உன்னை சரணடைந்தேன்.
செல்போன் அடித்தது.
மரகதம் யார் என்று பார்த்தாள். மருமகள் ரேணுகா கூப்பிட்டுக் கொண்டிருந்தாள் .
“என்னங்க ரேணுகா கூப்பிடறா “
“எடுக்காதே! ஆறு மாசமா நாம இருக்கோமோ ? செத்தோமானு நினைக்காதவ , நம்மளை நம்ம பிள்ளை கிட்ட இருந்து பிரிச்சு நம்மை இந்த முதியோர் இல்லத்துக்கு வர காரணமா இருந்தவ, இப்ப எதுக்கு கூப்பிடணும்? அட்டன் பண்ணாதே!”
“சரிங்க”
மறுபடியும் கூப்பிட்டாள். மரகதம் ராஜேந்திரனுக்கு பயந்து அட்டன் பண்ணவில்லை.
சிறிது நேரம் கழித்து அண்ணன் மகன் ரவி கூப்பிட்டான்.
“சித்தப்பா உங்க முதியோர் இல்லம் எங்க இருக்கு?”
“எதுக்கப்பா?”
“இல்லே... நான் நேரில் வரேன். எங்கன்னு சொல்லுங்க..”
சொன்னார்.
அரை மணிநேரம் கழித்து ரவி வந்து சேர்ந்தான். முகம் என்னவோ போலிருந்தது.
“என்னடா ரவி, என்னாச்சு?”
“சொல்றேன் ரேணுகா போன் பண்ணினாளாம். நீங்க எடுக்கலையாம் . அதுதான் எனக்கு போன் பண்ணினா”
“இதெல்லாம் பெரிய விஷயமா?”
“ சரி ரெண்டு பேரும் உங்க துணி மணி எடுத்துக்கிட்டு கிளம்புங்க“
“எங்கடா? எதுக்கு கிளம்பச் சொல்றே?”
“சொல்றேன் நான் சொன்னதை செய்யுங்க.”
“எங்கடா கிளம்பசொல்றே? நாங்க இப்ப இங்க நிம்மதியா இருக்கோம்”
“சித்தப்பா!.... சித்தி....” கண்களில் கண்ணீர் வர விசும்பினான் .
“என்னடா என்னாச்சு?”
“உங்க பிள்ளை இன்னிக்கு காத்தால நெஞ்சுவலின்னு சொல்லி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுது “
“என்னடா! என்ன சொல்றே ?”
“ஆமாம் சித்தி கிளம்புங்க”
ஐந்து வயசிலும் மூணு வயசிலும் குழந்தைகள். மூணு வயசு ரஞ்சித் விஷயம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தான். ப்ரியா மட்டும் அம்மா ரேணுகாவுடன் நின்று அழுது கொண்டிருந்தாள்.. ரேணுகா இவர்களைக் கண்டதும் காலில் விழுந்து அழுதாள்.
எல்லாம் முடிந்து பதிமூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் ராஜேந்திரன் மரகதத்தை அழைத்தார்.
“மரகதம் வா.. கிளம்பலாம்”
எல்லாவற்றுக்கும் எதுவும் பேசாமல் அவர் சொல்வதைக் கேட்பவள் முதன் முதலாக குரலை உயர்த்தி பேசினாள்.
“எங்க கிளம்ப சொல்லறீங்க?”
“நம்ம முதியோர் இல்லத்துக்குத்தான்”
“என்னங்க புரிஞ்சுதான் பேசறீங்களா? நம்ம பிள்ளை இல்லாம ஆதரவு எதுவும் இல்லாம தனியா ரேணுகா நிக்கறா. ரெண்டு விவரம் இல்லாத சின்ன பிள்ளைங்க எப்படிங்க வேலைக்கு போய்கிட்டு[பிள்ளைகளையும் வளர்ப்பா?”
“நாம வேண்டாம்னு தானே நம்மை முதியோர் இல்லம் போகும்படி செய்தா. இப்ப மானம் கெட்டு சோத்துக்கு இவளோட கையை எதிர்பார்க்கறதா ?”
“என்னங்க இந்த வீடு நீங்க கட்டினது.. மேல அவ இருக்கட்டும். கீழ நாம இருப்போம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா.....
காலம் எல்லாத்தையும் மாத்தும் “
தீர்க்கமாக சொல்லும் மரகதத்தின் பேச்சுக்கு முதன் முதலாக தலை அசைத்தார் ராஜேந்திரன்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக