வெட்கமாய் இருக்குதடி
“அம்மா நான் உன்கிட்ட அந்த குட்டி பர்ஸ் கேட்டேனே ! அது நல்லா இருக்கு “
“போடி அது என்னோட பிரண்ட் தந்தது .. உனக்கு அதுபோல வாங்கிண்டு வரேன்“
தனது கைப்பையில் வைத்துக்கொண்டாள் சந்திரா . காய் வாங்கலாம் என்று நினைத்தவள் வழக்கமாக செல்லும் நகலெக்ஷ்மி கடைக்குப் போனாள் .முகத்தில் நிறைய மஞ்சள் பூசி நெற்றி நிறைய குங்குமம் வைத்து எப்போதும் மங்களமாக இருக்கும் அவளைப் பார்த்தால் மாரியம்மன் மாதிரி இருப்பாள்.
“வாங்கம்மா என்ன காய் வேண்டும்?”
எல்லா காய்களும் வாங்கியவளுக்கு கட்டை பையில் வைத்துக் கொடுத்தாள் நாகலக்ஷ்மி. பணம் கொடுக்கும் போது.
“ அம்மா ஒரு ஐந்தாயிரம் இருக்குமாம்மா ஆஸ்பத்திரி செலவுக்கு வேணும்”
“ இப்படி திடிர்னு கேட்டா எப்படி நகலெக்ஷ்மி?”
“ அம்மா செலவு சொல்லிட்டாமா வருது? அந்தாளு டெஸ்ட் எடுக்கணும் அதுக்குத்தான் கேட்டேன்”
“நான் திரும்ப வீட்டுக்குப் போகும் போது என் கூட வா நாகலக்ஷ்மி.”
பக்கத்தில் இருந்த பேன்ஸி ஸ்டோர் போய் தன்னிடம் இருந்த பர்ஸ் காட்டிக் கேட்டாள். அவர்கள் காட்டிய ஒன்றும் திருப்தியாய் இருக்கவில்லை. திரும்பும் போது நாகலக்ஷ்மி கட்டைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.
“கொஞ்சம் இரு நாகலக்ஷ்மி”
என்று சொன்னவள் வீட்டினுள் சென்று மூவாயிரம் கொண்டு வந்து, “ இப்ப இதை வச்சுகோ! வேற இப்ப இல்லை”
நினைத்திருந்தால் ஏ.டி.ம் மில் எடுத்து அங்கேயே கொடுத்திருக்கலாம்
நாகலகஷ்மி போனதும் கட்டைப்பையை எடுத்துக் கொண்டு பிரிட்ஜ் அருகில் வந்தாள் காய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது மகள் நித்யா
“ அம்மா வாங்கிட்டு வந்தாயா“
“கிடைக்கலிடி நான் ரெண்டு நாள்ல அதுபோல வாங்கித் தரேன்”
அப்போது கைப்பையை வாசலிலேயே வைத்தது நினைவுக்கு வந்தது. எடுத்துக் கொண்டு வந்தாள். அந்த குட்டி புர்ஸ் காணோம் அதில் ஆயிரம் ரூபாய் வைத்திருந்தாள்.
நாகலக்ஷ்மி இங்கதானே நின்னுகிட்டு இருந்தாள்
“ நித்யா இரு வந்துடறேன் “
காய்கறி கடைக்கு ஓடினாள். அதற்குள் நாகலட்சுமி கடையை சாத்திவிட்டு போய் விட்டாள். சே ! என்ன மனுஷி இவள் ? உதவி பண்ணின எனக்கே இப்படி பண்ணி விட்டாளே?
ஒரு வாரம் நாகலக்ஷ்மி கடைக்கு வரவில்லை
இரண்டாவது வாரம் கடையை திறந்திருந்தாள். எத்தனை ஆசை ஆசையாய் சந்திரா அவளது கடைக்குப் போவாள் . இப்போது பக்கத்து கடைக்குப் போனாள் . நாகலக்ஷ்மி முகம் பொலிவில்லாமல் இருப்பதுபோல சந்திராவுக்கு தோன்றியது. சந்திராவை பரிதாபமாக பார்த்தாள் .
சந்திரா அவளிடம் ஒன்றும் பேசாமல் பக்கத்துக்கு காய்கறி கடையில் இருந்து கிளம்பும் போது,
“ சந்திராம்மா! என்று மெதுவாக கூப்பிட்டாள் “
“ என்ன சொல்லு?”
“ அம்மா நான் ஒருவாரம் கடையை திறக்கலைனு தானே என் மேல கோவம் > அந்தாளுக்கு ரொம்ப முடியலை.. இனி ஒண்ணும் பண்ண முடியாதுனு டாக்டர் கை விரிச்சிட்டாங்கம்மா... இனி ரெண்டு மூணு மாசம் தான் அவரு இருப்பாராம்.. என்னால அந்த கன்றாவியை பார்க்க முடியலை.. மருந்து வாங்கி கொடுத்திட்டு கடையை திறந்திட்டேன் “
“ நாகலக்ஷ்மி ! நான் அதுக்கு உன்கிட்ட கோவப் படலை! நீ என்னோட குட்டி பர்ஸ் திருடிட்டே! அதுல ஆயிரம் ரூபாய் இருந்திச்சு . .. உண்மையை சொன்னா உன்னை மன்னிச்சு உன் கூட பேசுவேன்.. உன்னோட கடைக்கு வருவேன்.. இல்லேன்னா இனி உன்னோட கடைக்கு வர மாட்டேன்”
“அம்மா மன்னிச்சுடுங்க! என்னோட கஷ்டத்தில அப்படி பண்ணிட்டேன்.”
பத்து இருபது என்று எண்ணி ஆயிரம் ருபாய் எடுத்துக் கொடுத்தாள்.
“ பர்ஸ் எங்கே? “
“ அம்மா வீட்ல எங்கேயோ வச்சுட்டேன்! தேடி எடுத்துத் தரேன்
இனிமே வழக்கம் போல என் கடைக்கு வாங்கம்மா உங்களைப் பார்த்தா எனக்கு ஒரு சந்தோசம்“
“ம்ம்...”
சந்திரா வேக வேகமாக நடையை எட்டிப் போட்டாள்.
மூன்று கடை தாண்டியதும் பேன்ஸி ஸ்டோர் வந்தது
“அம்மா... அம்மா>>>”
“ யாரோ கூப்பிடுவதாக ஒருவர் சொல்ல திரும்பி பார்த்தாள்”
பேன்ஸி ஸ்டோர் கடைக்காரர் கூப்பிட்டார்.
“என்னங்க?”
அம்மா நீங்க அன்னிக்கு கடைக்கு வந்து இந்த பர்ஸ் விட்டுட்டு போயிட்டீங்க! அதுல போன் நம்பர் இருக்கலே .. அதனால சொல்ல முடியலை ஆயிரம் ரூபாயும் இருந்திச்சு இந்தாங்க
சந்திராவுக்கு ‘திக்’ என்று இருந்தது அப்புறம் எதற்கு நகலெக்ஷ்மி பழியை ஏத்துக்கிட்டா
பொறுக்க முடியாமல் நாகலக்ஷ்மியை வந்து கேட்டாள்.
“ அம்மா நீங்க எடுத்த எடுப்பிலே நான் எடுத்ததா நினைச்சு பேச ஆரம்பிச்சு என்னோட கடைக்கு வரமாட்டேன்னு சொல்லிடீங்க! நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க! எனக்கு நீங்க வேணும்மா! அதுதான் ஒரு ஆயிரம் ரூபாய்க்காக உங்களை இழந்திட கூடாதுனு நினைச்சிட்டேன் .
சந்திரா அவளை அப்படியே அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக