கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு
01.11.20
இருளப்பசாமியாடியும் இரண்டு மூணு தலமொறையும்
( சிறுகதை)
அந்த ஊருல இருக்குற குடிகளுக்கு குலதெய்வம் அய்யனாரும் கருப்பு அப்புறம் இருளப்பசாமி ராக்காச்சி அம்மன் ந்னு பட்டியல் நீளும். அவங்க அந்த ஊருல இருந்தாலும் குலதெய்வக்கோயில் கொஞ்சதூரம் தள்ளித்தான் இருக்குது. அதுல சின்னக்க்கோயில் ஒரு ஊருலயும் பெரிய கோயில் ஒரு ஊருலயும் இருக்குது. பெரியகோயில்ல கருப்பசாமி யும் சின்னக்கோயில்ல இருளப்பசாமியும் ராக்காச்சி அம்மனும் இருக்கும் ரெண்டுலயும் அய்யனார் இருக்கும்.
சாமி சம்பத்தப்பட்ட சாமானெல்லாம் இவுக இருக்குற ஊருலதான் இருக்கும். அது சாமிபொட்டி. அதைப்பூசாரி விரதமிருந்து தலையில தூக்கிட்டு சாமியாடிகளோட போய் பூசை நடக்கும். சூலாட்டுப்பூஜை, பொரட்டாசி பொங்கல் குருதை எடுப்பு செவன்சாத்திரை( சிவராத்திரி) அப்புறம் தனிப்பட்ட பூசைகள் எல்லாத்துக்கும் இதே மாதிரிதான் நடக்கும். சாதி சனங்க எல்லாம் பொட்டிதூக்கி சாமியாடி போய் கெடா வெட்டி சாமிகும்புட்டு அங்குனக்குள்ளயே சமைச்சி சாப்புட்டுப்புட்டு வருவாக.
இதுல சின்னக்கோயிலுக்கு இருளப்ப சாமியாடி க்கு அவருமேல எறங்கும்போது சின்னப்பயலா இருந்தாரு. வேணாமுன்னு சும்மா வீட்டுல கருவாடு வைச்சிக்கஞ்சி குடிச்சிட்டு இருந்தவரை சாமி கூட்டியாந்துருச்சு.
சூலாட்டுப்பூசைன்றது இருளப்பசாமிக்கும் ராக்காயிக்கும் சிறப்பா போடக்கூடிய பூஜை அதுல ஏழுமுக கப்பறை எடுத்து பூக்குழில எறங்கி ஆடி சுடுகாட்டுக்குப்போய் காவு குடுக்கனும். இதெல்லாம் முடியுமா இந்தச்சின்னப்பையனாலன்னு எல்லாரும் மலைச்சப்ப சாமி சொல்லிச்சு அது சரியான குருதைதான் எறங்கி பூசையில வெளயாடுறப்ப பாரு ஆட்டத்த ந்னு
சொன்னமாதிரியே சூலாட்டுப்பூசையில இருளப்பசாமியாடி பூக்குழில நின்னு குறிசொன்னாரு. எல்லாரும் அங்கதான் மறிச்சி கேப்பாக. அருளு உச்சத்துல இருக்குமுன்னு.
அதுக்கப்புறம் எல்லாரும் ஏத்துக்கிட்டாக. .துடியான குருததான் அதுன்னு. ஊருல பெரிய வீடு அதுனால மதிப்பும் மரியாதையும் அதிகம். ஊருக்கு நாட்டாமையா ஆயிட்டாரு, ஆனா அவுகளுக்கு ஒரு கொறை இருந்துச்சு, மூணு தலைமுறையா ஆண்வாரிசு ஒண்ணு தான் நெலைக்கும். பொண்ணுக ரெண்டு மூணு பொறந்தாலும் ஆண் வாரிசு ஒண்ணுக்கு மேல தங்குறது இல்ல.
ஆனா அதிசயம இவருக்கு ரெண்டு ஆம்பளை பிள்ளைக இருந்தாக. அதுனால அவரு சந்தோசப்பட்டாரு. இந்தத்தலைமுறையிலயாவது ரெண்டா இருக்குன்னு .
அந்தவருசம் எளவட்டங்களா சேந்து கோயிலுக்கு பால்கொடம் எடுக்குறதுன்னு முடிவெடுத்தாக. அதை இவருகிட்டசொன்னப்ப இவரு சொன்னாரு அது நம்மகோயிலுக்கு வழக்கம் இல்ல. முருகனுக்குத்தான் பால்கொடம் எல்லாம். நம்ம சாமிகளுக்கு சூலாட்டுப்பூசை புரட்டாசி பொங்கல் கெடாவெட்டு பூசை இதுமாதிரிதான் அது சரிப்படாதுன்னு சொன்னாரு . பத்துவருசத்துக்கு முன்னாடி பால் கொடமெடுத்து ஒரே கலாட்டாவாப் போச்சு வேணாமுன்னாரு. ஆனா பயலுக எளவட்டங்க அடங்கல. ஒத்தக்காலுல நின்னாக இவரோட ரெண்டாவது மகன் தான் அதுல துடியா இருந்தான். வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாக,
அதுக்காக பத்திரிக்கை அடிச்சி மாமன் மச்சான் பொண்ணடி எல்லாருக்கும் சொல்லி பால்கொட பூஜை ஏற்பாடு பண்ணுனாக. மாமன் மச்சான் பொண்ணடிக எல்லாம் பால்கொடம் எடுக்குறவுகளுக்கு துணி மணி எடுத்துப்போடனும். அது மொறை. எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா இவருக்கு மனசே சரியில்ல. என்னமோ கெட்டது நடக்கப்போறதுன்னு உள் மனசு சொல்லிச்சி. அதுனால களையில்லாம இருந்தாரு. பாக்குறவுகளும் கேட்டாக ஒண்ணும் சொல்ல முடியல.
இவரோட சின்ன மகந்தான் பேனர் வால்போஸ்ட்டர் வானவேடிக்கைன்னு செலவு பண்ணி ரெடிபண்ணிருந்தான். அவனைச்ச்சுத்தி அவனோட்ட பயலுக சுத்திக்கிட்டு இருந்தாக. வீட்டுக்கு விருந்தாளிக எல்லாம் வந்துட்டாக. பூசைக்கி வேண்டிய சாமான்சட்டெல்லாம் கீழமாசி வீதிலமொத்தக்கடையில வாங்கி இவரு வீட்டுக்கு வந்து சேந்துருச்சு... எல்லாம் இவரு வீட்டுல ஒரு ரூமுகுள்ளதான் இருந்துச்சு.....
இவரோட பெரிய மகன் கோயிலுக்கு போயிருந்தான். அங்கயும் சாமிகளுக்கு வண்ணம் பூசி ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாக கொட்டகை எல்லாம் போட்டாச்சு சனங்க ஒதுங்குறதுக்கு. மும்மறமா வேலை நடந்துக்கிட்டு இருந்துச்சு.
சின்ன மகன் வெளையாட்டுப்பருவம் . அவன் கொடூரமான பயமுறுத்துற வெளையாட் டெல்லாம் வெளையாடுவான். இருட்டுக்குள்ள நின்னு திடீருண்ணு கத்தி பயமுறுத்துறது மாதிரி எல்லாம் செய்வான்.
அன்னிக்கி அவன் அப்படித்தான் விபரீதமா யோசனை பண்ணிட்டான். பிளாஸ்டிக் ஓஸ் எடுத்து அதுல தூக்குப்போடுறமாதிரி செட்டப்பண்ணி அத உத்திரத்துல தொங்க விட்டு சன்னல்ல ஏறி அதை மாட்டி பயமுறுத்துறது அவனோட திட்டம். அது மாதிரி செட்டப்பண்ணி நிக்கயில கால் தடுமாறி சிக்கிட்டான். அது அவன் சங்க நெரிச்சிடுச்சு முழிபிதுங்கி தப்பிக்க முயற்சி பண்ணுனான் ஆனா விதி வெளையாடிருச்சு. அவன் உசிற எடுத்துருச்சு.
அந்த ரூமுக்கு சாமான் எடுக்கப்போன அவனோட அம்மா அவன் எதோ வெளையாட்டுப்பண்ணுறான்ன்னு போதும்டா எறங்கி வான்னு சொல்லிட்டு வந்துருச்சு. ஆனா அதுக்கு ஏதோ பொறிதட்ட திரும்பப்போய் பாத்ததும் விபரீதம் புரிஞ்சி கத்துச்சு. இவரு ஓடியாந்து அவனை கீழ எறக்கி பாத்தப்ப எல்லாமே முடிஞ்சிருச்சு...
எல்லாரும் வாயில வகுத்துல அடிச்சிக்கிட்டு அழுதாக. இவரால தாங்க முடியல. ஒருபக்கம் பால்குடப்பூசை இருக்கு. அதுக்கு முன்னாடி இப்புடி ஆகிப்போச்சு. அவசரமா அவனை எடுத்து அடக்கம் பண்ணுனாக. எல்லாரும் பூசை நடத்துறதா இல்லையான்னு விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாக.
இவரு சொன்னாரு. நான் மொதல்லயே சொன்னேன் வேணாமுன்னு. இப்ப என்ன பண்ணுறது. பூசை ஏற்பாடு பண்ணிட்டு நிறுத்துனா ஊருக்கு ஆகாது. அதுனால நடக்கட்டும் ஏற்பாடுபண்ணுன மாதிரின்னு சொல்லிட்டாரு.
ஆனா அவரால தாங்க முடியல. சாமி இப்புடி பண்ணிப்புட்டயே. வழக்கம்போல ஒத்தையாக்கிட்டயே என் மகனன்னு அழுதாரு
சொரத்தே இல்லாம பால்கொடம் நடந்துச்சு. சாமியாடிக சாமி எறக்கி பால்கொடம் தூக்கி ஊர்வலம் வந்துச்சு.
ஊர்வலம் இவரு வீட்டுக்கு முன்னாடி வாரப்ப இவரோட தங்கச்சிக சாமியாடி கால்ல தண்ணி ஊத்தி விழுந்து கும்புட்டு என்ன கருப்பு என் அண்ணன் குடுப்பத்துக்கு வாரிச ஒத்தையாக்கிப்புட்டயே ......ன்னு அழுதுகிட்டே கேட்டாக.
அப்ப சாமியாடி கண்ணுல இருந்தும் தண்ணி ஊத்துச்சு. அது விதிப்பயனப்பா. என்னால ஒண்ணும் செய்ய முடியலன்னு சாமி சொல்ல எல்லார் கண்ணுல யும் கண்ணீர் தார தாரயா ஊத்துச்சு......இவர் கண்ணுல மாலை மாலையா கண்ணீர் வர வீட்டுக்குள்ள போய் தனிமையில அழுதாரு..... பால் கொடங்கள் கோயிலுக்கு போய் பூசை ஒரு வழியா முடிஞ்சிடுச்சு
அன்னிக்கி ராத்திரி அவரு கனவுல சின்னமகன் வந்தான். அப்பா மன்னிச்சிருங்க நீங்க சொல்லியும் கேக்காம நான் பால்கொடம் ஏற்பாடு பண்ணிட்டேன்....தப்புதான்..... ந்னு கண்ணீரோட சொன்னான். இவரால தாங்க முடியல........ கண்ணுல இருந்து வந்த கண்ணீர் தலைகாணிய நனைக்க அழுதாரு. ..........
கருப்பு திரும்ப ஒத்தவாரிசாக்கிப்புட்டயேன்னு பொலம்புனாரு......அப்ப வாசல்ல குடுகுடுப்பக்காரன் சொல்லிட்டுப்போனான் நல்லதும் கெட்டதும் நாலு தலைமொறதான்.....நடக்குறதெல்லாம் நாராயணன் செயலு இருக்குறதெல்லாம் இருளப்பன் செயல்ன்னு..........
அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக