13.12.20-கதையின் பெயர் : பூரணம் டீச்சர் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 14 டிசம்பர், 2020

13.12.20-கதையின் பெயர் : பூரணம் டீச்சர்



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு



**பூரணம்டீச்சர் (சிறுகதை)**


**பூரணம் டீச்சரம்மாயிக்கு ரொம்ப முடியல. போன் வந்துச்சு. எப்புடியும் போயாகனும். அவங்கதான் எனக்கு இந்தபேரு வைச்சவங்க. போனதடவ போனப்பக்கூட லட்சுமிவிலாஸ் அல்வாவும் தேன்குழலும் வாங்கிக்கொண்டுபோய் குடுத்தேன் . கண்ணீரோட வாங்கிக்கிச்சு. பேராண்டி ஒனக்குப்பெருசா ஒண்ணும் நான் பண்ணலயே ஏன்டா என்மேல பாசத்த வைச்சிருக்க. நான் நெறையா செஞ்சவங்க எல்லாம் என்ன ஏமாத்திட்டாங்க..... ஒனக்கு அவ்வளவா செஞ்சதில்லயேடா...... நீ நல்லாருக்கணும் சாமி முன்னயும் நீ பின்னயும் போயிட்டுவான்னு வழி அனுப்புச்சு....**


**பூரணம் அம்மாயிக்கும் பூரணம் டீச்சருக்கும் ஒரே பேருதான் ஒற்றுமை...மீதிஎல்லாம் வேறமாதிரி. டீச்சர் எப்பவும் காவி இல்ல வெள்ளச்சேலைதான். வெள்ள ரவிக்க கஞ்சிபோட்டு அயன்பண்ணி நீட்டாக்கட்டி இருப்பாக. அம்மாயி நாட்டு சுங்கடிச்சேலை வெள்ள ரவிக்கை..... கழுத்துல ஒரு செயினு காதுல பாம்படம்( தண்டட்டி) போட்டுருக்கும். டீச்சர் காது வெறுமன இருக்கும். **


**டீச்சர் நல்ல செவப்பு கையில் பச்ச குத்திருக்கும் அம்மாயி நல்ல கருப்பு. பச்ச குத்துனது தெரியாது**


**ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் உசுறு. இம்புட்டுக்கும் டீச்சர் வேற சாதி. அம்மாயி க்கு அது ஒரு விசயமா படல. **


**டீச்சர் வேலபாத்தது முஸ்லீம் பள்ளிக்கொடத்துல அதுநால பாய்மாருக எல்லாம் மரியாத அவங்களுக்குக்குடுப்பாக. அவுக வீட்டு பொம்பளைக எல்லாம் நல்ல பழக்கம் . அதே மரியாத அம்மாயிக்கும் கெடைக்கும்...**


**ஏன்னா டீச்சர் தங்கி இருக்குறது அம்மாயி குடுத்த வீட்டுலதான்.  மாசக்கடசில யூனியன் ஆபீஸ்ல சம்பளம் வாங்கிட்டு வந்தா டீச்சர் தனித்தனியா பிரிச்சி கவர்ல போட்டு வைச்சிருவாக. தனக்கு செலவுக்கு கோயிலுக்கு அப்புறம் கேக்குறவுகளுக்கு குடுக்க சேமிப்புக்கு கொஞ்சம்.....**


**இவுக ரெண்டுபேரும் சம்பளம் வாங்குன மறுநா மதுரைக்கிப்போய் அம்சவல்லி ஓட்டல் பிரியாணி சிந்தாமணித்தேட்டர்ல படம் அப்புறம் லாலா கடை அல்வான்னு வீடு திரும்ப ராத்திரிஆயிடும்**


**நான் ஊருக்குப்போனா மொதல்ல டீச்சரப்பாக்கனும். நேர அம்மாயப்பாக்கப்போனா டீச்சர் கோவ்ச்சிக்குவாக. அப்ப நான் ரெண்டாவதுதானா எனக்குன்னு பேரன் இருந்தா இப்பிடிப்போவானான்னு மொகத்தைத்தூக்கிவைச்சிக்கிடும். **


**டீச்சருக்குன்னு யாரும் இல்ல. அவங்க கலியாணம் சரியா அமையல. அதுனால தாலிய அறுத்துப்போட்டுட்டு வந்துட்டாகன்னு அம்மாயி சொல்லும். அவங்க புருசன் எப்புடி இருப்பாருன்னு கூட ஆருக்கும் தெரியாது....**


**மத்தபடி அம்மாயிக்கிட்ட காசுகுடுத்து உன் குடும்பம்தான் என் குடும்பம் இன்னிக்கி எல்லாத்துக்கும் நல்லதுபொல்லது சமைச்சிப்போடுன்னு  கறி மீனு கோழின்னு சமைச்சி  சொந்தங்க எல்லாத்தையும் கூப்புட்டு சாப்பிடவைச்சி ரசிக்கிற திருவிழா அடிக்கடி நடக்கும்......**


**எனக்கு 10வது பரிச்சைக்கு டீச்சர் பேனா குடுத்து  இதுல பரிச்சை எழுதுடான்னு சொன்னாங்க. நல்லமார்க்குல பாஸ்பண்ணி அந்தப்பேனாவ திருப்பிக்குடுத்துட்டு ( ஏன்னா அது அவங்களோடராசியான பேனா)வர அல்வாவோட போய் பாத்தேன்.... கால்ல விழுந்து கும்புட்டப்ப துண்ணுறு பூசி நல்லா வருவடான்னு சொல்லி 10 ரூ கைல குடுத்து எதுனாச்சும் வாங்கிச்சாப்புடுன்னாக.... ஆனா அதப்பத்திரமா நான் வைச்சிக்கிட்டேன்**


**அடுத்து +2 பரிச்சைக்கும் பேனா வாங்கப்போனேன். அந்தப்பேனா அப்ப அவங்க கிட்ட இல்ல. வருத்தப்பட்டாங்க வாங்கிட்டுப்போன ஆரோ திரும்பிக்குடுக்கலயாம். அதுக்கே அவங்க மொகம் வாடிப்போச்சு. அதுனாலயோ என்னவோ அந்தப்பரிச்சை சரியா நான் எழுதல**


**வேலை கெடச்சவன்ன மொதல்ல போய் டீச்சரைத்தான் பாத்தேன் 50 ரூ கைல குடுத்து சாமி முன்னாடியும் நீ பின்னாடியும் போய்ட்டுவான்னு வழி அனுப்புனாக.....**


**ராத்திரி எதுனாச்சும் தீம்பண்டம் வாங்கிட்டு வந்தா பிள்ளைக தூங்குனாலும் எழுப்பிக்குடுக்கச்சொல்லுவாங்க. கேட்டா ஈமான் துடிக்கும் நு சொல்லுவாங்க...**


**கந்த சஸ்டி க்கு விரதம் வெறும் பாலும் பழமும் ஒருவேளைக்கி சாப்புட்டு இருப்பாங்க. தீவிர முருகபக்தர். வீட்டுல முருகன் படம் மாத்திரம் தான் இருக்கும். ஆரோ அவங்க கிட்டப்படிச்ச ஒரு முஸ்லீம் பையன்  அவங்களுக்கு முருகன் பாடல்கள் ரெக்கார்டும் அது பிளே பண்ணுறதுக்கு பிளேயரும் வாங்கிக்குடுத்தத பெருமையா சொல்லுவாங்க....**


**ஊருல நடக்குற குடும்பச்சண்டைகளுக்கு தீர்ப்பு சொல்லும் நாட்டாமை அவங்கதான்... அதுக்கு அங்க இருக்குற எல்லாரும் கட்டுப்படுவாங்க...**


**அவங்களுக்கு ஒருதடவை சரியான முதுகுவலி அப்ப என்னையக்கூப்புட்டு மிதிச்சி விடச்சசொன்னாங்க. நான் எப்புடி டீச்சரப்போய் மிதிக்கிறதுன்னு மாட்டீன்னு சொல்ல இது வைத்தியம் தப்பில்லன்னாங்க.... மிதிச்சவன்ன வலிபோயிடுச்சு...... நீ பலருக்கு நல்லது செய்ய ப்பொறந்தவன்ன்னாங்க...**


**அவங்களே ஒரு வைத்தியர் மாதிரிதான் பல பேருக்கு பிரசவம் அவங்களே பாப்பாங்க. அதுக்குண்ணே ஒரு பெட்டி வைச்சிருந்தாங்க. சின்ன சின்ன வைத்தியம் பாப்பாங்க....**


**ஊருக்குக்கெழம்பிப்போய் டீச்சரைப் பாக்கப்போனேன். அவங்களை அவங்க சொந்தக்காரங்க வம்படியா தூக்கிட்டுப்போயி அவங்க வீட்டுல வைச்சிருந்தாங்க..... வீட்டுக்கு வெளிய ஒரு சின்ன ரூம். அதுல ஒரு தலகாணி கோரம்பாய்... லேசான கெவுன் மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டு சுருண்டு படுத்துருந்தாக**


**மொடமொடப்பான கஞ்சிபோட்ட வெள்ளைச்சேலையில மிடுக்க பாத்த அவங்க அந்தக்கோலத்துல பாக்க முடியல. எனக்கு கண்ணு கலங்கிடுச்சு...அவங்க சத்தம் கேட்டு கண்ணத்தொறந்து பாத்தாங்க..... முடியாம சிரிக்க முயற்ச்சி பண்ணுனாங்க..... அல்வா வாங்கிட்டு வரலயான்னாக....**


**வீட்டுல இருந்தவுக கண்ண காமிச்சி அதெல்லாம் குடுக்கக்கூடாது சேராதுன்னாக. **


**அப்ப டீச்சர் சொன்னாக அவுக அப்படித்தான் சொல்வாக.  நீ குடுன்னாக... நான் ஆரஞ்சுபழங்கள் தான் வாங்கிட்டுப்போயிருந்தேன்.... போய் அல்வா வாங்கிட்டு வாறேன்னு சொன்னேன்..... சரி ந்னு சொல்லிட்டு தலைகாணிக்குக்கீழ இருந்து காசெடுத்துக்குடுத்தாக.....  நான் ஒடனே போய் வாங்கிட்டு வாறேன்னு சொன்னேன்..... வேணாம் அடுத்த தடவ வாங்கிட்டு வா.... உசிறோட இருந்தா சாப்புடுறேன்..... முருகன் அந்த பாக்கியத்தைக்குடுக்கட்டும்ன்னாக.....**


**வழக்கம் போல சொன்னாக சாமி முன்னாடியும் நீ பின்னாடியும் போய்ட்டு வான்னாக.... கும்புட்டுட்டுகெளம்புனேன்....கண்ணீரோட**


**அடுத்து ஒரு வாரத்துல இறந்துட்டதா அம்மாயி சொல்லுச்சு..... ஒடனே அடக்கம் பண்ணிட்டதா சொன்னாக......**


**அடுத்த தடவ ஊருக்குப்போனப்ப அவங்க இருந்த வீட்டுத்திண்ணையப்பாத்தேன்**


**அவங்க அங்க ஒக்காந்துக்கிட்டு **


**சாமி முன்னாடியும் நீ பின்னாடியுமா போய்ட்டு வான்னு **


**சொல்லுறமாதிரி இருந்துச்சு**


**கண்ணீரை அடக்கமுடியல...... தொடைக்கவும் தோணல.......**


**அ.முத்துவிஜயன்**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages