காதோடுதான்... நான் பேசுவேன்.... R.SUNDARAM
ஜானகிக்கு வரன் அமைய யோகம் வரவில்லையா ? கடவுள் என்ன எழுதி இருக்கார் என்று தெரியலையே? என்று அலுத்துக் கொள்வாள் கோமதி .
பெண்பார்க்க முதன் முதலில் வந்த ஜெயராமனை தன் ராமனாகவே நினைத்துக்கொண்டாள் ஜானகி. அவனுக்கும் அவளைப் பிடித்திருந்தது. ஆனால் அந்த சமயம் அவள் அப்பா இறந்துவிட, பணமும் இல்லாமல் எல்லாம் முடிந்து போனது.
என்ன செய்வது? வறுமை காரணமாக சொந்தம் என்று சொல்லிக்கொள்ளக்கூட அதிகம் யாரும் வரமாட்டார்கள் . ஊரில் நடக்கும் வருட கோவில் விழாவில் கலந்து கொள்ள சொந்தங்கள் வந்தால் இவர்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டு போகும்போது சொற்பமாக எதாவது தந்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் வந்து தங்கி செல்வதே அவர்களுக்கு சந்தோஷம் தரும் என்பதால் பணம் வேண்டாம் என்று சொல்வார்கள் ஜானகியும் கோமதியும் . சிலர் கட்டாயப்படுத்தி கொடுத்துவிட்டு செல்ல, சிலர் சரியென்று பேசாமல் இருந்து விடுவார்கள். அவர்கள் வந்து சென்ற பின்னர் இவர்களை சுத்தமாக மறந்து விடுவார்கள் .ஆனால் இவர்கள் எங்க மாமாவோட சித்தப்பா பையன் , என்னோட பெரியப்பாவின் மருமகள் , என்று வந்து சென்ற விஷயத்தை வருடம் முழுவதும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
மாமா போன பிறகு, மாமி கல்யாணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு சமையல் செய்து கொடுப்பாள். ஜானகி உதவி செய்வாள். ஜானகியின் சக வயது தோழிகள் ஊருக்கு பிள்ளைகளுடன் வரும் போது ஜானகி மறைந்திருந்து பார்ப்பாள் . கண்களின் ஓரம் கண்ணீர் பெருகும். ஆனால் அம்மாவுக்கு தெரியாமல் மறைத்து விடுவாள். அவளை “அக்கா” “அக்கா” என்று சுத்தி சுத்தி வந்துகொண்டிருந்த ஸ்ரீதர், தனபால், வருண் எல்லோரும் அப்பாவாக அவதாரம் எடுத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்களுக்கு அவளைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்.
ஜானகிக்கு அவர்களைப் பார்த்தால் அச்சிறு வயது பையன்களாகத்தான் தெரியும். சிறு வயதில் அவர்களை எல்லாம் வைத்து நாடகம் போட்டு இருக்கிறாள் .
....2.....
மையில் மீசை வரைந்திருக்கிறாள். இப்போது அவர்களை பார்த்தால் அவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டுவரும் .
“டாய் ஸ்ரீதர் மீசை மையாடா ?” என்று கூட கேட்பாள்
ஒரு முறை இதே போல தனபாலை கிண்டல் செய்துகொண்டிருந்த போது அவன் மனைவி
“ நீங்க அவரை விட வயதில் பெரியவரா இருக்கலாம் என் எதிர்க்க அவரை வாடா போடா அப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்ற போதுதான் ஜானகிக்கு தன் எல்லை எது என்று தெரிந்தது . அவள் அப்படி சொல்லும்போது தனபால் சங்கடமாக நெளிந்தானே தவிர, அவளை ஒன்றும்சொல்லவில்லை. அதன் பிறகு ஜானகியை பார்த்தால் தலையை தொங்க போட்டுகொண்டு சென்றுவிடுவான். எங்கு யாருக்கு என்ன உதவி என்றாலும் ஜானகி முதலில் நிற்பாள். சிறுவயதில் குழந்தைகளுடன் விளையாட்டு, டான்ஸ், ட்ராமா என்று இருந்தவள் வயது ஆக ஆக கதை சொல்லி கொடுப்பாள். சிலசமயம் அவளை முதன் முதல் பெண் பார்த்த ஜெயராமன் முதல் கடைசியாக பார்த்த மாதவன் வரை கொஞ்சம்கூட வருத்தம் இல்லாமல் யாருக்கோ நடந்ததுபோல் சொல்லி முடிப்பாள்.
“அக்கா ஆக்டர் மாதவனா?”
என்று கூட யாரோ கேட்க, கண்ணில் நீர் வரும் வரை சிரித்தாள்.
“ நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடாதீங்க! இப்படியே எங்களுக்காக இருங்க! வருஷா வருஷம் வரும்போது கதைசொல்லித்தாங்க! நல்லா இருக்கு! என்று பிள்ளைகளும் கூறிச் செல்வார்கள்.
கிராமத்திலிருந்து அனைவரும் செல்ல, செல்ல இவர்களும் பட்டணம் வர வேண்டிய நிர்பந்தம் வந்தது . இங்கு எதற்குமே போட்டி தான் என்று ஆகிவிட்ட பிறகு இவர்கள் ரொம்ப சிரமப்பட, தெவச காரியங்கள் செய்து கொண்டிருக்கும் ஒருவர் உதவினார் . மாமியும் ஜானகியும் சற்று தயங்கினாலும், நாட்பட நாட்பட அங்கேயே தங்கி இருந்து அனைத்து உடல்களையும் எரியூட்டும் வேலை செய்து வந்தார்கள். முதலில் ரொம்ப கலங்கி போய் விட்டாள் ஜானகி . வயது மூப்பு
....3...
இல்லாமல் சின்ன சின்ன மொட்டுக்கள் வரும்போது கலங்கித்தான் போனாள் .ஆனால் சிலமாதங்களில் அவள் சகஜ நிலை அடைந்துவிட்டாள் .
அம்மாவும் போன பின்னர் இவள் ஒருத்தியா தனியே எல்லா வேலைகளையும் செய்து வந்தாள். அவளுக்கு கொடுத்திருந்த சிறு அறையில் தங்கிக் கொண்டாள்.
அன்று வழக்கம் போல ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. மட மட வென்று எல்லா வேலைகளையும் எடுத்து போட்டுக் கொண்டு செய்த ஜானகி, முடியில் முகத்தைப் பார்த்தாள். அது... அது... பெண் பார்க்க முதன் முதலில் வந்த ஜெயராமன். அழுகை, மற்றும் எல்லாம் மறந்தும்.... மரத்தும்... போயிருந்த அவள் குலுங்கி குலுங்கி அழுதாள். வந்திருந்தவர்கள் எதற்காக அழுகிறாள் என்று தெரியாமல் அவளை திரும்பி பார்த்தபடியே சென்றார்கள்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக