08.11.20-ரேவா : 86 : ஏமாற்றத்தில்_முடிந்த_பயணம் - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 8 நவம்பர், 2020

08.11.20-ரேவா : 86 : ஏமாற்றத்தில்_முடிந்த_பயணம்



08.11.20


ரேவா


ஏமாற்றத்தில்_முடிந்த_பயணம்_86


சாளுக்கியரது மந்திராலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சிறீபுருஷன் தனது கூடாரத்திற்கு சென்றதும், கீர்த்திவர்மனும் தனஞ்செயனும் வெளியே வந்தார்கள். இருள் சூழ்ந்த அப்பகுதியில் வீசிக்கொண்டிருந்த தென்திசைக் காற்று இதமாக  வீசிக் கொண்டிருந்தாலும், அதை ரசிக்கும் மனப்பான்மையில் கீர்த்திவர்மன் இல்லை. ஆங்காங்கு போர்வீரர்கள் அமர்ந்தும், படுத்தும் பேசியபடி இருக்க, ஒன்றிரண்டு பந்தங்களும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 


" தனஞ்செயா.. கங்கனது வசந்தமாளிகை வரைச்  சென்று வரலாமா..? " என்றான் ஏதோ யோசனையோடு திடீரென்று கீர்த்திவர்மன் .


ரேவா எனும் காந்தம் அவனை அங்கே இழுத்துக் கொண்டிருந்தது. பெண்கள் விசயத்தில் முற்றும் துறந்த முனிவர்களில் இருந்து அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் விழுந்து எழுந்தவர்கள் தானே..! மேலும் அந்நாளையப் போர்கள் பலவும் பெண்ணும் மண்ணுக்கும் தானே நிகழ்ந்திருக்கிறது. பெண் மோகத்தினால் மோசம் போனவர் தான் எத்துனை பேர்..! சாளுக்கியனது இந்தப் போர் நடவடிக்கையும் பெண்ணால் எழுந்தது தானே..! 


" அரசே..எப்போதும் போர் துவங்கலாம் என்றிருக்கும் இச்சூழலில் இப்போது அவசியம் சென்று வரத் தான் வேண்டுமா..? " குரலில் கலவரம் தெரிந்தது தனஞ்செயனுக்கு.


" தனஞ்செயா..இப்போது சென்று விட்டு நாளை மாலைக்குள் திரும்பி விடுவோம்..இங்கிருந்து அருகில் தானே இருக்கிறது..! இனி எப்போது சந்தர்ப்பம் வாய்க்குமோ தெரியாது..! " கீர்த்திவர்மன் குரலில் மோகப்பித்து பூரணமாய் வழிந்தது. 


கீர்த்திவர்மனுக்கே சந்தேகம் வந்து விட்டது போல, இனியொரு சந்தர்ப்பம் வாய்க்குமோ, வாய்க்காதோ என்று..!


அரசன் கூறியபின் மறுத்துப் பேச தான் முடியுமா..?! தனஞ்செயன் இணங்க..இருவரது புரவிகளும் கங்கனது வசந்தமாளிகைக்கு அந்த இரவு வேளையையும் பொருட்படுத்தாமல்  விரைந்தன.


கங்க நாட்டு மன்னர் சிறீபுருஷனின் வசந்தமாளிகைக்கு , காலை வேளையிலேயே திடீரெனச்   சாளுக்கிய சக்கரவர்த்தி கீர்த்திவர்மன் வருவான் என வசந்தமாளிகையின் கோட்டைக் காவலர்கள் எவரும் எதிர்பார்க்காத காரணத்தால் அங்கு பரபரப்பு எழுந்து காணப்பட்டது. ஒரு வீரன் வேகமாக மங்கையை நாடிச் சென்றவனாய், 


" சாளுக்கியச் சக்கரவர்த்தி இங்கு விஜயம் செய்திருக்கிறார்.." என்றான் படபடப்புடன்.


" என்ன..! " என்று ஆச்சர்யத்தின் வசப்பட்டவள், சற்றே நிதானித்து " அவர் மட்டும் தான் வந்திருக்கிறாரா..? " என்றாள்.


" ஆம்..அவருடன் சாளுக்கிய தேசத்து ஒற்றன் தனஞ்செயனும் வந்திருக்கிறார்..காரணம் புரியவில்லை.." என்றான் கோட்டையின் காவலன்.


காரணம் மங்கைக்கா புரியாது..!


" ஹூம்..சரி..நீங்கள் போகலாம்..அவர் அழைத்ததும் வந்து அழையுங்கள் .. நான் வருகிறேன்.." என்றவள், சாளுக்கிய சக்கரவர்த்தி ரேவாவை பார்த்துப் போக வந்திருப்பார்..வேறெதற்கு இங்கு வரப் போகிறார். என்று எண்ணமிட்டவளாய் ரேவாவை எச்சரிக்கைச் செய்ய அவளது அறைக்கு விரைந்தாள்.


" தேவி..சாளுக்கிய சக்கரவர்த்தி திடீரென விஜயம் செய்திருக்கிறார். அவரது வருகையின் நோக்கம் தங்களைக் காண்பதற்காகத் தான் இருக்கும். நீங்கள் உடல் நலமின்றி இருப்பதாகக் கூறி நான் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் எக்காரணம் கொண்டும் கதவினை திறந்து வெளிவர வேண்டாம். உள்ளே தாழிட்டுக் கொள்ளுங்கள். நான் சமாளித்துக் கொள்கிறேன்."


" மங்கை..எனக்கு உடன்பிறந்தோர் யாருமில்லை..எனது தாயையும் இளவயதிலேயே இழந்து விட்டேன். உன்னை என் சகோதரியாகவே பாவிக்கிறேன். நீ செய்யும் இந்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் எனப் புரியவில்லை.." என்றாள் கண்ணில் துளிர்த்த நீருடன் ரேவா. தன்னைக் கடத்திக் கொண்டு வந்து, இங்கு சிறைவைத்திருப்பது சாளுக்கியன் தான் என மங்கையின் வாயிலாக ஏற்கனவே அறிந்திருந்தாள். எனவே இப்போது திடீரென சாளுக்கிய கீர்த்திவர்மன் வருகை புரிகிறான் எனில் , அது அவனது தீய எண்ணத்தின் வெளிப்பாடு தான் என்பதை அவள் அறியாமல் இல்லை.


கங்கரது நாட்டில் இளவரசி பூசுந்தரியின் தோழியாக இருந்தேன். அவர் பாண்டியரை மணமுடித்துச் சென்றதும் சரியான துணையாக எவரும் அமையவில்லை..தங்களைக் கண்டவுடனே உங்களிடம் ஏதோ ஒரு பிணைப்பு என்னுள் எழுந்து விட்டது. சரி..சரி..நான் கூறியது கவனம்..எக்காரணத்தை முன்னிட்டும் வெளியில் வர வேண்டாம். மஞ்சத்தில் நித்திரையில் ஆழ்ந்து இருங்கள்..நான் சமாளித்துக் கொள்கிறேன்." என்றவளாய் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.


அவள் மேன்மாடப் படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே வேறொரு காவலன் மங்கையைத் தேடி வந்தான்.


" மங்கை, உன்னை சாளுக்கிய சக்கரவர்த்தி அழைக்கிறார்." 


" வருகிறேன்.." என்றவளாய் , அவனைப் பின் தொடர்ந்தாள்.


வசந்தமாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த மஞ்சத்தில் நன்கு சாய்ந்தபடி அமர்ந்திருந்தான் கீர்த்திவர்மன் . அவனுக்கு அருகில் கைகளைக் கட்டியவாறு நின்றிருந்தான் சாளுக்கிய ஒற்றன் தனஞ்செயன். 


மங்கை ஏற்கனவே இருவரையும் சந்தித்து இருப்பவள் தான். கங்கரது அரண்மனையில் ஒன்றிரண்டு முறை சாளுக்கிய சக்கரவர்த்தியை , சிறீபுருஷனோடு சந்தித்து இருக்கிறாள். அதே போல் தனஞ்செயனையும் அறிவாள்.


மங்கையைக் கண்டதும் முகமலர்ந்த கீர்த்திவர்மன், " மங்கை நீதான் ரேவாவை இங்கு கவனித்துக் கொள்கிறாயா..? " என்றான் புன்முறுவல் பூத்தவனாய்.


" ஆமாம்.சக்கரவர்த்தி அவர்களே..கங்க மன்னரது கட்டளை,  நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பது.."


" ம்.ம்..பொருத்தமானவள் தான்..நீ..!  ரேவா எப்படி இருக்கிறாள்..? "


" அவர்கள் இங்கு வந்ததில் இருந்து சரிவர உண்பதில்லை. உடல்நலம் வேறு பாதிக்கப் பட்டு இருக்கிறது. வைத்தியர் தரும் மருந்தினையும் உட்கொள்ளாமல் மஞ்சத்திலேயே கிடக்கிறார்..! "


" ஆ..அது நல்லதல்லவே..! "


" நல்லதல்ல தான்..சொன்னால் எங்கு கேட்கிறார்..? அறையின் தாழினையும் உட்பக்கமாக பூட்டிக் கொண்டு எவரையும் உள்ளே விட மறுக்கிறார். யாராவது சென்றாலும் கைகளில் கிடைக்கும் பொருள்களை எடுத்து வீசுகிறார்..! எனவே நாங்கள் பயந்து பயந்தே சேவகம் செய்ய வேண்டியதிருக்கிறது."


மங்கை கூறியதும் கீர்த்திவர்மனது முகம் இருளடைந்து காணப்பட்டது. ஒன்றும் பேசாமல் சிந்தித்தபடியே அமர்ந்திருந்தவனை , மங்கையின் குரல் கலைத்தது.


" சக்கரவர்த்தி அவர்களே, ஏதோ போர்மேகம் சூழ்ந்து விட்டதாகவும், பல்லவரது படைகள் வெம்பை நகர் அருகே முகாமிட்டு இருப்பதாகவும் எங்களுக்கு தகவல் வந்ததே..அதனால் தான் தங்கள் முகம் வாடி உள்ளதோ..! " என்றாள் சற்றே இகழ்ச்சி கலந்த குரலில். கூடவே.."தாங்களோ இங்கு வருகை தந்திருக்கிறீர்கள்..ஒருவேளை போர் நடைபெறாதா..? இல்லை பல்லவர் படை திரட்டி வந்திருப்பது பொய்யான தகவலா..? " என்றாள் மேலும் குரலில் விஷமம் தொனிக்க மங்கை.


" இல்லையில்லை..போர் உறுதியாக நடைபெறத் தான் போகிறது. பல்லவரை புறங்காட்டி ஓடச் செய்யத் தான் போகிறோம்..இராஷ்டிரகூட இளவரசியை கொண்டு வந்தார்கள் எனக் கேள்விப்பட்டேன். அவளது நலத்தினை விசாரித்துவிட்டு , அப்படியே பார்த்துவிட்டுச் செல்லலாம் என எண்ணினேன்...அவ்வளவு தான்.! நீ தான் அவள் உடல்நலமின்றி இருக்கிறாள் என்கிறாயே..! பரவாயில்லை..போர் இரண்டொரு நாளில் முடிந்துவிடும்..பின் அவளை சாளுக்கிய தேசம் அழைத்துச் சென்று விடுகிறேன்.  அங்கு எப்படி மருத்துவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறாள் எனப் பார்க்கிறேன்..! இரண்டொரு நாளில் அவளை நல்வழிப் படுத்து..அது தான் அவளுக்கும் நல்லது."


" ம்..சரி.."


" எங்கே இருக்கிறாள் அவள்..வா வந்து காட்டு.." என்றபடி எழுந்தான் கீர்த்திவர்மன்.


அப்படியே சென்றுவிடுவான் என தான் நினைத்ததற்கு மாறாக, அவன் திடீரென ரேவாவைப் பார்க்க எழுந்ததும் சற்றே திகைத்தவளாய்,  கீர்த்திவர்மனை  அழைத்துக் கொண்டு மேன்மாடத்திற்குச் செல்லும் படிகளில் ஏறினாள்.


அறையின் முன் வந்ததும், கதவினை தள்ளிப் பார்த்தான்.அதுவோ உள்பக்கமாய் தாழிடப் பட்டிருக்க, சாளரத்தில் இருந்தபடி எட்டிப் பார்க்க முயற்சித்தான். சாளரக் கதவுகளும் இறுக மூடப்பட்டிருந்தது.


" தேவி..சாளுக்கியச் சக்கரவர்த்தி வந்திருக்கிறார்கள்.. கதவை திறங்கள்.." என்றாள் மங்கை.


" நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை..போய்விடுங்கள்..தொல்லை தந்தால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் " என்றாள் ரேவா.


முதலில் கோபத்தின் வசப்பட்டவன், ரேவா தனது உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றதும் பணிந்தவனாய் , " மங்கை அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்..போர் முடியட்டும் ..கவனித்துக் கொள்கிறேன் என உறுமியவனாய் மேன்மாடத்தின் படிகளில் தடதடவென இறங்கி சீற்றத்துடன் வெளியேறினான். 


சாளுக்கிய சக்கரவர்த்தியை கவனமாய் பின் தொடர்ந்தான் தனஞ்செயன்.


வழியெங்கும் கீர்த்திவர்மன் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.அவனது முகத்தில் ரேவாவை சந்திக்க வந்து சந்திக்க முடியாமல் திரும்பும் ஏமாற்றமும், சோகத்துடன் கூடிய வருத்தமும், கூடவே அவள் நடந்து கொண்ட விதம் குறித்த எரிச்சலும் காணப்பட்டது. எனவே சக்கரவர்த்தியின் நிலையறிந்த தனஞ்செயனும் எதுவும் அதன் பின் பேச முற்படவில்லை. கீர்த்திவர்மனின் நிலையைப் பார்த்தால் அவன் நாளையே போர்முரசை ஒலிக்கச் செய்து விடுவான் என்றே தனஞ்செயனுக்கு எண்ணத் தோன்றியது.


தனஞ்செயனின் எண்ணமும் தவறாகவில்லை. மாலையில் போர்பாசறையை சென்றடைந்ததில் இருந்து கோபத்துடன் குறுக்கும், நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த கீர்த்திவர்மன், பலரிடமும் எரிந்து எரிந்து விழுந்தான். இரவினில் தனது படைத் தளபதிகளையும் கங்க மன்னன் சிறீபுருஷனையும் அழைத்தவன் , "நாளை போர் முரசு முழங்கட்டும் ..! ' என ஆணையையும் பிறப்பித்தான்.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages