வா... கண்ணா... வா...
“என்ன எல்லோரும் வாசலுக்கு வந்து நிக்கறேள்”
“அக்காவும் அத்திபாரும் இன்னிக்கு கார்த்தால பிலைட்ல கோயம்பத்தூர் வந்து அங்கிருந்து டாக்ஸி எடுத்துட்டு இங்க வந்திண்டுருக்கா!”
“ஒரு வாரம் இருப்பாளா?”
“இல்லை... நாளைக்கு மீட்டிங் இருக்காம்.. அக்காவை விட்டுட்டு சாயங்காலம் அவர் கிளப்பிடுவார்.. அக்கா இங்கிருந்து நாளைக்கு சாயங்காலம் போயிடுவா! எங்களை எல்லாம் பாக்க ஆசையா இருக்குனு மாமனாரை நாத்தனார் வீட்டில விட்டுட்டு ரெண்டு பேரும் குழந்தைகள் கூட்டிண்டு வந்திண்டிருக்கா!”
அந்த ஏழை கிராமத்து வீட்டு பெண்ணுக்கு வந்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். உமா அழகும், பொறுமையும், திறமையும் உள்ளவளுக்கு வரன் தேடி வந்தது.
படித்துக்கொண்டிருந்த அவளைப் படிப்பை நிறுத்தி கல்யாணம் செய்து கொடுத்தபோது மாப்பிள்ளை கண்ணனிடம் படிப்பை விட்டது பிடிக்கவில்லை என்ற போது அவளை மேலே படிக்க வைத்தான். படிப்பு முடிவதற்குள் எல்..ஐ..சி யில் வேலை அவளுக்கு கிடைத்தது.
ரெண்டு ஆண் குழந்தைகள். ரெண்டாவது பெண் திருமணத்திற்கு மூன்று லட்சம் கொடுத்து உதவினான். இன்னும் மாலாவும் ருக்குமணியும் திருமணத்திற்கு தயாராக இருக்கின்றனர்.
அவர்கள் வந்து வீடே ஒரே சந்தோசம். ருக்மணிக்கு நல்ல கைக்கடிகாரம் கொண்டு வந்திருந்தார்கள்.
மாலாவுக்கு நாலு சுடிதார்கள் .மாலை கண்ணன் கிளம்பும்போது மச்சினிகள் கண்களில் கண்ணீர்.
பழைய நினைவுகளை அசை போட்டபடி கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டார் உமாவின் அப்பா வெங்கடாசலம். இன்னும் ட்ரெயின் வரவில்லை.
குழந்தைகள், மாமனார் சகிதம் சொந்த கிராமத்திற்கு வந்து இருக்க போவதாக உமா போனில் சொன்ன போது, “சரிம்மா” என்று சொன்னார்
போனை வைத்ததும் ரெண்டு பெண்களும் அவரை ‘உலுக்கி எடுத்தார்கள்.
“என்னப்பா நீ பாட்டுக்கு வானு சொல்றே? அவ மாமனார் கூட வரப் போறார். அவரை நாத்தனார் வீட்டில் விட வேண்டியது தானே!”
“பிள்ளை வீட்டில் தானே அவர் இருப்பது முறை ருக்கு”
“அது கண்ணன் உயிரோடு இருக்கறப்ப! அவர் பட்னு போயிட்டார்! உமா எதுக்கு மாறுதல் வாங்கிண்டு இங்க வரணும்? மும்பையிலேயே இருக்கக் கூடாதா? இங்க அவளும் வந்துட்டா இடமே இருக்காது”
“ஏண்டி நீங்க ரெண்டுபேரும் கல்யாணமாகி போயிடுவீங்களே!”
“போனா... வரமாட்டோமா? மாப்பிள்ளை கூட வரும்போது தனி ரூம் கூட எங்களுக்கு இருக்காது”
“என்னடி இப்படி பேசறே? அவ எல்லாம் கொண்டு வந்து கொடுக்கறப்ப நன்னா இருந்துதா?”
“அதுக்காக பேச வேண்டியதை பேசத்தானே வேணும்?”
அம்மா தோசைக்கு அரைத்துக் கொண்டிருக்க,
” இனி நீ முழு நேரம் கிச்சன்ல இருந்து அவாளுக்கு வடிச்சுக் கொட்டிண்டு இரு”
எரிச்சலோடு சொன்னாள் மாலா.
மகன் மாதிரி இருந்த கண்ணன் போனது வெங்கடாசலத்துக்கு நினைத்து நினைத்து ஆறவில்லை. ட்ரெயின் வருவதாக அறிவித்தார்கள். அவளது கம்பார்ட்மெண்ட்டில் இருந்து எட்டிப் பார்த்த குழந்தைகள், “தாத்தா” என்று ஆசையோடு அழைத்தன.
கண்ணில் பெருகும் நீரை துடைத்தபடி குழந்தைகளை தழுவிக் கொண்டார். மெதுவாக வந்த உமாவின் மாமனார் கேசவன் கைகளைப் பற்றிக் கொண்டார். இருவரும் ஒருவர் ஒருவர் கைகளை அழுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டனர் .
வீட்டு வாசலில் யாரும் காத்திருக்கவில்லை.
“ ருக்கு.... மாலா.... “
வெங்கடாசலம் குரலுக்கு மதிப்பெங்கே? அம்மா ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
குழந்தைகள் ‘சித்தி’ என்று
கத்தியபடி வீட்டுக்குள் ஓடின.
உமா மாமனாருக்கு மாத்திரைகள் எடுத்துக் கொடுத்து படுக்கை விரித்துக் கொடுத்தாள்.
குழந்தைகள் பாட்டியின் மடியில் தூங்கி விட்டன . வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.
“அம்மா, ருக்கு, மாலா ரெண்டு பேர் கல்யாணத்துக்கு தனி தனியா ஐந்து லட்சம் போட்டு வச்சிருக்கார் நீங்க எனக்கு பண்ணி போட்ட கொடி வளையல்கள் மொத்தம் பத்து பவுன் இதில இருக்கு. இதை அவாளுக்கு நகை பண்ண வச்சுக்குங்க. எனக்கு அவர் வாங்கி தந்த கருகுமணி இருக்கு. அது போதும். அவர் அடிக்கடி என்ன சொல்லுவார் தெரியுமா? மாலாவுக்கும், ருக்குவுக்கும் கல்யாணம் முடிஞ்ச பின்னாடி உன்னோட அம்மாவையும் அப்பாவையும் இங்கே கூட்டிட்டு வந்திடலாம். எல்லோரும் ஒண்ணா இருக்கலாம்னு சொல்வார். அவரோட ஆசையைப்படி நாம எல்லாம் ஒண்ணா இருக்கலாம் என்ன அவர் மட்டும் இல்லை.
மாலாவும் ருக்குவும் வெடித்து அழுதார்கள்.
ஏனென்று தெரியாமல் திடுக்கிட்டு பார்த்தாள் உமா.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக