31.10.20
ரேவா
கடத்தப்பட்டாள்_ரேவா_78
காஞ்சியின் அரண்மனையை விட்டு ரேவா கடிகைக்குச் செல்ல வேண்டியிருந்தது. நந்திவர்மனைத் தேடி அரசாங்க அலுவலாய் சிற்றரசர்கள் சிலர் வந்திருந்த காரணத்தால், ரேவாவை கடிகைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை சேந்தன் ஏற்றிருந்தான்.
இரவு முதலாம் நாழிகைத் துவங்கியதும் அரண்மனையின் முன் வந்து நின்ற ரதத்தில் ஏறிக் கொண்ட ரேவா, தனது தந்தையிடமும், நந்திவர்மனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள். அவளது ரதத்திற்கு முன்னும் பின்னும் ஐந்து காவலர்கள் புடைசூழ சேந்தன் தலைமையில் அவர்கள் கடிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். ரதத்தில் ஏறியதில் இருந்து பல்லவதேசத்தின் இயற்கை எழிலைப் பருகிக் கொண்டே வந்த ரேவா, ரதமோட்டியின் கையானது திடீரெனத் திரைச்சீலையின் அடிபாகத்தில் நுழைந்ததையோ, திரைச்சீலை விலக்கியதையோ அவள் கண்கள் காணவில்லை. சற்று நேரத்தில் அவளது நாசியில் புதிதாய் ஒரு மணம் ஊடுருவத் துவங்கிய சிறிது நேரத்தில் ஆசனத்தில் மயங்கிச் சரிந்தாள்.
ரதத்தின் முன்னே சென்றக் காவலர்களால் ரதமோட்டியின் செயலையோ,ரதத்தின் அனைத்துப் பக்கங்களிலும் தொங்கவிடப் பட்டிருந்த திரைச் சீலையினால் ரதத்திற்குள் ரேவா மயங்கி சரிந்ததையோ பின் வந்த காவலர்களாலும் கண்டுணர முடியவில்லை. ரதமோ ஒரே சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க..சாலையின் திருப்பமொன்றில் மறைந்திருந்த சாளுக்கிய வீரர்கள் திடுமென ரதத்தை சூழ்ந்து விடவே..அங்கு எழுந்தது பலமான வாட்களின் மோதல்கள்.
சேந்தனும் சளைக்காமல் வாளை வீசிக் கொண்டிருந்தான். ஆனாலும் சாளுக்கிய வீரர்கள் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்தபடியால், சாளுக்கியர்களின் கை ஓங்கத் தொடங்கியது. பல்லவ வீரர்கள் பலர் மண்ணில் புரண்டனர். அதுவரையில் நின்று கொண்டிருந்த ரதத்தை சட்டெனக் கிளப்பிய ரதமோட்டுபவன், புயலென விரைந்தான். அவனைத் தொடர்ந்து சாளுக்கிய வீரர்களில் சிலரும் ரதத்தினை அணுகியபடி விரைந்தனர். ஒரு சிலரோ பல்லவ வீரர்களைத் தேக்கி நிறுத்திச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
சேந்தனுக்கு அப்போது தான் சந்தேகம் எழுந்தது. சண்டை நடந்த அந்த வேளையிலும் திரைச்சீலையை விலக்கி எட்டிப் பார்த்திராத ரேவா, ஒருவேளை மயக்கத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும் என உணர்ந்தவனாய் , தன்னைத் தேக்கி நிறுத்தியிருந்த சாளுக்கிய வீரர்களிடம் தனது மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடர்ந்தான்.
சேந்தனும், எஞ்சிய பல்லவ வீரன் ஒருவனும் நான்கு வீரர்களை சமாளிப்பது இயலாத காரியமாய் இருந்தது. இருப்பினும் அவனும் எஞ்சியிருந்த ஒரு பல்லவ வீரனும் தங்களைச் சுற்றி வளைத்தச் சாளுக்கிய வீரர்கள் நால்வரையும் ஒரு நாழிகைக்குப் பின் வெட்டிச் சாய்த்தனர்.
ஆனால் ரதமோ..கண்காணாத தொலைவிற்குச் சென்று விட்டிருந்தது.
ரதத்தினைத் தொடர்ந்து விரட்டிச் செல்வதனால் யாதொரு பயனுமில்லை என உணர்ந்தவர்களாய் இருவரும் சோகந்தோய்ந்த முகத்தோடு ரதம் சென்ற பாதையினை வெறிக்கப் பார்த்தனர்.
இருவரும் நெற்றியில் வழிந்த வியர்வைகளையும், ஆங்காங்கு உடலில் காணப்பட்ட சிறு காயங்களையும் பொருட்படுத்தாமல் மனச்சோர்வுடன் காஞ்சிக்குச் செல்லும் பாதையில் விரைந்தார்கள்.
காஞ்சி அரண்மனையே அல்லோகலப்படத் துவங்கியிருந்தது. ரேவாவை சாளுக்கியர்கள் கடத்திச் சென்று விட்டார்கள் என்றதும் நந்திவர்மன் கோபத்தின் வசப்பட்டான்.
கடல்மல்லையை நோக்கிச் சென்றிருந்த படைத்தலைவன் உதயச்சந்திரனை உடனே அழைத்து வரும்படி சேந்தனையே அனுப்பி வைத்தான்.
தந்திதுர்க்கனோ தனது உடல் குலுங்க வருந்தி அழுதவன், "சாளுக்கியரை பூண்டோடு வேரறுக்காது எனக்கு உறக்கமில்லை ..! " எனச் சூளுரைத்தான்.
அரண்மனையில் இருந்த மகளிர் அனைவரது கண்களிலும் மிரட்சியே தென்பட்டது.
காஞ்சி அரண்மனையின் மந்திராலோசனை மண்டபம். அங்கு ஆசனத்தில் அமர்ந்திருந்த அனைவரது முகத்திலும் கவலையின் சாயை பெரிதும் படிந்திருக்க, நந்திவர்மனோ கோபத்தின் விளைவால் கொதித்துப் போயிருந்தான். கண்களின் சிவப்பும், உதடுகளின் துடிப்பும் அவனது உணர்வுகளைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
" படைத்தலைவரே.. ரேவாவைக் கடத்திக் கொண்டு அதிகத் தொலைவு சென்றிருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன். அனேகமாக கங்கனது தலைநகரான தலைக்காட்டில் சிறை வைத்திருக்கலாமென எண்ணுகிறேன். கங்கனுக்குத் தெரியாமல் இந்தக் கடத்தல் நடந்திருக்க வாய்ப்பில்லை. " என்றான் கோபமும் சீற்றமும் குரலில் வெளிப்பட நந்திவர்மன்.
உதயச்சந்திரனுக்கும் அதே எண்ணம் மனதில் பட்டது. எனவே " தங்களின் யூகம் சரிதான் என எனது மனமும் வலியுறுத்துகிறது." என்றான் அமைதியாக.
" தளபதியாரே..சாளுக்கியரது இச்செயலுக்கு அவர்கள் தகுந்த பலனை அனுபவிக்க வேண்டும், அதுமட்டுமல்லாது சாளுக்கியருக்கு துணை நின்ற கங்கன் சிறீபுருஷனும் அதற்கான பலனை அனுபவித்தாக வேண்டும்..என்ன சொல்கிறீர்..? " என்றான் கோபம் தொனித்தக் குரலில் நந்திவர்மன்.
" உண்மை தான் இருவருக்கும் தகுந்த பாடத்தைப் புகட்டியே ஆக வேண்டும்..எனது தேசத்துப் படைகளையும் தருவிக்கிறேன்.." என்றான் சீற்றத்துடன் தந்திதுர்க்கன்.
" ஹூம்..நமது படைகளை தயார்நிலைப் படுத்துவோம். சாளுக்கியனுக்குப் பல்லவரது பலம் என்னவென்பதை தெரியப் படுத்தியே ஆக வேண்டும்...! " என்றார் பல்லவடி அரையன்.
" அரசே..நிமித்திகனை வரச் சொல்லி நாளைக் குறியுங்கள்..நமது படைகள் வெற்றியைக் காண நகரட்டும்." என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.அவருக்கோ தன்னை மாளிகைக் காவலில் வைத்து எங்கும் நகரவிடாமல் செய்து விட்டார்கள் அல்லவா..! என்ற கோபம் சாளுக்கியர்கள் மீது எழுந்தது.
அக்கணமே, சீராளனை அனுப்பி நிமித்திகனை வரவழைத்தார்கள்.
" நிமித்திகரே, சாளுக்கியரோடு நாம் யுத்தம் செய்யத் தகுந்த நாளைக் குறியுங்கள்..காலம் கடத்திப் பயனில்லை..சமீபத்தில் விரைவில் வரும் நல்லநாளைச் சொல்லுங்கள்.." என்றான் நந்திவர்மன்.
கைகளில் கூட்டிக் கழித்து ஏதோ கணக்கிட்ட நிமித்தகன் , " அரசே வருகின்ற சதுர்த்தி திதி யுத்தத்திற்கு உகந்தது " என்றான்.
" ஆஹா..இன்னும் மூன்றே தினங்கள் தான் உள்ளது..நமதுப் படைகளை அணி வகுத்து நிறுத்துங்கள்..கங்கனையும், சாளுக்கியனையும் ஒழிப்பதே நமது முக்கியக் குறிக்கோளாக இருக்கட்டும் என ஆர்ப்பரித்தான் நந்திவர்மன் .
மந்திராலோசனை முடிந்து அனைவரும் கலைந்தார்கள்.
அரண்மனையை விட்டு வெளியேறி இருளில் மெல்ல தனது இருப்பிடத்தை நோக்கி நடக்கத் துவங்கியிருந்தான் நிமித்திகன்.
ஆங்காங்கு தூண்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் பெரும்பாலும் அணைந்து போயிருக்க, தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. கிருஷ்ணபட்சத்து நிலவு தன் குறை உடலோடு வானில் மேகத்தினூடே மறைந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
இருளின் தனிமையும், பூச்சிகளின் ரீங்கார ஒலியும் சேர்ந்து மிரட்ட, நடையை சற்றே எட்ட வைத்து நடந்து கொண்டிருந்த நிமித்திகனை, ஒரு வீதியின் திருப்பத்தில் வலிமையான கரமொன்று தோளைப் பற்றி அழுத்தி நிறுத்தியது.
அச்சத்துடன் திரும்பிய நிமித்திகனுக்கு முகத்தினை துணியால் மூடி மறைத்திருந்த ஒருவனும், அவனது கரத்தில் நிலவொளியில் பளபளத்துக் கொண்டிருந்த கூர்மையான குறுவாளும் பளிச்செனப் பார்வையில் பட்டது.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக