05.11.20-ரேவா : 83 : புத்திசாலிப்_புரவி - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 5 நவம்பர், 2020

05.11.20-ரேவா : 83 : புத்திசாலிப்_புரவி



04.11.20

ரேவா


புத்திசாலிப்_புரவி_83


மனிதர்களுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகள் அபரிமிதமானவை. அத்தகைய உணர்ச்சிகளால் அவர்கள் எண்ணியதைக் கூட செயல்படுத்த முடியாமல் அவர்களது அவயங்களே ஒத்துழைக்க மறுத்து விடுகின்றன. அது போன்ற உணர்ச்சிகளில் பயமும் ஒன்று.  ஏனெனில் பய உணர்ச்சியால் திடீரென நமது குரலும்  தடைபட்டுப் போய், நம்முடன் ஒத்துழைக்க மறுத்து விடுகிறது. அவ்வாறு தான் உணவருந்தி கைகளை கழுவி விட்டு சாளரத்தை நெருங்கிய ரேவா, சாளரத்தினை ஒட்டி இருளில் நின்றிருந்த உருவத்தைக் கண்டதும் " ஆவென " அலற முற்பட்டாளெனில் , அவளது குரலோ ஒத்துழைக்க மறுத்தது.  சீராளனது நல்ல நேரமோ என்னவோ, அவள் பயத்தினால் அலறியும் குரலானது அவளிடமிருந்து பிறக்க வில்லை..அதற்குள்ளாக சீராளன் இருளிலிருந்து முழுதும் வெளிச்சம் அவனது முகத்தினில் படுமாறு வந்து நின்று விடவே..ரேவாவிடம் எழுந்த பயம் இப்போது ஆச்சர்யத்திற்கு மாற,  திகைத்தவளாய், " நீங்கள்..எப்படி இங்கே..? " என்றாள் தயங்கியவாறு.


சட்டெனச்  சாளரத்தில் ஏறி அவளது அறைக்குள் நுழைந்தவனாய், " தேவி..நல்ல வேளை தாங்கள் அலறவில்லை, அலறியிருந்தாள் நான் தங்களது வாயை கரத்தினால் மூட எத்தனித்திருப்பேன்." என்றான் குறும்புடன்.


ரேவாவும் சிரித்தபடியே, "ஏதோ..நல்லநேரம் . அந்த துர்பாக்கியமான நிலை உங்களுக்கு ஏற்படவில்லை.." என்றாள் ரேவா.


" தேவி..நமது படைகள் காவிரிக் கரையில் வந்து முகாமிட்டிருக்கின்றன. நமது அரசர் தந்த ஓலை இது..படித்தபின் எரித்து விடுங்கள். இங்கு எப்போதும் போல் இருக்க முயற்சியுங்கள்." என்றபடியே தன்னிடமிருந்த ஓலையை எடுத்து நீட்டினான்.


அதில் இரண்டே வரி தான் எழுதப்பட்டிருந்தது.


" போரில் வென்றதும் வந்து அழைத்துச் செலகிறேன். அச்சத்தைத் தவிர்க்கவும்."   _நந்திவர்மன்.


" ஏன்..இப்போதே வந்து அழைத்துச் செல்லக் கூடாதா..போரில் வென்றுதான் அழைத்துச் செல்ல வேண்டுமா..? " என்றாள் கோபத்தோடு.


" தேவி..தங்களைப் போரில் வென்றபின் தான் அழைத்துச் செல்ல வேண்டுமென்பது படைத்தலைவரது கட்டளை. நமது மன்னர் உடனே அழைத்து வரவே விரும்பினார் ..ஆனால் படைத்தலைவரோ அதற்கு இணங்க வில்லை. வென்றபின் அழைத்து வருவதே நல்லது என தீர்மானமாய் கூறிவிட்டார்.


ரேவாவிற்கு...உதயச்சந்திரன் பேரில் சொல்லவொண்ணா கோபமும், ஆத்திரமும் எழுந்தது. படைத்தலைவனை மனதார திட்டித்தீர்த்தாள்.


ஓலையை ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்தவள், அதை அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கில் சென்று எரித்த பின் சாம்பலை சீராளனிடமே தந்து விட்டாள்.


" தேவி..நானிங்கு வந்து சென்றது எவருக்கும் தெரிய வேண்டாம். ஏனெனில் நானிங்கு வந்து சென்றது தெரிந்தால் தங்களது உயிருக்கு ஆபத்து நேரலாம் அல்லது தங்களை உடனே இடம் மாற்ற முயற்சிக்கலாம்..எனவே தான் ஓலையை  எரிக்கும் படியும் உத்தரவு தரப்பட்டது..கவனமாய் இருங்கள்..நான் வருகிறேன்..உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிட்டும்." என்றவனாய் அந்த அறையின் சாளரத்தின் வழியே வெளியேறி இருளில் கலந்தான்.


சீராளன் சாளரத்தின் வழியே உள்ளே சென்றதையும், பின் சிறிது நேரத்தில் அதே சாளரத்தின் வழியே வெளியேறியதையும் ஒரு ஜோடி விழிகள் கவனிக்கவே செய்தது.


சீராளன் ரேவாவின் அறையை விட்டு வெளியேறி வந்தவழியே மேன்மாடத்தின்  தாழ்வரை இருளிலேயே நடந்தவன், வெளிச்சுவரை அடைந்ததும் தான் ஏறி வந்த மாமரக் கிளையைப் பற்றியவாறே மெல்லக் கீழிறங்கத் துவங்கியதோடு, தனது வாயால் ஒரு வித சமிக்ஞையை எழுப்ப, அவனதுப் புரவி மிகச் சரியாக அந்த மரத்திற்கு கீழே வந்து நின்றதோடு, தன் இருப்பைக் காட்ட லேசாய் கனைக்கவும் செய்தது. சட்டென மரத்திலிருந்து குதிரையின் முதுகில் தாவியவனாய் அதன் சேணத்தைப் பற்றியதோடு, குதிரையின் முகத்தினை மெல்லத் தடவிக் கொடுத்தான். கோட்டைச் சுவரில் காவல் புரிந்து கொண்டிருந்த ஒரு வீரனுக்கு குதிரையின் கனைப்பொலி இலேசாய் காதில் விழவும் பரபரப்பாய் கோட்டையின் கீழே சற்று உன்னிப்பாய் கவனிக்கத் துவங்கினான். ஆனால் சீராளனோ தனது புரவியோடு மரங்கள் அடர்ந்த அப்பகுதியை விட்டு வெளியேறாமல் காலம் கடத்தவே, சற்று நேரம் தனது பார்வையை கூர்மையாக்கி ஏதாவது சலனம் தெரிகிறதா எனக் கவனித்த கோட்டையின் காவலன் , இருளில் ஒன்றும் புலப்படாத காரணத்தால் தனது பணியைத் தொடர வேறிடம் நோக்கி நகர்ந்தான். சீராளனது உடையின் நிறமும், புரவியின் கருமை நிறமும்,  அவ்வேளையில் நிறையவே ஒத்துழைப்பினை நல்கியது.


சுமார் ஒரு நாழிகைக்கு மேலாக எவ்வித சலனமுமின்றி அமைதியாய் இருந்த சீராளன் , காவலன் கோட்டைச் சுவரினை விட்டு அகன்றதும் தனது புரவியைத் திருப்பிக் கொண்டு விரைந்தான். காரிருள் சூழ்ந்த வேளையாயினும்  நிலவின் ஒளியும், வானத்து நட்சத்திரங்களின் ஒளியும் அவனது பாதையினைத்  துல்லியமாய் உணர்த்த சீரான வேகத்தில் புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தான் சீராளன். அவ்வப்போது எழுந்த காட்டு விலங்குகளின் பயங்கர சத்தமும், யானைகளின் பிளிறல்களும்,  கோட்டான்களின் கூக்குரலும், பூச்சிகளின் ரீங்காரமும் காவிரி நதியின் சலசலப்பும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க பாதையை உன்னிப்பாக கவனித்தபடி விரைந்து கொண்டிருந்தவனது பார்வையில் பட்டது பாதையை மறைத்தபடி நின்றிருந்த  வேங்கை.


வேங்கையினைக் கண்டதும் கால்கள் சறுக்க தனது வேகத்தைக் குறைத்த புரவியும் மெல்ல தனது தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தபடி ஓரிடத்தில் நிலை கொள்ளாது முன்னும் பின்னும் குளம்புகளால் மண் தரையை தட்டியதோடல்லாமல் , வேங்கையை வெறிக்கப் பார்த்தது.


வேங்கையைக் கண்டதும் தன் குறுவாளைக் கையில் எடுத்துக் கொண்டவன் , தனது  புரவியிலிருந்து கீழே இறங்கவும் சீராளனின் புரவி வந்த திசையை நோக்கி விரைந்தோடி விட்டது. சீராளனையும் புரவியையும் தன் மிரட்டும் விழிகளால் கவனித்துக் கொண்டிருந்த வேங்கை  திடீரென சீராளனின் மீது பாய்ந்தது. அதையே எதிர் பார்த்தவன் போல் இலாவகமாக குனிந்து தப்பியதோடு தனது குறுவாளால் அதன் வயிற்றில் கீறிடவும் செய்தான். சீராளனின் இச்செய்கையினால் சீற்றமடைந்த வேங்கை தன் கோரப் பல்லைக் காட்டியபடி மறுபடியும் அவன் மீது மூர்க்கமாகப் பாய்ந்ததோடு, தன் வலிமையான கால் நகங்களால் அவனது நெஞ்சில் கீறிடவும் செய்தது. வலியும் எரிச்சலும் ஒரு சேர எழ, பயங்கர கோபத்திற்கும் சீற்றத்திற்கும் ஆளானவன் பாய்ந்த வேங்கையின் கழுத்தில் தனது குறுவாளை ஆழமாய் பாய்ச்சிடவே,  அது பயங்கரமான அலறலோடு கானகத்திற்குள் ஓடி மறைந்தது. வேங்கையோடு போராடியதில் மிகுந்த சோர்வடைந்த சீராளன் தனது வாயை குவித்து ஒலியெழுப்ப ஓடி மறைந்த அவனது குதிரை திரும்பி வந்து நிற்க..அதில் மெல்ல தட்டுத்தடுமாறியபடி ஏறியவனாய் , அதன் முதுகில் சோர்ந்து அப்படியே படுத்து விட்டான். அவனைச் சுமந்தபடி இலக்கினை நோக்கி விரைந்தது அந்த புத்திசாலிப் புரவி.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages