21.10.20
ரேவா
சாளுக்கியரது_பிடியில்_காஞ்சி_68
காஞ்சி நகர் எதிர்பாராத பல நிகழ்ச்சிகளை அன்று இரவு சந்தித்தது.
சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சி நகருக்குள் தன் பெரும்படையுடன் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்தான்.
தனது மாளிகையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த பிரம்மஸ்ரீ ராஜன் , தன் மேல் அழுத்திய வாளின் முனையைக் கண்டதும், எவ்வித பதட்டமுமின்றி, மஞ்சத்தில் எழுந்து அமர்ந்தவராய், " யார் நீங்கள்..? " என்றார். தன்னைச் சுற்றி நின்றிருந்த வீரர்களைப் பார்த்தவராய்.
ஏனெனில், வந்த வீரர்களோ, பல்லவரது உடைகளை அணிந்திருந்தார்கள்.
" பல்லவ முதன் அமைச்சரே, காஞ்சி இப்போது சாளுக்கியரது வசத்தில் , தங்களை தங்களது மாளிகையிலேயே காவலில் வைக்கும் படி சாளுக்கிய சக்கரவர்த்தியின் ஆக்ஞை. தேவையில்லாமல் எதிர்ப்பைக் காட்ட முயற்சிக்க வேண்டாம். உங்களது மாளிகை சாளுக்கியரது வசம் வந்து விட்டது. இங்கிருக்கும் சொற்பப் படைகளை சரணடைய உத்தரவு தாருங்கள். இல்லையெனில் வீணில் பல்லவர்களது குருதி காஞ்சியின் மண்ணில் ஓடும்." என்றான் வாளை அவரது நெஞ்சில் வைத்து நின்றிருந்த படைத்தலைவன்.
சூழ்நிலையின் தன்மையை உணர்ந்தவராய், அவனது விருப்பத்தின் படியே, பல்லவர்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையும் படி ஓலையொன்றை உடனே எழுதி தந்தார்.
சிறிய எதிர்ப்பு கூட இன்றி, சாளுக்கியரதுப் படை இலாவகமாக பல்லவரதுப் படைகளை அடக்கியதோடு, குருதியே சிந்தாமல் காஞ்சியை கைப்பற்றிக் கொண்டது.
சாளுக்கியப் படைகள்.
காஞ்சி அரண்மனையிலும், கோட்டையிலும் உடனடியாக ரிஷபக் கொடியை இறக்கி விட்டு , வராகக் கொடியை ஏற்றி விட்டது.
அன்றைய இரவின் இரண்டு நாழிகைப் பொழுதில் காஞ்சி எவ்வித எதிர்ப்புமின்றி சாளுக்கியர் வசம் சரணாகதியடைந்தது.
காஞ்சியில் எவ்வித தீயச் செயல்களிலும் ஈடுபடக் கூடாதென்றும், மக்களுக்கு துன்பங்களை விளைவிக்கும் எவ்விதக் காரியங்களிலும் ஈடுபடக் கூடாதென்றும் தனது படைகளுக்குச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் கடுமையான உத்தரவிட்டிருந்தான். மீறி எங்காவது எவராவது காஞ்சி நகரில் கொலை, கொள்ளை, கற்பழிப்புப் போன்ற கொடுஞ்செயல்கள் சாளுக்கியரால் நடந்தது என மக்கள் புகார் கூறும் பட்சத் தில் , சம்பந்தபட்ட சாளுக்கியர் குற்றத்தின் தன்மைக்கேற்ப கடுமையானத் தண்டனைக்கு உள்ளாயினர். எனவே எங்கும் அமைதியே நிலவியது. காஞ்சி மாற்றார் வசம் சிக்குண்ட நிலையில் இல்லாது மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் காணப்படாத நிலையே நிலவியதெனலாம்.
அது மட்டுமின்றி காஞ்சி நகரத்தின் கலைச் சின்னங்களையும், சிற்பங்களையும் சிதைக்காது பாதுகாக்கவும் உத்தரவிட்டிருந்தான். முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் சாளுக்கியர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காஞ்சி நகர மக்களும் அச்சம் ஏதுமின்றி எங்கும் சென்றுவர முடிந்ததோடு, நகரிலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், நடமாடவும் முடிந்தது.
ஏழை,எளிய மக்களுக்கு நிதி உதவி செய்ததோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையாமல் கவனித்துக் கொண்டான் விக்கிரமாதித்தன்.
காஞ்சியின் அழகை கண்டுகளிக்க சாளுக்கிய விக்கிரமாதித்தன் தனது அரசிகளான லோகதேவியையும், திரிலோக தேவியையும் காஞ்சிக்கு வரவழைத்திருந்தான். காஞ்சியின் பிரசித்திப் பெற்ற ஆலயங்களுக்கெல்லாம் சென்று வந்தவர்கள், பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் எழிலும், சிற்ப வேலைப் பாடுகளிலும் மனதை பறிகொடுத்தனர். அவ்வாலயத்திற்கு நிதி வசதிகளையும் வழங்கியதோடு, இறையிலி நிலங்களையும் வழங்கி உதவினர். மேலும் அதே போன்ற எழிலோடு சாளுக்கியரது தேசத்திலும் ஆலயங்களை நிர்மாணிக்க வேண்டுமென்ற எண்ணம் அத் தேவியர்களின் மனதில் எழவே பின்னாளில் எழுந்தது தான், பட்டக்கல் பகுதியில் அமைந்த #விருபாக்ஷா ஆலயமும்( லோகேஸ்வரர் ஆலயம் ), பெல்லாரி குருவட்டியில் அமைந்த மல்லிகார்ஜூன ஆலயமும் ( திரிலேகேஸ்வரா ஆலயம் ).
நகரோ மாற்றான் பிடியில் சிக்கி மாசில்லாமல் இருந்தாலும் , மனதிலோ உறுத்தல் இல்லாமல் போகுமா..?!
பல்லவ முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன் வீட்டுக் காவலில் மனம் புழுங்கித் தவித்தார். காஞ்சி நகர் விழுந்த விசயத்தை உடனே ஒரு ஓலையொன்றின் வாயிலாக நந்திவர்மனுக்கு தெரியப் படுத்தவும் எண்ணங்கொண்டார். ஆனால்..எப்படி..? அவரது மாளிகை சாளுக்கிய வீரர்களால் பலத்த காவலுக்குட்பட்டிருந்தது. பெண்கள் வீட்டு வேலைக்காக உள்ளே வரவும், வெளிச் செல்லவும் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டிருந்தது. மற்றபடி ஆண்கள் எவருக்கும் அந்த மாளிகையில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. பிரம்மஸ்ரீ ராஜனின் பாதுகாவலர்கள் அனைவருமே சிறை செய்யப்பட்டு காவலில் வைக்கப் பட்டார்கள். எனவே ஓலையை வேலைக்காரப் பெண் வாயிலாக தந்து அனுப்புவது என முடிவெடுத்தார்.
அதன்படி, காஞ்சியின் நிலவரத்தை முழுதும் ஓலையில் எழுதியவர் அதனை வேலைக்காரப் பெண்ணொருத்தியிடம் தந்து, நந்திபுரத்தில் உள்ள நந்திவர்மனிடம் சேர்ப்பித்து விடுமாறு பணித்தார். பெண்களை எவ்வித தொல்லைகளுக்கும் ஆளாக்கக் கூடாது என்று சாளுக்கிய விக்கிரமாதித்தன் ஆக்ஞை இட்டிருந்த காரணத்தால், அவளும் எவ்வித தொல்லையுமின்றி, நந்திவர்மனை சந்தித்து ஓலையை தந்ததோடு, அங்கிருந்து ஒரு ஓலையையும் பெற்று வந்தாள். அதில் நந்திபுரம் பாண்டியர்களால் முற்றுகை இடப்பட்ட விபரம் காணப்பட, பல்லவரை சூழ்ந்து விட்ட அந்தகாரத்தை எண்ணி அதிர்ச்சியில் ஆழ்ந்தார் பிரம்மஸ்ரீ ராஜன்.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : # விக்கிரமாதித்தனின் காஞ்சி படையெடுப்பையும், காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு விக்கிரமாதித்தன் செய்த நிதிஉதவியையும், காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள கன்னட மொழி கல்வெட்டு வாயிலாக அறியலாம்.
# History of Karnataka by Dr.Suryanath V.Kamat ( page. 63 )
[ கீழே படத்தில் விருபாக்ஷா கோவில். ]



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக