23.10.20
ரேவா
நீடிக்கிறது_முற்றுகை_71
நந்திபுரக் கோட்டை.
காஞ்சியில் இருந்து முதலமைச்சர்
பிரம்மஸ்ரீ ராஜனால் அனுப்பப் பட்ட பெண்ணொருத்திக் கொண்டு வந்த தகவல் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.
பல்லவடி அரையனோ இப்போது தான் மஞ்சத்தை விட்டு எழுந்து நடமாடத் துவங்கியிருந்தார். இருப்பினும் சோர்வினால் அவ்வப்போது துவளவே செய்தார். தொடர்ந்தாற்போல் ஒரு நாழிகை நேரம் நிற்பதே அவருக்கு பிரம்மபிரயத்தனமாக இருந்தது. உடலில் இருந்த வலு முற்றிலும் காணாமற் போயிருந்தது. அவ்வாறானச் சூழலில் காஞ்சியை சாளுக்கிய விக்கிரமாதித்தன் கையகப் படுத்திக் கொண்டதோடு , பிரம்மஸ்ரீ ராஜனையும் மாளிகைக் காவலில் வைத்து விட்டான் என்றதும், கவலையில் ஆழ்ந்து விட்டார். காஞ்சியின் நிலை அவ்வாறிருக்க, தங்களையோ பாண்டியனும் கங்கனும் சேர்ந்து முற்றுகையிட்டு இருப்பது வேறு அவருக்கு பெரும் மனவேதனையை அளித்துக் கொண்டிருந்தது.
நந்திவர்மனோ, எப்படியாவது இந்த முற்றுகையை முறியடித்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாய், நந்திபுரக் கோட்டைத் தலைவனோடு, நந்திபுர கோட்டைச் சுவரின் மேல் நின்றபடி உன்னிப்பாக எதிரே கவனித்துக் கொண்டிருந்தான். கோட்டையைச் சுற்றி அடர்ந்து வளர்ந்திருந்த கானகத்தைக் கண்டதும் பளிச்சென அவனது மனதில் ஒரு யோசனை உருவானது.
" கோட்டைக் காவலரே..நந்திபுரக் கோட்டையின் அகழிகள் தூர்வாரப்பட்டு உள்ளதா..?"
" ஆம்..அரசே..தூர்வாரப்பட்டவை தான், நீரையும் நிரப்பி முதலைகளையும் அகழியில் விட்டிருக்கிறோம்."
" நல்ல காரியம் செய்தீர்கள். கோட்டையைச் சுற்றி நெருக்கமாய் வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விடலாமே..? "
நந்திவர்மன் கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளானவனாய் கோட்டைத் தலைவன் ,
" என்ன..? " என்றான் . அவனது குரலில் திகைப்போடு பீதியும் கலந்திருந்தது.
" மரங்களை வெட்டி அப்புறப்படுத்தலாமே என்றேன்."
நந்திவர்மன் புரிந்து பேசுகிறானா..! இல்லை புரியாமல் பேசுகிறானா..? என்ற சந்தேகம் கொண்ட கோட்டைத் தலைவன் தனது குரலில் கோபமும், இகழ்ச்சியும் தொனிக்கக் கூறத்துவங்கினான்.
" அரசே..மரங்கள் இருப்பது தான் பாதுகாப்பு. படைகளால் அணிவகுத்துச் சட்டென ஊடுருவி வர இயலாது. மேலும் கோட்டையைத் தகர்க்க எந்த இயந்திரங்களையும் கொண்டு வரவும் இயலாது. மரங்களின் அரண் இல்லையென்றால் , எதிரிகளின் எந்திரங்கள் நம் கோட்டையை எளிதில் தகர்க்கத் துவங்கி விடும்."
" ம்..நானும் அறிவேன்.இருப்பினும் நமது எதிரிகளுக்கு அம்மாதிரியான வாய்ப்பினை நாம் ஏன் வழங்கக் கூடாது..? " என்றான் யோசனையுடன் நந்திவர்மன்.
இப்போது நந்திவர்மன் பேரில் உண்மையாகவே கோபம் எழ, " நந்திபுரக் கோட்டையை பாண்டியன் வீழ்த்துவதை நீங்கள் கண்டு் இரசிக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா..?" என்றான் ஆத்திரத்துடன்.
" மரங்களை வெட்டுவதானால் , எதிரிகளின் படைகள் கோட்டையை நெருங்குமென்றால் , அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவோமே..எதிரியின் பலமறியாது இப்படியே அமர்ந்திருப்பதை விட, அது மேலானதல்லவா..! "
"பாண்டியனது படையின் ஒரு பகுதி போதும் , நந்திபுரக் கோட்டையை தகர்த்தெறிய.." என்றான் இகழ்ச்சியுடன் கோட்டையின் தலைவன்.
" அப்படியா..அதையும் பார்த்துவிடலாமே..! நீங்கள் நான் சொன்னதை செய்யுங்கள். கோட்டையைச் சுற்றி பத்து குடிதாங்கி கோல் அளவிற்கு எந்த மரமும் நிற்கக் கூடாது. வெட்டி வீழ்த்துங்கள்." என்று விட்டு சட்டென அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
கோட்டைத் தலைவனுக்கு எரிச்சலும், கோபமும் நந்திவர்மன் மேல் பிறந்தது. ஆனாலும் மன்னனது ஆணையை மீறிட இயலுமா. மறுதினமே மரங்களை வெட்ட உத்தரவிட்டான். வெட்டி முடிக்கப் பட்ட பின், எவ்வித பாதுகாப்புமின்றி தனித்துத் தெரிந்த நந்திபுரக் கோட்டையைக் காணும் போது பல்லவன் கதி, அதோகதி தான். இத்தோடு தொலைந்தான் பல்லவன், என்றே முடிவு கட்டினான் நந்திபுரக் கோட்டைத் தலைவன்.
அது மட்டுமின்றி பல்லவரது ஒற்றர்கள் பாண்டியனது நடமாட்டத்தை அறிந்து கொண்டு வந்ததோடு, அவர்கள் தெரிவித்த விபரங்களும் நந்திபுரக் கோட்டைத் தலைவனது வயிற்றில் புளியைக் கரைத்தது.
பல்லவடி அரையனும், நந்திவர்மனும் கோட்டைத் தலைவனை தங்களது அறைக்கு அழைத்திருந்தார்கள். மூவரும் கோட்டையின் நிலவரம் குறித்தும், பாண்டியனின் படைபலம் குறித்தும், கோட்டையில் தானியத்தின் இருப்பு குறித்தும் தீவிரமான விவாதத்தில் இருந்த போது, பாண்டியரைப் பற்றி ஒற்றறியச் சென்ற வீரனொருவன் கொண்டு வந்த தகவல் மூவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
" என்ன சொல்கிறாய்..? என்றார் பல்லவடி அரையன்.
" ஆம். தளபதியாரே..பாண்டியன் அருகில் உள்ள கிராமங்களில் எல்லாம், விளைந்த நெற்கதிர்களையெல்லாம் தீக்கிரையாக்கி விட்டான். நமது கோட்டைக்குள் தானியங்கள் வருவதை தடைசெய்ய வேண்டுமென்ற நோக்கில் இது செய்யப் பட்டிருக்கிறது."
" எதிர்பார்த்தேன்..எரிபரந்தெடுத்தல் நடக்குமென்று." என்றார் சோகமாய் பல்லவடி அரையன்.
" எரி பரந்தெடுத்தலா..? " என்றான் நந்திவர்மன் திகைப்புடன்.
" ஆம்..விளைந்திருக்கும் தானியங்களை தீயிட்டு அழித்து விட்டால், கோட்டைக் குள்ளிருப்பவருக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமல்லவா..இதுவும் ஒரு யுக்தி.." என்றார் கவலை தோய்ந்த குரலில் பல்லவடி அரையன்.
" ம்..அதற்காக விளைந்த கதிர்களையா தீயிட்டுக் கொளுத்துவார்கள்..? " என்றான் கோபம் குரலில் தொனிக்க நந்திவர்மன்.
" நம்மை வெளியே இழுக்கும் முயற்சியை பாண்டியன் தொடங்கி விட்டான்..நாம் வெளியேற மறுத்தால் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக கோட்டையைத் தகர்ப்பான். அவனுக்கு வசதியாக மரங்களை வேறு வெட்டி வசதி ஏற்படுத்தியிருக்கிறோம் நாம்." என்றான் எரிச்சலும், கோபமும் கலந்தவனாய் கோட்டைத் தலைவன்.
கோட்டைத் தலைவனது பேச்சை காதில் வாங்காதவனாய் நந்திவர்மன்.
கோட்டைச் சுவரில் காவல் புரியும் வீரர்களை அப்புறப் படுத்தி விடுங்கள். அது மட்டுமின்றி கோட்டைச் சுவரில் நிலை நிறுத்தியிருக்கும் விற் எந்திரங்களையும், வேலெறி எந்திரங்களையும் வெளியே பார்வைக்கு படாதவாறு சற்று உள்ளே இழுத்து நிறுத்துங்கள். " என்றான் நந்திவர்மன்.
" என்ன..?! " ஏக காலத்தில் எழுந்தது இருவரது குரல்.
" ஆம்..கோட்டையானது பார்வைக்கு பலமில்லாத நிலையை பாண்டியனுக்கு உணர்த்த வேண்டும்."
" இது..நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்வது போல் அல்லவா..!" என்றார் பல்லவடி அரையன்.
" பாதாதிகேச பரியந்தம் நடுங்கியவனாய்..இது நம்மை மேலும் பலத்த ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தி விடும் " என்றான் சீற்றத்துடன் கோட்டைத் தலைவன்.
" ஒன்றும் ஆகாது ..! சொன்னதைச் செய்..! பாண்டியனது முற்றுகை நீடிக்கவே செய்யும்..அவன் உடனே நம்மைத் தாக்க முற்பட மாட்டான்.." என்றான் கடுமையான குரலில் நந்திவர்மன்.
கோட்டைத்தலைவனோ, நந்திவர்மனுக்கு புத்தி ஏன் இவ்வாறு வேலை செய்கிறது என முனங்கியவனாய், மனதிற்குள் திட்டியபடியே வெளியேறினான்.
ஆனால்..நந்திவர்மன் கூறியது போல, தாக்குதலை உடனே தொடங்காத பாண்டியன் முற்றுகையை நீடிக்கவே செய்தான். அதற்கான மர்மம் என்னவென்று புரியாமல் தளபதி பல்லவடி அரையனும், கோட்டைத்தலைவனும் திகைப்பில் ஆழ்ந்தார்கள்.
முற்றுகையை நீடிக்கச் செய்தால் , அதற்குள்ளாக பரிவேள்வி நடத்திப் போயிருக்கும் பல்லவ சைன்யம் திரும்பி வந்து விடாதா..! என்ற எதிர்பார்ப்பில் கோட்டைச் சுவரில் ஏறிய நந்திவர்மன் வடக்கு திசையை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
* * *
நந்திபுரக் கானகத்திற்கு அப்பால் முகாமிட்டிருந்த பாண்டியனதுப் பாசறை.
"காஞ்சியினை சாளுக்கியச் சக்கரவர்த்தி
விக்கிரமாதித்தன் கையகப்படுத்தி விட்டாராமே..?" என்றான் துணைப் படைதளபதி மாறன் எயினன்.
" ஆம்..தகவலை ஒற்றன் கொண்டு வந்தான். கைப்பற்றியும் கூட நகரில் எவ்வித அசம்பாவிதமும் சாளுக்கியப் படைகள் புரியவில்லை எனக் கேள்வி.! "
என்றான் பராங்குச மாறவர்மன்.
" பல்லவனுக்கு நேரம் சரியில்லை..காஞ்சியிலோ சாளுக்கியன்..இங்கோ நாம்..! " என்றான் தீரகரன்.
" அதனால் தானோ என்னவோ..நந்திவர்மனுக்கு புத்திப் பிசகி விட்டதென்று எண்ணுகிறேன். கோட்டையைச் சுற்றியுள்ள மரங்களை முழுதும் வெட்டி விட்டான். அது மட்டுமின்றி கோட்டையின் சுவர்கள் எல்லாம் வீரர்களின்றி வெறிச்சோடிப் போயிருக்கிறது. வேலெறி எந்திரங்களோ, விற்கூடங்களோ கோட்டை மாடங்களில் காணப்பட வில்லை..இது ஏன் என்பதும் புரியவில்லை என்றான் பாண்டியன் பராங்குசன் மாறவர்மன்.
" வேறெதற்கு, நந்திவர்மன் தனது அழிவை தானே தேடிக் கொள்கிறான்." என்றான் சித்ரமாயன்.
" இல்லை..கவனிக்க வேண்டிய விசயம் இதில் ஒளிந்திருக்கிறது. தனது அழிவை தானே தேடிக் கொள்ளும் அளவிற்கு நந்திவர்மன் ஒன்றும் முட்டாளில்லை. அது நமக்கு விரிக்கப் பட்ட வலை..!" என்றார் சாத்தன் கணபதி.
" எப்படிச் சொல்கிறீர்கள்..? " என்றான் புரியாமல் பராங்குச மாறவர்மன்.
" கோட்டையின் சுற்றுப் புற மரங்கள் அனைத்தையும் அப்புறப் படுத்தியிருக்கிறான் நந்திவர்மன். இப்போது நமது படை நந்திபுரக் கோட்டையை நெருங்கினால் அவன் அறியாமல் நாம் நெருங்க முடியாது. மரங்கள் இருந்தாலும் மறைந்திருந்து நெருங்கலாம்..கோட்டைச் சுவர்களில் ஏறுவதற்கும் மரங்கள் இருந்தால் வசதி. நாம் எதிரிகளின் ஆயுத வீச்சிலிருந்து காத்துக் கொள்வதற்கும் வசதியாய் இருக்கும்.ஆனால் இப்போது அந்த வசதி அறவே இல்லை. அது மட்டுமின்றி நாம் கோட்டையை நெருங்கினால் பரந்த வெளிக்குள் நுழையும் பொழுது பல்லவனது பார்வையில் படாமல் நுழைய முடியாது. அவ்வாறு நுழைகின்ற நம்மை அவன் தாக்குவதும் மிக எளிது. பாதுகாப்பற்ற நிலைமையில் சேதம் நம் பக்கம் தான் அதிகம் இருக்கும்." என்றார் கவலையுடன் பாண்டியரது சேனாதிபதி சாத்தன் கணபதி.
அப்போது தான் பல்லவனது சூழ்ச்சியின் பயங்கரம் புரிந்தது அனைவருக்கும்.
" உண்மை தான்..சற்று யோசிக்க வேண்டிய விசயம் தான். இருப்பினும் கோட்டையின் பாதுகாப்பினை ஏன் அலட்சியப் படுத்தியிருக்கிறான் என்பது தான் புரியவில்லை..! " என்றான் பாண்டியன்.
" கோட்டைச் சுவர் பாதுகாப்பைத் தான் தளர்த்தி விட்டானே
பல்லவன்...பின் ஏன் நாம் தயங்க வேண்டும்."
என்றான் யானைப் படைத் தலைவன் சங்கரன் சீதரன்.
" சங்கரா, கோட்டையின் பாதுகாப்பினைத் தளர்த்தியது போல் நாடகமாடுகிறான். அப்போது தானே நீ நெருங்குவாய்..! இதில் ஏதோ விசயம் இருக்கிறது..! நாம் உடனே தாக்குதலைத் தொடங்காமல் காலம் தாழ்த்துவதே நல்லது. நாம் எரிபரந்தெடுத்தல் மூலம் விளைநிலங்களை பாழ்படுத்தி விட்டோம். அவனுக்கு தானியத் தட்டுப் பாடு எப்படியும் விரைவில் நிகழும். அப்போது கோட்டையின் கதவினைத் திறந்து கொண்டு வெளிவந்து தான் ஆக வேண்டும்..பொறுத்திருப்பதே இப்போதைக்கு நல்லது." என்றார் சாத்தன் கணபதி.
" அவனுக்கேற்பட்ட உணவுத் தட்டுப் பாடு நமக்கு ஏற்படாதா..? " என்றான் சித்ரமாயன்.
" சித்ரமாயா..நமது படைகளுக்கு ஒரு திங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் நமது உக்கிராண வண்டிகளில் உள்ளன. நாம் கவலை கொள்ளத் தேவையில்லை..ஆனால் நமது முற்றுகையை எதிர்பார்க்காத நந்திபுர வாசிகளோ ஆயத்த நிலையில் இருந்திருக்க மாட்டார்கள்..எனவே உணவிற்காக கோட்டைக் கதவினை அவர்கள் திறந்து தான் ஆக வேண்டும்."
என்றார் சாத்தன் கணபதி.
" அதுவரையில்..." என்றான் சித்ரமாயன்.
" வேறு வழியில்லை..நமது முற்றுகையை நீடிக்கச் செய்வோம்..விளைந்த
தானியங்களைத் தீக்கிரையாக்கியதால், கோட்டைக்குள் செல்லும் தானியம் நிறுத்தப் பட்டு விட்டது. கோட்டைக்குள் தானியத்தின் இருப்பு அதிகம் இருக்க வாய்ப்பில்லை தான். எப்படியும் பல்லவன் வெளிவந்தே ஆக வேண்டும். எனவே முற்றுகையை நீட்டிப்போம்." என்றார் கங்க மன்னன் சிறீபுருஷன்.
பல்லவன் போட்ட கணக்கொன்று..!பாண்டியன் போட்ட கணக்கொன்று..!
இறுதியில் எவர் கணக்கு வெல்லும்..பொறுத்திருப்போம்..!
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக