10.11.20-ரேவா : 88: முடிந்தது_யுத்தம் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 10 நவம்பர், 2020

10.11.20-ரேவா : 88: முடிந்தது_யுத்தம்



10.11.20



ரேவா


முடிந்தது_யுத்தம்_88


வானில் எழுந்த சூரியன் உக்கிரமாய் விழித்தபடி மெல்ல மேலேறத் துவங்கினான். காவிரிக் கரையை ஒட்டியமைந்த வெம்பை நகரே அல்லோகலப்படத் துவங்கியிருந்தது. சாளுக்கியரின் வராகக் கொடி கடலெனத் திரண்டிருந்த படைகளின் ஊடே ஆங்காங்கே  படபடத்துக் கொண்டிருக்க, மேற்கு முகமாய் சாளுக்கியரும், கிழக்கு முகமாய் கங்கரும் தங்களது சேனைகளை அணிவகுத்து நிறுத்தியிருந்தனர். யானைகளை முன்னிறுத்தியிருந்த கங்கனது படைகளைக் காண நேர்கையில் பெரிதாய் அசைந்தாடும் மலைக் குன்றுகள் திரண்டு வந்ததைப் போலிருந்தது. அதன் பின் நின்றிருந்த புரவிகளைத் தொடர்ந்து காலாட்படை வீரர்கள் அணிவகுத்துக் காணப்பட்டனர். சாளுக்கியரதுப் படைகளில் புரவிகளே அதிகம்..அதன் பின் காலாட்படையே கணக்கின்றி கடலெனப் பரவியிருந்தது. ஒவ்வொரு அணிவகுப்பிற்கும் நடுவில் முரசறிவிப்போரும், எக்காளம்  முழங்குவோரும் நின்றிருந்தார்கள். சாளுக்கியச் சக்கரவர்த்தி கீர்த்திவர்மனது ஆணைக்காக அவர்களது அணிவகுப்பு காத்திருந்தது.

சக்கரவர்த்தியின் ஆணையை ஏற்று படைகளை வழிநடத்த ஒவ்வொரு உபதளபதியும் துடித்துக் கொண்டு நின்றிருந்தான்.


பல்லவரதுச்  சேனை தன் அர்த்தச்சந்திர வியூகத்தின் படி அணிவகுத்து நின்றிருந்தது. மேற்கு முனையை படைத்தலைவன் உதயச்சந்திரன் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்க, கிழக்கு முனையை நந்திவர்மன் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருந்தான். தளபதி பல்லவடி அரையரும், காடவ முத்தரையரும் எதிரிகளின் முன்கள வீரர்களின் முகப்புப் பகுதியை ஊடறுத்து நுழையும் மையப்பகுதியில்  முனைப்பில் இருந்தனர்.


போர் முரசு அதிர்ந்தது. பெரும் மலைகளென உருண்டோடி வந்த கங்கனது யானைகள் நிலங்களை அதிரச் செய்தது. கானகத்து குறு விலங்குகள் ஓடி மறைந்தன. கானம் பாடும் பட்சிகளோ தங்கள் சிறகுகளை படபடவென அடித்தபடி பறந்து செல்ல தலைப்பட்டதோடு, பயங்கர குரலெடுத்து கத்தவும் செய்தன.  பல்லவர்களின் வேல் தாங்கிய வீரர்களும், வில்லேந்திய வீரர்களும் யானைகளின் மத்தகத்தைக் குறி வைத்துத் தாக்கும் படி செய்ய, அவை பயங்கரமாய் பிளிறியபடி வந்தவழியே பின் வாங்கி நிலமதிர ஓடியதோடு கங்கனது காலாட்படைகளின் ஊடாக ஓடி  நிலைகுலையச் செய்தது. ஓடிய யானைகளை விரட்டிக் கொண்டு சென்றன பல்லவரது யானைகள் . அது மட்டுமின்றி விடாது வேலும், அம்புகளும் கங்கனது யானைகளை நோக்கிப் பறந்தது. களமெங்கும் யானைகளின் பயங்கர பிளிறல்களே எதிரொலித்துக் கொண்டிருந்தன. 


உதயச்சந்திரனோ தனதுப்  புரவிகளால் கீர்த்திவர்மனதுப் புரவிகளை நிலைகுலையச் செய்தான். பல்லவடி அரையரும், காடவ முத்தரையரும், சீராளனும் எதிரிகளின் படை அணிவகுப்பினை அவ்வப்போது சீர்குலைத்து ஒன்றிணைய விடாமல் செய்து கொண்டிருக்க , கிடைத்த இடைவெளிகளில் உதயச்சந்திரனது புரவிப் படையினர் ஆக்ரோசமாய் உட்புகுந்தனர். சாளுக்கியரது படைகள் அதன் பின் ஒன்றிணைவதற்கான வாய்ப்பினை பல்லவரது சேனை வழங்கவே இல்லை. அதே வேளையில் எழுந்த ஆரவாரக் கூச்சலோடு ஆர்ப்பரித்து எழுந்து வந்தது பேரலையாக தந்திதுர்க்கனது சேனை . சாளுக்கியரையும், கங்கரையும் பின்பகுதியில் வந்து சந்தித்த தந்திதுர்க்கனை எதிர்கொள்வதா அல்லது எதிராக மோதிக் கொண்டிருக்கும் பல்லவடி அரையரையும், காடவ முத்தரையரையும், சீராளனையும் எதிர் கொள்வதா என திணறிக் கொண்டிருந்தனர் சாளுக்கிய எதிரிப்படையினர்.

பிளவுப் பட்டுப்போன எதிரிகளின் அணிவகுப்பு மீண்டும் ஒன்றிணைய இவர்கள் விடவில்லை. முற்றிலும் சூழ்ந்து கொள்ளப்பட்ட சாளுக்கியரது சேனைப் பயங்கரமாய்  திணறிக் கொண்டிருந்தது. மண்ணில் விழுந்து உருண்டன பலரது தலைகள்..கரங்களும், கால்களும் இழந்தவர்களின் ஓலமும் அங்கு நிறைந்து காணப்பட்டது.


நந்திவர்மனது வாளும், உதயச்சந்திரனது ஹேகடியும் சுழன்ற திசைகளில் எல்லாம் எதிரிகளின் தலையும், கைகால்களும் வெட்டுண்டு மண்ணில் புரண்டது. எங்கெங்கும் ஓலம்..கூக்குரல்..வேதனை..! பல்லவர்களின்  ஆக்ரோச கூச்சல்களும், வெற்றிவேல்...வீரவேல் ... என எழுந்த

 கோசங்களும் அப்பிராந்தியமெங்கும் பயங்கரமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


உதயச்சந்திரன் நேரடியாக கீர்த்திவர்மனை எதிர் கொண்டான். இருவருக்குமான யுத்தமே இரண்டு நாழிகை நேரம் நீடித்தது. உதயச்சந்திரனை இலாவகமாக எதிர்கொண்ட கீர்த்திவர்மன் தானும் வாள் சண்டையில் சளைத்தவன் இல்லை என்பதை மெய்ப்பிப்பது போல் மோதிக் கொண்டிருந்தான். வாட்களின் உரசல்களில்  தீப்பொறிகள் பறந்தன. மண்ணைங்கும் குருதி ஆறென பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. உதயச் சந்திரனது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின் வாங்கி ஓடிய கீர்த்திவர்மனை  பின்புறமாய் நெருங்கிக் கொண்டிருந்த தந்திதுர்க்கன் சந்தித்தான். இருவரது வாட்களும் பயங்கர சத்தத்துடன் மோதின.. ஆக்ரோசத்தையும் வெறியையும் காட்டினான் கீர்த்திவர்மன். இருப்பினும், ஏற்கனவே களத்தில் நெடுநேரம் நின்றிருந்த களைப்பு அவனை பாடாய் படுத்தியது. தந்திதுர்க்கனது வாளானது சற்றே வளைந்து கீழே இறங்கி கீர்த்திவர்மனது மார்பில் தஞ்சம் புகுந்தது.  தந்திதுர்க்கன் தனது படைகளை ஒன்றிணைத்து அர்த்தச் சந்திரனை பூரணச் சந்திரனாய் மிளிரச் செய்ய.. பூரணச் சந்திரனுக்கு உள்ளாக எதிரிகளின் ஒட்டு மொத்தப் படையும் அகப்பட்டுத் தவிக்க, பூரணச் சந்திரன் குறுகத் துவங்கியது..எதிரிகளின் தலைத் தனியே உருளத் துவங்கியது.


நந்திவர்மன் கங்கனின் வாளை நேரிடையாக எதிர் கொண்டான். இருவரது வாட்களும் அபாரமாய் எழுந்து இணைந்து மீண்டன..மீண்டும் இணைந்தன. வாட்களின் உரசல்களினால் எழுந்த கிணிங்..கிளாங்.. எனும் ஒலிகளினால் சத்தம் எழுப்பியபடி ஆங்காங்கு காணப்பட்ட மரங்களில் வசிக்கும் பறவைகள் தங்களது சிறகுகளை படபடவென அடித்தபடி தாழப் பறந்து செல்லத் தலைப்பட்டதோடு, மரப்பொந்துகளில் அமர்ந்தபடி அச்சத்துடன் எட்டிப் பார்த்தன.  ஒரு நாழிகைக்குள் தனது வாளினால் கங்க நாட்டரசன் சிறீபுருஷனது வாளினை ஆகாயத்தில் பறக்க விட்ட நந்திவர்மன், தனது வாளின் நுனியை சிறீபுருஷனது  கழுத்தில் பதிக்க முற்பட்டு..அப்படியே நிறுத்தியவனாய், கங்கனை மெல்ல ஏறெடுத்தான்.


கங்க நாட்டரசன் சிறீபுருஷனோ சற்றும் கலக்கம் கொள்ளவில்லை..ஆனாலும் நந்திவர்மனது வாள் ஏன் இன்னும் தனது கழுத்தில் பதியாமல் நிற்கிறது என்று எண்ணமிட்டவனாய், " நந்திவர்மா..ஏன் தயங்குகிறாய்..வாளைப் பாய்ச்சிவிடு.. போர்க்களத்தில் இறப்பது வீரச்சுவர்க்கத்திற்கு வழிவகுக்கும். வீரனாய் இருப்பவன் போரினில் இறப்பதையே விரும்புவான்.. இந்த முதுமையில் நான் துன்பத்தில் வீழ்ந்து மடியும் நிலை வராது, என்னை வாள் கொண்டே வீழ்த்த விடு..! " என்றான் கம்பீரமாக சிறீபுருஷன்.


" கங்க நாட்டு அரசரே..உமது வீரத்தை நான் அறிவேன். வீரருக்கு வழங்கப் பட வேண்டிய மரியாதையை தங்களுக்குத் தரவும்  நான் தயங்க மாட்டேன். ஆனாலும் உங்களிடம் தீர்க்கப் பட வேண்டிய கணக்குகள் இன்னும் நிறைய இருக்கின்றன..! "


" என்ன..தீர்க்கப் பட வேண்டிய கணக்குகளா..? " என்றான் ஆச்சர்யம் நிரம்பிய குரலில் சிறீபுருஷன்.


" ஆம்..தீர்க்கப் பட வேண்டிய கணக்குகள் தான்..! தங்களின் முன்னோரான பூவிக்கிரமனால்  பல்லவ சாம்ராஜ்யாதிபதி ராஜசிம்மனின் தந்தையார் பரமேஸ்வரவர்மர் இழந்த பல்லவ பரம்பரையின் மாணிக்க இரத்தினம் பதித்த அணிகலனான #உக்ரோதயத்தையும், தங்களால் சித்ரமாயனின் தந்தையார் பரமேஸ்வரவர்மர் இழந்த வெண்கொற்றக் குடையையும், பல்லவச் சிம்ம இலச்சினையையும் தாங்கள்  எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.. பூவிக்கிரமனது மகளான ரங்கபதாகை தேவியாரை ராஜசிம்ம பல்லவர் மணந்ததும், பல்லவரது உடமைகளை பூவிக்கிரமன் வழங்கியும், ஸ்ரீதனமாக பெற ராஜசிம்மர் விரும்பவில்லை..! பல்லவரது வாரிசு  என்றாவது ஒரு நாள் தங்களது உரிமையை போரிட்டுப் பெறுவதையே விரும்புகிறேன் , என்று மறுத்து விட்டவர் அவர். இதோ..இன்று அதற்கான வேளை வந்து விட்டது. எனவே தாங்கள் எங்களது உடைமைகளை ஒப்படைப்பதே நல்லது.." என்றான் கம்பீரமாய் நந்திவர்மன்.


குனிந்த தலையை நிமிர்த்தாத கங்கனோ, " ம்.." என்றான் முனகியபடி.


" அத்தோடு..." என்று நந்திவர்மன் துவக்கியதும்..


ஏறெடுத்த கங்கனை, " நாளை உதயத்தில் ரேவா இந்த பாசறையில் இருக்க வேண்டும். தாங்களே நேரில் சென்று ரேவாவை இங்கு அழைத்து வர வேண்டும், உங்களுடன் எங்களது படைத் தளபதியும்  வீரர்களும் வருவார்கள்." என்றான் நந்திவர்மன்.


போர் முடிந்ததை அறிவிக்கும் வெற்றி முரசுகள் ஒலித்தன. வீரர்கள் ரிஷபக் கொடியே ஏந்தியபடி அப்பிராந்தியமெங்கும் வலம் வந்தனர்.எக்காளம் முழங்கியது..


முரசுகளோ அதிர்ந்தது. போரிட்டுக் கொண்டிருந்த கங்கர்கள் தங்களது ஆயுதங்களை கீழே வீசிவிட்டு சரணாகதி அடைந்தார்கள். எஞ்சிய எதிரிப்படைகளின் வீரர்களை ஒருங்கிணைத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள் பல்லவரது வீரர்கள்.


போர் ஓய்ந்திருந்தது..காணுமிடமெங்கும் யானைகளும், புரவிகளும் குற்றுயிராய் விழுந்து கிடந்தன. அதன் ஈனக் குரல்கள் காண்போரை கண்கலங்கச் செய்யும் படியாய் இருந்தது. மண்ணில் மாய்ந்து விழுந்த வீரர்களிடமிருந்து வேதனை கலந்த முனகல்கள்  எழுந்து கொண்டிருந்தது. வெட்டி வீழ்த்தப்பட்ட உடலின் அவயங்களில் இருந்து பெருக்கெடுத்து குருதியினை ஈக்களும், எறும்பும் மொய்த்துக் கொண்டிருக்க, அப்பகுதியில் பிணந்தின்னிக் கழுகுகளும், பருந்துகளும் கூக்குரலிட்டபடி பறந்து கொண்டிருந்தன. காவிரி நதியானது தன் இயல்பில் இருந்து மாறி குருதி கலந்த செந்நீராய் ஓடிக் கொண்டிருந்தது. சாளுக்கியர் ஒருவர் கூட மிஞ்சவில்லை. வானத்துச் சூரியன் மெல்ல மேற்கு வானில் இரத்த களறியாய் விழுந்து கொண்டிருந்தான்.


நந்திவர்மனும், உதயச்சந்திரனும் தங்களது வீரர்களிடம் கட்டளையைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். படைகளுடன் வந்திருந்த மருத்துவர்கள் காயம் பட்டவர்களை அழைத்துச் சென்று கூடாரத்தில் மருத்துவ உதவி செய்து கொண்டிருந்தார்கள். 


இறந்து போன வீரர்களின் உடலை ஒன்றாய் குவித்து தகனம் செய்யும் படி  எதிரிப்படை வீரர்களுக்கு நந்திவர்மன் ஆக்ஞை பிறப்பித்தான்.


கைகால்களில் அடிபட்ட பல வீரர்கள் மற்றவர் துணையோடு தட்டுத்தடுமாறியபடி நடந்து செல்லும் காட்சி அப்பகுதியெங்கும் காண முடிந்தது.


வெற்றித் திருமகளை மணந்த காரணத்தால் நந்திவர்மனது முகம் தனித்த ஒரு சோபையில் மிளிர்ந்து கொண்டிருக்க...வானில் மதியானது மெல்ல எட்டிப் பார்க்கத்துவங்கியிருந்தது.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு :  வெம்பைப் போரின் முடிவில் கீர்த்திவர்மன் இறந்தான். அதைத் தொடர்ந்து எழுந்தது இராஷ்டிரகூடர்களின் பேரரசு. அதன் முதல் மன்னனாக தந்திதுர்க்கன் என அழைக்கப்பட்ட வைரமேகன் கி.பி.757 முடிசூட்டப் பட்டான். Dr. Kamat " Rashtrakuta Dynasty & Altekar's " Rashtrakutas and their times.


# உக்ரோதயம் கைப்பற்றுதல் குறித்து தண்டன் தோட்ட பட்டயமும், Gangas of Talakad page no.54. விவரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages