அம்மா வந்தார் - R SUNDARAM
காசி செல்வதற்கு நடுஇரவு ட்ரெயின் என்பதால் நாங்கள் பத்துமணிக்கே திரிச்சூர் ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம் . லாட்ஜ் காலி செய்து வந்தது மடத்தனமாகப் பட்டது. இன்னும் முழுசா ரெண்டு மணி நேரம் இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் .
அப்போது ஒரு பாட்டி வயது எண்பதுக்குமேல் இருக்கும்., நடுத்தர வயதில் ஒருமகன், மருமகள், பேத்திகள் வந்திருந்தனர். கூடவே மருமகளின் தங்கை என்று நினைக்கிறேன். குழந்தைகள் அவளை சித்தி சித்தி என்று சொல்லிக் கொண்டிருந்தன.
“நீங்க போய் தூங்குங்கோ, நாங்க போய்ட்டு வரோம் “ ரம்யா, திவ்யா சமத்தா சித்தி சொல்லறதை கேட்டுகிட்டு இருக்கணும் படுத்தக்கூடாது “
“சரிம்மா”
குழந்தைகள் பாட்டியை கட்டிப் பிடித்து கொண்டன.
“ பாட்டி பத்திரமா போயிட்டு வா
பாட்டி மலர்ந்து சிரித்தாள். குழந்தைகளை அணைத்துக் கொண்டாள். பாட்டியின் கண்களில் கண்ணீர்.
“ என்ன பாட்டி அழறீங்க? நீங்க போய் ஒரு வாரத்தில் வந்திடப் போறீங்க அழாதீங்க“
பெரியவள் ரம்யா சமாதானப்படுத்தினாள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்ன அன்பான குடும்பம்.
“எத்தனை வருஷம் கழிச்சு பெரியப்பவைப் பார்க்க போறீங்க. வரும்போது அவரையும் பெரியம்மாவையும் கூட்டிகிட்டு வாங்க”
ட்ரெயின் வருவதாக அறிவித்தார்கள் .என்னதான் முன்பதிவு செய்திருந்தாலும் மூணு நிமிஷம் மட்டும் நிற்கும் என்பதால் அடி வயிறு கலங்கியது . நல்லவேளை நாங்க ஏறி உட்கார்ந்தோம். பாட்டியை அழ வேண்டாம் என்று சொன்ன குழந்தைகள் கண்ணீருடன் பாட்டிக்கு கையசைத்தன .
எங்களுக்கு எதிரில் தான் அவர்களுக்கு. நல்லவேளை எனக்கும் பாட்டிக்கும் லோவர் பிரத். அனைவரும் தூங்க ஆரம்பித்தோம். பாட்டி நாலு மணிக்கே எழுந்து உட்கார்ந்து கொண்டாள். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்றோ அல்லது மருமகள் மேல் உள்ள பயமோ தெரியாது . பத்மா பத்மா என்று மெல்லிய குரலில் கூப்பிட்டாள். பத்மா கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
....2......
நான் என்னம்மா என்ன வேணும் ?என்று கேட்டேன். பாட்டிக்கு டாய்லெட் செல்ல வேண்டும்போல. என்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்னாள் .ஆனால் ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்காது மீண்டும் அவளை கூப்பிட பத்மா கோபத்தில் வெடித்தாள்.
“ கொஞ்சம் நிம்மதியா தூங்க விடுங்க”
என்று திரும்பி படுத்துகொண்டாள் .நான் என் மனைவியை எழுப்பினேன். மெல்லிய குரலில் சொன்னேன். என் ஜானகி என்னை முழுமையாக புரிந்துகொண்டவள் எழுந்துகொண்டாள். பாட்டியை மெதுவாக தொட்டு, வாங்க என்று அழைத்துச் சென்றாள்.
பாட்டிக்கு ரொம்ப சந்தோசம். திரும்பும்போது என்னை நன்றியுடன் பார்த்தாள். என் அம்மா மாதிரி இருந்தாள். அம்மா இறந்து விட்டதால் எல்லோரும் எனக்கு அம்மாவாக தெரிகிறார்கள்.
ஈரோடு ஆறேகாலுக்கு வந்தது. நானும் மனைவியும் எழுந்து கொண்டோம். பாட்டி கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவரை எங்கள் பக்கம் வந்து உட்காரச் சொல்லி காபி வாங்கி கொடுத்தோம். எட்டு மணிக்குத்தான் பத்மா எழுந்தாள் .
இறங்கும்போது அவர் போர்த்திக் கொண்டிருந்த போர்வை கீழே விழ, அதை எடுத்துக்கூட போடாமல் செருப்பை மாட்டிக் கொண்டு வாயில் பிரஷுடன் சென்றார்.
பாட்டி அதை எடுத்து மடித்து வைத்தார் . அவரது மகன் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். பல் தேய்த்து வந்தவள் காபி வாங்கிக் குடித்தாள்.
பாட்டியிடம் வேண்டுமா? என்று கூட கேட்கவில்லை. குடித்தவள் மீண்டும் மிடில் பெர்த் ஏறி தூக்கத்தை தொடர்ந்தாள்.
ஒருமணி நேரம் கழித்து மகன் எழுந்து வந்தான்.
அம்மா காபி வாங்கி தரவா? என்று கேட்டான். பாட்டி நாங்கள் வாங்கித் தந்ததைச் சொன்னாள். ஒரு சினேக பார்வை பார்த்து அவனும் பல் தேய்த்து வந்தான்.
பாட்டிக்கு பசிபோல... கொண்டு வந்திருந்த பாத்திரத்தை திறந்தாள். அருமையான வத்தல் குழம்பு மணத்தது. பாட்டி இரண்டு இட்லிகளை அதில் குழைத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தாள். நாங்கள் தோசை வாங்கி சாப்பிட்டோம். பாட்டியின் மகனும் மீண்டும் மேலேஏறிப் படுத்துவிட, பாட்டி எங்களிடம் பேசிக்கொண்டு வந்தாள்.
ஐம்பது வருஷம் முன்னர் இவர்கள் பூங்குண்ணம் கிராமத்தில் இருந்ததாகவும் இது இவரது இரண்டாவது மகன் என்றும், வயிற்றில் எட்டுமாதம் இருக்கும்போது இவரது முதல் மகன் பத்மநாபனை அவரது பெரியப்பா காசி போகும் போது கூட்டிக்கொண்டு போனதாகவும், அங்கு அவன் தொலைந்து விட்டதால் அவர் கங்கையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும் மகன் காணாமல் போகும்போது வயது நான்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்,
....3......
அண்ணனின் தற்கொலையும் மகன் காணாமல் போனதும் இவரது கணவரை பாதித்துவிட நடைப்பிணமாக இருந்ததாகவும், வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு ஊரில் ஒரு சிறிய வீடு வாங்கி மீதித் தொகையை பாங்கில் போட்டு இவரை படிக்க வைக்கவும் கணவருக்கு மருத்துவம் பார்க்கவும் செலவழித்தார் என்று சொன்னார். மகன் காசியில் ஒரு மெஸ்சியில் இருப்பதாக கேள்விப்பட்டு அவனைப் பார்த்து வர பாட்டி ஆசைப்பட்டதாகவும் மருமகள் அந்த ஆசையை நிறைவேற்றப்போகிறாள் என்றும் சொன்னார் பத்மா மேல் மதிப்பு கூடியது.
ஜானகி என்னை உற்றுப் பார்த்தாள்.
மதியம் சைடு பெர்த்தில் இருந்த ஹிந்திக்காரன் மேல் பெர்த்தில் இருந்தவனுடம் பேசிக்கொள்ள மேலே போய் உட்கார்ந்து கொள்ள, பாட்டி அதில் போய் படுத்து தூங்கிவிட்டாள்.
நாங்களும் கண்மூடி படுத்துக் கொள்ள, பத்மாவும் கணவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“ பத்மா அங்க போய் எப்படி தேடி கண்டு பிடிக்க போறோம்ன்னு தெரியலை
அம்மா வேற ஆசையா வராங்க “
“இங்க பாருங்க கோயிலுக்கு பக்கத்தில ஒரு கேரளா பிராமின் மெஸ் இருக்காம். அதுல இருக்கிறதா வந்த தகவல் அது. சரியான்னு தெரியாது ஆனா உங்க அண்ணா கிடைச்சாலும் கிடைக்காட்டியும் இனி உங்கம்மா காசிலதான் இருக்கணும் சொல்லிட்டேன்.”
“பத்மா என்ன சொல்றே? அண்ணா இருந்தா சரி, கண்டுபிடிக்க முடியலேன்னா?”
“ இல்லேன்னா என்ன? அந்த காசிவிஸ்வநாதன் பார்த்துக்குவான் கவலைப்படாதீங்க. போற உசிரு காசில போகட்டும்.”
“ என்னடி இப்படி இரக்கம் இல்லாம பேசறே? அது என் அம்மா”
“அப்படியா?”
அம்மாகிட்ட வீட்டை எழுதி வாங்கி ஒரு மாசம் கூட ஆகலை.
“ இங்க பாருங்க எனக்கு உடம்புக்கு முடியலை நமக்கு ரெண்டு பொண்ணு இருக்காங்க வீட்டை நானா போகும்போது கொண்டு போகப் போறேன் வித்தா ஒரு
.....4....
அறுபது லட்சம் கிடைக்கும். மூணா பிரிச்சு ரெண்டு பங்கு நம்ம குழந்தைகளுக்கு. ஒண்ணு நமக்கு அவ்வளவுதான்.
“ஏண்டி அம்மாக்கு ரெண்டு வாய் சாதம் கொடுக்க உன்னால முடியாதா?”
“ இப்பவே உங்க அம்மாக்கு முடியலை! நாளைக்கு படுத்துட்டா யாரு பாக்கறது? காசு போட்டு பாக்க உங்க கிட்ட பணம் இருக்கா? உங்களுக்கு பென்ஷன் இருக்கா? வேலையை விட்டு நிக்கறப்போ உங்க முதலாளி என்னத்தை பெரிசா தந்திடப்போறான்? அது மட்டும் இல்லே உங்கண்ணா கிடைச்சா உங்கம்மா ஆசையா அவர்கூட இருப்பா.”
“ கிடைக்காட்டி”
“ நீங்க வேணா அம்மா கூட அங்கே இருந்துக்குங்க! என்னால முடியாது”
சரிதான். நாங்கள் தேடிக் கொண்டு வந்தது இவர்களைத்தான்.
சிறுவயதிலிருந்து பத்மநாபன் என் அண்ணண் என்றுதான் நான் நினைத்து கொண்டிருந்தேன்
. அப்பா , பல வருஷம் முன் வழி தவறி அழுதுகொண்டிருந்த பத்மநாபனை, வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்துவிட்டு, அவரது சொந்த பந்தங்களை தேடினார் என்றும் அப்போது நான் பிறக்காததால் அண்ணனை தன் மகனாக வளர்த்து வந்ததாகவும் அப்பா சாகும் தருவாயில் சொன்னார்.
ஒருமுறை நானும் அண்ணாவும் திரிச்சூர் வந்து தேடி இவர்கள் பற்றி யாருக்கும் தெரியாததால் திரும்பிவிட்டோம். அண்ணா எங்க மெஸ்ஸில் நன்கு உழைத்து பெரிய ஹோட்டலாக மாற்றினார். இப்போ அண்ணா இல்லை. போன மாதம் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட, அண்ணாவுக்கு எங்கள் சொத்தில் ஒரு பங்கை எடுத்து அவரது தம்பிக்கு,அம்மாவுக்கு கொடுக்க அவர்களை தேடி நாங்கள் வந்தோம்.
இவர்கள் காசிக்கு வந்தால் அண்ணன் இறந்தது தெரிந்தால் பாட்டி ரொம்ப கவலைப்படுவாள் என்ன செய்யலாம் என்று யோசித்தேன் அப்படியே அண்ணா இல்லை என்றால் இவர்கள் பாட்டியை கோயிலில் விட்டுவிடுவார்கள் என்பதும் புரிந்தது.
குடும்ப சொத்து வேண்டும் ஆனால் பாட்டி வேண்டாம் என்ற மருமகளையும், மனைவியை கண்டு நடுங்கும் இவனையும் பார்க்க பார்க்க வெறுப்பாக இருந்தது.
நாலு வயதில் இருந்து என்னுடன் வாழ்த்த அண்ணாவின் அம்மா... இல்லை என்னோட அம்மாவை இவர்களிடம் விட மனது ஒப்பவில்லை . அவர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது வாரணாசிக்கு ரெண்டு ஸ்டேஷனுக்கு முன்பே அம்மாவையும், ஜானகியையும் அழைத்துக் கொண்டு இறங்கி விட்டேன்.
.....5...
“அம்மா நான் தான் பத்மநாபன் உங்களை எல்லாம் தேடித்தான் வந்தேன் நல்லவேளை கிடைச்சிட்டேங்க” என்றேன்.
அம்மா நடுங்கும் கைகளால் என் முகத்தை வருட, நான் கண்களில் கண்ணீருடன் சிலிர்த்து நின்றேன்.
என்னை முழுவதும் புரிந்துகொண்ட ஜானகி, கண்களில் கண்ணீர் வழிய என் கைகளில் முத்தம் தந்து, அம்மாவை அரவணைத்துக் கொண்டாள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக