06.11.20
ரேவா
போர்ப்பாசறையில்_சீராளன்_84
காலைக் கதிரவன் வானில் ஜாஜ்வல்யமாய் பிரகாசிக்கத் துவங்கியிருந்தான். வெம்பை போர்ப்பாசறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல்லவப் போர் வீரர்களின் பார்வையில் பட்டது அந்த விசித்திரக் காட்சி.
கரியநிறப் புரவி ஒன்று அவர்களது பாசறையை நோக்கி வந்து கொண்டிருந்தது. காலைக் கதிரவனின் ஒளியானது அப்புரவியின் மேல் பட்டு மினுமினுத்துக் கொண்டிருக்க, கம்பீரமாக அப்புரவி இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் திசை நோக்கியே வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை எவரும் செலுத்திக் கொண்டு வருவதாக தெரியாத காரணத்தால், சற்றே திகைப்பிற்குள்ளான வீரர்கள் இன்னும் புரவியானது சற்றே நெருங்கி வரவும், குதிரையின் முதுகில் எவரோ படுத்தபடி வருவது இலேசாய் புலனாகியது.
அதிலொரு வீரன், " இது நமது ஒற்றர் தலைவன் சீராளனது புரவியல்லவா ..! " என்றான் பெருங்குரலெடுத்து.
உடனே, வீரர்கள் புரவியை நோக்கி விரைந்தோடியதோடு மட்டுமல்லாமல், அதன் மேல் காயத்தோடு மயக்கத்தில் ஆழ்ந்திருந்த சீராளனையும் கீழிறக்கி ஒரு கூடாரத்திற்குள் கொண்டு சென்று மஞ்சத்தில் கிடத்தினார்கள். அதற்குள்ளாக முகாமெங்கும் சீராளன் மயக்கத்தோடு வந்து சேர்ந்த விசயம் பரவ, பல்லவடி அரையன், உதயச்சந்திரன் முதலானவர்களுடன் நந்திவர்மனும் சீராளனைக் காண , அவனை மஞ்சத்தில் கிடத்திய கூடாரத்தை நோக்கி விரைந்து வந்தனர்.
உடலெங்கும் ரத்தக் கீறல்களுடன் காணப்பட்டவனை, வீரர்கள் குளிர்ந்த நீரினை முகத்தில் தெளித்தும், பருகவும் தந்து மயக்கத்தைப் போக்கியிருந்தனர்.
மஞ்சத்தில் படுத்திருந்தவனை வைத்தியர் பரிசோதித்து , காயங்களுக்கு சில பச்சிலைகளை அரைத்துப் போட்டுக் கொண்டிருந்தார். சூரணமொன்றை தேனில் குழைத்து அவனது நாவில் தடவினார்..அது தேனின் சுவையை மீறி கசக்க முகத்தை அஷ்ட கோணலாக்கினான்.
நந்திவர்மனையும், உதயச்சந்திரனையும் பார்த்தவுடன் இலேசாய் சிரித்தவன், படுக்கையை விட்டு எழ முயற்சித்தான். கைகால்களை அசைக்க முடியாதபடி உடலெங்கும் வலியிருந்தது. வலியினால் எழுந்த சுரமும் இலேசாய் இருப்பதை அவனால் உணர முடிந்தது.
" என்ன நடந்தது சீராளா..? " என்றார் பல்லவடி அரையர்.
" தளபதி அவர்களே, சீராளனுக்கு ஓய்வு அவசியம்..தாங்கள் பிறகு விசாரித்துக் கொள்ளலாமே..! " என்றார் வைத்தியர்.
" நன்கு ஓய்வெடுக்கட்டும்..பிறகு விசாரித்துக் கொள்ளலாம் " என்ற தளபதியைத் தொடர்ந்து மூவரும் அந்தக் கூடாரத்தை விட்டு வெளியேறினார்கள்.
கங்கனது இளவேனிற் காலத்து வசந்தமாளிகையில் ரேவா இருந்த அறைக்குள் நுழைந்தாள் மங்கை. மஞ்சத்தில் அமர்ந்தபடி சாளரத்தையே கவனித்துக் கொண்டு, பலத்த சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தவள் முதலில் மங்கை அறைக்குள் நுழைந்ததை சரிவர கவனிக்கவில்லை.
மங்கை ரேவாவின் அருகில் நெருங்கியதோடல்லாமல் " தேவி..ஏன் இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்..? " என்றதும் தான் சட்டெனத் திடுக்கிட்டவளாய்,
" என்ன கேட்டாய்..? " என்றாள் சற்றே கலவரத்துடன்.
" இன்னும் தூங்கவில்லையா என்றேன் ! " என்றாள் மங்கை
" மங்கை..நித்திரை வர மறுக்கிறது. மனதில் இனம் புரியாத குழப்பம் தென்படுகிறது.."
" ஏன்..சற்று நேரத்திற்கு முன்பு வரை நன்றாகத் தானே இருந்தீர்கள்..! அதற்குள்ளாக குழப்பம் வருமாறு எவர் உங்களது மனதை வந்து சிதைத்தது..? " என்றாள் விஷமத்துடன் மங்கை.
ரேவாவிற்கு திக்கென்றது. சீராளன் வந்து போனதை மங்கை ஒருவேளை அறிந்திருப்பாளோ..! மனதை யார் அதற்குள்ளாக வந்து சிதைத்தது என்கிறாளே..?! எதற்கும் அவளாக கேட்காத வரையில் நாமாக எதையும் உளறி விடக் கூடாது..! எனத் திட்டமாய் முடிவெடுத்தாள் ரேவா.
" ஒன்றுமில்லை மங்கை..பழைய நினைவுகளை எண்ணிச் சற்று வருத்தத்தில் ஆழ்ந்திருந்தேன்.." என்றாள் சோகமாய் ரேவா.
ரேவா தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பது மங்கைக்கு புலப்பட்டது. ஆபத்தில் இருப்பவள் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டுப் பார்ப்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும்..! அது இயல்பு தானே..! என எண்ணியவளாய்,
" நல்லது தேவி..நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்..நான் எனது அறைக்குச் செல்கிறேன்.." என்றவளாய் தனது அறையை நோக்கி நடக்கத் துவங்கினாள்.
ஆனால் அதே வேளையில், மங்கையின் உள்ளம் சற்றுமுன் நடந்ததை எண்ணிப்பார்த்தது.
மங்கை உணவுத் தட்டினையும், பால்குவளையையும் அறைக்குள் வைத்து விட்டு வெளியேறும் போது ஏதோ ஒரு உருவம் சட்டென இருளடர்ந்த தூணின் பின் மறைந்ததை அவளால் உணர முடிந்தது. இந்த மாளிகைக்கு அனாவசியமாக எவராலும் வந்து விட முடியாது என்பது அவள் அறிந்தவரை உண்மை. அவ்வாறு இருக்கையில் தூணின் மறைவில் ஒளிந்திருப்பவன், ரேவாவை தப்புவிக்க வந்தவனா அல்லது ஆபத்தை விளைவிக்க வந்தவனா என அறிந்து கொள்ள வேண்டுமென மங்கைக்கு ஆவல் எழுந்தது.
ரேவாவை தப்புவிக்க வந்தவன் எனில் நல்லது, அதே வேளையில் அவளுக்கு தீங்கிழைக்க வந்தவன் எனில் சத்தமிட்டு ஆட்களை அழைக்க வேண்டும் என்றெண்ணியவளாய்..யாரென அறிந்து கொள்ளும் ஆவலில், மேன் மாடத்தை விட்டு கீழிறங்கிப் போவதாகப் போக்கு காட்டியவள் தாழ்வரைப் படியில் இறங்கியதும் மறைவாக ஒளிந்தபடி ரேவாவின் அறையையே கவனித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் ஒரு உருவம் தூண் மறைவிலிருந்து வெளிப்பட்டதோடு, சாளரத்தின் அருகே சென்றதையும், சிறிது நேரத்தில் சாளரத்தின் வழியே உள்ளே இறங்கிய பின் , சற்று நேரம் கழித்து மீண்டும் அதே சாளரத்தின் வழியே வெளியேறியதோடு, தன் கையிலிருந்த எதையோ வெளியே போட்டு விட்டு, கையை உதறிக் கொண்டு நிதானமாய் அடியெடுத்து மெல்ல மெல்ல நகர்ந்ததையும் கண்ணுற்றவள் , வந்த உருவம் நிச்சயமாக ரேவாவுக்கு தெரிந்தவன் தான் என ஐயமற ஊகித்தறிந்தாள். ஏனெனில் தெரியாத ஒருவன் எனில் சாளரத்தில் அவனைக் கண்டதுமே ரேவாவிடமிருந்து ஒரு அலறல் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே வந்தவன் ரேவாவிற்கு பரிச்சயமானவன் என்பதை அறிந்ததும், மங்கை அது குறித்து அலட்டிக் கொள்ள வில்லை. ரேவாவை அங்கிருந்து தப்புவிக்க வேண்டும் என்றே மங்கையும் எண்ணமிட்டாள். ஏனோ ரேவாவின் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் அவள் தப்புவதில் , தான் நேரடியாக ஈடுபடாதவளாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கங்கனுக்கும், சாளுக்கியனுக்கும் யார் பதில் அளிப்பது..! எனவே ரேவாவை மீட்பதற்கு யாராவது வந்தால் நல்லது என்றே எண்ணினாள்.
ஆனால் ரேவாவே தப்ப நினைத்தாலும் தப்ப எண்ணாதவாறு அங்கேயே இருக்கும் படியாக அல்லவா தகவல் வந்தடைந்தது என்பதை மங்கை அப்போது அறிந்திருக்கவில்லை.
அதுமட்டுமின்றி வந்த உருவம் எதையோ வெளியில் போட்டதோடு, கையை உதறிக் கொண்டு சென்றதே..என்னவாக இருக்கும்..? காலையில் அதனை கண்டு கொள்ள வேண்டும் என எண்ணமிட்டாள்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக