ஏற்படும் பரவசம் விளக்க முடியாதது. அது இசையால் மட்டுமே வருவதல்ல. முதற்காரணம், கண்ணதாசனின் வரிகள்தான். எடுத்துக்காட்டாக, 'போலீஸ்காரன் மகள்' என்ற திரைப்படத்தில் வரும் 'இந்த மன்றத்தில் ஓடிவரும்…' பாடலைப் பார்க்கலாம். அழகான மெட்டு, பி.பி. ஸ்ரீநிவாஸ், ஜானகி இருவரின் மதுரக் குரல்கள். இப்படி இருக்கும்போது இந்த வரி 'இந்தச் சபைதனில் ஓடிவரும்…' என்றோ, 'இந்தத் தோட்டத்தில் ஓடிவரும்…' என்றோ இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! 'மன்றம்' என்ற எளிய சொல்லில் இசை வந்து விழும்போது மாயாஜாலம் நிகழ்கிறது. மேலும், விசித்திரமான சூழலைக் கொண்டது அந்தப் பாடல். ஒரு தங்கை தன் காதலனை நினைத்து இப்படிப் பாடுகிறாள்:
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கிறாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
என் வேதனை கூறாயோ?
ஒருத்தி தன் காதல் வேதனையைச் சொல்லும் இந்தப் பாடலின் இடையே அவளுடைய அண்ணன் வேறு நுழைந்துகொள்கிறான். தென்றலிடம் தன் தங்கைக்காக அவனும் தூதுவிடுகின்றான். இந்த அண்ணனையே மறந்துபோகும் அளவுக்கு அவள் அளப்பரிய காதல் கொண்டிருக்கிறாள் என்று அவளுடைய காதலின் ஆழத்தைச் சொல்லும் அதே வேளையில், தனது தங்கைக்கு இந்த அண்ணனின் நினைவு இல்லாமல் போய்விட்டதே என்பதையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறான். காதல் பாடலில் அண்ணன் வந்தாலே ஓர் அபஸ்வரம்போல் ஆகிவிடும், இதில் அவன் தனது பொறாமை உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறானே! ஆனால், இசகுபிசகான இந்தத் தருணத்தையே பாடலுக்கு உயிரூட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இப்படி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்:
தன் கண்ணனைத் தேடுகிறாள்
மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று
அதனையும் கூறாயோ...
தேன்பனி!
சொற்கள் இசைக்கு உயிர்கொடுக்க வேண்டுமே யொழிய, சொற்களுக்கு இசை உயிர்கொடுக்கக் கூடாது. அதனால்தான் 'மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்றான் பாரதி. கண்ண தாசனுடையதோ பனி போன்ற சொல்லின்பம். சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். லெப்பர்டி என்ற இத்தாலியக் கவிஞனின் வரிகளைப் பற்றி இதாலோ கால்வினோ இப்படிச் சொல்கிறார்: 'அவர் கவிதைகளில் அதிசயம் என்னவென்றால், மொழியை அதன் சுமையிலிருந்து விடுவித்து, கிட்டத் தட்ட நிலவொளிபோல் ஆக்கிவிடுகிறார்.' இது சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் பொருந்தும்.
பனி என்றால் தேன் கலந்த பனி! அப்படித்தான் சொல்ல வேண்டும் கண்ணதாசனின் வரிகளை. 'பனிபோல் குளிர்ந்தது கனிபோல் இனித்ததம்மா' என்ற வரிகளை வேறு எப்படிச் சொல்வது? இந்த வரிகளின் அர்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தச் சொற்களை மெலிதாக முணுமுணுத்துப் பாருங்கள். எவ்வளவு தண்மை! எவ்வளவு தித்திப்பு! இதேபோல் சொல்லின்பம் தரும் ஒரு சில உதாரணங்களையும் பாருங்கள்:
'மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு'
(பால்வண்ணம் பருவம் கண்டு - பாசம்)
'பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனிபோல நாணம் அதை மூடியதேனோ'
(பாவாடை தாவணியில் - நிச்சயத் தாம்பூலம்) 'முதிராத நெல்லாட ஆடஆட
முளைக்காத சொல்லாட ஆடஆட'
(கட்டோடு குழலாட- பெரிய இடத்துப் பெண்)
'இளைய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்'
(நாளாம் நாளாம்… - காதலிக்க நேரமில்லை)
தேன்மூடிய சிருங்காரம்
காதல், காம உணர்வுகளைப் பூடகமாகவும் இனிக்கஇனிக்கவும் சொன்னவர் கண்ணதாசன். ஒரு பெண் தன்னுடைய காம உணர்வுகளைச் சொல்வதைச் சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், 'அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்' என்ற வரிகள் கண்ணதாசன் சொற்களில் சுசீலாவின் குரலில் வந்து விழும்போது ஒழுக்கவாதிகளுக்கும் மயக்கம் வருமே, அதை என்னவென்று சொல்ல! ஆரம்பத்தில் வேண்டாம் வேண்டாம் என்று சொன்ன வளுக்கு, அவன் 'ஒன்று' தந்த பிறகு உன்மத்தம் ஏறிக்கொள்கிறது. பிறகு, போதாது இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறாள். உண்மையில் அவள் வேண்டாம் என்று சொன்னதெல்லாம் கட்டுப் பாடுகளுக்குப் பயந்தல்ல; தனக்கு உன்மத்தம் ஏறி விடும் என்று பயந்துதான் என்பது பிறகு தெரிகிறது:
'தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள், போதாதென்றாள்...
அர்த்தத்துக்கு அடுத்த இடம்தான்
கண்ணதாசன் இப்படியெல்லாம் மயக்கம் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக்கொண் டிருப்பார்கள். இப்படிச் சொல்வது கண்ணதாசன் அர்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவரில்லை என்பது அர்த்தம் அல்ல. அவரது தத்துவப் பாடல் களுக்குள் புகுந்தால் அவற்றிலிருந்தும் மீள முடியாது. சொற்களிலே கவிஞன் கிறுகிறுக்க வைக்கும் போது அங்கே அர்த்தம் நமக்கு இரண்டாம் பட்சமாகப் போய்விடும். 'உன்னை நான் கொல்லவா?' என்பதை கண்ணதாசன் தனக்கேயுரிய மொழியில் கேட்டால் 'கொல்லுங்கள்' என்றுதானே நமக்குச் சொல்லத் தோன்றும்.
கண்ணதாசனுக்குத் திரைப்படம், இசை, 'சிச்சுவேஷன்' எல்லாம் தனது உணர்வுகளையும், சோகங்களையும் கொட்டுவதற்கு ஒரு வாய்ப்பு. கண்ணதாசன் தனது இறுதிப் பாடலில் இப்படி எழுதியிருப்பார்:
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே!
உண்மையில், இது நம்மை நோக்கி அவர் வைக்கும் வேண்டுகோள். எப்படி மறக்க முடியும் கண்ணதாசன், உங்களை!
காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!
கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.
ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.
ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.
கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.
”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.
கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.
“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.
ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.
”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.
”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.
காலமாகி 40 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.
* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.
* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
கலங்காதிரு மனமே கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என தன் முதல் பாடல் வரிகளிலேயே தத்துவத்தை விதைத்துவிட்டு,மூன்றாம் பிறை எனும் படத்தில் தன் கடைசிப் பாடலில் கண்ணே கலைமானே கண்ணின் மணியெனெ என ரசிகர்களின் உள்ளத்தை உருக்கும் வரிகளை நமக்குத் தந்து, நீங்கா புகழுடன் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கிறார் நம் கவிப்பேரரசர் கண்ணதாசன்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. படைப்பதால் என்பேர் இறைவன் என்று எழுதிய கண்ணதாசன் என்றென்றும் நம்முடன் வாழ்கிறார்.
சுதந்திர இந்திய நாட்டின் முதல் நிதியமைச்சர் திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார்!
ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.
1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.
தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் – ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள்.
கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.
ஆர்.கே.எஸ்., பொது வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார்.
சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் 1920-இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.
1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீரமைப்பு மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.
1929 இல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34 களிலும் பதவியில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலக நாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.
நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே. சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.
இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் அன்றைய இந்தியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று.
இந்திய தேசிய சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.
அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சில காலம் உறுப்பினராக இருந்தார். பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.
இந்திய விடுதலையின் போது “உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக் கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் ” என்று கூறியுள்ளார்.
1941-இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.
1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெரும்பணி ஆர்.கே.எஸ். மீது சுமத்தப்பட்டது.
விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவிடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டெடுத்தார். இருப்பினும் இவரது அமைச்சின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை துறந்தார். இவரையடுத்துப் பதவியேற்ற ஜான் மத்தாய் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் தவறு செய்யவில்லை; தவறிழைக்கப்பட்டார் (“he is more sinned against than sinning.”) எனக் கூறினார். 1952 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்ப் புலமை :
சண்முகனார் ஆங்கில மொழித் திறமையுடன், தமிழ் மொழிப் புலமையிலும் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் தாய் மொழி தமிழைப் புறக்கணித்து, ஆங்கில மொழி மோகம் கொண்டு விளங்கிய சண்முகனார், தனது வாழ்வின் பிற்காலத்தில் தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கினார்.
1) ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய தமிழில் உரை எழுதி வெளியிட்டார்.
2) தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவாரப் பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி, தேவாரப் பண்ணிசை இராகங்களை முறைப்படுத்தினார்.
3) தமது ஊரான கோவை மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கீழை சிதம்பரம் என்றழைக்கப்படும் திருப்பேரூரில் அருள்மிகு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மடாலயத்தில் தமிழ்க் கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். குற்றாலக் குறவஞ்சிக்கு அழகிய உரை எழுதினார்.
4) ஆர்.கே.சண்முகனார் இந்திய நிதி அமைச்சராக இருந்தபோதுதான் தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு, பதிப்பிப்பதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இவர் மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கினார். கம்பராமாயணப் பாடல்கள் எளிமை ஆக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளோடு வெளிவர, ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து பணியாற்றினார்.
5) “வசந்தம்’ என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கியதோடு, தம் வாழ்நாளின் இறுதி வரை அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
6) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
7) 1943-இல் இந்திய அரசாங்கம் உருவாக்கிய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான இந்தக் குழுவின் பரிந்துரைகளின் காரணமாகவே அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுவின் கீழ் இந்தியா முழுவதும் 32 தேசிய ஆய்வகங்கள் நிறுவப்பட்டன.
8) 1950-இல் அன்றைய சென்னை மாகாணத்தை தொழில் மையமாக உருவாக்கப்பட்ட சென்னை தொழில் முதலீட்டுக் கழகம் எனப்படும் இன்றைய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.
9) இந்தியாவிலும், ஆசியக் கண்டத்திலும் மிகப் பெரிய தேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
10) இந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தவர்.
கொங்கு மண்டலத்தின் தலைமகனான ஆர்.கே.சண்முகனாரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் கோவை மாநகரில், ஒரு பெரும் நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் வேண்டுகோளாகும்.
இவருக்கு கோவையில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி சிலை திறந்து வைக்கப்பட்டது.
இறப்பு :
இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், மே மாதம் 5 ஆம் நாள் 1953 ஆம் ஆண்டு, தனது 61-வது வயதில் காலமானார். தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடம் சூட்டப்பட்டார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள், தமிழர்களால் என்றென்றைக்கும் பெருமைப்படத்தக்கவராக விளங்குகிறார்.
1892 – ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார்.
1917 – கோயம்புத்தூர் நகராட்சி துணைத் தலைவராகவும், கவுன்சிலராகவும் பொறுப்பேற்றார்.
1920 – சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1923 – மத்திய சட்டமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1929 – பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
1931 – மத்திய சட்டமன்ற தலைவராகவும், கொச்சி மாகாண திவானாகவும் பொறுப்பேற்றார்.
1938 – ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க கூட்டத்திற்கு, இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார்.
1944 – பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
1945 – இளவரசர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.
1947 – முதல் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்தார்.
1951 – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.
1952 – சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இந்திய சேம்பரின தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1953 – மே மாதம் 5 ஆம் நாள் தனது 61-வது வயதில் காலமானார்.
புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம்
புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.
பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள், புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும்.
அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும் அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும்.
தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். தென்னகத்தின் பண்டைய வரலாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ் செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு எனில், அது சாலவே பொருந்தும்.
பிறப்புக. சொக்கலிங்கன்
16 அக்டோபர் 1923
புலியூர்க்குறிச்சி திருநெல்வேலி மாவட்டம்இறப்பு17 ஏப்ரல் 1992
சென்னைஇருப்பிடம்சென்னைதேசியம்இந்தியர்கல்விஇடைநிலைபணிஎழுத்தாளர்
மெய்ப்புத்திருத்துநர்பணியகம்தெ. தி. சை. நூற்பதிப்புக் கழகம்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாரி நிலையம்
மாருதி பதிப்பகம்அறியப்படுவதுஎளிய உரைசமயம்சைவம்பெற்றோர்கந்தையா பிள்ளை, மகாலட்சுமி அம்மையார்வாழ்க்கைத்
துணைசுந்தரத்தம்மையார்பிள்ளைகள்ஒரு மகனும் மூன்று மகள்களும்.
உறவினர்கள்மறைமலையடிகள்
நீலாம்பிகை அம்மையார்
பிறப்பு
நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவர் தந்தைக்கு வேளாண்மை முதன்மைத் தொழில் ; மளிகைக்கடை வணிகம் துணைத்தொழில்.
கல்வி
சொக்கலிங்கம் என்னும் இயற்பெயருடைய புலியூர்க் கேசிகன் தனது ஊருக்கு அருகிலுள்ள டோணாவூரில் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப்பள்ளி கல்வியையும் பெற்றார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்புக் கல்வி (Intermediate) பெற்றார். அப்பொழுது நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
கல்லூரிக்கல்விக்குப் பின்னர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், பேராசிரியர் முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் தொடர்புகொண்டு தன்னுடைய தமிழறிவை வளர்த்துக்கொண்டார்.
பணி
கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த புலியூர்க் கேசிகன், நெல்லை மாவட்டத்தில் உள்ள வடுகச்சி மலைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுது டோணாவூர் மருத்துவமனையில் மறைமலையடிகள் மகளும் தனித்தமிழ் இயக்கத்தின் நிறுவுநர்களில் ஒருவருமான தமிழ்ப் பேராசிரியர் நீலாம்பிகை அம்மையார் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கேசிகனும் அவர் குடும்பத்தினரும் பேருதவியாக இருந்தனர். இதனால் மகிழ்ந்த் நீலாம்பிகை அம்மையார், தன் கணவரும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் அமைச்சருமான திருவரங்கனாரிடம் புலியூர்க் கேசிகனைப் பற்றி எடுத்துரைத்தார். இதன் விளைவாக கேசிகன் அந்த நூற்கழகத்தின் திருநெல்வேலிக் கிளையில் மேலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். புலியூர்க் கேசிகன் பத்தாண்டுகள் அப்பணியை மேற்கொண்டார்.
பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அருணா வெளியீடு என்னும் பதிப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் பாரி நிலையம், மாருதி பதிப்பகம் ஆகியவற்றில் நீண்ட நாள்கள் பணியாற்றினார்.
குடும்பம்
திருவரங்கனார் – நீலாம்பிகை அம்மையார் இணையர் மகள் சுந்தரத்தம்மையாரை புலியூர்க் கேசிகன் மணந்துகொண்டார். அவ்விணையர்களுக்கு கந்தவேலன் என்னும் ஒரு மகனும் நீலச்செல்வி என்ற மகாலட்சுமி, சொ. கலைச்செல்வி. மலர்ச்செல்வி என்னும் மூன்று மகள்களும் பிறந்தனர்.
எழுத்துப் பணிகள்
அருணா வெளியீடு, பாரி நிலையம், வானதி பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களின் வழியாக 50 இலக்கிய நூல்களுக்கு உரைகள்; 10 சோதிட நூல்கள்; 5 உளவியல் நூல்கள்; 3 யோக நூல்கள்; 5 ஆன்மிக நூல்கள்; 2 வரலாற்று நூல்கள்; 7 குறள் தொடர்பான நூல்கள்; தொகுப்பு, ஆராய்ச்சி, கவிதை ஆகியன உள்ளடக்கிய துறைகளில் 8 நூல்கள் என 90 நூல்களை புலியூர்க் கேசிகன் படைத்திருக்கிறார். அவற்றுள் சில:
உரைநூல்கள்தொகுசங்க இலக்கியம்தொகுநற்றிணை – முதற் பகுதிநற்றிணை – இரண்டாம் பகுதி (1980, பாரி நிலையம், சென்னை)குறுந்தொகைஐங்குறு நூறு – மருதமும் நெய்தலும் (அக்டோபர் 1982, பாரி நிலையம், சென்னை)ஐங்குறு நூறு – குறிஞ்சியும் பாலையும்ஐங்குறு நூறு – முல்லைபதிற்றுப்பத்துபரிபாடல்கலித்தொகை (மார்ச் 1958, அருணா பப்ளிகேஷன்ஸ். சென்னை)அகநானூறு – களிற்றியானை நிரைஅகநானூறு – மணிமிடை பவளம்அகநானூறு – நித்திலக்கோவை (1962, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை)புறநானூறுபத்துப்பாட்டுபதினென் கீழ்க்கணக்குதொகுபழமொழி நானூறுதிருக்குறள் (சூன் 1976, பூம்புகார் பதிப்பகம், சென்னை)காப்பியங்கள்தொகுசிலப்பதிகாரம்மணிமேகலைபக்தி இலக்கியம்தொகுதிருவாசகம் (திசம்பர் 1964, ஶ்ரீமகள் நிலையம், சென்னை) ஆண்டாள் திருப்பாவை (திசம்பர் 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) இலக்கணம்தொகுதொல்காப்பியம் - தெளிவுரையுடன் (1961 அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை)புறப்பொருள் வெண்பாமாலைநன்னூல் காண்டிகைசிற்றிலக்கியம்தொகுகலிங்கத்துப்பரணிநளவெண்பாதிருக்குற்றாலக் குறவஞ்சிமுக்கூடற்பள்ளுதகடூர் யாத்திரைதனிப்பாடல்கள்தொகுகாளமேகம் தனிப்பாடல்கள்ஒளவையார் தனிப்பாடல்கள்கம்பன் தனிப்பாடல்கள்பாலியல் இலக்கியம்தொகுஅதிவீரராமனின் இல்லற ரகசியம்அதிவீரராமனின் கொக்கோகம்ஆய்வு நூல்கள்தொகுமுத்தமிழ் மதுரை (30.1.1981)ஐந்திணை வளம்புகழ் பெற்ற பேரூர்கள்புறநானூறும் தமிழர் சமுதாயமும் (திசம்பர் 1964, பசவேசுவரா பிரசுரம், கிருஷ்ணகிரி) புறநானூறும் தமிழர் நீதியும் (சனவரி 1965, பசவேசுவரா பிரசுரம், கிருஷ்ணகிரி) பூலித்தேவனா? புலித்தேவனா? (சனவரி 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) சோதிட நூல்கள்தொகுஎண்களின் இரகசியம்எண்களும் எதிர்காலமும்ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள் (1980 மாருதி பதிப்பகம், சென்னை) உளவியல் நூல்கள்தொகுமனோசக்தியோக நூல்கள்தொகுதியானம்ஆன்மிக நூல்கள்தொகுஶ்ரீ சந்தோஷி மாதாகுறள் தொடர்பான நூல்கள்தொகுகுறள் தந்த காதல் இன்பம் (அக். 1959, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை) வரலாற்று நூல்கள்தொகுஅறநெறிச் செல்வர்புலவரும் புரவலரும்பிறதொகுசிங்கார நாயகிகள்பெண்மையின் ரகசியம்தொகுப்புதொகுதிருவருட்பா பாராயணத் திரட்டு, (திசம்பர் 1964, ஶ்ரீமகள் நிலையம், சென்னை)
பிற பணிகள்
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், இலக்கிய அமைப்புகள் ஆகியவை நடத்தும் விழாகளிலும் வானொலியிலும் தமிழ்மொழி, இலக்கியம் தொடர்பாக உரையாற்றினார்.
விகடன், அமுதசுரபி, குமுதம், கல்கண்டு, குங்குமம், தாய், இதயம் பேசுகிறது, ஞானபூமி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பல்வேறு பொருள்களில் எழுதினார்.
நந்திவாக்கு, சோதிட நண்பன் உள்ளிட்ட சில இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
பெற்ற சிறப்புகள்
புலியூர்க் கேசிகனின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி பின்வரும் அமைப்புகள் அவருக்குச் சிறப்புச் செய்திருக்கின்றன:
தென்னிந்திய இருப்புப்பாதை நிறுவனம்.
முத்தமிழ் மன்றம்.
சிறீராம் நிறுவனம்.
கம்பன் கழகம்.
திருவள்ளுவர் இலக்கிய மன்றம்.
பன்னாட்டு தமிழுறவு மன்றம்.
நாட்டுடைமையாக்கம்
புலியூர்க் தேசிகனின் படைப்புகளை 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.
மறைவு
புலியூர்க் கேசிகன் தனது 69ஆம் அகவையில் சென்னையில் ஏப்ரல் 17, 1992ஆம் நாள் மரணமடைந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக