மன மாற்றம்
கோவை எனக்கு புதிதல்ல என்றாலும் வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட்தால் என்னை அழைத்துச் செல்ல ரமேஷ் வருகிறேன் என்று சொல்லி இருந்தான்.
ரயில் திருப்பூர் வந்ததும், தூக்கம் வராமல் எழுந்து விட்டேன். நடு பெர்த் என்பதால் வேறு வழி இல்லாமல் படுத்திருந்தேன் . கீழ் பெர்த்தில் படுத்திருந்தவர் குறட்டை ஒலி தனித்துக் கேட்டது. பெரிய வயிறு வெடித்து விடும்போல பெரிதாக இருந்தது.
நான் மட்டும் முழிந்துக் கொண்டு, படுத்திருக்க என்னவோ போல இருந்தது. எனவே மீணடும் ஒருக்களித்துப் படுத்திக் கொண்டேன். எனக்கு சுகர் பிரச்சனை இருப்பதால் கீழ் பெர்த் கேட்டும் கிடைக்கவில்லை .
ஜில் என்ற காற்று கோவை வருவதை உணர்த்தியது. கோவை க்ளைமேட்டை அன்பவிக்கும் ரமேஷ் மீது சற்று பொறாமையும் ஏற்பட்டது.
என் முன்பதிவு பெட்டி வரும் பகுதியில் சரியாக நின்றுருந்தான் ரமேஷ் . இருவரும் வெளியில் வந்தோம். நீல நிற மாருதி எஸ்டீம் எங்களைச் சுமந்தது. போலீஸ் கமிஷனர் அலுவுலகம் கம்பீரமாக தெரியவர, காரை கோர்ட் அருகில் இருந்த ஹோட்டலுக்கு செலுத்தினான்.
மணி 06.15 ஆகி விட்டது. காரில் வந்து, பின்னர் வாக்கிங் சென்ற பலர், காபியைப் பருகியபடி சூடான செய்திகளை வாசித்துக் கொண்டிருக்க, சிலர் வாக்கிங் போனதற்கு அர்த்தமே இல்லாமல் அந்த நேரத்தில் எதுவோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ரமேஷ் இரண்டு காபி ஒன்று சர்க்கரை இல்லாமல் என்றான்.
பத்து நிமிடத்தில் சாய்பாபா காலனி வந்து விட்டோம் . இரண்டரை சென்டில் மிக நேர்த்தியாக இருந்தது அந்த வீடு. வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாள் ஹேமா. என்னைப் பார்த்து வாங்கண்ணா என்று முகம் மலர வரவேற்றாள்.
மலர் செடிகள் பூத்துக் குலுங்கின. குளித்து ரெடி ஆனேன். சூடான பொங்கலும், வடையும் கொண்டு வந்தாள் ஹேமா.
“ இன்னிக்கு லீவா ஹேமா?”
“ இல்லே போகணும்”
“ பின்ன எதுக்கு இவ்வளவு செய்யணும்?”
“ அண்ணா எத்தனை வருஷம் கழிச்சு வறீங்க! சாப்பிடுங்க”
பாங்கில் வேலை பையனும் பெண்ணும் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றனர் பக்கத்து அறையில் ரமேஷ் கோபமாக எதுவோ சொல்ல ஹேமா அழுது கொண்டிருந்தாள் சில நிமிடங்கள் கழிந்து ஹேமா வெளியில் வந்தாள் முகம் வாடி இருந்தது
“என்ன ஹேமா?”
“ ஒண்ணும் இல்லேணா ....”
ஒரு எழுத்தாளராக இருப்பதில் பெருமையாக இருந்தாலும் பலர் என்னிடம் உண்மையை சொல்லாமல் போலியாக இருப்பது போல உணர்ந்தேன். எங்கே எனது கதைகளில் அவர்கள் சாயல் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன் .
“அண்ணா நீங்களே சொல்லுங்க! குழந்தைங்க ரொம்ப சின்னவங்களா இருந்தப்போ வீட்டையும் கவனிச்சுக்கிட்டு வேலைக்கு போக சிரமப் பட்டேன் . வேலையை விட்டுடறேனு சொன்னேன். வேண்டாம்னு என்னை போகச் சொன்னாரு இப்ப குழந்தைங்க வளர்ந்திட்டாங்க! எனக்கு எழுபதாயிரம் சம்பளம் வருது. இப்போ வேலையை விடச் சொல்லறாரு.”
“ஏண்டா ரமேஷ்! ஹேமா சொல்லறது சரிதானே “
“போடா மடையா! எல்லாம அவளுக்கு நாற்பது லட்சம் கிடைக்கும். இப்பவே பி.பி சுகர்னு கஷ்டப்படறா.... பொண்ணு கூட இனி எப்ப இருப்பா? மூணு வருஷத்திலே அவளுக்கு கல்யாணம் பண்ணனும். இப்ப இந்த சலுகை தந்திருக்கான் . அதை பயன் படுத்திக்கொள்ளணும்”
“சரிதான்! பொண்டாட்டி வீட்ல இருக்கணும்னா வேலைக்கு போகாதவளா பார்த்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானேடா? வேலைக்குப் போய்கிட்டு இருந்தவங்களை வீட்ல இருக்கச் சொல்லறது கொடுமைடா ரமேஷ்”
“அண்ணா சீதா என்ன பண்ணப் போறா?”
திடும்னு ஹேமா இப்படி கேட்பாள் என்று நினைக்கவில்லை .சிறிது தடுமாறி விட்டேன் .
“சீதா ஆசைப்படி அவளை வேலைக்கு போகச் சொல்லிவிட்டேன் “
அதே சமயம் போன வாரம் எங்கள் வீட்டில் நிகழ்ந்த உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது.
“ஏங்க! நீங்க கதை, கவிதை, இலக்கியம்ன்னு உங்க வேலையை விட்டுடீங்க! என்னையும் எதுக்கு வேலைக்கு போக வேண்டாம்னு சொல்றீங்க?”
“ நீ வேலைக்கு போனா நான் இல்லே பாதி வீட்டு வேலை செய்ய வேண்டி இருக்கு. வெளியூர் கூட்டம்னு போக முடியலே !”
கோபமாக போய் விட்டாள்
ரமேஷ் ஹேமா இருவரும் அவர்களது நீண்ட நாள் பிரச்சனைக்கு என்மூலம் தீர்வு கண்டார்கள். ஹேமா வேலைக்கு கிளம்பிச் சென்றாள். ரமேஷ் குளிக்கப் போனான் . எனது செல்போனில் சீதா கூப்பிட்டாள்.
“என்னங்க நீங்க சொன்னபடி எழுதிக் கொடுத்திடறேன் இன்னிக்குத்தான் லாஸ்ட் டேட். ஹேமா ஆபீஸ் போயாச்சா?”
“ம்ம் ...போயாச்சு... நீ உன்னோட விருப்பம் போல வேலைக்கு போ .
எழுதிக் கொடுக்க வேண்டாம் .”
“ஏங்க? என்னாச்சு ?”
“ஒண்ணும் இல்லே “
“சரிங்க”
தனக்கு என்றால் ஒரு சட்டம் பிறருக்கு என்றால் ஒரு சட்டம் என்று தோன்றியதாலா ? அல்லது பின்னாளில் சீதாவும் ஹேமாவும் பேசிக்கொண்டால் ஹேமா என்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்று எண்ணியதாலா ? எது என் மனமாற்றத்திற்கு காரணம் என்று எனக்கு புரியவில்லை .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக