07.11.20
ரேவா
மங்கையின்_திறமை_85
கல்யாணபுரமே பரபரப்பாய் இருந்தது. சாளுக்கியரது சேனைகள் அணிவகுத்து பல்லவரதுச் சேனையை தவிடுபொடியாக்கிடும் எண்ணங் கொண்டு கிளம்பியது. மகேந்திரவர்மர் காலந்தொட்டு சாளுக்கியரின் ஜென்ம வைரிகளாய் இருந்த பல்லவர்களைத் துவம்சம் செய்வதென்றாலே சாளுக்கியருக்கு தனிப்பட்ட ஒரு விருப்பு உண்டாகி விடும். நரசிம்மவர்ம பல்லவரோ சாளுக்கியரை வாதாபி வரை விரட்டிக் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது, அந்நகரையே தீக்கிரையாக்கி விட்டதனாலும், அந்நகரின் மையத்தில் ஜெயஸ்தம்பம் ஒன்றை நிறுவி, பல்லவரது பெருமைகளை அதில் பொறித்துப் போனதாலும் , வாதாபியிலிருந்து பல்லவத் தளபதி பரஞ்சோதி கணபதி விக்கிரகத்தை தூக்கிக் கொண்டு சென்றதனாலும், பாழ்பட்டுப் போன வாதாபியை விட்டு சாளுக்கியர் சற்றே வடக்கு நோக்கி நகர்ந்து கல்யாணபுரத்தை தங்கள் தலைநகராக்கிக் கொண்டனர். அந்த எழிலான தலைநகர் தான் இன்று அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. பல்லவர்களை புறமுதுகிட்டோடச் செய்ய வேண்டுமென ஆவல் கொண்டவர்களாய் புற்றீசல்களாய் திரண்டெழுந்து வந்தனர்.
சாளுக்கியரது பெரும்படையானது கங்கரது நகரை அடைந்ததும், கங்கரது படையும் கடலினைச் சேரும் நதியைப் போல ஆரவாரத்துடன் இணைய , களிப்புடன் இரு நாட்டுப் படைகளும் வெம்பை நகரை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது.
சாலையெங்கும் புழுதிப் படலங்கள். வழியெங்கும் இருந்த வாழை, கரும்பு, தென்னை மரங்கள் யானைகளின் வயிற்றுப் பசியைத் தீர்த்தன. விளைந்திருந்த விளைபொருட்கள் யாவும் வீணாகிப் போனது. கண்ணில் பட்ட முயலும், மானும் படைகளின் பசியைப் போக்கின. வெம்பைக்கு வடக்கே இரண்டு காத தூரத்தில் சாளுக்கியரது சேனை தண்டு இறக்கியது. சக்கரவர்த்தி கீர்த்திவர்மனுக்கும், கங்க அரசன் சிறீபுருஷனுக்கும் தனித்தனியாக கூடாரங்களை நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள் அவரவர் நாட்டினர்.
பல்லவர் வெம்பை நகருக்கு தென்கிழக்கே முகாமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் பல்லவரது படை பலம் குறித்து அறிந்து வர ஒரு சில ஒற்றர்களை பல்லவரது முகாமினை நோக்கி அனுப்பி வைத்திருந்தான் சாளுக்கியக் கீர்த்திவர்மன். ஒற்றறிந்து வந்தவர்கள் கொடுத்த தகவலும் திருப்திகரமாகவே இருந்தது. சாளுக்கியரது சேனையை விட குறைவான வீரர்களே வந்திருக்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்வைத் தந்தது கங்கனுக்கும், சாளுக்கியனுக்கும்.
அன்றைய இரவு பல்லவனை முறியடிப்பதற்கான யுத்தத் தந்திரத்தை வகுப்பதற்கான மந்திராலோசனைக் கூட்டம் சாளுக்கியச் சக்கரவர்த்தி கீர்த்திவர்மனது கூடாரத்தில் நடைபெற்றது.
" கீர்த்திவர்மரே..படைபலமற்ற பல்லவன் எந்த தைரியத்தில் நம்முடன் மோதத் துணிந்தான் என்பதே புரியவில்லையே..சென்றமுறை பரமேஸ்வரவர்மரது நிலை என்னவானது என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் மீண்டும் ஏனிந்த விஷப் பரிட்சையில் இறங்கி விட்டனர் பல்லவர்கள்.." என்றார் ஆதங்கத்துடன் சிறீபுருஷன்.
" வேறென்ன , இராஷ்டிரகூடத்தின் இளவரசியை நான் தூக்கி வந்து விட்டேனல்லவா..அவளை மீட்கவே, யோசனையின்றி இறங்கியிருப்பான் பல்லவன். அவளை தூக்கி வந்ததன் காரணமே பல்லவன் படையுடன் வரவேண்டும் என்பதற்குத் தானே..! என் தந்தை இருந்தவரையில் சற்றே சாத்வீகமாய் பல்லவரிடத்தில் நடந்து கொண்டிருந்தார். எனது கருத்துகளையும் செவிமடுக்கவில்லை. இல்லையென்றால் நரசிம்மன் வாதாபியை தரைமட்டமாக்கியது போல் காஞ்சியை அழித்து விட எண்ணியிருந்தேன். இருமுறை வாய்ப்பிருந்தும் என் தந்தையின் தலையீட்டால் அது சாத்தியமில்லாது போயிற்று..! ஆனால்..இம்முறை..." என்றான் பற்களை நறநறவென கடித்தபடி குதர்க்கமாய் கீர்த்திவர்மன்.
" பல்லவரது பரிவேள்வி யாத்திரையினால் அவர்களது சேனைகள் வடக்குதிசையில் எல்லாம் வாகை சூடியதாம்.. அது மட்டுமின்றி நந்திபுர முற்றுகையையும் முறியடித்து விட்டார்கள் அல்லவா..! அந்த துணிச்சலும் இருக்கலாம்..எது எப்படியோ இம்முறை அவர்கள் இங்கு தோற்றோடப் போவது உறுதி.." என்றார் இகழ்ச்சி நிரம்பிய தொனியில் சிறீபுருஷன்.
"நமது போர் யுக்தியின் மூலம் பல்லவனை தோற்றோடச் செய்ய வேண்டும். நாம் இரு பிரிவாகப் பிரிந்து பல்லவரை ஒரு சேர நெருக்கினால் , அவர்களால் நம்மை எதிர்த்து நிற்க இயலாமல் செய்து விடலாம். " என்றான் கீர்த்திவர்மன்.
மேற்கிலிருந்து சாளுக்கியரும், கிழக்கிலிருந்து கங்கரும் நந்திவர்மனது படையை எதிர்கொள்வது என்றும் , இருவருக்கும் இடையே சிக்கும் பல்லவரது படையில் ஒருவரும் மிஞ்சப்போவதில்லை என்றும் தீர்மானமாயிற்று.
கங்கனது இளவேனிற்காலத்து வசந்தமாளிகை.
தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்த மங்கையை ஏறெடுத்த ரேவா, " மங்கை..என்னிடம் ஏதோ கேட்க விரும்புவதைப் போல் தெரிகிறதே..!
எதுவாக இருந்தாலும் சங்கடமின்றி வினவலாம்.." என்றாள் ரேவா.
மங்கையிடம் இருந்து பதில் கேள்வி வந்த பின் தான் , அவளிடம் அவ்வாறு சொல்லியிருக்க கூடாது என எண்ணமிட்டாள்.
" தேவி..உண்மைதான். உங்களிடம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள விழைகிறேன். நீங்களாக சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். பரவாயில்லை..என்னை இன்னும் நீங்கள் நம்பவில்லை என்பது புரிகிறது.
நேற்றைய இரவு தங்களது அறைக்கு வந்து சென்றது யார்..? என்றாள் திடுமென மங்கை.
தூக்கிவாரிப் போட்டது ரேவாவிற்கு. இவளுக்கு எப்படி தெரிந்தது..! என ரேவா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்து அவள் கேட்ட கேள்வி ரேவாவை பிரம்மிப்பின் உச்சத்திற்கே கொண்டு போனது.
" எரிக்கப்பட்ட ஓலையில் என்ன எழுதியிருந்தது..? " என்றாள் சாதாரணமாக மங்கை.
" மங்கை..நீ இதை எவ்வாறு அறிவாய்..? "
என்றாள் தயங்கியவாறே ரேவா.
"தங்களுக்கு உணவினை அளித்துவிட்டுச் செல்லும் போது, தாழ்வரை இருளில் யாரோ ஒளிந்திருப்பதை உணர்ந்த நான்..கீழே செல்லாமல் படிகளில் நின்றபடியே கவனித்தேன். இருளில் வந்த உருவம் உங்களுக்கு நிச்சயமாய் அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். என்று நடந்ததை விவரித்த மங்கை, வந்த உருவம் தனது கைகளில் இருந்ததை வெளியே போட்டுவிட்டு கைகளை உதறியபடி சென்றதையும் பார்த்தேன். அது என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் இன்று காலை அவ்விடம் சென்று கவனித்தேன். எரிந்த சாம்பல் தூள் தான் காணப்பட்டது..ஆனால் ஒரு சிறு துணுக்கு ஓலை எரியாமல் கருகிய பகுதியுடன் இருப்பதையும் கண்டேன்.அனேகமாக அது கரம் பிடித்திருந்த பகுதியாக இருக்கும் என எண்ணுகிறேன். விசயத்தைப் படித்துவிட்டு இங்குள்ள விளக்கில் நீங்களோ, வந்தவரோ எரித்திருக்க வேண்டும். இல்லையா..?! " என்றாள் விஷமத்துடன் மங்கை.
" மங்கை..நீ புத்திசாலி தான்..நடந்தவைகளை அப்படியே கூறி விட்டாயே..! " என்றாள் ரேவா.
" தேவி..கங்க நாட்டு இளவரசி பூசுந்தரியின் தோழியாய் இருந்த எனக்கு இது கூட தெரியாமல் இருந்தால் என்ன செய்வது..! தாங்கள் தான் என்னை புரிந்துகொள்ளவில்லை. தங்களை இங்கிருந்து தப்புவிக்கவே எண்ணம் கொண்டுள்ளேன்.ஆனால் நான் இதில் நேரடியாக ஈடுபடக் கூடாது..என்னை மீறி நடந்ததாகவும் இருக்க வேண்டும். " என்றாள் மங்கை.
" மங்கை..நான் இங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பவில்லை..போர் துவங்கப் போகிறதாம். வெற்றிக்குப் பிறகு, வந்து அழைத்துச் செல்வதாகவே ஓலை வந்தது..எனவே உனது பணிக்கு என்னால் எந்தவொரு துன்பமும் நேரப் போவதில்லை.."
" போர் துவங்கப் போகிறது என்பதைத் தான் நேற்றைய முன் தினம் தலைகாட்டில் இருந்து ஐவர் வந்து சொல்லிச் சென்றார்கள் அல்லவா, அதை நானும் அறிவேன். பெண்களைப் பிணையமாக வைத்துக் கொண்டு அரசியல் செய்வது எனக்கு உடன்பாடில்லாத ஒன்று. எங்கள் இளவரசி பூசுந்தரியும் இதை விரும்ப மாட்டார்கள்..எப்படியும் உன்னை இங்கிருந்து தப்புவிப்பதே எனது தலையாயப் பணி..! சாளுக்கியனது துர்போதனையால் எங்களது அரசரும் மதிமயக்கம் கொண்டுள்ளார்." என்றாள் சீற்றத்துடன் மங்கை.
அப்போது.. அந்த வசந்தகால மாளிகையை நோக்கி விரைந்து வந்தது ஒரு புரவி. அதன் மேல்..
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக