தங்கவேல் முருகனனுக்கு .....
“ ராஜா ... ராஜா “
“என்னங்க ஐயா?”
“ராஜா இந்த வருஷம் தேர் திருவிழாவுக்கு நம்ம ஊர் கலெக்டர் வரப்போறாரு நீ எப்பவும் போல தேர் திருவிழாவை சிறப்பா செய்யணும்”
“ஐயா போன வருஷம் வரைக்கும் அம்மா நல்லா இருந்தாங்க. இப்ப முடியாம படுத்து இருகாங்க. என்னை அடிக்கடி கூப்பிடுவாங்க. என்னால அம்மாவை விட்டுட்டு தேருக்கு வர முடியாதுங்க... என்னை மன்னிச்சுடுங்க..”
“ஆமாம் நான் மறந்திட்டேன். ராஜா நான் குமாரை பார்த்துக்கறேன்“
“சரிங்க ஐயா”
ராஜா இருந்தால் எதற்கும் கவலைப்பட வேண்டாம் அருமையாக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வான். என்ன செய்வது குழம்பியவாறே சென்றார் வேலாயுதம்.
ராஜாவுக்கு மனசே சரியில்லை. நினைவு தெரிந்த நாளில் இருந்து முருகன் கோவிலே கதி என்று இருப்பான் . கோவிலுக்கு கூட அம்மாவை விட்டுவிட்டு போக முடியாது.. துணைக்கு யாரும் இல்லை.
தீருவிழாவன்று மனது முழுக்க முருகன் நிறைந்து இருந்தான்.
“ ராஜா நீ வேணா போயிட்டு வாப்பா எனக்கு இன்னும் ஒருதடவைகூட பாத்ரூம் போகணும்”
“ அம்மா வா! முருகன் என்னோட மனசுல இருக்கான்”
கலெக்டர் வந்து கலந்து கொண்டார். அவரும் உற்சாகமாக தேர் இழுத்தார் . சாதாரணமாக பெரிய வீதிகளை மட்டும் சுற்றி வரும் தேர் அன்று ராஜாவின் வீட்டின் வழியே வந்தது மட்டும் அல்ல வாசலில் நின்று விட, ராஜா ஓடிச்சென்று முருகனை வணங்கினான். அம்மாவிற்கும் திருநீறு பூசிவிட்டான்.
கொஞ்சநேரம் கழிந்திருக்கும்
வேலாயுதம் வந்தார்.
“ ராஜா முருகனோட தங்கவேலை காணவில்லை நாங்க தேடிக்கிட்டு இருக்கோம்:”
“ஐயா என்ன சொல்றேங்க?”
“ஆமா ராஜா கலெக்டர் உடனே போக வேண்டிய வேலை வந்திடுச்சு அதனால பெரிய தெருவுக்கு மட்டும் தேரை இழுத்து கொண்டு போய் கோவில விட்டுட்டோம். அங்க பூரா தேடிட்டோம். முருகனோட தங்க வேலை காணோம்”
“ஐயா எங்க வீதிக்கும் தேரு வந்திச்சே”
“என்னப்பா சொல்றே தேர் இங்கெல்லாம் வரலை”
ராஜாவுக்கு “சட்” என்று எதுவோ உறைக்க, அவன் வீட்டு வாசலில் தேர் நின்றுகொண்டிருந்த இடத்தில் போய் தேட துவங்க,
பின்னாலே வந்த வேலாயுதம்,
“ என்னப்பா தேடறே” என்றார்
“ஐயா தேர் இங்க நின்னிச்சு ஐயா”
என்று சொல்லியபடியே தேடினவன் கையில் அகப்பட்டது முருகனின் தங்கவேல்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக