08.12.20-கதையின் பெயர் : உன்னை கண் தேடுதே .... - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 8 டிசம்பர், 2020

08.12.20-கதையின் பெயர் : உன்னை கண் தேடுதே ....

 






சுந்தரம்


உன்னை கண் தேடுதே ....


ஏதோ எக்ஸ்கர்ஷன் போகும் குழந்தைபோல ரொம்ப சந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் பர்வதம் .


யோசித்து யோசித்து தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.  பர்வதத்தை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான் வெங்கடேஷன் .


 அவனது பார்வை புரிந்திருந்தாலும் அருகில் பேரன் நின்றுக்கொண்டிருந்ததால் உணர்வுகளை காட்டிக் கொள்ளவில்லை. 


பேரன் கையில் பெட்டியைக் கொடுத்தவள்,  போர்டிகோவில் அமர்ந்திருக்கச் சொல்லி டாய்லெட் போய் வரேன் என்று சொன்னாள்.


திரும்பி வரும்போது வெங்கடேசன் காத்துக் கொண்டிருந்தான்.


“அம்மா உங்களை போக வேண்டாம்னு சொல்லலை போய் பார்த்துட்டு வந்துடுங்க எதுக்கு பெட்டி எல்லாம் எடுத்துக்கிட்டு போறீங்க?”


“வெங்கடேசன் என்னோட பொண்ணு ரொம்ப முடியாம இருக்கானு பேரன் சொல்லறான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துக் கொண்டிருந்தவள் வராததால உன்னை போன் பண்ணி கேட்டதால தெரிஞ்சுது. போய் கொஞ்ச நாள் அவ கூட இருந்திட்டு வரேன். அட்ரஸ் கரெக்டா வாங்கி வச்சுக்கோ. திரும்ப என்னை நீதான் கூட்டிட்டு வரணும்”


“அம்மா நான் கூட வரேன் வீடு பார்த்து வச்சுக்கறேன்”


“அதுவும் சரிதான் வா”


பேரன் வீட்டை அடையும் போது வாசலில் மருமகளின் அப்பா, அம்மா நின்று கொண்டிருந்தனர். பாட்டி, பெட்டியுடன் இறங்குவதைக் கண்டவர்கள் முகம் சுளித்தனர்.


‘வாங்க’  என்று அவர்கள் பாட்டியை அழைக்கவும் இல்லை. பாட்டி அவர்கள் அழைப்பை எதிர்பார்க்கவும்வில்லை.


 பெண்ணை பார்க்கும் ஆவலில் வழக்கத்தைவிட, வேக வேகமாக வீட்டினுள் நுழைந்தாள் .


ஹாலில் சுவர் ஓரம் கட்டில் போடப்பட்டிருந்தது. லலிதா பொலிவிழந்து கிழித்து போட்ட நாராக கிடந்தாள். காதிலும் மூக்கிலும் வைரங்கள் மின்ன வளைய வரும் லலிதா கண்ணுக்குள் வந்து மறைந்தாள்.


 அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் ஒரு கேவலாக வெளிப்பட்டது.  பர்வதம் குலுங்கி அழுதாள். மகளின் முகத்தை வருடினாள். வாரி மடியில் வைத்துக் கொள்ள விரும்பினாள். பெற்ற மகள் தன் கண் எதிரே இப்படி உருக்குலைந்து கிடப்பதைக் கண்டு விம்மி விம்மி அழுதாள்.


பாட்டியின் அழுகை சப்தம் கேட்டு கிச்சனில் இருந்து வந்த இந்துமதி பாட்டியை அதட்டினாள்.


“ வெள்ளிக்கிழமையும் அதுவுமா அழாதீங்க’ இதுக்குதான் இவர் கிட்ட சொன்னேன் கூட்டிக்கிட்டு வர வேண்டாம்னு... இவர் தான் மனசு கேக்காம உங்களை கூட்டிக்கிட்டு வந்திட்டார்.”


வெங்கடேசன் இந்துமதியை முறைத்துப் பார்த்தான். அங்கு நின்று கொண்டிருந்தால் ‘பட்’ என்று தன்னை மீறி ஏதாவது சொல்லிவிடுவோமோ என்று பயந்தான். பாட்டியிடம் சென்று.


‘பாட்டி நான் போயிட்டு வரேன்’


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலை ஆட்டிக் கொண்டனர். 


 வெங்கடேசன் ரொம்ப கோவமாக இருந்தான். இந்த வயதிலும் சுயபச்சாதாபத்தால் தன்னை நினைத்துக் கொண்டு அழாமல்,  பேரனுக்கு பாரமாக இருக்காமல் முதியோர் இல்லத்திற்கு தனியே வந்து சேர்ந்துகொண்ட பர்வதத்தின் தீர்மானத்தை நினைத்து வியந்தான்.


பர்வதம்  அங்கு சேர்ந்து,  நான்கு வருடம் ஆகி, சொந்த பாட்டிபோல ஆகிவிட்டாள். 


 அவளை காணாமல் எப்படி இருப்போம்?  என்று வெங்கடேசன் நினைத்துக் கொண்டான்.


“என்ன பாட்டி பெட்டியோடு வந்திருக்காங்க” இந்துமதி அஸ்வினிடம் கோபமாக கேட்டாள்.


“உனக்கு புத்தி இருக்கா? இந்து நீ எப்ப இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சயோ ஒரு வாரத்தில் என்னோட பாட்டி வெளில போயிட்டாங்க”


“நானா உங்க பாட்டியை வெளில போக சொன்னேன்:”


“வாயால சொன்னாதானா? நடத்துகிற முறை இல்லையா. இப்ப கூட அவங்க வந்து இருக்காங்க ஒருவாய் காபி கூட கொடுக்கலை எப்ப போவாங்கனு கேக்கறே?  உங்க அப்பா அம்மா வந்து ஆறு மாசம் ஆச்சு நான் கேட்டேனா எப்ப போவாங்கன்னு? “


“அப்ப உங்க மனசுல இருக்கு. எங்க அப்பா அம்மா என் வீட்டில் இருக்கறது உங்களுக்கு பிடிக்கலை”


“மாத்தி பேசாதே! நீ என்னை பேச வைக்கறே. எங்க “குடும்பத்துக்கறாங்க யாரும் வேண்டாம்னா... அப்ப எதுக்கு உங்க குடும்பத்துகாரங்க? இது என்ன நியாயம்?


“உங்க பாட்டி வந்து ஐஞ்சு நிமிஷம் ஆகலை. நமக்குள்ள சண்டை ஆரம்பிச்சிடுச்சு.... இதுக்குத்தான் சொல்லறேன்”


இவளை திருத்த முடியாது என்று அங்கிருந்து குளிப்பதற்கு கிளம்பினான் அஸ்வின். ஜெயித்து விட்டதாக நினைத்துக் கொண்டாள் இந்துமதி . 


ஹாலில் மகளின் தலைமுடியின் சிக்கலை மெதுவாக எடுத்து விட்டபடி, மகளை நல்லபடியாக வழியனுப்பி வைத்துவிட்டு, முதியோர் இல்லம் செல்ல நினைத்துக் கொண்டிருந்தாள் பர்வதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages