23.10.20
ரேவா
பிரிந்தவர்_கூடிட_எழுந்தது_மகிழ்ச்சி_70
சுக்கிலபட்ச தசமி திதி. பல்லவரது பரிவேள்விப் புரவி தன் ராஜகம்பீர நடையை நெமிலிக் கோட்டையை நோக்கி நகரத் தொடங்கியது.
மேற்கு திசையில் இருந்து பக்கவாட்டில் தாக்க உத்தேசித்து இருந்த உதயணனது படையைத் தாக்கவும், கோட்டையில் இருந்து வெளியேறும் உதயணனது படைகளைத் தாக்கவும் முன்னேற்பாடுகளை செய்திருந்தான் உதயச்சந்திரன். மேற்கு திசையிலிருந்து வரும் படைகளை தந்திதுர்க்கன் எதிர் கொள்ளும் படியும், கோட்டைக்குள்ளிருந்து வெளியேறும் படைகளை உதயச்சந்திரன் மற்றும் காடவ முத்தரையர் எதிர் கொள்ளவும் வியூகம் வகுக்கப் பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சேந்தன் உதயணனை நேரிடையாக எதிர்கொள்ளவும் படைகளை ஆயத்த நிலையில் ஏற்பாடு செய்திருந்தான்.
அங்ஙனமே, கோட்டையை நோக்கி ஆக்ரோசமாய்க் கிளம்பியது உதயச்சந்திரன் தலைமையிலான படைகள். கோதாவரிக் கரையில் சற்று பின் தங்கிய தந்திதுர்க்கனது தலைமையிலான படைப் பிரிவு , உதயணனது படைகளை முன்னுக்கு நகர்த்தி பின் தாக்கத் துவங்கியதோடல்லாமல், சேந்தனது தலைமையில் ஒரு படைப் பிரிவு உதயணனை நேரிடையாக எதிர்கொள்ளவும் , இருமுனைத் தாக்குதலுக்கு ஏகக் காலத்தில் ஆளானான் உதயணன்.
தந்திதுர்க்கன் தனது நெடுநாளையப் பகைவனை தானே நேரிடையாக எதிர் கொள்ளத் துவங்கினான். நென்மேலி என்றும் நெமிலி என்றும் வழங்கப் பட்ட அப்பிராந்தியம், போர் வீரர்களின் கூச்சல்களாலும், குதிரை, யானை போன்ற விலங்குகளின் ஓலத்தாலும், நடைபெற்ற போரின் உக்கிரத்தாலும், கானகத்துப் பறவைகள் எழுப்பிய ஒலிகளாலும் சொல்லத் தரமற்றதாய் இருந்தது. எங்கெங்கு காணினும் மனித, விலங்குகளின் உடல்கள், கை கால்களை இழந்தவர்களின் ஓலங்கள் என காணுமிடமெங்கும் பிணக் குவியலே. கோதாவரியின் நீர் செந்நீராக மாறி ஓடிக் கொண்டிருந்தது.
உதயணனை எதிர் கொண்ட தந்திதுர்க்கன் , " வா..உன்னைக் கொன்றால் தான் எனது மனதிற்கு நிம்மதி " என்றவனாய் , ஆக்ரோத்துடன் மோதிக் கொண்டிருந்தான். இருவரது வாட்களும் பல வினைகளைப் புரிந்து கொண்டிருந்தன. தந்திதுர்க்கனது ஆக்ரோசத் தாக்குதலால் நிலைகுலைந்த உதயணன் தனது வாளினை நழுவ விட்டதோடு, நெமிலிக் கோட்டையை நோக்கி தனது புரவியை விரட்டினான். தந்திதுர்க்கனும் விடுவதாக இல்லை., அவனை விரட்டியபடித் தொடர்ந்தான். கோட்டையை நெருங்கும் சமயத்தில் தந்திதுர்க்கன் தனது புரவியின் பக்கவாட்டில் செருகப் பட்டிருந்த வேலினை எடுத்து உதயணனது குதிரையின் மீது எறிய, குதிரை உதயணனை குப்புறத் தள்ளியது. தரையில் விழுந்த உதயணன் எழுந்து கோட்டையினை கடந்து நெமிலி நகர வீதிகளில் ஓடத் துவங்கினான். தந்திதுர்க்கனும் அவனை விடாது விரட்டிய படி சென்றான். ஒரு வீதியின் திருப்பத்தில் சட்டென நுழைந்த உதயணன் அப்படியே திகைத்து நின்று விட்டான்.
அவனைத் தொடர்ந்து ஓடி வந்த தந்திதுர்க்கன், அந்த வீதியில் இருந்து எழுந்த பயங்கரக் கூக்குரலைக் கண்டு ஒரு கணம் திகைத்தவனாய், மெல்ல அந்த திருப்பத்தில் நுழைந்தவன் கண்ணில் பட்டது, அந்த கோரக் காட்சி.
நிரஞ்சனாவின் கையில் காணப்பட்ட நீண்ட வாளில் குருதியானது கொட்டியபடி இருக்க..தனது வயிற்றைப் பிடித்தபடி புழுவாய் துடித்துக் கொண்டிருந்தான் உதயணன்.
கண்ணீர் பெருக நின்றிருந்த நிரஞ்சனாவின் கண்களில் தோன்றிய வெறி சட்டென மாறியதோடு, அங்கு நிலைத்த ஒரு சூன்யம் தென்பட்டது.
" நிரஞ்சனா.." என்று கத்தியவனாய் , அவளை இரண்டே எட்டில் அடைந்த தந்திதுர்க்கனை, " அண்ணா..என்னை மன்னித்து விடுங்கள். இந்த பாவியையும், எனது குழந்தையையும் தேடியே அச்சல்பூரை விட்டு வெளியேறினேன். எனது உடல் நிலையைக் கவனித்த சத்திரத்து காப்பாளராய் இருந்த பெண்மணி, என்னை சில வருடங்களில் குணப் படுத்தியதோடு, அடைக்கலமும் தந்து உதவினாள். அன்றிலிருந்து இந்தப் பாவியை கொன்று விடுவதற்கான சந்தர்ப்பத்தையும், சூழலையும் எதிர் நோக்கி காத்திருந்தேன். அன்று நீங்கள் வீதியில் கண்டது என்னைத் தான்.ஆனால் எங்கே என்னை நமது நகருக்கு அழைத்துச் சென்று விடுவீர்களோ என்ற பயத்தால், வேறு ஒரு பெண்ணுக்கு எனது உடைகளை அணிவித்து உங்கள் முன் அனுப்பினேன். எனது வேண்டுகோளுக்கு காப்பாளரும் உதவி புரிந்தார். இவனைக் கொல்வது ஒன்றே என் இலட்சியமாய் இருந்தது. நம் குடும்பத்தை சீரழித்த இவனை என் கையால் கொல்ல வேண்டுமென்ற என் ஆசை இன்று நிறைவேறியது..இனி எனக்கு கவலையில்லை..நிம்மதியாக சாவேன்.."
" நீ.. ஏனம்மா சாக வேண்டும்..உனது மகளுக்காக நீ வாழ வேண்டாமா..? " என்றான் துக்கம் நிரம்பியவனாய் தந்திதுர்க்கன்.
" என்ன..என் மகள் உயிரோடிருக்கிறாளா..? எங்கே இருக்கிறாள்.அண்ணா..? " என்றாள் நிரஞ்சனா படபடப்பு நிரம்பியவளாய்.
" இன்னும் சிறிது நேரத்தில் அவளை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். சபர தேசம் வீழ்ந்தது. என் நெடு நாளைய பகைவன் ஒழிந்தான். வா..கோட்டையின் வெற்றி முரசை ஒலிக்கச் செய்வோம்" என்றவனாய் ஓடினான் தன் முதுமையையும் மறந்தவனாய் தந்திதுர்க்கன்.
ஒரு நாழிகைப் பொழுதில் உதயணனது மரணத்தைத் தொடர்ந்து, சபரி தேசம் வீழ்ந்தது.
தன் முன்னால் நின்று கொண்டிருந்த மெலிந்த வயதான பெண்மணியைக் கண்டதும், " அன்னையே .. என அழைத்தவளாய் ஓடிப் போய் கட்டிக் கொண்டு கண்ணீரை உகுத்தாள் பியுஷா. நிரஞ்சனாவின் விழிகளிலும் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
உதயணனுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து அனைவரும் சற்று திக்பிரமை பிடித்தவர்களாய் காணப்பட்டார்கள்.
பியூஷா தன் தாயின் அரவணைப்பில் இருந்தாள். நிரஞ்சனவோ தனது மகளை அணைத்த கைகளை விடுவிக்க மனமின்றி கண்ணீரை உகுத்த வண்ணம் காட்சி தந்தாள். சபர தேசம் நிரஞ்சனாவின் ஆளுமைக்கு வர, "அண்ணா.. சபர தேசத்தை ஆட்சி புரியும் எண்ணமெல்லாம் என்னிடத்தில் இல்லை. எனக்கான காலங்களை எனது மகளுடன் கழிக்கவே விரும்புகிறேன். நீயே அரசனாய் இருந்து சபர தேசத்தை கவனித்துக் கொள்." என்றாள் அமைதியாக நிரஞ்சனா.
அங்கு நெடுநேரம் ஆழ்ந்த அமைதியே குடி்கொண்டிருந்தது.
உதயச் சந்திரன் தந்திதுர்க்கனைப் பார்த்தவாறே, " தந்திதுர்க்கரே, தாங்கள் இழந்த தங்களது குடும்பத்தினரை சந்தித்து விட்டீர்கள். மகிழ்ச்சி தானே.." ! என்றான்.
" மகிழ்வு தான் படைத்தலைவரே..இந் நிகழ்விற்கு தங்களது ஒத்துழைப்பும் கணிசமானதல்லவா. அத்தோடு தாங்களும் எங்களது குடும்பத்தில் ஒருவராகி விட்டீர்கள்..என்றபடியே, நிரஞ்சனா உனது மகளை மணமுடிக்கப் போவது இவர் தான். பெயர் உதயச்சந்திரன். பல்லவதேசத்தின் படைத்தலைவர்." என்றபடியே பியூஷாவையும் ஓரக்கண்ணால் பார்க்க..அவளோ..
" சீ..போங்கள் மாமா..என்றபடியே அவளது தாயின் முந்தானையில் ஒளிந்தாள்."
அங்கே பலத்த சிரிப்பொலி எழுந்தது.
" தந்திதுர்க்கரே, இந்த மகிழ்வான வேளையில் தங்களிடம் மற்றொரு விண்ணப்பமும் இருக்கின்றது." என்றான் பலத்த யோசனையுடன் உதயச்சந்திரன்.
" விண்ணப்பமா..? "
" ஆம்..தந்திதுர்க்கரே, தங்களது குடும்பத்தில் பல்லவ மன்னனையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதாவது.."
" அதாவது...?"
" ரேவாவை நந்திவர்ம பல்லவருக்கு மணமுடித்து தர வேண்டுகிறோம் " என்றனர் ஒன்றாக காடவ முத்தரையரும், உதயச்சந்திரனும்.
தந்திதுர்க்கனோ மகிழ்ச்சியில் திளைத்தான். " படைத்தலைவரே, எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை. கடிகையில் ரேவாவின் கல்வி முடிந்ததும் அவர்களது மணநாளை முடிவு செய்து விடலாம்." என்றான் மகிழ்ச்சி பொங்கிய குரலில் தந்திதுர்க்கன்.
" தந்தி துர்க்கரே , இனி நமது பரி செல்ல விருக்கும் நாடு எது..? " என்றான் ஆவல் பொங்கிய குரலில் உதயச்சந்திரன்.
" அடுத்த படியாக ஒட்டர்களின் தேசமான இந்திராவதி வடக்கில் இருக்கிறது. கிழக்கிலோ வம்சதாரா இருக்கிறது.. நமது இலக்கு வடக்கா அல்லது கிழக்கா என தீர்மானிக்க வேண்டியது தாங்கள் தான்..!" என்றான் குதூகலமான குரலில் தந்திதுர்க்கன்.
அப்போது, " படைத்தலைவரே, என்றழைத்துக் கொண்டே அவசரமாய் உள்ளே நுழைந்தான் புழுதி படிந்த உடலோடும், செவ்வரி ஓடிய கண்களோடும் சீராளன்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக