19.12.20- கதையின் பெயர் : அத்தைமடி மெத்தையடி... - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 19 டிசம்பர், 2020

19.12.20- கதையின் பெயர் : அத்தைமடி மெத்தையடி...






சுந்தரம்



அத்தைமடி மெத்தையடி...


கல்லூரியிலிருந்து வீட்டினுள் நுழையும் முன்னே பயங்கரமாக பெரிய அத்தை சிரிப்பது கேட்டது.  


ஐயையோ! இனி ரெண்டு மூணு மாசம் அப்படி செய்யாதே!  இப்படி செய்யாதே ! அப்படினு விரட்டிகிட்டே இருப்பாங்களே என்று எண்ணியபடியே வீட்டினுள் நுழைந்தேன்.


“ நந்தினி எப்படி இருக்கே?” 

 ஆசையாக அழைத்தார்.


“அத்தை!  முகம் கழுவிட்டு வரேன்.”


“நீ வாடா என்னோட பட்டு ரோசா”


என்னருகே வந்து என்னைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார் .


“இப்ப போய் முகம் கழுவிக்க....”


காபி குடிக்கும் போது,  அம்மா அத்தை கொண்டுவந்திருந்த அதிரசத்தையும்,  மூன்று தட்டைகளையும் வைத்தார். அருமையான சுவையில் இருந்தன.


காபி குடித்து விட்டு அத்தை அருகில் உட்கார்ந்து கொண்டேன். அவர் என்னை அவரது மடியில் சாய்த்துக் கொண்டார்.  . என் தலை முடியை கோதி விட்டார்.


“ என்ன....  நீ தலைக்கு எண்ணெய் போட மாட்டியா? பாதி முடி பிரவுன் கலரா செம்பட்டை அடிச்சிருக்கு!”


“ அத்தை நான் கலர் பண்ணிக்கிட்டு இருக்கேன்”


“ என்னவோ போ நல்லாவே இல்லே”


அப்பாவுக்கும்  அத்தைக்கும் பதினாறு வயது இடைவெளி . எனக்கு மூன்று அத்தைகள். அப்பா பிறந்த ஒரு வருடத்திலேயே அவரது அம்மா இறந்து விட,  பெரிய அத்தை தாய்க்கு தாயாக இருந்து இரண்டு சகோதரிகளையும் ஒரே ஒரு சகோதரனான என்னோட அப்பாவையும் வளர்த்தார்.  சகோதரிகள் இருவருக்கும் திருமணம் முடித்தவுடன்,  அத்தை அப்பாவை காரணம் காட்டி திருமணமே செய்து கொள்ளவில்லை என்று என் அப்பா சொல்வார்.


வருடத்தில் முதல் மூன்று மாதம் எங்கள் வீட்டிலும், அடுத்து இரு சகோதரிகள் வீட்டில் மொத்தம் ஒருமாதம் இருப்பார். பிறகு கிராமத்து வீட்டுக்கு போய்விடுவார்.  மீண்டும் கொஞ்சம் இடை வெளி விட்டு மீண்டும் ஒரு மூன்று மாதம் எங்கள் வீட்டில் தங்குவார். அப்பாவை சின்ன பையன் போல விரட்டும் போது எனக்கு பிரமிப்பாக இருக்கும்.  என் அப்பாவை கண்டால் நாங்கள் அப்படியே அடங்கிவிடுவோம். அதனால் அத்தையையும் எங்களுக்கு பயமே ! அம்மா ஓடி ஓடி எல்லாம் செய்து கொடுப்பார்.


என்னோட சின்ன அத்தையும் நடு அத்தையும் இவரைப்போல கோவப்படவோ, விரட்டவோ மாட்டார்கள். அன்பாக மட்டுமே இருப்பார்கள். ஆனால் ரொம்ப ஒட்டிக் கொள்ள மாட்டார்கள்.


அத்தை காலையில் அப்பாவை பயங்கரமாக எதற்காகவோ திட்டினார். அப்பா எதிர்த்து ஒன்றும் சொல்லவில்லை. . அத்தை குளிக்க போயிருந்தபோது, அப்பாவிடம் மெதுவாக போனேன்.


"அப்பா உங்களுக்கும் வயசு அறுபது ஆகுது. உங்களை அத்தை விரட்டறப்ப கஷ்டமா இருக்கு. நீங்க எதுவுமே சொல்லறது இல்லை.  நம்ம வீட்ல உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணறாங்க"


"நந்தினி நீ சொல்லறது சரிதான்.. அக்கா எங்க குடும்பத்துக்காக உழைச்சு உழைச்சு இப்ப கூட யாரும் இல்லாம இருக்காங்க.. நாமளும் பதிலுக்கு கோவப்பட்டா அவங்க எங்க போவாங்க சொல்லு?”


நான் பான்சி ஸ்டோர் போக கிளம்பினேன். குளிச்சு வந்த அத்தை,


“நந்தினி இரு நானும் வரேன். கோயிலுக்கு போறேன். என்னை ரோட்டை கிராஸ் பண்ணி விட்டுடு. வரும்போது வேற யாரையாவது ரோட்டை கிராஸ் பண்ணி விடச் சொல்றேன்.”


“சரி அத்தை! வாங்க”


அத்தை லொட லொடவென பேசியபடியே வந்தார். நான் ஒன்றுமே பேசாமல் வந்தபோது,


“ என்ன ஒருமாதிரி இருக்கே?”


“அத்தை! நீ ரொம்ப பாசமா இருக்கே! ஆனா ரொம்ப கோவப்படறே! இன்னிக்கு அப்பாவை திட்டினே! எனக்கே உன்மேல கோவம் வந்திச்சு. நீ நினைக்கறதை பாசமா சொல்லலாமே!"


“ நீ சொல்லறது சரிதான் நந்தினி.  சின்ன வயசில் இருந்து இவங்க எல்லோரையும் விரட்டி விரட்டி பழகிடிச்சு. இப்ப திடிர்னு என்னை மாத்திக்க முடியலை. அப்படி நான் ரொம்ப கோவப்படாம இருந்திட்டா மதிக்கமாட்டாங்களோ? ஏதாவது சொல்லிடுவாங்களோ? அப்படினு என்னைச்சுத்தி அப்படி ஒரு மாயவலை பின்னிக்கிட்டேன். இப்ப என்னால அதை விட்டு வெளில வர முடியலை.”


“அத்தை நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?”


“உன்னோட சின்ன அத்தைகளுக்கு கல்யாணம் பண்ணி முடிஞ்ச ஒரு வருஷத்திலே உன்னோட தாத்தா செத்து போயிட்டாரு! உன்னோட அப்பா பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்தான். நான் வேலைக்கு போய்கிட்டு இவனை வளர்த்தேன். என்கூட வேலை பார்த்த சேஷன் என்னை விரும்பினான்.”


“கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்திருக்கலாமே”!


“இந்த காலம்போல எனக்கு கண்டிஷன் போட தெரியலை.. உன்னோட அப்பாவையும் கூட வச்சுக்க  அவனோட வீட்ல இருக்கறவங்க விரும்பலை.  அவன் அவங்களை எதிர்த்துக்கிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பினான். ஆனா அவனுக்கு மூணு தங்கச்சிங்க கல்யாணத்து இருந்தாங்க. எல்லாம் யோசிச்சு பார்த்து இப்படியே இருந்திட்டேன். அப்பப்ப அவனோட முகம் மனசுல வரும்”


நான் அத்தையை பிரமிப்புடன் பார்த்துகிட்டு இருந்தேன்.


“சரி என்னை கிராஸ் பண்ணி விட்டுடு”


“நானும் உன் கூடவே வரேன் அத்தை. கடைக்கு இன்னொரு நாள் போய்க்கிறேன்”


மூன்று மாதம் முடிந்து அத்தை கிளம்பும்போது, வழக்கமாக சந்தோஷப்படும் நான், விக்கி விக்கி அழுவதை அம்மா ஆச்சரியமாக பார்த்தாள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages