உன்னை அறிந்தால் .....
“சித்தி! இந்த கணக்கு சொல்லித்தா! எப்படி போட்டாலும் வர மாட்டேங்குது”
என்னிடம் புத்தகத்தையும் நோட்டையும் தந்தான் ரமணன் . நான் பொறுமையாக அவனுக்கு சொல்லிக் கொடுக்க, கொடுக்க அவன் முகத்தில் புரிந்து கொண்ட சந்தோசம். இனி எந்த கணக்கையும் போட்டு விடலாம் என்ற நம்மிக்கையை தந்தது .
“ சித்தின்னா... சித்திதான்....”
கன்னத்தில் முத்தம் கொடுத்துச் சென்றான். எனக்கு என்னுடைய சித்தி உடனே ஞாபகத்திற்கு வந்தாள்.
“அம்மா என்னம்மா சொல்றே?
பாட்டியும் கங்கா சித்தியும் ஊரிலிருந்து வரப் போறாங்களா?”
“ம்ம்...”
“எத்தனை நாள் இருப்பாங்க?”
“ஏண்டி? வரத்துக்குள்ள எப்ப போவான்னு கேக்கறே?”
“பாட்டி எத்தனை நாள் வேணா இருக்கட்டும்.. சித்தியை அங்கேயே விட்டுட்டு வர வேண்டியது தானே”
“நீயும் கங்கா மாதிரி லூசா? அவளுக்கு புத்தி வளரலைனு உனக்கு தெரியாதா?”
“அதுதான்மா சொல்றேன். என் பிரெண்ட்ஸ் வந்தா அச்சு பிச்சுனு பேசிண்டிருப்பா... எனக்கு அவமானமா இருக்கும்”
“ஏண்டி இப்படி ஒருத்தியை பாட்டி எப்படி கிராமத்தில் தனியே விட்டுட்டு வர முடியும்?
என்னோட தங்கைடி”
“ என்னமோ பண்ணு.. வீட்டுக்குள்ளேயே ஒரு ரூமில் உட்கார வை”
அம்மா என்னை முறைப்பதை கண்டு கொள்ளாமல் காலேஜ் கிளம்பினேன்.
அம்மாக்கு மூணு தங்கையில் கங்கா ரெண்டாவது.. மூன்றாம் வகுப்புவரை நல்லாத்தான் இருந்தாளாம்.. திடிர்னு பிக்ஸ் வந்து விழுந்து விடுவாளாம். தலையில் அடிபட்டு மூளை கொஞ்சம் கலக்கம் அடைஞ்சுதுனு அம்மா சொல்வா..
பேச்சு நடத்தை எல்லாம் குழந்தைத்தனமா இருக்கும். வாசல்ல புதுசா யாராவது வந்து பேச்சுக் கொடுத்தா அடுத்த நிமிஷம் இவளைப்பற்றி கணித்து விடுவார்கள். இவளுக்கு இப்ப பாட்டிதான் எல்லாம்.
சாயங்காலம் நான் காலேஜ் முடிச்சு வரும்போது வீட்டு வாசலில் கங்கா நின்னுகிட்டு இருந்தா.. என்னைப் பார்த்ததும், ரம்யான்னு கத்தி சின்ன பொண்ணு போல என்கிட்ட ஓடிவந்து என் கையைப் பிடிச்சிண்டா. என்னோட பேரை கத்தினது கோவம் வந்தாலும், அவ மேல பரிதாபம் வந்தது.
‘பேசாதேனு’ சொன்னேன்.
என்னைப் பிடிக்கலையானு கேட்டா”
‘அம்மா! என்னம்மா இது? வாசல்ல இருந்து என்னோட பேரை கத்தி சொல்லறா கங்கா”
“சித்தின்னு கூப்பிடுன்னு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்?”
“போம்மா இவளை சித்தின்னு சொல்ல எனக்கு அவமானமா இருக்கு”
.
பாட்டி கண்களை துடைத்துக் கொண்டாள்.
நான் பைனல் இயர் படிக்கும் போது பாட்டியும் இறந்துவிட, கிராமத்து வீட்டை விற்று விட்டு கங்காவை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு அம்மா வந்து விட்டாள். நிலைமை புரிந்தாலும், எனக்கு ஒரே ஆத்திரம்..
“அம்மா மத்த சித்தி வீட்ல கங்காவை கொண்டு போய் விடறது தானே”
“உனக்கு வயசு பத்தாது.. நான் தான் குடும்பத்தில் மூத்தவ... ஒருத்தி ரொம்ப கஷ்ட படறா... இன்னொருத்தி புருஷன் குடிகாரன். அங்கெல்லாம் கங்காவை விட மாட்டேன்.. உனக்கென்ன அப்பாவே ஒத்துண்டாச்சு”
“நான் அப்பாட்ட பேசறேன். ஏதாவது ஆசிரமத்தில் விட வேண்டியது தானே”
“ரம்யா! நீ... உன் வேலையை பாத்துண்டு போ! ரொம்ப பெரிய மனுஷி மாதிரி பேசாதே”
அம்மா நாற்பது வயது சித்திக்கு மறுபடியும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சா.
“அம்மா உனக்கும் பயித்தியம் பிடிச்சிடுச்சுனு நினைக்கிறேன். யாராவது இவளை கல்யாணம் பண்ணிக்க வருவாளா?”
“இவளுக்கு விஷம் வச்சு கொன்னுடட்டுமா”
“என்னம்மா இப்படி பேசறே?”
“இங்க பாரு.. இனி நீ கங்காவை பத்தி ஒரு வார்த்தை பேசப் படாது”
மத்த சித்திகளும் வேண்டாம் விஷ பரீட்சை என்று சொன்னாலும் அம்மா தன்னோட பிடிவாதத்தால் கங்காக்கு ரெண்டாம்தாரமாக ஸ்ரீனிவாசனுக்கு ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி வைத்தாள். அவரது முதல் மனைவி கேன்சரில் இறந்து விட்டாள் என்றும் கங்காவை நல்ல விதமாக பார்த்துப்பேன் என்றும் சொன்னார்
. கங்கா கிளம்பும்போது அம்மா அழுதாள். எனக்கு நிம்மதியாக இருந்தது.. கங்கா ஏதோ கொஞ்சம் சமைப்பாள். ரெண்டு நாளில் கங்காவை திருப்பி அனுப்பி விடுவார் என்று எல்லோரும் நினைத்திருந்தோம்.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மாதம் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து காலை முதல் மாலை வரை இருப்பார்கள்.
சித்தப்பா நல்ல பொறுமைசாலி. கங்கா தத்து பித்துன்னு பேசினா ரசித்து சிரிப்பார். இவரால் எப்படி இப்படி இருக்க முடிகிறதுன்னு நினைத்துக் கொள்வேன்.
என் கல்யாணத்திற்கு கங்காவும் சித்தப்பாவும் வந்து உடனே கிளம்பி விட்டார்கள்.
எனக்கு தங்க மோதிரம் போட்டார்கள். அம்மாக்கு வருத்தம். அவர்கள் வந்தவுடன் கிளம்பிச் சென்றதுக்கு.... நான் அம்மாவிடம் கேட்டேன்.
“ஏன்மா உடனே போயிட்டாங்க”
“உன்னோட சித்தியைப் பத்தி மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு தெரிய வேண்டாம்னு சித்தப்பா உடனே கூட்டிட்டு போயிட்டாரு”
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அதுவும் நல்லதுக்குதான் என்று நினைத்துக் கொண்டேன்.
கல்யாணம் முடிந்து நானும் அவரும் எல்லோர் வீடுகளுக்கும் விருந்துக்கு போனோம் கங்கா வீட்டை தவிர
ஆறே மாதம்.. எனக்கும் அவருக்கும் கொஞ்சமும் ஒத்து போகவில்லை. என்னோட கோபமும் ,எதிர்த்து பேசும் குணமும் அவர்க்கு பிடிக்கவில்லை என்று சொன்னார்.
நான் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். எங்களை சேர்த்து வைக்க பலரும் முயன்று தோல்வி அடைய, நான் வெற்றி பெற்றேன்.
வழக்கம் போல ஒரு முறை கங்காவும், சித்தப்பாவும் வீட்டுக்கு வந்தனர். கங்கா என்னைப் பார்த்து சந்தோஷப் பட்டாள். நான் அவரை பிரிந்து வந்து வாழ்வது பற்றி அவளுக்கு எதுவும் புரியவில்லை. புரியவும் புரியாது..
ஆனால் என்னோட மனசு, என்னோட வாழ்க்கையை அவளோட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்தது.... ரொம்ப புத்தி தெளிவுடன் இருக்கும் என்னோட வாழ்க்கை கேள்வி குறி... அவ சந்தோஷமா இருப்பது என்னை அறியாமல் பொறாமை கொள்ள வைத்தது...
சித்தப்பா என்னை தனியே கூப்பிட்டு சொன்னார்..
“ரம்யா நீ புத்திசாலி பொண்ணு ... நான் எதுவும் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை.. என்னோட முதல் மனைவி இறந்த பிறகு வேற கல்யாணம் வேண்டாம்னுதான் இருந்தேன். ஆனா உன்னோட சித்தியைப் பத்தி உன் அம்மா சொன்னப்போ கொஞ்சம் தயக்கத்தோட தான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். ஒரு வளர்ந்த குழந்தை உன்னோட சித்தி... அவ பண்ணற, பேசற, எல்லாம் அவ புரிஞ்சு பண்ணறது இல்லை. அதனால அவளை அப்படியே ஏத்துக் கொண்டேன். அவளுக்கு நான் ஒரு நல்ல நண்பன்னு நினைச்சுக் கொண்டு இருக்கா.. என்கிட்ட ரொம்ப பிரியமா இருக்கா.. நான் தப்பு உன் பக்கமா அவர் பக்கமானு கேக்கலை. எனக்கு தெரிஞ்சு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. ஆனா கொஞ்சம் விட்டு கொடுத்து போனா பின்னாளில் எல்லாம் சரியாகும். ஏதோ ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டு என்னத்தை சாதிக்கப் போறோம்?”
இதை சொல்லி முடிக்கும் போது அவர் நா தழுதழுக்க கண்களில் கண்ணீர் வழிய சொன்னார் .
யார் எது சொன்னாலும் ஒத்துக் கொள்ளாத நான் கலங்கி நின்றேன்.
நடமாடிக் கொண்டிருந்த அம்மா, அப்பா, கங்கா, சித்தப்பா எல்லோரும் படத்தில் தொங்கிக் கொண்டிருந்தனர்.
சித்தப்பா என்னிடம் பேசியது மீண்டும் ஞாபகத்திற்கு வர, முதல் முதலாக என்னவருக்கு மன்னிப்பு கடிதம் எழுத உட்கார்ந்தேன். .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக