09.11.29 : ரேவா : 87 : நந்திவர்மனின்_பெருந்தன்மை - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 9 நவம்பர், 2020

09.11.29 : ரேவா : 87 : நந்திவர்மனின்_பெருந்தன்மை



09.11.20



ரேவா


நந்திவர்மனின்_பெருந்தன்மை_87


பல்லவரது போர்ப்பாசறை.


சீராளன் வேங்கையிடம் போரிட்டதன் விளைவாய் அவனது உடலெங்கும் வியாபித்திருந்த காயங்கள் ஓரளவு குணமடைந்து விட்டன. படுக்கையை விட்டு எழுந்து விட்டான். ஆனாலும் உடலின் வலிமை முன்னர் போலில்லை என்பதை அவனால் தெளிவாக உணர முடிந்தது. என்ன இருந்தாலும்  வேங்கையிடம் சண்டையிட்டு உயிருடன் மீள்வதென்பது இலேசான காரியமா..!


தனது கூடாரத்தை விட்டு வெளியேறி வந்தவனாய் , சுற்றிலும் நடப்பதை ஆராய்ந்தான். ஒரு இடத்தில் வில்லாளிகளால் நேற்று வேட்டையாடி கொண்டுவரப்பட்ட மான்களை அறுத்து சுத்தம் செய்து , படைவீரர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார்கள். உணவுகள் பெரிய பெரிய கொப்பரைகளில் தயாராகிக் கொண்டிருந்தது. உக்கிராணிகள் பெரிய மரத்திலான துடுப்புக்களைக் கொண்டு கிளறிவிட்டுக் கொண்டிருந்தார்கள். தயாரான உணவின் மணம் அவனது நாசியைத் துளைத்தது.

போர் மறவர்களுக்கு புலால்  உணவென்பதே அவர்களது உடலுக்கு வலுசேர்க்கும். அவர்கள் கைகளில் ஏந்திப் போராடும் வாள்களையும், வேல்களையும் சுழற்றுவதற்கு புஜத்தில் பலம் வேண்டும். ஆகவே பெரும்பாலும் போர்வீரர்களின் உணவில் புலால் என்பது தவிர்க்கவியலாத ஒன்று. உக்கிராண வண்டிகள் பெரும் பாலும் தானியங்களையும், பருப்பு, வாசனைப் பொருட்களையும் சுமந்தே வரும். ஆடுகளோ, கோழிகளோ வழியில் உள்ள கிராமங்களில் சேகரித்துக் கொள்வார்கள்..அது தவிர இது போன்ற கானகப் பகுதிகளில் வில்லாளிகள் மூலம் வேட்டையும் நடத்தப்பட்டு கிடைக்கும் ஜீவராசிகளும் போர்வீரர்களின் உணவினில் சேர்ந்துவிடும்.


சீராளனதுப் பார்வை மாறியது. அங்கு புரவிகளை கவனித்துக் கொள்ளும் காசாரிகள் ஒவ்வொரு புரவியின் உடலையும், கால்களையும் நன்கு நீவி விட்டு, புரவிகளைத் தயார்நிலைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். கொள்ளும் பசுந்தீவனங்களும் அதற்கென வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. காசாரிகளின் கவனிப்பிற்குள்ளான புரவிகள், மந்தகதி, துரிதகதி எனத் தனதுப்  பயிற்சிகளை மேற்கொண்டதோடல்லாமல் , அதன் மேல் ஆரோகணித்தபடி வீரர்களும் சற்று தூரம் செல்வதும், வருவதும் , ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் பயிற்சி எடுத்துக் கொள்வதுமாய் பொழுதைக் கழித்தனர். இவர்களினாலேயே அப்பகுதியே ஒரே புழுதிக்காடாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது.


யானைகளோ பாகன்களின்   சொற்கேட்டு பருத்த உடலை முன்னும் பின்னும் அசைத்தபடியும், துதிக்கையினால் வேலினை எறிந்தும்,  ஓரிடத்தில் நிற்காமல் தங்களதுப் பயிற்சியை மேற்கொண்டிருந்தன.


அனைத்தையும் கண்டதும் சீராளனின் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது. இழந்து போன வலிமை மீண்டு வந்து உடம்பில் சேர்ந்ததைப் போல ஒரு பிரமை எழுந்தது. அதே உற்சாகத்தோடு நந்திவர்மனையும், உதயச்சந்திரனையும் கண்டு வரக் கிளம்பினான்.


சாளுக்கிய சக்கரவர்த்தி கீர்த்திவர்மனும், தனஞ்செயனும் கங்கனது வசந்தமாளிகைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அதே நாளில்..பல்லவர்களின் பாசறையில் மந்திராலோசனைக்காக அனைவரும் கூடியிருந்தார்கள். 


" பல்லவ வேந்தருக்கு பணிவான வணக்கம், இங்கிருந்து இரண்டு காவத தூரத்தில் மேற்கில் சாளுக்கியரது படைகள் முகாமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதே போல் கிழக்கில் கங்கனது படைகளும் நெருங்கி விட்டது. இருவரும் நம்மை பக்கவாட்டில் தாக்கி நிலைகுலையச் செய்துவிடலாம் என எண்ணியிருப்பதைப் போல் தெரிகிறது..அவர்களை சரியான முறையில் எதிர்கொள்ள வியூகத்தை அமைப்பதே நமது வெற்றிக்கு வழிவகுக்கும்..! " என்றார்  தளபதி் பல்லவடி அரையன்.


" தளபதியாரே..தாங்கள் கூறியது உண்மை தான். நமது படைகள் அரத்தச்சந்திர வடிவில் இருவரையும் எதிர் கொள்ளவிருக்கிறது. பிறையின் ஒரு முனையில் மேற்கு முகமாக படைத்தலைவர் தனது புரவிப்படையை அணிவகுத்து நிறுத்துவதோடு சாளுக்கிய கீர்த்திவர்மனை எதிர்கொள்வார். மற்றொரு முனையான கிழக்கு முகத்தில் நமது யானைகளுடன் கங்கனது யானைகள் மோத விருக்கிறது. பிறையின் இருமுனைகளாக நாங்களிருவரும் இணைந்து செயல்படவிருக்கிறோம். மையங்களில் தாங்களும், காடவ முத்தரையரும் காலாட்படைகளுடனும் , வில்லாளிகளுடனும் கலந்து நமது எதிரிகளின் அணிவகுப்பினை அவ்வப்போது சீர்குலைக்க வேண்டும். நானும் படைத்தலைவரும் எதிரிகளை மையப் பகுதிக்கு இழுத்து வந்து விடுவோம்..அவ்வேளையில் தந்திதுர்க்கரது படைகள் பின்பகுதியில் அவர்களை தாக்க முற்படும் போது அர்த்தசந்திரன் , பூரணச் சந்திரனாக மிளிர வேண்டும். பூரணச்சந்திரனுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட எதிரிகள் எவரும் தப்பி விட இயலாதபடி நமது தாக்குதல் அமைய வேண்டும்." என்றான் நந்திவர்மன்.


" அற்புதம்..அருமையான வியூக முறை..! " என்றார் போரில் பழுத்த ஞானமுடைய காடவ முத்தரையர்.


" சிறப்பானத் திட்டம் ..நானும் வரவேற்கிறேன்.. " என்றார் மகிழ்ச்சியுடன் தந்திதுர்க்கன்.


" தந்திதுர்க்கரே..இந்தப் போரின் வெற்றி முகமே தங்கள் கையில் தான் இருக்கிறது. ஏனெனில் எதிர்பாரா குழப்பத்தையும், திருப்பத்தை யும் பின்பகுதியில் இருந்து தரப் போகிறவர் நீங்கள் தான். அர்த்தச்சந்திரனை முழு நிலவாக பிரகாசிக்கச் செய்வதும் தங்கள் திறமையில் தான் இருக்கிறது. தாங்கள் மட்டும் கீர்த்திவர்மனையும், சாளுக்கிய வீரர்களையும் துவம்சம் செய்து விட்டால் சாளுக்கிய நாட்டினை தங்களுக்கே உரித்தாக்கி விடுகிறேன். பல்லவர்களுக்கு அதில் பங்கேதும் தேவையில்லை..! " என்றான் கம்பீரமாக நந்திவர்மன்.


தந்திதுர்க்கன் மலைத்து விட்டான். என்னே ஒரு பெருந்தன்மையான எண்ணம்..! வெற்றியை தனதாக்கி மகிழ்பவர்கள் மத்தியில் வெற்றியின் பலனை உறுதுணையாய் வருபவருக்கு வழங்குவது...! அதற்கு ஒரு உயரிய குணம் வேண்டும்..! இன்னும் போரில் வெற்றியடையவில்லை தான்..ஆனாலும் முடிவினை முன் கூட்டியே கூறக் கூடிய துணிச்சலையும், ஆற்றலையும் பெற்றிருந்தான் அல்லவா நந்திவர்மன்.


அங்கே எழுந்தது பெரும் வியப்பின் அலை..அனைவரும் சிலையென சமைந்தாலும் நந்திவர்மனின் மனதினைப் போற்றினர்.


" பல்லவ வேந்தரே..தங்கள் கூற்று எனக்கு மெய்ச்சிலிர்க்கச் செய்கிறது..! என் மீது தாங்கள்  வைத்துள்ள நம்பிக்கையை இப்போரில் நீங்கள் காணலாம்..! " என்றான் தந்திதுர்க்கன்.


நந்திவர்மனுக்குத் தெரியாதா..!மனிதர்களின் மனநிலையைப் பற்றி..! சமணர் பள்ளியில் மானுடவியலை மனனம் செய்தவன் அல்லவா..! எதைப் போட்டால் எது விளையும் என அவன் அறியாததா..! நந்திவர்மனின் எண்ணப்படியே நடந்தது..போரின் விளைவும் இருந்தது.


அனைத்தையும் கேட்டவாறு உள்ளே நுழைந்தான் சீராளன்.


" சீராளா..தற்போது உன் உடல்நிலை எப்படி உள்ளது..? " என்றான் அக்கறையும் பரிவும் கலந்த குரலில் உதயச்சந்திரன்.


" பரவாயில்லை படைத்தலைவரே...உடல்நலம் தேறிவிட்டேன்..போரின் வியூகத்தில் என் நிலை என்னவென்பதையும் தெரியப் படுத்தினால் மகிழ்வேன்.. போரில் கலந்து சாளுக்கியரை வெட்டிச் சாய்க்க வேண்டுமென உள்ளம் துடிக்கின்றது."


" சீராளா..நன்கு ஓய்வெடுத்துக் கொள்..உடல்நலம் நன்கு தேறட்டும்..போரில் நீ கலந்து கொள்ளத் தேவையில்லை .." என்றான் நந்திவர்மன்.


" ஆ..இது என்ன..! முடியாது..நானிங்கு வேடிக்கைப் பார்க்கவா வந்தேன்..! அவசியம் கலந்து கொள்ளவே செய்வேன்..! " என்றான் வீறாப்பாய்.


" சீராளா..உடல்நலனும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று..உனது உடலில் வலு இருந்தால் நாங்கள் தடையேதும் சொல்லப் போவதில்லை..உனது வீரத்தை நாங்கள் அறிய மாட்டோமா..என்ன..! சொல்வதைக் கேள்.." என்றார் பல்லவடி அரையன் அன்பும் கனிவும் நிறைந்தவராய்.


மாமனாரே கூறிய பின், அதற்கு மதிப்பளிக்காவிட்டால் என்ன செய்வது..! இருப்பினும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவனாய் , அரைமனதுடன் " சரி " என்றான்.


அப்போது..வேகமாய் உள்ளே நுழைந்தான் சேந்தன். அனைவரும் அவனை ஏறெடுக்க..


" அரசே..வணக்கம்..நாளைய உதயத்தில் போரினைத் துவக்க சாளுக்கிய கீர்த்திவர்மன் உத்தேசித்து உள்ளான்.." என்றான் பணிவாய் வணங்கியபடி.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages