12.11.20-ரேவா : 89 : திருமங்கை_ஆழ்வாருடன்_சந்திப்பு - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 11 நவம்பர், 2020

12.11.20-ரேவா : 89 : திருமங்கை_ஆழ்வாருடன்_சந்திப்பு



11.11.20


ரேவா


திருமங்கை_ஆழ்வாருடன்_சந்திப்பு_89


ரதத்தில் இருந்து இறங்கிய ரேவாவை அனைவரும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். ரேவாவுடனேயே மங்கையும் ரதத்தில் இருந்து இறங்கினாள். கங்கரது அரண்மனையில் அவள் பணிபுரிய விருப்பமில்லாமல் ரேவாவின் அழைப்பிற்கிணங்க அவளது தோழியாக உடன் வந்து விட்டாள். தந்திதுர்க்கன் தனது மகளை உச்சி முகர்ந்து , கண்ணீர் சொரிந்து வரவேற்றான். நந்திவர்மனது கண்களும் ரேவாவின் கண்களும் ஒரு கணம் சந்தித்து மீண்டன.அதில் தான் எத்தனை எத்தனை நலம் விசாரிப்புகள்.


நந்திவர்மன் வசம் பல்லவரது உடமைகளான உக்ரோதயம், வெண்கொற்றக்குடை, பல்லவ சிம்ம இலச்சினை  யாவும் ஒப்படைக்கப் பட்டதோடு, பல்லவருக்கு கப்பம் செலுத்தவும்,  சிற்றரசாக இருந்து செயல்படவும் கங்கநாட்டின் மன்னனான சிறீபுருஷன் இணங்கியமையால் , அவனது வசம் கங்கநாடு ஒப்படைக்கப் பட்டது. 


சாளுக்கியரது தேசத்தினை தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்த தந்திதுர்க்கன் மான்யகேடத்தை ஒருங்கிணைந்த இராஷ்டிரகூட அரசின் தலைநகராக பிரகடனம் செய்தான்.


காஞ்சியில் விஜயாபிஷேக விழாவினைச் சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்ட,  அதே வேளையில் பிரம்மஸ்ரீ ராஜனால் அனுப்பப்பட்ட வீரன் ஒருவன்  கொண்டு வந்த ஓலையில் இருந்த தகவலும் நந்திவர்மனை மகிழ்ச்சியுறச் செய்தது.


பிரம்மஸ்ரீ ராஜனால் அனுப்பப் பட்ட ஓலையில் காணப்பட்ட விசயங்கள் இது தான், 


பல்லவ சக்கரவர்த்திக்கு, வணக்கம். நமது காஞ்சியின் புகழ் பாடும் வைகுண்டப் பெருமாள் ஆலயத் திருப்பணி நிறைவடைந்து விட்டது. அதுமட்டுமின்றி , வடதேச யாத்திரையை நிறைவு செய்து கொண்டு திரும்பியுள்ள திருமங்கை ஆழ்வார் தற்சமயம் காஞ்சியில் தான் எனது வேண்டுகோளின் படி தங்கியிருக்கிறார். எனவே, நல்லதொரு நாளில் காஞ்சி மாநகரில் தங்களது வெற்றியினைக் கொண்டாடும்  விஜயாபிஷேக நிகழ்வினையும், ஸ்ரீ வைகுண்டப் பெருமாளின் ஆலயக் கும்பாபிஷேக விழாவினையும் ஒரு சேர நடத்தலாம் என எண்ணுகிறேன்..இது குறித்து தங்களது கருத்தினை தெரியப்படுத்தினால் மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாம். இப்படிக்கு,  பிரம்மஸ்ரீ ராஜன் என்று கையெழுத்திட்டு, பல்லவதேசத்தின்  சிம்ம இலச்சினையைப் பதித்திருந்தார்.


ஓலையைக் கண்ணுற்ற அனைவருக்கும் பெருமகிழ்ச்சி. முதலமைச்சரின் ஆலோசனையே சிறப்பெனக் கருதியவர்களாய், விஜயாபிஷேக நிகழ்வையும், கும்பாபிஷேக நிகழ்வையும் ஒருசேர நடத்த ஒப்புதல் வழங்கினான் நந்திவர்மன். அவனது ஒப்புதல் ஓலையை சுமந்து கொண்டு சேந்தன் காஞ்சிக்கு விரைந்தான்.


காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதியெங்கும் உள்ள மாளிகைகளில் பல்லவரது ரிஷபக் கொடிகள் கதிரவனின் பொற்கதிர்கள் பட்டு மின்னியதோடு, தென்திசைக் காற்றின் உதவியால்  படபடவென பறந்து கொண்டிருந்தது. வாசல்களில் பெண்கள் விதவிதமான கோலங்களை வரைந்திருந்ததோடு, வாசல்களில் பல வர்ணங்களில்  அலங்கார தோரணங்களையும்  தொங்க விட்டிருந்தார்கள்.

மாவிலை மற்றும் வாழை மரங்களும் ஆங்காங்கே கட்டப் பட்டிருந்தன. நகரெங்கும் மக்களிடையே நந்திவர்மனின் வெம்பைப் போர் வெற்றியே பிரதானமாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. சாளுக்கிய கீர்த்திவர்மனை அழித்ததோடு, சாளுக்கிய வம்சத்தை வேரறுத்த நந்திவர்மன் , சாளுக்கிய தேசத்தை தனக்கு போரில் பேருதவிப் புரிந்த தந்திதுர்க்கருக்கே வழங்கி விட்ட செயலும் பெருமையாகப் பேசப் பட்டது. கூடவே, பல்லவரது பெருமை வாய்ந்த உக்ரோதயத்தை கைப்பற்றியும், பரமேஸ்வரவர்மரால் இழந்த வெண்கொற்றக்குடையையும், சிம்ம இலச்சினையையும் நந்திவர்மன் கங்கன் சிறீபுருஷனிடமிருந்து கைப்பற்றியதையும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் நகர மாந்தர்கள்.


நந்திவர்மனது வெற்றியைப் போற்றும் விஜயாபிஷேக விழாவும், ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும் ஒரே நாளில் நடக்கவிருப்பதும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


திருமங்கை ஆழ்வாரைத் தேடி அவர் தங்கியிருந்த வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச்  சென்றான் நந்திவர்மன். அவனுடன் பல்லவ சாம்ராஜ்யத்தின் அரச பிரதானிகள் அனைவரும் சென்றனர்.


வடதேசத்து யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார் அல்லவா... அது குறித்து கேட்பதற்கும், ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை நடத்துவது குறித்த ஆலோசனைக்கும் அவரை நாடிச் சென்றனர்.


நந்திவர்மனைக் கண்டதும் இரு கரங்களை நீட்டியவாறு வந்து தழுவிக் கொண்ட திருமங்கை ஆழ்வார், 


" வரவேண்டும்..வரவேண்டும்..இந்த எளியவனைத் தேடி வந்த காரணம்..? " என்றார் மிகப் பணிவாய்.


" பெருமாளின் தாசரே..வடதேசத்து யாத்திரை முடித்து  ஷேம நலத்துடன் வந்த தங்களைப் பணிந்து வணங்கி ஆசி பெறவே வந்தோம். அது மட்டுமின்றி தங்களது யாத்திரை அனுபவங்களையும் கேட்டறியவே தங்களை நாடி வந்தோம்." என்றான் அன்பான குரலில் நந்திவர்மன்.


" நந்திவர்மா, அழகனது திவ்ய ரூபத்தையும், தரிசனத்தையும் கண்டு கொண்டேயிருக்க வேண்டுமென்பதே என் பேரவா..அவன் தான் ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு அழகாக காட்சி தருகிறான். அதைக் கண்ட மனமோ அவனை விட்டு அகலாதிருக்கிறது..இந்த ஒரு பிறவி போதாதே என வருந்துகிறேன்.. அவனது எழிலைக் காணவும், அவன் புகழ் பாடவும்..சதாசர்வ காலமும்  மனது அவனையே அல்லவா நினைந்து உருகுகிறது. என்றபடியே,


வாலி மாவலத் தொருவனது உடல்கெட

வரிசிலை வளைவித்து அன்று

ஏலநாறு தண்தடம் பொழில்

இடம்பெற இருந்த நல் இமயத்துள்

ஆலி மாமுகில் அதிர்தர

அருவரை அகடுற முகடேறி

பீலி மாமயில் நடம்செயும் தடம்சுனை

பிருதி சென்று அடை நெஞ்சே.. 


எனப் பாடினார் கண்ணை மூடியபடி வாலியை வதம் செய்து, வில்லை முறித்து சீதையை மணந்த ரூபனின் திவ்ய தரிசனக் காட்சியை மனக் கண்ணில் கண்டிருப்பார் போலும்.


" ஐயனே..நமது மன்னரின் சாளுக்கிய வெற்றியை முன்னிட்டு விஜயாபிஷேக நிகழ்வும், ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வும் நடைபெறவிருப்பதை ஒட்டி தாங்கள் கலந்து கொள்ள வேண்டியும்,  அன்று தாங்கள் விண்ணகரத்தைச் சிறப்பித்து மங்களாசாசனம் செய்வதாக கூறியிருந்தீர்கள் அல்லவா,  அதையும் நினைவு படுத்திச் செல்லவே வந்தோம்.." என்ற பிரம்மஸ்ரீ ராஜனின் குரல் அவரை இவ்வுலகிற்கு இழுத்து வந்தது.


" ஆமாம்..நானும் வடதேச யாத்திரையை முடித்துவிட்டு வரும்போது கேள்வியுற்றேன். சாளுக்கியரை வென்றதை..வெற்றி தேவதை உன்னிடம் நிறைந்திருப்பாள். வாழி..நீ..! என்று நந்திவர்மனுக்கு ஆசி வழங்கியவர், ஸ்ரீவைகுண்ட நாதரைப் பாடுவது என் வாழ்வின் பாக்கியமல்லவா..அவசியம் வந்து மங்களாசாசனம் செய்கிறேன்." என்றார் மனமகிழ்ந்து.


 " நன்றி ஐயனே..நாங்கள் விடைபெறுகிறோம்."


" நல்லது...போய்வாருங்கள்.." என வழிகூட்டி அனுப்பி வைத்தார்.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு :  மண்ணை கடக்கம் என்று அழைக்கப்பட்ட மான்ய கேடம் இராஷ்டிரகூட பேரரசின் தலைநகராக விளங்கியது. கி.பி.757 இல் தந்திதுர்க்கனால் உதயமான இராஷ்டிரகூடப் பேரரசு கி.பி.851 இல் உலகின் நான்கு முதன்மையான பேரரசுகளில் ஒன்றாக விளங்கியதென அரேபியாவில் இருந்து வெளியான 

சில்சிலாடுட்டவரிக் ( Silsilatuttavarikh ) என்ற நூலில் குறித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages