தாயுமானவள்
“ உமா.. நான் போயிட்டு வரேண்டா கண்ணா!”
கிராமத்திலிருந்து மெட்ராஸ் ட்ரெயினில் கிளப்புவதற்காக அப்பா குதிரை வண்டியில் ஏறியது நேற்று போல தோன்றியது உமாவுக்கு. அப்போது அவளுக்கு எட்டு வயது தான்.
“ அப்பா கவலைப்படாதே! ஆபரேஷன் நல்லபடியா நடக்கும் .”
வரிசையாக மூன்று பெண்கள் நாலாவதாக அம்மா நிறைமாத கர்ப்பணியாக இருந்தாள் .விதி விளையாட அப்பாவின் மரணச் செய்தி வந்த அன்று பிறந்தாள் இந்துமதி. பெற்ற பெண் மீது வெறுப்பை உமிழ்தாள் அம்மா.
உமாதான் குழந்தை இந்துமதிக்கு புட்டிபால் கொடுத்து வளர்த்தாள். . நாளடைவில் அம்மா தன் நிலை உணர்ந்து இந்துவை வெறுப்பதை நிறுத்திக் கொண்டாள் . குடும்ப கஷ்டம் . பத்தாவது முடித்ததும் தட்டச்சு சுருக்கிழுத்து கற்றுக் கொண்டாள் உமா. வீட்டுக்கு ஆண் மகனாக அடுத்தடுத்த இரு தங்கைகளுக்கு திருமணம் செய்வித்தாள் . ஓடாக தேய்ந்தாள் .
தூரத்து சொந்தத்தில் இருந்து ராமநாதனுக்கு உமாவை பெண் கேட்டு வர, இந்துவுக்கு இருபது வயதே என்பதால் உமா திருமணத்திற்கு சம்மதித்தாள். கிராமத்து வீட்டில் இந்துமதியும் அம்மாவும்.
அம்மா கிராமத்தை விட்டு எங்கேயும் போக விரும்பாததால் முதல் பிரசவம் முடிந்ததும் இந்துவை உதவிக்கு தன்னுடன் அழைத்துச் சென்றாள் உமா. வேலைக்கும் போய்க்கொண்டு குழந்தையையும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் .
. முதல் மகன் ராஜேஷ் மூன்று வயது இருக்கும் போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததை, இந்துமதியோ ராமநாதனனோ கவனிக்கவில்லை. அவர்கள் இருவரும் அவர்களை மறந்த நிலையில் இருந்தார்கள் . ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த உமா வேலை முடிந்து வந்து பார்த்த போது தாங்க முடியவில்லை.
கணவர் அடிக்கடி லீவு போட்டு விட்டு வருவார் என்பதை அக்கம் பக்கம் சொன்னபோது நம்பாதவள், மகள் போல் பார்த்து வளர்த்த இந்துமதி தனக்கே துரோகம் செய்வாள் என்றோ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிள்ளையின் அடக்கம் நடந்து முடிந்ததும் ஒன்றுமே கேட்காமல் தன்னுடைய துணிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு போனவள், இவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரிக்க கூட இல்லை. வேறு ஒரு புது இடத்தில் வேலை மாறுதல் வாங்கிக் கொண்டாள்.
“அம்மா... அம்மா...”
ஒருவித கலக்கத்துடன் கூப்பிடும் மகன் விக்ரமை ஏறெடுத்து பார்த்தாள் உமா.
“அம்மா! என்னம்மா! நான் எத்தனை நேரம் கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்... என்னாச்சும்...மா ஸ்டேஷன் வந்தாச்சு”
மகனுடனும் மருமகளுடனும் பேரன் பேத்திகளுடனும் காசியில் காலடி எடுத்து வைத்தாள் . மருமகள் வித்யா கையை பிடித்துக் கொண்டு நடக்க, ஏற்கனவே புக் செய்திருந்த தங்கும் விடுதிக்கு போனார்கள்.
அடுத்தநாள் காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து இருந்து தங்கும் விடுதிக்கு கிளம்ப கோயிலை விட்டு வெளியில் வந்தார்கள். நடந்து வரும்போது உமாவின் பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.
தூரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது இந்துமதி போல இருக்க,
“விக்ரம் கொஞ்சம் இரு வரேன்”
வேக வேகமாக அவளருகில் சென்றாள். ஆமாம் அது இந்துமதியே தான்
“இந்து”
திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். உமாவை விட எட்டு வயது குறைந்த அவள் வயது அதிகம் ஆனது போல தெரிந்தாள்.
உமாவின் தாய்மை விழித்துக் கொண்டது.
குழந்தையாய் தனது மடியில் கிடத்தி புட்டிப்பால் ஊட்டியது நினைவுக்கு வந்தது .
“உமா ......”
கழிவிரக்கமும் குற்ற மனப்பான்மையும் தன்னுடைய இந்த நிலையும் ஒன்றாக சேர்ந்து கொள்ள பெருங்குரல் எடுத்து அழுதாள்.
““உமா என்னை மன்னிச்சுடு! மன்னிப்பு கேட்கக்கூட எனக்கு அருகதை இல்லை”
“ஏண்டி இங்க இப்படி இருக்கே! உனக்கு யாரும் இல்லையா”
“அக்கா அவரு என்னை ரெண்டு வருஷத்திலே விட்டுட்டு போயிட்டாரு நானும் எங்கே எங்கேயோ அலைஞ்சு முடிவா இங்க வந்திட்டேன்”
“வாடி என்கூட ....”
“அக்கா! உன்கூடவா... கண்டிப்பா மாட்டேன்.. உன்னை பாக்க பாக்க நான் உனக்கு செய்த துரோகம் எனக்கு கண்ணுமுன்னால வந்து நிக்கும். உன்னோட பையன் என்னை வெறுப்பான்”
“அவனுக்கு நம்ம கதை எதுவும் தெரியாது. பேசாம இரு. உன்னோட வாயால எதுவும் சொல்லிடாதே!”
“அக்கா காசில பிடிச்ச பொருளை விட்டுட்டு போகணும்னு சொல்லுவாளே!”
“நான் எத்தனையோ இழந்திட்டேன். இப்ப எனக்கு பிடிச்ச என் குழந்தையை என் கூட கூட்டிண்டு போறேன் காசி விஸ்வநாதன் தப்பா நினைக்க மாட்டான்”
அவள் காலடியில் விழுந்தாள் இந்துமதி.
அவளை வாரி அணைத்துக் கொண்டாள் உமா..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக