நண்பனின் மனைவி
நட்புன்னா என்னங்க?
ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா பழகறதா? அப்படின்னா நாம பலபேரு கூட நல்லாத்தானே பழகறோம். ? இருந்தாலும் நாம சிலபேரு கூடத்தானே எல்லாத்தையும் பகிருத்துக்கறோம் .. ரெண்டு நாள் பாக்கலைனாலும்... பேசலைனாலும்...தவிச்சுப் போயிடறோம். அப்படி உயிருக்கு உயிரா பழகின பலபேரு இப்ப எங்க இருக்காங்கனு தெரியுமா? சில பேரு சின்ன விஷயத்துக்கு சண்டை போட்டுக்கிட்டு போயிடறாங்க. ! சில பேரு கால மாற்றத்தில் திசைக்குக்கு ஒருவரா பிரிஞ்சிடறாங்க. . அப்படி பிரிஞ்சவங்க பல பேரை நாம சந்திக்கவே முடியறதில்லை.....காதலன் காதலிக்கு மட்டும் இல்லேங்க.... பிரிந்த நண்பர்கள் சந்தித்தாலும் முதல்ல கண்ணீர் தாங்க வரும்... அங்க பேச எதுவும் இருக்காதுங்க...
அப்படித்தாங்க ஷங்கரும், முஸ்தபாவும்.
சங்கரோட அப்பாக்கு நிலையா ஒரு வேலை இல்லை . படிப்பும் அதிகமா இல்லாததால கிடைச்ச இடத்தில் வேலைக்கு போய்கிட்டு இருந்தப்ப வேலூரில் ஒரு கணக்கர் வேலை கிடைச்சுதுங்க. அங்க வந்த முஸ்தபாவின் அப்பா தாங்க அவருக்கு வீடும் பிடிச்சு கொடுத்தாரு. எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஷங்கரும், முஸ்தபாவும் சீக்கிரமே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க.
'
இதில என்ன ஆச்சரியம்னா சங்கர் ஐயர் வீட்டுப் பையன்.
பள்ளிக்கூடம் போகும் போது ரெண்டு பேரும் ஒண்ணாதான் போவாங்க.
போற வழில இருக்கற சிவன் கோவிலுக்கு இவன் போயிட்டு வரும் வரை முஸ்தபா வெளியில் நின்னுக்கிட்டு இவனோட செருப்பையும், புத்தக பையையும் பத்திரமா வச்சிருப்பான்.
லீவு நாளில் யாரோ ஒருத்தரோட வீட்டில் ரெண்டு பிள்ளைகளும் விளையாடும்.
ஓரிரு நாள் அப்பாக்கு தெரியாமல் சங்கர் ஆமுலேட் சாப்பிட்டு இருக்கான்.முஸ்தபா ஷங்கர் வீட்டில் வெல்ல கொழுக்கட்டை கேட்டு வாங்கி சாப்பிடுவான்
.ஒரு முறை காரடையான் நோன்பு அன்று அவன் அம்மா இவனுக்கு வெல்ல அடையும் , கார அடையும் கொடுத்தப்போ வேண்டாம் என்று சொன்னவன், ருசி அறிந்த பின் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்..
ஒருநாள் ஷங்கரிடம்,
“டேய் இனி எப்ப உங்கம்மாக்கு கல்யாணம் நடக்கும்?” என்று கேட்டான்.
“ என்னடா சொல்றே?”
“ இல்லே.... எனக்கு மறுபடியும் அந்த அடை சாப்பிட ஆசையா இருக்கு“
என்று சொல்ல,
சங்கர் கண்ணில் கண்ணீர் வர சிரித்து, சத்தியவான் சாவித்திரி கதையைச் சொன்னான்
.ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வரை ஒன்றாக இருந்தவர்கள் கல்லூரிக்குச் சென்றதும் சிலகாலம் கடித போக்குவரத்துடன் நிற்பதற்கு காரணம் ஷங்கரின் அப்பாவின் மரணம். அப்பா நன்கு படிக்கவில்லை. சங்கர் நன்கு படித்தும், படிப்பை தொடர முடியாத நிலை. அப்பாவின் கம்பெனியில் வேலைக்கு போய்க் கொண்டிருந்தான்.
அவனை ஆந்திராவில் அனுப்பிவிட,முகவரி மாற்றம் வேலைப் பளு கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் தொடர்பு இல்லாத நிலையில் இருந்தார்கள்.
அவனுக்கு திருச்சியில் வேலை மாற்றலாகி விட, ஒருநாள் கடை வீதிக்கு சென்று செருப்பு வாங்க சென்றவனை அந்த கடையில் இருந்த முஸ்தபா பார்த்து விட்டான்.
“ டேய் சங்கர்!” என்று சொல்லி ஓடி வந்து தழுவிக் கொண்டான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணீர் சிந்தினர்.
முஸ்தபாவின் அப்பாவும் சங்கரின் கதையைக் கேட்டு,
“ ஏம்ப்பா? சொல்லியிருந்தா உன்னையும் படிக்க வச்சிருப்பேன் இல்லே
“ இது எங்க கடைதான் இப்பவே வீட்டுக்கு வா“
என்று அழைத்துச் சென்றான்
முஸ்தபா. வீட்டில் அம்மாவும் ஒரு இளம் பெண்ணும் இருந்தனர். இரண்டு வயதில் ஒரு பிள்ளை. அவனுக்கு நிஃகாஹ் ஆகிவிட்டது அவ பெயர் மும்தாஜ் என்றார் அவன் அம்மா.
“ஆம்லெட் போடவா ஐயரே? “
பழைய நினைவை ஊட்டினார்.
சங்கர் சிரித்துக் கொண்டான்.
காலம் தான் எவ்வளவு வேகமாகச் செல்கிறது முஸ்தபாவின் மகன் இப்போது அபுதாபியில் வேலை செய்கிறான் .
முஸ்தபாவுக்கு அடிக்கடி முடியாமல் போக, சங்கர் அவனுக்கு பலவிதத்திலும் உதவினான். கடையை மூடி விட்டார்கள். துறையூர்க்கு சென்று விட்டனர். சங்கருக்கு திருமணம் ஆகவே இல்லை. வயதும் எழுபது ஆகிவிட, அவனும் ஏதோ காலத்தை ஒட்டிக்கொண்டு இருந்தான்.
முஸ்தபா மிகவும் முடியாமல் சிரமப்பட அவனுக்கு உதவியாக அருகிலேயே குடி போய் விட்டான் ஷங்கர். ஒரு வருடம் முடிந்திருக்கும். அன்று மிகவும் சோர்வாக இருந்தான் முஸ்தபா. அவனைப் பார்த்தால் அவன் இன்னும் சில தினங்களே இருப்பான் என்று தெரிந்தது.
அன்று காரடையான் நோன்பு . அவனுக்கு பிடித்த வெல்ல அடையும், உப்பு அடையும் செய்து கொடுத்தான்
சங்கர்.மும்தாஜிடம் நோம்பு கயிறு கொடுத்து கட்டிக் கொள்ளச் சொன்னான். அவள் அதை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
என்ன செய்ய.... பயனில்லாமல் போய் விட்டது... அவனது மகன் வந்து ஒரு மாதம் தங்கி இருந்தான். பிறகு போய் விட்டான்.
சங்கரிடம் , “அம்மாவை கொஞ்சம் பார்த்துக்குங்க...”
என்று சொல்லிச் சென்றான்.
சங்கர் மும்தாஜை விட்டு பிரியாமல் அவளுக்கு தேவையான உதவிகள் செய்து வந்தான்.
ஊர் பேசாமலா இருக்கும் ?
அவர்களுக்கு தங்கள் இருவரைப் பற்றி நன்கு தெரியும் என்பதால், ஊரார் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.......
பக்கத்துக்கு வீட்டில் தகர கதவு திறக்கும் ஒலி கேட்டு சங்கருக்கு முழிப்பு வந்தது. மும்தாஜ் எழுந்து விட்டாள் என்பதை உணர்ந்தார்.
ஆச்சு இனி காலை முதல்..... இரவு வரை.... அவள் அந்த கதவின் அருகில் தான் நிற்பாள் என்பதை அவர் அறிவார்.
எத்தனையோ கணவன் மனைவிகளின் அன்பை அவர் பார்த்திருக்கிறார் என்றாலும் மும்தாஜ் கணவன் முஸ்தபாவிடம் கொண்டிருந்த அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அவளை விவாகம் செய்து கொடுத்த நாள் முதல் முஸ்தபா தான் எல்லாம். அவனிடம் அப்பாவை, நண்பனை, காதலனை, அன்னையை, அனைவரையும் உணர்ந்தாள்.
அவளும் அவனுக்கு எல்லா விதத்திலும் அன்போடு நடந்து கொண்டாள். முஸ்தபா வெளியே சென்றால் அவன் வரும் வரை அவனது சட்டையைப் போட்டு கொண்டு இருப்பாள். அவனது கை கடிகாரம் கட்டிக் கொள்வாள். அவன் அவளது கரத்தைப் இறுக பற்றி இருப்பதை போல உணர்வாள்.
மெதுவாக எழுந்து வெளியில் வந்தார் அவரை பார்த்து வெள்ளையாக பொக்கை வாய் திறந்து வெட்கத்துடன் சிரித்தாள்.
“ என்ன மும்தாஜ்? முஸ்தபா வரலையா?
“ வருவாரு.. அவருக்கு இன்னிக்கு பிறந்த நாள்.. சட்டையை தோச்சு இஸ்த்திரி போட்டு வைத்திருக்கேன்”
என்று சொல்லி அவன் வரவை நோக்கி காத்திருக்கிறாள் மும்தாஜ் .
பல வருடங்களாக காத்திருக்கிறாள் தானே!
அதிதீக அன்பில் அவன் இறந்ததைக் கூட உணராமல் .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக