01.11.20
ரேவா
கங்கனது_வசந்தமாளிகை_79
நிமித்திகர்களைப் பொறுத்தவரையில் மற்றவர்களுக்கு காலநிலையைக் கணித்து, ஆயுள் பலம் உட்பட பலதும் பார்த்து உரைப்பார்களன்றி, தங்களது காலநிலைகளைக் கணித்துப் பார்த்திருப்பார்களா என்றால், சந்தேகம் தான். ஏனெனில் அரண்மனையில் போருக்குச் செல்வதற்கான கால நேரம் குறித்துத் தந்தவன், தனது நிலை இன்னும் சிறிது நேரத்தில் ஆபத்தில் சிக்கப் போவதை அறிந்திருக்க வில்லை, என்பது அந்த இரவு வேளையில் காஞ்சி நகரத் தெருவொன்றில் கையில் குறுவாளோடு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த மனிதனைக் கண்டதும் தான் நிமித்திகனுக்கு தனது நிலையைக் குறித்தக் கவலை எழுந்தது.
இருப்பினும் தனக்குள் ஏற்பட்ட அச்சத்தை வெளிக் காட்டாதவனாய், " யாரப்பா நீ..இரவு வேளையில் முகத்தையும் மறைத்துக் கொண்டு, எனது வழியையும் மறைக்கிறாய்..பல்லவரது ஆட்சியில் வழிப்பறியெல்லாம் நடப்பதில்லை என்றல்லவா கேள்விப் பட்டேன்." என்றான் சற்றே இகழ்ச்சியுடன்.
" உன்னை வழிப்பறிச் செய்து எனக்கென்ன ஆகப் போகிறது..! " என்றான் வழி மறித்து நிறுத்தியவன்.
" அப்படியென்றால் ..நீ என்ன எனது மாமன் மகனா..! முகத்தை மறைத்துக் கொண்டு குறுவாளைக் காட்டி விளையாட்டுக் காட்டுவதற்கு..! "
" குறுவாளைக் காட்டுவது உனக்கு விளையாட்டாகத் தெரிகிறதா..? நன்கு பருத்துப் போயிருக்கும் உனது உடலில் சற்றே இந்த குறுவாளால் விளையாடினால் குருதி கொப்பளிக்கும்..குடலெல்லாம் வெளித்தள்ளும் பார்க்கிறாயா..? " என மிரட்டினான்.
உண்மையில் திகிலும் பயமும் கொண்ட நிமித்திகன், " அப்பனே..நீ யாரோ.. என்னை ஏன் இம்சிக்கிறாய்..? உனக்கு என்னிடம் வேண்டுவது என்ன..? " என்றான் அச்சத்தின் வயப்பட்டவனாய்.
" அப்படி வா..வழிக்கு..! நான் கேட்கும் கேள்விக்கு ஒழுங்கான பதிலைச் சொல்லி விட்டால் உன்னை விடுவித்து விடுவேன்..! இல்லையென்றால்..."
" என்ன கேட்கப் போகிறாய்..? "
" அரண்மனைக்கு இப்போது உன்னை அழைத்துச் சென்றது ஏன்..? அங்கு என்ன கேட்டார்கள்..? நீ என்ன சொன்னாய்..? இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் தந்து விட்டால் , நீ உயிரோடு இங்கிருந்து போகலாம்..! "
" இல்லையென்றால்.."
" என் குறுவாள் குருதியைக் கண்டு வெகுநாளாகிறது..நீ பதிலளிக்க மறுத்தால் இன்று அதனது விருப்பத்தை நான் நிறைவேற்றிடும் படியாகும்.."
நிமித்திகன் யோசித்தான். எப்படியும் படைகள் இங்கிருந்து நகரப் போவது ஊருக்கே தெரியத் தான் போகிறது..அதை இவன் முன்னரே தெரிந்து கொண்டால் தான் என்ன..? நமக்கென்ன வந்தது..! அரண்மனைக்குள் நடந்ததை சொல்லி விடலாமே.." என எண்ணியவனாய்.
" அப்பனே..அரசாங்க விசயம் என் தலை உருளாமல் பார்த்துக் கொள்..! எங்கோ படையெடுக்கப் போகிறார்கள்..! போருக்குப் புறப்படுவதற்கான நல்லநாளினைக் குறித்துத் தரக் கேட்டார்கள்..! தந்து விட்டு வந்திருக்கிறேன்..அவ்வளவு தான்." என்றான் நடுங்கியபடி.
" எந்த நாளைக் குறித்து தந்தாய்..? "
" வரும் சதுர்த்தி திதி அன்று இங்கிருந்து படை நகர உத்தமம் என்றேன்.."
" இதிலொன்றும் சூதில்லையே..? "
" அப்பனே உன்னிடம் பொய்யுரைத்து எனக்கு என்ன ஆகப் போகிறது..! படை நகரப் போவதை எதைக் கொண்டு மறைக்க முடியும்..! " என்றான் நிமித்திகன்.
" சரி..இப்போது நீ போகலாம்..உனது கூற்றில் ஏதேனும் தவறு இருந்தால் எனது குறுவாளுக்கு நீ இரையாவது உறுதி..ஓடிப் போய்விடு..! " என்றான் கடுமையாக மிரட்டியபடி.
ஆளைவிட்டால் போதுமென்ற எண்ணத்துடன், தலைதெறிக்க ஓடி மறைந்தான் நிமித்திகன்.
நிமித்திகன் ஓடி மறைந்ததும் , அவன் சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்றதோடு் திருப்பம் ஒன்றில் நிறுத்தியிருந்த தனது புரவியை அவிழ்த்து ஏறியவனாய், அதனை விரட்டவும் செய்தான் சாளுக்கிய ஒற்றன் தனஞ்செயன்.
* * *
மஞ்சத்தில் இருந்து எழுந்த ரேவா ஒரு கணம் விழித்தாள்..பின் மலைத்தாள்..தலை இலேசாய் வலிப்பதைப் போலிருந்தது. ரதமொன்றில் கடிகைக்குச் சென்று கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இப்போது எங்கிருக்கிறோம் எனப் புரியாமல் திகைக்கவும் செய்தாள். இது கடிகையில் நாம் தங்கும் அறையல்லவே. பல்லவ அரண்மனையும் அல்ல..அப்படியென்றால் இது..? நடந்த நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர முயன்றாள். தன்னை ஒருவேளை எவரேனும் கடத்திக் கொண்டு வந்து விட்டார்களா..? ரதத்தில் ஏறிய சிறிது நேரத்தில் நாசியில் நுழைந்த புதுவித மணம் ... ஓ..புரிகிறது..என்னை மயக்கத்தில் ஆழ்த்தி எவரோ இங்கு கடத்திக் கொண்டு தான் வந்திருக்கிறார்கள், என ஊகித்தறிந்தவளாய் தானிருக்கும் அறையினை மெல்ல நோட்டம் விட்டாள். காற்றோட்டமான சாளரங்களும், அழகிய வேலைப்பாடமைந்த மேற்கூரையும், சுவர்களில் காணப்பட்ட வண்ணமயமானச் சித்திரங்களும், அறைக்குள் காணப்பட்ட யவன தேசத்து மணிவிளக்குகளும் , உயர் ரக பஞ்சணையுடன் கூடிய மஞ்சமும் அறையின் செல்வச் செழிப்பை பறைசாட்டவே செய்தது.
சற்றே மஞ்சத்தை விடுத்து, மெல்ல இறங்கியவள் சாளரத்தை நோக்கி நடந்து சென்றாள். சாளரத்தின் வழியே பார்வையைச் செலுத்தியவள் சற்றே திகைத்துப் போனாள்..சுற்றிலும் கானகத்தைக் போல மரங்கள் அடர்த்தியாய் தெரிய அவளுக்குள் மெல்ல உள்ளுக்குள் ஒரு பய உணர்ச்சி எழுந்தது. இருப்பினும் அதனை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாதவளாய், அறையின் கதவினை நோக்கி நகரத் துவங்கினாள். கதவினைத் திறக்க யத்தனித்தப் பொழுது கதவுத் தானாகவே திறக்க ஒரு இளம்பெண் அறைக்குள் நுழைந்தாள்.
சற்றே திடுக்கிட்டாள் ரேவா.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளும் சற்றே திடுக்கிடவே செய்தாள். மஞ்சத்தில் மயங்கிக் கிடந்தவள் சட்டெனக் கதவருகே வந்து நிற்பது கண்டு .
சுதாரித்துக் கொண்டவளாய் அவளை ஏறெடுத்த ரேவா, " யார் நீ..? நான் எங்கிருக்கிறேன்..? " என்றாள் சீற்றம் தன் குரலில் தொனிக்க.
" மங்கை எனது பெயர்..தங்களைக் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப் பட்டிருக்கிறேன். இப்போது தாங்கள் இருப்பது கங்க நாட்டு அரசரின் வசந்த மாளிகையில்.." என்றாள் மங்கை .
" என்னை இங்கு தூக்கி வரச் செய்தது கங்க நாட்டு அரசரா..? "
" இல்லை.."
" என்ன..இல்லையா..?!" ஆச்சர்யம் தொனித்தது ரேவாவின் குரலில்.
" ஆம்.."
" கங்க நாட்டு அரசர் கடத்திக் கொண்டு வரவில்லை என்றால் , அவர் மாளிகைக்கு நான் எப்படி வந்தேன்..? " கோபத்துடன் எழுந்தது ரேவாவின் குரல்.
" தங்களைக் கடத்திக் கொண்டு வந்தது சாளுக்கியச் சக்கரவர்த்தியின் ஆட்கள். சாளுக்கியரின் நண்பர் எங்களது மன்னர் என்பதனால் தாங்கள் இங்கு இருக்கிறீர்கள்..! " என்றாள் மங்கை.
" என்னைக் கடத்தி வந்தவர்கள் எங்கே.?"
" தங்களை இங்கே விட்டதும், போய் விட்டார்கள்.."
" இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் தெரியுமா...? உங்களது மன்னருக்கு..! "
" தெரியாமலா இருக்கும்..! "
" தெரிந்தே தவறு செய்திருக்கிறீர்கள்..!
என் தந்தைக்கும், பல்லவ சக்கரவர்த்திக்கும் தாங்கள் பதிலளிக்க வேண்டும்..அவர்கள் ஒருபோதும் உங்களைத் தண்டிக்காமல் விட மாட்டார்கள்..! "
" என்னிடம் கூறுவதனால் பயனில்லை..உங்களுக்கு உதவுவதற்கென நியமிக்கப் பட்டவள் நான்.."
" எனக்கு உன் உதவி ஒன்றும் தேவையில்லை..நீ செல்லலாம்."
" அவ்வாறு என்னால் சென்று விட இயலாது..தேவி..தங்களது தேவையறிந்து பணி செய்யவே என்னை இங்கு நியமித்திருக்கிறார்கள். அதில் தவறினால் வீணில் நானே தண்டனைக்குள்ளாவேன்.." என்றாள் பரிதாபமாய் மங்கை.
அவளது கோரிக்கையும் புரிந்தது. தன்னை கங்க மன்னரது கோடைக்கால வசந்தமாளிகையில் சிறை
வைத்திருப்பதையும் , சாளுக்கியச் சக்கரவர்த்தி கீர்த்திவர்மன் கடத்தி வரச் செய்திருப்பதையும் உணர்ந்து கொண்டவள் , ஏன் கடத்தி வரச் செய்தான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கிருந்து தப்புவதற்கான மார்க்கம் ஏதாவது புலப்படுகிறதா என ஆழ்ந்த யோசனையில் இறங்கினாள்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக